மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: மூன்று வகை மனிதர்களும்... வெற்றிலை தாம்பூலமும்!

மண்புழு மன்னாரு: மூன்று வகை மனிதர்களும்... வெற்றிலை தாம்பூலமும்!

‘மொழி, கலாசாரம், பண்பாடுனு எல்லா விஷயத்துலயும், கொடி கட்டி வாழ்ந்ததுக்கு அடிப்படை ஆதாரம், அவங்க சாப்பிட்ட உணவுதான். நாட்டை ஆளும் மன்னனா இருந்தாலும், மண்ணை உழும் விவசாயியா இருந்தாலும், சாப்பாட்டு சங்கதியில, பலவிதமான அனுபவ அறிவோட இருந்தாங்க. இப்பவும்கூட, பேசிக்கிட்டே யாராவது சாப்பிட்டா, ‘சாப்பிடற நேரத்துல. சலசலனு பேசிக்கிட்டு இருந்தா, சாப்பிடுற சாப்பாடு உடம்புல எப்படி ஒட்டும்’னு பெரியவங்க அதட்டுவாங்க.

‘நொறுங்கத் தின்றால், நூறு வயது’னு ஒரு பழமொழியும் இருக்கிறது தெரியும்தானே. இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? சாப்பாட்டை அப்படி அப்படியே முழுங்காம, நல்லா மென்னு சாப்பிடணும்கிறதுதான். அதாவது பல்லால எல்லா உணவுகளையும் நொறுக்கிச் சாப்பிடணும். ஆனா, இப்போ இருக்கிற பஃபே கலாசாரத்துல... பரபரக்கிற வேலைச் சூழல்ல பேசிக்கிட்டே சாப்பிடறதைத்தான் பெருமையா நினைக்கிறாங்க. பேச்சு சுவாரஸ்யத்துல, அப்படி அப்படியே உள்ள தள்ளுறாங்க. இதனால அளவுக்கு அதிகமா சாப்பிட்டு, அவஸ்தைப் படறதுதான் நிறைய பேரோட வாடிக்கையா இருக்கு. இலையில இருக்கிற சாப்பாட்டுக்கும், நமக்கும் உள்ள உறவு வளரணும்னா, பேச்சு கொடுக்காம சாப்பிட பழகிக்கணும்.

மண்புழு மன்னாரு: மூன்று வகை மனிதர்களும்... வெற்றிலை தாம்பூலமும்!

சாப்பாட்டு மேசையில குடும்பத்துல உள்ள எல்லாரும், அரட்டை அடிச்சுக்கிட்டு சாப்பிடற பழக்கம் வெளிநாட்டுல இருந்து இறக்குமதியானது. முடிஞ்ச வரையிலும், தரையில உட்கார்ந்து சாப்பிடலாம். அப்படியில்லைனா, டைனிங் டேபிள்ல அமைதியா சாப்பிட்டு முடிக்கிறதுதான், உடம்புக்கும், குடும்பத்துக்கும் நல்லது.

தன்னோட ரத்தப் பிரிவு எந்த வகைனு தெரிஞ்சு வைச்சுக்கிறது ஒவ்வொருத்தருக்கும் அவசியமான காரியம். ஆபத்து காலத்துல இந்தத் தகவல் கை கொடுக்கும். அந்தக் காலத்துல, உடம்புக்கு சுகம் இல்லனா பாரம்பர்ய மருத்துவர்கிட்டத்தான் போவாங்க. அவர், நாடி பிடிச்சுப் பார்த்துட்டு, ‘அய்யா, நீங்க பித்த உடம்புக்காரங்க. பட்டணத்துப் பக்கம், விருந்து வைச்சவங்க, காரம், சாரத்தைக்  கூட்டிப்புட்டாங்க. அது அய்யா உடம்புக்கு சேரலை. கண் சிவந்து, உடம்பு எரிச்சல் எடுக்குது. தலைவாழை இலையில தினமும் சாப்பிடுங்க. கரிசலாங்கண்ணி, கறிவேப்பில்லையை நிறைய சேர்த்துக்குங்க’னு சி.டி ஸ்கேன், எக்ஸ்ரே, ஸ்டெதாஸ்கோப் எதுவும் இல்லாமலே, உடம்புக்குள்ள நடக்குற விஷயத்தை ஒரு நிமிஷத்துல, புட்டுப்புட்டு சொல்லுவாங்க.

மனுஷனோட நோய்க்கு மூணு விஷயம் முக்கியமானது. வாதம், பித்தம், கபம்ங்கிற இந்த மூணும் குறைஞ்சோ, கூடியோ இருந்துச்சுனா,  உடம்புல நோய் எட்டிப் பார்க்கும். இதைத்தான் ‘மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று’னு வள்ளுவர் தாத்தா சொல்லி வைச்சிருக்காரு.

குடும்பத்தலைவரும், தலைவியும் தன்னோட பிள்ளைங்க எந்த வகையான உடம்புக்காரங்னு தெரிஞ்சு வைச்சிருப்பாங்க. அதுக்கு தகுந்த மாதிரிதான் சமையலும்கூட இருக்கும். ‘பெரிய பையன், கபம் உடம்புக்காரன்... பழைய சோறு சாப்பிட்டா, சளி புடிக்கும்’னு ஆவி பறக்க, சுடுசோறு ஆக்கிப் போடுவாங்க.

‘தினமும் கெட்டித் தயிர் சாப்பிட்டால், ஆரோக்கியமா வாழ முடியும்’ங்கிற வாட்ஸ்-அப் செய்தியைப் படிச்சுப்புட்டு, பழைய சோத்துல தயிரை ஊத்தி, நாரத்தங்காய் ஊறுகாயைத் தொட்டுச் சாப்பிட்டுப்புட்டு, ‘வீசிங்’ வந்துடுச்சுனு, ஆஸ்பத்திரிக்கு ஆயிரம் ரெண்டாயிரம்னு செலவு செய்யற ஆட்களும் இருக்காங்க.

வாதம், பித்தம், கபம்... இதுல நாம எந்த வகையான ஆளுனு தெரிஞ்சுக்கணும். நல்ல சித்த மருத்துவர்கிட்ட, ‘என்னோட உடம்பு எந்த வகையானதுனு சொல்லுங்க?’னு கேட்டா போதும்... நாடிப்புடிச்சு பார்த்துட்டு, நீங்க என்ன வகையான உடம்புக்காரர், எதை அதிகமா சாப்பிடணும், எதைக் குறைவா சாப்பிடணும்னு தெளிவா சொல்லிடுவாங்க.

இதன்படி சாப்பிட்டா நோய்நொடிங்க நம்மகிட்ட நெருங்காது.

நாகரிகம்ங்கிற பேர்ல, நம்ம பழக்கவழக்கத்தை அடியோட மறந்துட்டோம். அரசன் வீட்டு விருந்தா இருந்தாலும், சாதாரண மனுஷன் கொடுக்கிற விருந்தா இருந்தாலும், கண்டிப்பா ஒரு விஷயத்துக்கு முக்கியமான இடம் இருக்கும். நூறு வகையான சத்தான உணவைச் சாப்பிட்டாலும், கடைசியில வெற்றிலை தாம்பூலத்தைச் சாப்பிட கொடுப்பாங்க. இந்த வெற்றிலை, நாம சாப்பிட்ட விருந்துல வாதம், பித்தம், கபம்னு எது கூட, குறைய இருந்தாலும், ஆளுக்குத் தக்கப்படி சமன் செஞ்சுடும். இதனால, விருந்துக்குப் போன கையோட, மருத்துவமனையைத் தேடிப்போக வேண்டிய நிலைமை இருக்காது.

ஓவியம்: ஹரன்