Published:Updated:

மண்ணுக்கு மரியாதை! - 15

மண்ணுக்கு மரியாதை!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்ணுக்கு மரியாதை! ( மண்ணுக்கு மரியாதை! )

மகசூலைக் கூட்டும் மகத்தான தொடர்!

மண்ணில் அங்ககச் சத்தை நிலைநிறுத்தும் உயிரிக் கரிமத்தூள்..!

ருவநிலை மாற்றத்தால் மண்ணில் ஏற்படும் விளைவுகளையும், கரிமச்சத்தைச் சேமிக்கும் நுட்பங்களையும் பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, மண்ணில் அங்ககச் சத்தை நிலைநிறுத்த உதவும் ‘பயோசார்’ (Biochar) என்கிற உயிரிக் கரிமத்தூள் குறித்துப் பார்ப்போம்.

கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் ‘கிரீன்ஹவுஸ் கேஸஸ்’ (Greenhouse Gases) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பசுமை இல்ல வாயுக்கள், பூமியில் அதிகரித்து வருகின்றன. பெட்ரோலிய எரிபொருட்களின் பயன்பாடு 1.9 சதவிகிதம் உயர்ந்ததன் காரணமாக, கரியமில வாயு, ஆண்டொன்றுக்கு 1.6 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. வேளாண் வளர்ச்சி, அதிக உர பயன்பாடு காரணமாக நைட்ரஸ்-ஆக்சைடு மற்றும் மீத்தேன் வாயு வெளியேற்றம் 17 முதல் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது. எனவே, இந்தப் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் உயிரிக் கரிமத்தூள். ‘உழவர்களின் நண்பன்’, ‘கறுப்புத் தங்கம்’ எனவும் இது அழைக்கப்படுகிறது.

மண்ணுக்கு மரியாதை! - 15

விவசாய நிலங்களில் இந்த உயிரிக் கரிமத்தூள் பயன்படுத்துவதன் மூலம், விவசாயத்தின் மூலமாக வெளிப்படும் பசுமை இல்ல வாயுக்களின் அளவைக் குறைப்பதோடு, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மண்வளத்தையும் மேம்படுத்தலாம். இந்த உயிரிக் கரிமத்தூள், மண்ணில் கரிமச்சத்தை நீண்ட காலம் நிலை நிறுத்துகிறது. பசுமைஇல்ல வாயுக்களில் கரியமில வாயு, நைட்ரேட்-ஆக்சைடு, மீத்தேன் ஆகிய மூன்றும் முக்கியமானவை என ஏற்கெனவே பார்த்தோம். இந்த உயிரிக் கரிமத்தூளில் அதிக சதவிகிதத்தில் ‘அரோமேட்டிக் கார்பன்’ என்ற ஒருவகை கார்பன் உள்ளது. இந்த வகை கார்பனில் உள்ள கரிமப்பொருட்களை நுண்ணுயிர்கள் எளிதில் சிதைக்க முடியாது. எனவே, உயிரிக் கரிமத்தூள் சிதையாமல் மண்ணில் அதிக ஆண்டுகள் நிலைத்து இருப்பதாலும், அதிக நுண்துளைகளைக் கொண்டிருப்பதாலும் நீரூட்டச் சத்துக்களை ஈர்த்து சேமித்து வைத்துக்கொள்கிறது.

மண்ணில் அங்கக கார்பன் அளவு அதிகரிப்பதோடு, வளிமண்டலத்தில் கரியமில வாயு வெளியேறுவதையும் தடுக்கிறது. இதில், அதிகளவு நேர் அயனிப் பரிமாற்றம், அமிலப் பரிமாற்றம் உள்ளது. இதனால், மண்ணுக்கும் சுற்றுச்சூழலுக்கும் அதிக நன்மை ஏற்படுகிறது. பசுமை இல்ல வாயுக்களில் சதவிகித அடிப்படையில் அதிகம் இருப்பது கரியமிலவாயு. மற்ற வாயுக்களின் சதவிகிதம் குறைவாக இருந்தாலும், வளிமண்டலத்தில் அவை ஏற்படுத்தும் தாக்கம் அதிகமாக இருக்கும்.

மண்ணில் இருந்து நைட்ரேட்-ஆக்சைடு மூன்று விதமாக காற்று மண்டலத்தில் கலக்கிறது. முதல் இரண்டு வெளியேற்றம், நைட்ரைட் ஆக்கம் என்ற நிகழ்வின் மூலமாக நடக்கிறது. மூன்றாவது நிகழ்வு, நைட்ரேட் நீக்கம் மூலம் நடக்கிறது. முதல் இரண்டு நிகழ்வில் வெளியேற்றப்படும் நைட்ரஸ்-ஆக்சைடை காட்டிலும், மூன்றாவது நிகழ்வில் வெளியேற்றப்படும் நைட்ரேட் அளவு மிக அதிகம். இந்த நைட்ரேட் நீக்கம், ஆக்சிஜன் இல்லாத நிலையில்தான் நிகழும். அதேநேரத்தில், மண்ணில் இடும் உயிரிக் கரிமத்தூள், மண்ணின் தன்மையை மாற்றுவதுடன், மண் துகள்களில் ஆக்சிஜன் அதிகமாகச் செல்வதை ஊக்கப்படுத்துகிறது. மண்ணில் ஆக்சிஜன் அதிகமாவதால், நைட்ரேட் நீக்கம் நடைபெறுவது தடைபடுகிறது. மண்ணில் எலக்ட்ரான் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் பணியையும் இந்த உயிரிக் கரிமத்தூள் செய்கிறது.

மண்ணுக்கு மரியாதை! - 15

மீத்தேனைப் பொருத்தவரை ஆக்சிஜன் இல்லாத நிலையில், ‘மெத்தனோ ஜெனிக் பாக்டீரியா’ என்ற ஒருவகை நுண்ணுயிரிகளால் வெளியேற்றப்படுகிறது. உயிரிக் கரிமத்தூள் இடுவதால் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கப்பட்டு, மீத்தேன் வெளியேற்றமும் கட்டுப்படுத்தப்படுகிறது.

சத்துக்களைத் தக்க வைத்தல்!

ஒரு பொருள் தனது சத்துக்களைத் தக்க வைத்துக் கொள்வது அதன் நேர், எதிர் அயனிப் பரிமாற்றத்தைப் பொருத்தே அமையும். மண்ணில் இடும் உயிரிக் கரிமத்தூள், மண்ணில் உள்ள ஆக்சிஜன், நீர் ஆகியவற்றோடு சேரும்போது, மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் பல வேதியியல் மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டு, அதன் மூலம் நேர் அயனிப் பரிமாற்றம் அதிகரிக்கிறது. இதனால் மண்ணில் உள்ள சத்துக்களை அதிகளவு தக்க வைத்துக் கொள்ள முடியும். வேளாண் நிலங்களில் கிடைக்கும் வேளாண் கழிவுகளைக் கொண்டே மிகவும் எளிய முறையில் உயிரிக் கரிமத்தூளை உற்பத்தி செய்ய முடியும். உயிரிக் கரிமத்தூள் பயன்படுத்துவதால் மண்ணின் நீர்பிடிப்புத் தன்மை அதிகமாகிறது, ரசாயனப் பயன்பாடு குறைந்து, மண்ணில் அங்ககச் சத்துக்கள் அதிகரிக்கிறது.

இதில், 70% மேல் நிலையான அங்கக கரிமப் பொருட்கள் இருப்பதனால், மற்ற கரிமப் பொருட்களைப் போல் எளிதில் சிதைவுறாமல் நீண்ட ஆண்டுகளுக்கு நிலைத்து இருக்கும். வேளாண் நிலங்களில் ஒரு டன் உயிரிக் கரிமத்தூளைப் பயன்படுத்துவதன் மூலம் பயிர்களின் விளைச்சல் அதிகரிப்பதோடு, ஒன்றரை முதல் இரண்டு டன் கரியமில வாயு வெளியேறுவது தடுக்கப்பட்டு, அதன் மூலம் புவிவெப்பமாவது குறைக்கப்படுகிறது.

மண்ணுக்கு மரியாதை! - 15

உயிரிக் கரிமத்தூள் மண்ணில் எப்படிச் செயல்படுகிறது?

இதில் நுண்துளைகள் அதிகளவில் இருக்கும். இந்தக் கரித்துகள்கள் அடர்த்தியான செரிவுமிக்க கார்பன் என்பதால், மண்ணில் பயன்படுத்தும்போது மண் வளத்தை அதிகப்படுத்துவதோடு, நீண்ட காலம் சிதைவுறாமல் மண்துகள்களோடு ஒட்டிக்கொள்ளும். இதைத் தயாரிக்கும் முறைக்கு ‘காற்றில்லா வெப்பச் சிதைவு முறை’ என்று பெயர். தாவர, விலங்குகளின் கழிவுகளை ஆக்சிஜன் இல்லாத நிலையில் மிதமான வெப்பநிலையில் (300 முதல் -450 சென்டிகிரேட் வரை ) சூடேற்றும் போது உயிரிக் கரிமத்தூள் கிடைக்கிறது.
100 கிலோ கழிவுகளைப் போட்டால், 30 கிலோ உயிரிக் கரிமத்தூள் கிடைக்கும். இதை நிலத்தில் பயன்படுத்தும்போது, மேலே சொன்ன பயன்களை அடையலாம்.

உயிரி எரிபொருள் தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து அடுத்த இதழில்..

-வாசம் வீசும்

தொகுப்பு: ஆர்.குமரேசன்

அனிலா அடுப்பு..!

நம் நாட்டைப் பொறுத்தவரை சாகுபடி செய்யப்படும் பயிர்களில் இருந்து அதிகப்படியான பயிர்க் கழிவுகள் கிடைக்கின்றன. நெல், கோதுமை உள்ளிட்ட தானிய வகைகள், பயறு ஆகியவற்றில் இருந்து ஆண்டுக்கு 500 மில்லியன் டன் கழிவுகள் கிடைக்கின்றன. இவற்றில் 116 மில்லியன் டன் கழிவுகள் எரிக்கப்படுகின்றன. இதனால் பசுமை இல்ல வாயுக்கள் அதிகளவில் வளிமண்டலத்தில் கலக்கின்றன. உதாரணமாக, பஞ்சாப் மாநிலத்தில் ஆண்டுக்கு 70 முதல் 80 மில்லியன் டன் கழிவுகளை எரிப்பதால், 140 டன் கரியமில வாயு வளிமண்டலத்தில் கலக்கிறது. அபரிமிதமாகக் கிடைக்கும் கழிவுகளை எரிக்காமல், உயிரிக் கரிமத்தூளாக மாற்றும்பொழுது பசுமை இல்ல வாயுக்கள் உற்பத்திக் குறைவதோடு, மண்ணும் வளமாகிறது. இதைத் தயாரிக்க பல்வேறு அடுப்புகள் இருந்தாலும், அனைவரும் எளிதில் பயன்படுத்தும் வகையில் ‘அனிலா ஸ்டவ்’ என்ற ஒன்றை ரவிக்குமார் என்ற பொறியாளர் அறிமுகப்படுத்தியுள்ளார். தென்தமிழகத்தில் அனிலா அடுப்பு மூலமாக உயிரி எரிபொருள் தயாரிக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி மற்றும் விழிப்பு உணர்வை அளித்து வருகிறது தூத்துக்குடியைச் சேர்ந்த ‘ஸ்காட்’ என்ற தொண்டு நிறுவனம்.

நீ.செல்வம், ஆ.பாலமுருகன்