நாட்டு நடப்பு
Published:Updated:

49 - ஓ விவசாயிகளுக்காக ஓர் அசத்தல் சினிமா!

49 - ஓ விவசாயிகளுக்காக ஓர் அசத்தல் சினிமா!

‘‘படத்தோட கதையைச் சொல்ல வந்தப்ப, ‘நீ முன்னாடி பாதியையும் பின்னாடி பாதியையும் விட்டுடு. நடுவுல மட்டும் சொல்லு’னு டைரக்டர்கிட்ட சொன்னேன். அவர் சொன்னதுதான் ‘ஆறடி தாய்மடித் திட்டம்’. அதைக் கேட்டதுமே ஓகே சொல்லிட்டேன். அதனால நான் மறுக்கா மறுக்கா சொல்றேன்... இது ஒரு நல்ல படம்’’

49 - ஓ விவசாயிகளுக்காக ஓர் அசத்தல் சினிமா!

-49-ஓ திரைப்படத்துக்கான இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கவுண்டமணி, திரும்பத் திரும்ப இதைச் சொல்லி கைத்தட்டல்களை அள்ளினார். ஒரு வார இடைவெளியில் படமும் வெளியாகிவிட்டது. திரையரங்குகளிலும் கைதட்டல்கள் எதிரொலிக்கின்றன... விவசாயிகளுக்காகவும் விவசாயத்துக்காகவும் குரல் கொடுக்கும் இந்தப் படத்துக்கு!

கவுண்டமணி வசிக்கும் கிராமத்தின் வழியே தேசிய நெடுஞ்சாலை அமைய உள்ளதை முன்கூட்டியே தெரிந்துகொள்கிறார்கள், தொகுதி எம்.எல்.ஏவும்  அவரது கூட்டாளிகளும். இதையடுத்து, ரியல் எஸ்டேட் கும்பலுடன் கூட்டுப்போட்டுக்கொண்டு, கிராம மக்களை ஏமாற்றி நிலங்களை எல்லாம் எப்படிச் சுருட்டுகிறார்கள்... இவர்களிடமிருந்து எப்படி தந்திரமாக மீட்கிறார் கவுண்டமணி என்பதுதான் படத்தின் கதை!

விவசாயிகளிடம் இருந்து வாங்கும் நெல்லின் தரத்தை வம்படியாகக் குறைத்து, விலையையும் குறைத்து, எடையையும் குறைக்கும் வியாபார தில்லுமுல்லகளையெல்லாம் அப்பட்டமாகத் தோலுரிக்கிறார்கள். விவசாயத் தற்கொலைகளையெல்லாம் ‘குடும்பப் பிரச்னை, குடிப் பிரச்னை, காதல் பிரச்னை’ என்று பல காரணங்களைச் சொல்லி திசைதிருப்பிவிடும் அரசு, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு, நிலத்தை விற்ற பிறகும் தன் மகள் திருமணத்துக்குப் பணம் இல்லையே என்கிற காரணத்தால் பூச்சிக்கொல்லி விஷத்தைக் குடித்து உயிர்விடும் விவசாயி, சவுக்கடி கொடுக்கிறார்.

ரியல் எஸ்டேட் முதலைகளிடமிருந்து விவசாயிகளின் நிலங்களை மீட்பதற்காக ‘ஆறடி தாய்மடித் திட்டம்’ என்பதைக் கையில் எடுக்கிறார் கவுண்டமணி. இதற்காக, டி.வி யில் வரும் ரியல் எஸ்டேட் விளம்பரப் பாணியில்... ‘நீங்கள் இறந்த பிறகு, இங்கே நிம்மதியாக ஓய்வெடுக்கலாம்... தினசரி தீபம் ஏற்றப்படும்’ என்றெல்லாம் கூவுவது... அடடா. இது ரியல் எஸ்டேட் முதலைகள், கார்ப்பரேட் தலைகள் என்று பலருக்கும் ‘தர்மஅடி’ கொடுக்கிறது.

இடைத்தேர்தலில் ‘ஓட்டுக்கு முப்பதாயிரம் ரூபாய்’ என்று ஊரைக்கூட்டி வைத்து அரசியல்வாதிகளிடம் விலை வைத்து பேரம் பேசுவது; பேரம் படியாததால் பிச்சைக்காரர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தி... ‘நீங்களும் இவரும் ஒண்ணுதான். நீங்க ஓட்டுப்பிச்சை எடுக்கிறீங்க. இவர் நிஜ பிச்சை எடுக்கிறார்’ என்றெல்லாம் கவுண்டமணி காட்டும் லொள்ளுகள், அசத்தலோ அசத்தல்.

49 - ஓ விவசாயிகளுக்காக ஓர் அசத்தல் சினிமா!

படத்தின் தலைப்பு ‘49-ஓ’ என்பதால், யாருக்கும் என் ஒட்டு இல்லை என்று சொல்லக்கூடிய ‘49-ஓ’ பட்டனை அழுத்துவார்கள் என்று பார்த்தால், தொகுதி மக்களில் ஒரு பகுதியினரே வேட்பாளர்களாக மாறுவதும், ‘என் ஓட்டை எனக்கே போட்டுக்கப் போறேன்’என்று திகில் கொடுப்பதும்... அருமை.

‘‘இதைவிட, ‘49-ஓ’ போட வேண்டியதுதானே... எதுக்காக இப்படி எல்லாரையும் வேட்பாளராக்கி, தேர்தல் கமிஷனுக்கும் அரசாங்கத்துக்கும் நெருக்கடி கொடுக்கறீங்க?’’ என்று பத்திரிகையாளர்கள் கேட்கும்போது, 49-ஓ என்பதிலிருக்கும் ஓட்டை விதிமுறைகளை அம்பலப்படுத்தி அசரடிக்கிறார் கவுண்டமணி.

படம் முழுக்கவே, அயோக்கிய அரசியல்வாதிகளையும், அநியாய அதிகாரிகளையும் குறிவைத்துத் தாக்கும் வசனங்கள், திரையரங்குகளில் கைதட்டல்களை அள்ளுகின்றன. இயக்குநர் ஆரோக்கியதாஸின் அசாத்திய தைரியத்தையும் வெளிப்படுத்துகின்றன. காதல், கத்திரிக்காய், கண்றாவி எல்லாம் வைத்தால்தான் அது சினிமா என்பதை தாரக மந்திரமாகக் கொண்டிருக்கும் தமிழ்ச் சினிமா படைப்பாளிகள் பலருக்கு மத்தியில், அதையெல்லாம் துளிகூட தொட்டுப் பார்க்காமல், எடுத்துக்கொண்ட கருவிலிருந்து துளியும் விலகாமல் கடைசி வரை நகர்த்திச் சென்றிருப்பதற்காகவே இயக்குநரைத் தட்டிக் கொடுக்கலாம். சில இடங்களில் காட்சிகளில் ஏற்படும் தொய்வு, கவுண்டமணி தவிர பெரிதாக வேறு நட்சத்திரங்கள் இல்லாதிருப்பது, தொழில்நுட்ப விஷயங்களில் பெரிதாக அக்கறை காட்டாதது போன்ற குறைகள் இருந்தாலும், அவையெல்லாம் கதையோட்டத்துக்கு முன்பாக மறக்கடிக்கப்படுகின்றன!

இயற்கை விவசாயத்தைப் பற்றி படத்தில் பேசாவிட்டாலும், நம்மாழ்வார் இருக்கும் ஒரு பேனரை, ஒரு காட்சியில் லேசாக காட்டி நகர்வது அருமை. ‘‘உலகம் முழுக்க சொல்றான் வருங்காலத்துல சாப்பாட்டுக்கு பதிலா திங்க மாத்திரை வரும்னு. ஆனா, அந்த மாத்திரையைத் தின்னுட்டு எத்தனை காலத்துக்கு உயிர் வாழமுடியும்? மண்ணுல விளையறதைத் தின்னாத்தான் அது நம்மள ஏத்துக்கும். அதை விட்டுட்டு மாத்திரையை மட்டுமே தின்னா, மண்ணே நம்மள திங்காது... வாந்தி எடுத்துரும்’’ என்று வரும் வசனம், நம்மாழ்வாருக்கு செலுத்தும் அஞ்சலி!

இது படம் அல்ல... அத்திப்பூத்தாற்போல எப்போதாவது வெள்ளித் திரையில் விரியும் பாடங்களில் ஒன்று.

49 - ஓ விவசாயிகளுக்காக ஓர் அசத்தல் சினிமா!

ந்தப் படத்தைப் பார்த்த விவசாயிகளின் பிரதிநிதிகளில் இருவரின் கருத்துக்கள்...

என்.எஸ்.பழனிச்சாமி (தலைவர், கட்சி சார்பற்ற தமிழ் விவசாய சங்கம்): ‘‘இதுமாதிரியான படங்கள் வருவது வரவேற்கத்தக்கது. 20 ஆண்டுகள் போராடி மக்களிடம் முழுமையாகக்கொண்டு செல்ல முடியாத செய்திகளை, ரெண்டரை மணி நேரத்தில் கொண்டு சேர்க்கிறது சினிமாவின் வீச்சு. இந்தப் படத்தில் எல்லா காட்சிகளும் விவசாயிகளின் மனப் பிரதிபலிப்பாகவே இருக்கிறது. ‘விதைக்கிற காலத்துல உர விலையை ஏத்திடறாங்க... அறுக்கிற காலத்துல நெல் விலையைக் குறைச்சிடறாங்க’ என்று வரும் ஒரு வசனமே போதும். இப்படி வரும் சாட்டை வீச்சு வசனங்களுக்காக எழுந்து நின்று கைத்தட்டத் தோன்றுகின்றது.’’

இளங்கீரன் (தலைவர், வீராணம் பாசன விவசாயிகள் சங்கம்): ‘‘முழுக்க விவசாயிகளின் வாழ்க்கையைப் பேசுகிறது படம். காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளை நினைவுக்குக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர். மொத்தத்தில் பல ஆயிரம் விவசாயிகளின் மனதைப் பிரதிபலித்திருக்கிறது இந்தப் படம்.’’

காசி.வேம்பையன், பொன்.விமலா