ஓர் எச்சரிக்கை?
அனைவருக்கும் பசுமை வணக்கம்!
-ஆந்திராவில் கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகள், 1,300 கோடி ரூபாய் செலவில் கால்வாய் மூலம் இணைக்கப்பட்டுள்ள நிலையில், ‘தமிழகத்தில் இதெல்லாம் சாத்தியமா?’ என்கிற கேள்வி வலம் வர ஆரம்பித்துவிட்டது.
‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போக ஆசைப்பட்டானாம்’ என்கிற கதைதான் இங்கே நினைவுக்கு வருகிறது. ஆம், உள்ளூர்களில் இருக்கின்ற நீர்நிலைகளையே, இங்கிருப்பவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அனைத்தையும் பிளாட் போட்டு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் நதிநீர் இணைப்பு?
வறட்சிக்குப் பெயர்பெற்ற ராஜஸ்தான் மாநிலத்தில், வறண்டுபோன ஏழு நதிகள், தற்போது உயிர்பெற்று மீண்டும் ஓடுகின்றன. இதற்கு ஆயிரம் கோடிகள் தேவைப்படவில்லை. பல ஆயிரங்கள், சில லட்சங்கள் செலவிலேயே தடுப்பணைகள், குளங்கள் என்று கட்டியமைத்து, மழைநீரைச் சேகரித்து இதைச் சாதித்திருக்கிறார்கள்.
ராஜஸ்தானைவிட, தமிழகத்தில் மழைப்பொழிவு அதிகம்! அதேபோல, கரிகாலன் காலத்துக்கு முன்பிருந்தே இங்கே ஏரிகள், குளங்கள் என்று நீர்ப்பாசனத் தொழில்நுட்பங்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால், அவற்றுக்கெல்லாம் கொஞ்சம்கொஞ்சமாக சமாதிகட்டிக் கொண்டிருக்கிறோம். எனவே, நதிநீர் இணைப்பு என்பதைக் கையில் எடுப்பதைவிட முதலில் உள்ளூர் ஏரி, குளம், குட்டைகளைக் காப்பாற்றும் வேலையை முன்னெடுக்க வேண்டும்.
ஒருவேளை இது சாத்தியமாகிவிட்டால்... பல ஆயிரம் கோடிகளை அள்ளிக் கொட்டி நதிகளை இணைக்க வேண்டிய அவசியமே கூட இல்லாமல் போகலாம்.
‘கோடிக்கணக்கில் செலவு செய்து, கட்டப்படும் நீர்ப்பாசனத் திட்டங்கள், பெரும்பெரும் அணைகள் எல்லாமே சூழல்கேடுகளுக்கும், அங்கே வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்துக்கும்தான் ஆபத்துகளை விளைவிக்கும்’ என்று சூழல் ஆர்வலர்கள் எச்சரிப்பதை மறந்துவிட வேண்டாம்!
-ஆசிரியர்