Published:Updated:

கார்ப்பரேட் கோடரி - 6

கார்ப்பரேட் கோடரி
பிரீமியம் ஸ்டோரி
News
கார்ப்பரேட் கோடரி ( கார்ப்பரேட் கோடரி )

மண் மீதான வன்முறையைத் தோலுரிக்கும் தொடர்!

நிலத்தை நிர்மூலமாக்கிய நிலக்கடலை சாகுபடி..!

ரோப்பியர்கள், ஆப்பிரிக்காவை ‘இருண்ட கண்டம்’ என்றழைப்பார்கள். ஆனால், இது உண்மையல்ல. வளமான இயற்கை வளங்கள் கொட்டிக்கிடந்த பூமி அது. கறுப்பின மக்களை முதன்முதலாகக் கண்ட வெள்ளையினத்தவர், அவர்களை மனிதக் குரங்குகளாகவே கருதினர். கருமைநிறத்தை இழிவாகக் கருதியதால், கறுப்பினத்தவர் நிரம்பிய இக்கண்டம் அவர்களுக்கு இருண்ட கண்டமாகக் காட்சியளித்தது. ஆனால், ஆப்பிரிக்கர்களின் பார்வையில், ஐரோப்பியர்கள் எப்படித் தெரிந்தார்கள் என்பதை ‘வெள்ளையின வரலாறு’ நமக்குக் கூறுவதில்லை.

முதன்முதலில் தம் நிலத்தில் கால் பதித்த வெள்ளையினத்தவரைக் கண்ட ஆப்பிரிக்கர்கள், பீதியுடன் ஓடியொளிந்தனர். தம் பலத்தைக் கண்டுதான் கறுப்பினத்தவர் ஓடி ஒளிவதாக வெள்ளையினத்தவர் தவறாக நினைத்தனர். உண்மையில், ‘புதைகுழியிலிருந்து பாதியில் எழுந்து வந்துவிட்ட தோல் வெளுத்த பிணங்கள்’ என்று கருதியே ஆப்பிரிக்கர்கள் ஓடினர்.

கார்ப்பரேட் கோடரி - 6

‘இவ்வெள்ளையர்கள் ஆவிகள் அல்ல’ எனத்தெரிந்த பிறகும் கறுப்பினத்தவர்களின் எண்ணம் மாறவில்லை. அவர்கள் வெள்ளையர்களைப் பன்றி வகையைச் சேர்ந்த ஒரு விசித்திரமான விலங்கென்று எண்ணினார்கள். ‘வெள்ளையர்கள் வெண்பன்றியைப் போல இளம்செந்நிறத்தில் இருந்ததோடு, அவர்களுடைய உடம்பிலிருந்து வந்த துர்நாற்றமும் அப்படி நினைக்க வைத்தது’ என்றனர், கறுப்பினத்தவர்கள். 

ஆப்பிரிக்காவை நிறவெறி நோக்கில் ‘இருண்ட கண்டம்’ என அன்று அழைத்த வெள்ளையர்கள், இன்று இக்கண்டத்தின் வளத்தைச் சுரண்டி பொருளாதார அடிப்படையில் உண்மையிலேயே இருண்ட கண்டமாக்கி விட்டனர். இக்கண்டத்திலுள்ள 53 நாடுகளில் 43 நாடுகள் ஏழ்மையிலும் பட்டினியிலும் வாடுகின்றன. இதனால் ஏற்படும் நோய்களால் ஆண்டுக்கு 30 லட்சம் குழந்தைகள் மடிகின்றன. இக்கண்டத்தில் வாழும் மக்களின் சராசரி ஆயுட்காலம் 46 ஆண்டுகள்தான். அந்தளவுக்கு ஆப்பிரிக்கா சுரண்டப்பட்டுள்ளது.

ஆயினும் இன்றும்கூட இந்தக் ‘கறுப்பு ஆப்பிரிக்கா’வை நம்பியே ‘வெள்ளை ஐரோப்பா’ பிழைக்கிறது. இயற்கை வளமற்ற ஐரோப்பா, தனக்கான மூலப்பொருட்களை ஆப்பிரிக்காவிலிருந்து அடிமாட்டு விலைக்கு கொள்ளையடித்துச் செல்கிறது. சுருங்கச் சொன்னால் ஆப்பிரிக்கா மட்டும் இல்லையெனில், ஐரோப்பியர்கள் வறுமையில்தான் வாட வேண்டும். 

பன்றி தின்னும் உணவு!

தமது தொழிற்துறைக்கும், வேளாண்மைத் துறைக்கும் தேவையான கச்சா பொருட்களை

கார்ப்பரேட் கோடரி - 6

ஆப்பிரிக்காவிலிருந்து பெற ராணுவத்தைப் பயன்படுத்தக்கூட ஐரோப்பாவும், ஐக்கிய அமெரிக்காவும் தயங்குவதில்லை. உலகப் போர் காலத்திலிருந்தே இதே கதைதான். இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் பிரிட்டனில் மக்களுக்கு எண்ணெய் மற்றும் கொழுப்புப் பொருட்கள் தட்டுப்பாடு நிலவியது. இதற்காக அந்தநாடு பெருமளவில் நிலக்கடலை உற்பத்தியில் இறங்கத் திட்டமிட்டது. இத்தனைக்கும் ஒருகாலத்தில் நிலக்கடலையை பன்றிகள் தின்னும் உணவாகத்தான் ஐரோப்பியர்கள் கருதினர். நிலக்கடலையிலுள்ள சத்துக்களைப் பற்றி அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பினத்தவரான ஜார்ஜ் வாஷிங்டன் கார்வார் என்பவர் கண்டறிந்து சொல்லிய பிறகே இதன் அருமை இவர்களுக்குத் தெரியவந்தது. 

நிலக்கடலை சாகுபடி செய்வதென்று முடிவெடுத்த பிறகு, அதைப் பயிரிட அவர்கள் தேர்ந்தெடுத்த நிலம் பிரிட்டனுடையது அல்ல. அதற்குரிய மண்ணும் தட்பவெப்பமும் அங்கில்லை. எனவே, பிரிட்டனின் அப்போதைய காலனி நாடான இன்றைய டான்சானியாவைத் தேர்ந்தெடுத்தனர். இதற்கான பொறுப்பு பிரிட்டனின், கடல் கடந்த நிறுவனமான ‘யுனைடெட் ஆப்பிரிக்கா’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

புல்டோசராக மாறிய டாங்குகள்!

அந்நிறுவனம் முதலில் ‘வேர்க்கடலைத் திட்டம்’ என்ற பெயரில் 25 லட்சம் ஏக்கர் நிலத்தைத் தேர்ந்தெடுத்தது. அதிலிருந்த சிற்றூர்கள் ராணுவத்தின் உதவியோடு அப்புறப்படுத்தப்பட்டன. ராணுவ அதிகாரி ஒருவர் இந்தத் திட்டத்துக்குத் தலைமைப் பொறுப்பேற்றார். கைப்பற்றப்பட்ட நிலத்திலிருந்த மரங்களை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது.

உலகப் போருக்கு பிறகு பிலிப்பைன்சில் வேலையற்றுக் கிடந்த அமெரிக்க ராணுவ டாங்கிகள் வரவழைக்கப்பட்டு, அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இவற்றையே பிறகு ‘புல்டோசர்’ என அழைத்தனர். உழுவதற்கு கனடாவிலிருந்து டிராக்டர்கள் கொண்டு வரப்பட்டன. எனினும், இவ்விரு இயந்திரங்களுமே நிலத்தைப் பண்படுத்துவதில் தோல்விதான் கண்டன. பயிர்களுக்குச் சரியான முளைப்புத் திறன் கிட்டவில்லை. முடிவில் அன்றைய மதிப்பில் 5 கோடி பிரிட்டிஷ் பவுண்ட் காலியானது.

நிலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஆப்பிரிக்க மக்களுக்கு இவ்வேதனையிலும், இவர்களின் முட்டாள்தனத்தைக் கண்டு சிரிப்புத் தாங்கவில்லை. ‘எங்களிடம் ஒரு வார்த்தை கேட்டிருந்தால் இம்மண்ணைப் பற்றி நாங்கள் சொல்லியிருப்போமே’ என்றனர். அந்நிலமானது சரளை கலந்த மணற்பாங்கான நிலம். கனரக இயந்திரங்களால் நிலம் கடுமையாக அமுக்கப்பட்டதால் மழைக்காலத்தின் முடிவில், அந்நிலம் கப்பிச்சாலையைப் போல இறுகிவிட்டது. கப்பிச் சாலையில் பயிர் முளைக்குமா? உழவர்களின் அறிவை நம்பாமல், இயந்திரங்களின் மீது நம்பிக்கை வைத்ததால் வந்த வினை.

கார்ப்பரேட் கோடரி - 6

இத்தோடு விட்டார்களா ஐரோப்பியர்கள்... பிரிட்டிஷ் ஆட்களிடம் பாடம் படிக்காமல் ஃபிரான்ஸ் நாடும் நிலக்கடலை சாகுபடியில் இறங்கியது. அது தன் காலனியான செனகல் நாட்டில் ‘நிலக்கடலை நடவடிக்கை’ என்ற பெயரில் தனது திட்டத்தைத் தொடங்கியது. டான்சானியா நிலம், பாதி வறண்ட பகுதி. ஆனால், செனகலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலமோ மழை மண்டலப் பகுதி. எனவே தனது திட்டம் வெற்றியடையும் என ஃபிரான்ஸ் நம்பியது. இத்திட்ட இயக்குநர் ஓர் அரசியல் அறிவியல் பட்டதாரி. துணையாக நியமிக்கப்பட்டவர், ஒரு பொறியியலாளர். களத்துக்குப் பொறுப்பு கப்பற்படை அதிகாரி. பிறகு இத்திட்டம் விளங்குமா? அமெரிக்க இயந்திர இறக்குமதி, நிலத்திலிருந்து மரங்கள் அகற்றல் என அனைத்தும் நடந்தன. இதனால் சத்துமிக்க மேல் மண் அரித்துச் செல்லப்பட்டது. இத்தோடு நிலங்கள் மிக ஆழமாக உழப்பட்டதால் அடியிலிருந்த சத்தற்ற மண் மேல்நோக்கி புரட்டப்பட மிச்சமிருந்த மண் தரமும் காலி. தழைச்சத்தெல்லாம் இட்டுப் பார்த்தனர். வெப்பச் சூழலில் நிலக்கடலைப் பயிரைவிட, புற்களே அதிகம் மண்டின.

அமெரிக்காவிலிருந்து வந்த களையகற்றும் இயந்திரங்களும் கைகொடுக்கவில்லை. இறுதியில் திட்டமும் செத்து, நிலமும் செத்தது.

அல்வாவுக்கு பதில் சாக்லேட்!

ஆப்பிரிக்கா முழுவதும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏராளமாக நடந்தேறின. இதனால்தான் 1972-ம் ஆண்டு ஸ்டாக்ஹோம் நகரில் சுற்றுச்சூழல் மாநாடு கூடியபோது, ஆப்பிரிக்க நாட்டுப் பிரதிநிதிகள், ஐரோப்பிய நாடுகளால் தங்களுக்கு ஏற்பட்ட சூழலியல் பாதிப்புகளுக்கு நஷ்டஈடு கோரினர். ஆனால், எந்தவொரு ஐரோப்பிய நாடும் அலட்டிக் கொள்ளவில்லை. அதேசமயம் யூதர்களுக்கு இழைத்த கொடுமைகளுக்காக இன்றளவும் இஸ்ரேல் நாட்டுக்கு ஜெர்மனி கணிசமான தொகையை தண்டமாகச் செலுத்தி வருகிறது.

இஸ்ரேல் பணக்கார நாடாக விளங்குவதற்கு அந்நாட்டுக்குத் தொடர்ந்து கிடைக்கும் இத்தொகையும் ஒரு காரணம். இதுவும் அப்பட்டமான நிறவாதமே. யூதர்கள் வெள்ளையினமாக இருப்பதால் பணம் கொடுக்கிறர்கள். கறுப்பின ஆப்பிரிக்கர்களுக்கு என்ன கொடுக்கிறார்கள்? அல்வா கொடுப்பதற்கு பதிலாக சாக்லேட் கொடுக்கிறார்கள். அதுவும் கசப்பு சாக்லேட். ஆப்பிரிக்கர்களின் வாழ்வைக் கசப்பாக்கும் அந்த கொக்கோவைப் பற்றி அடுத்துக் காண்போம்.

-தடுப்போம்

‘சூழலியலாளர்’ நக்கீரன்