பண்ணையை நோக்கி பயனுள்ள பயணம்
மண்ணின் உயிர்ச்சத்து... மகசூலுக்கு பெரும்சொத்து!
விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது, ‘பசுமை விகடன்’. ‘ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை, அவர்களின் மனதில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

ஒரு நாள் விவசாயிகளாக இந்த முறை தேர்வு செய்யப்பட்டவர்கள்... பொறியியலாளர் ராஜா, தனியார் நிறுவன மேலாளர் பார்த்திபன், தொழில் துறையைச் சேர்ந்த ஈஸ்வர், ஆசிரியர்களான யுவராஜ்-யுவராணி தம்பதி, கணினித்துறையை சேர்ந்த வெங்கடேஸ்வரி ஆகியோர். இவர்களை நாம் அழைத்துச் சென்றது... காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாம்பேட்டை அருகிலுள்ள வில்லிவலம் கிராமத்தில் இருக்கும் பண்ணைக்கு. இதற்குச் சொந்தக்காரர்... முன்னோடி இயற்கை விவசாயி தாந்தோணி!
அதிக வெயில் இல்லாத இதமான காலைவேளை... மாடுகளை மேய்ச்சல் நிலத்தில் கட்டிவிட்டு, வந்த தாந்தோணி, அனைவரையும் வரவேற்று தேநீர் கொடுத்து உபசரித்தார். அறிமுகப்படலம் முடிந்ததும், நெல் வயலுக்கு அழைத்துச் சென்றார், தாந்தோணி.
‘‘ஏழு வருஷமா முழுக்க இயற்கை விவசாயம்தான். இங்க எனக்கு நாலு ஏக்கர் நிலம் இருக்கு. அதுல மூணு ஏக்கர்ல வருஷம் மூணு போகம் நெல் விதைச்சிடுவேன். மீதியுள்ள ஒரு ஏக்கர்ல கீரைகளையும், சில வகை கத்திரிகளையும் விதைச்சிடுவேன்’’ என்று தாந்தோணி பேசிக்கொண்டிருக்கும்போதே இடைமறித்த யுவராஜ்,
“பொதுவா சுழற்சி முறையிலதான் சாகுபடி செய்யணும்னு சொல்றாங்களே? வருஷத்துக்கு மூணு போகம் நெல் விதைச்சா பயிர் வளர்ச்சி, மகசூல் பாதிக்கப்படாதா?” எனக் கேட்டார்.

பருவம் பார்த்து, நெல் விதைக்கணும்!
“தம்பி, நான், எட்டு வருஷமா இந்த மூணு ஏக்கர்ல நெல் மட்டும்தான் போட்டுட்டு வர்றேன். சரியான பக்குவத்துல வயலைத் தயார் செஞ்சா... மூணு போகம் சாகுபடி செய்யலாம். அறுவடை முடிஞ்சவுடன் வயல்ல இருக்கிற நெல் தாளோடவே ஏர் ஓட்டிட்டு... குலை மிதிப்போம் (இலைதழைகளை சேற்று வயலில் போட்டு, காலால் மிதித்து அழுத்தி விடுவது). அடுத்து முக்கியமானது பருவம் பாத்து நெல்லை விதைக்கிறது. விதைநேர்த்தி செஞ்சு சீரான இடைவெளியில் நடவு செய்றப்போ, சூரிய வெளிச்சமும், காற்றோட்டமும் கிடைக்கும். அதனால மகசூலும் அதிகமா கிடைக்குது” என்றார்.
“பயிர் பராமரிப்பு பத்தி கொஞ்சம் சொல்லுங்க?” என்று பார்த்திபன் கேட்க...
“நட்டு 15 நாளுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம் தெளிக்கணும். பத்து நாளைக்கு ஒரு முறை களையெடுக்கணும். இதை மூணு மாசத்துக்கு செய்யணும். அப்படி செஞ்சாதான் பயிர் நல்லா வளரும். மகசூலும் நல்லா கிடைக்கும்” என்றார், தாந்தோணி.
“எப்படி களை எடுக்கிறது?’’ என்று அடுத்த கேள்வியைப் போட்டார், ஈஸ்வரன்.
“அதைத்தான் உங்களுக்குச் சொல்லித்தரப் போறேன்” என்று சொன்ன தாந்தோணி, கோனோவீடரை நெல் வயலில் உருட்டிக் காட்டினார். உடனே ஒரு நாள் விவசாயிகளும் ஆளுக்கொரு கோனோவீடரை எடுத்துக்கொண்டு, நெல் வயலில் இறங்கினர்.

நம்பிக்கையும் உழைப்பும்தான் முதலீடு!
“நல்லா அழுத்தி ஓட்டுங்க. அப்பத்தான் பயிரோட வேர்ல மண் அதிகமா சேரும். பயிரும் தெம்பா வளரும். அது மட்டுமில்லாம நீங்க எடுக்குற களை இந்த நிலத்துக்கு உரமாயிடுது. அதனால நமக்குச் செலவு குறையுது. இயற்கை விவசாயத்துல மனுஷனோட உழைப்பும், நம்பிக்கையும்தான் முதலீடு” என்றார், தாந்தோணி.
ஒரு நாள் விவசாயிகள் களைகளை அழுத்தி முடிக்க... கத்திரி விதைப்புக்குத் தயாராகிக் கொண்டிருந்த நிலத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றார், தாந்தோணி. அந்த நிலத்தில் சிலர் பார் பிடித்துக் கொண்டிருந்தனர்.
“முதல்ல நாம நிலத்தை புழுதிபட உழுது வெச்சுக்கணும். அப்பத்தான் வறட்சி காலத்துல மண் இறுகாம இருக்கும். பார் எடுக்கும் போது, ஒரே அளவா எடுக்கணும்” என்று தாந்தோணி சொல்லிக் கொண்டிருக்க, மற்றவர்கள் ஒரு நாள் விவசாயிகளுக்கு பார் பிடிக்கும் முறைகளைக் கற்றுக் கொடுத்தனர். உடனே அவர்கள், கயிறு கட்டப்பட்டு இருக்கும் இடத்தில் உற்சாகமாக பார் பிடிக்க ஆரம்பிக்க... நம்மை அங்கே அழைத்துச் சென்றிருந்த வாடகைக் காரின் ஓட்டுநர் அசோக்குமாரும் களத்தில் குதித்து விட்டார்.
ஒரு வழியாக பார் எடுத்து முடித்ததும் ‘அவ்வளவுதானே’ என ஒரு நாள் விவசாயிகள் கேட்க... “பாருக்கு மேல் பக்கம் கீரையும், பக்கவாட்டில் கத்திரியும் விதைக்கலாம்னு இருக்கேன். மேலே உள்ள மண்ணை மட்டப்படுத்தினால்தான் கீரை விதைக்க முடியும். அப்போதான் கீரை அறுவடை செய்யும்போது எளிதா இருக்கும்” என்றதும், அனைவரும் மண்ணை மட்டப்படுத்தும் வேலையைத் தொடங்கினர். இந்த வேலை அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளவே, சிறிது நேரம் ஓய்வெடுத்தனர், ஒரு நாள் விவசாயிகள். தாந்தோணியின் நண்பரும் இயற்கை விவசாயியுமான நாகரத்தினம், ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இயற்கை விவசாயம் பற்றி வகுப்பெடுத்தார்.
“நான் விவசாயத்தோடு சேர்த்து மாடுகளை வாங்கலாம்னு இருக்கேன். அதுக்கு யோசனை சொல்லுங்கய்யா?” என்றார் ராஜா.

“கால்நடை வளர்ப்புக்கு நாட்டு மாடுகளா வாங்கிட்டா... எந்தத் தொல்லையும் இருக்காது. மாடுகளைக் கட்டிப்போட்டு தீவனம் தரக்கூடாது. அப்படியே கட்டிப்போட்டாலும், கயிறை கொஞ்சம் நீளமா விட்டு கட்டணும். அப்பத்தான் அது நல்லா நடந்து மேய்ஞ்சிட்டு வரும். நாட்டு மாடு நடந்து போயி மேய்ஞ்சாத்தான் அதுகளுக்கு நோய் வராம இருக்கும். நாலு மாடு இருந்தா போதும், இயற்கை விவசாயம் செய்யுறது ரொம்ப சுலபமான விஷயம். மாட்டோட எருவையும், சிறுநீரையும் சேர்த்து உரமா பயன்படுத்தினாலே போதும்” என்றார் நாகரத்தினம்.
“மாடித்தோட்டத்துல என்ன பயிர்களை வைக்கலாம்... அதுக்கு என்ன உரம் கொடுக்கணும்?” என்று கேட்டார், வெங்கடேஸ்வரி.
இதற்கு பதிலளித்த நாகரத்தினம், “மாடித்தோட்டத்துல எல்லா காய்கறிகளையும் விதைக்கலாம். பந்தல் கொடி வகைகளையும் கூட வளர்க்கலாம். ஆரம்பத்துல மண்புழு உரமே போதும். வீட்டுல கிடைக்கிற காய்கறிக்கழிவுகள், மட்கிய குப்பைகளையும் உரமா பயன்படுத்தலாம்” என்றார்.
தொடர்ந்து பேசிய தாந்தோணி, “முதல்ல மண்ணுல நல்ல உயிர்ச் சத்தை உண்டாக்கிடணும். அதுக்கு அப்புறம் விவசாயம் செய்யும்போதுதான் நல்ல பலன் கிடைக்கும். இயற்கை விவசாய சாகுபடியில இருக்கிற நெளிவு, சுளிவுகள தெரிஞ்சுக்க ரெண்டு வருஷம் ஆகும். அப்புறம் நல்ல லாபம் கொடுக்க ஆரம்பிக்கும். அதுதான் இயற்கை விவசாயத்தோட மகிமை” என்றார்.
“ஒரு ஏக்கர்ல எத்தனை மூட்டை நெல் விளையும்?” என்று யுவராணி கேட்க,
“இயற்கை முறையில் ஏக்கருக்கு கிட்டத்தட்ட 20 மூட்டை (80 கிலோ) நெல் கிடைக்கும். நான் அரிசியா அரைச்சிதான் விற்பனை செய்றேன். ஒரு சிப்பம் (25 கிலோ) அரிசியை 1,500 ரூபாய்னு கொடுக்கிறேன்” என்றார், தாந்தோணி.

தொடர்ந்து, தாந்தோணியிடமும், நாகரத்தினத்திடமும் காய்கறி வளர்ப்பு, மர வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்றவற்றில் உள்ள சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டனர், ஒரு நாள் விவசாயிகள். பிறகு அவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட சுவையான மதிய உணவு தலை வாழை இலைபோட்டு பரிமாறப்பட்டது. அதில் வாழைக்காய் சாலட், தட்டைப்பயறு பொரியல், வாழைப்பூத் தொக்கு, மாப்பிள்ளைச் சம்பா சாதம், கத்திரிக்காய் சாம்பார், கொள்ளு ரசம்... என இலை நிறைய உணவுகள் இடம் பெற்றன.
இயற்கை ஹீட்டர்!
உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பது போல, சாப்பிட்ட அனைவரும் சற்று இளைப்பாறத் தொடங்க... “இந்தா பாருங்க இயற்கை ஹீட்டர்” எனச் சொல்லிக்கொண்டு வந்த நாகரத்தினம், பானை வடிவில் இருந்த அடுப்பைக் காட்டினார். “இதை வெச்சு நாலு வறட்டியை எரிச்சு ஒரு குடும்பத்துக்குத் தேவையான சாப்பாட்டைத் தயார் செஞ்சிடலாம். அடுப்புக்குப் பக்கத்திலேயே உக்காந்து ஊதத் தேவையில்லை. இது, ஹீட்டர் மாதிரியே செயல்படும்” என்றார். அது ஒரு நாள் விவசாயிகளைப் பெரிதும் கவர்ந்தது.
கத்திரி நடவு!
தொடர்ந்து, ஜீவாமிர்தம் உள்ளிட்ட இயற்கை இடுபொருட்கள் தயார் செய்யும் முறைகள் குறித்து, ஒரு நாள் விவசாயிகளுக்கு வகுப்பெடுத்த தாந்தோணி, வெயில் கொஞ்சம் குறைந்த பிறகு, கத்திரி நாற்றுகளை நடவு செய்ய அழைத்துச் சென்றார். “கத்திரி ஊடுபயிர்ங்கிறதால பார் ஓரமா நடணும். ஒரு முழம் அளவுக்கு இடைவெளி விடணும்” என்று சொல்லி நடவு செய்து காட்டினார். உடனே, அனைவரும் ஆர்வமுடன் நடவு செய்தனர். அப்போது, “கத்திரிக்காய் எவ்வளவு நாள்ல அறுவடைக்கு வரும்?” என்று ஆர்வமுடன் கேட்டார், யுவராஜ். “ரெண்டு மாசத்துல அறுவடைக்கு வந்துடும்” என்றார், தாந்தோணி.

வம்சத்தைக் காப்பாற்றும் வாழை!
நடவுப் பணி முடிந்ததும், நெல் வயலின் வரப்பைச் சுற்றி வாழைக்கன்றுகள் நடவு செய்யச் சொல்லிக் கொடுத்த தாந்தோணி, “வாழைக்கு அடியுரம் ரொம்ப முக்கியம், அதே அளவுக்கு குழியின் ஆழமும் முக்கியம். தண்ணீர் அதை விட ரொம்ப முக்கியம். வாழை வம்சத்தையே காப்பாற்றும். நெல் வயல் ஓரமா நடுறதால, அதுல இருக்கிற தண்ணிய வெச்சுக்கிட்டே வாழை வளந்துடும்” என்றார்.
வாழை நடவுப்பணி முடியும்போது சூரியன் மேற்கே மறையத் தொடங்கியிருந்தது. அனைவரும் கை, கால்களைக் கழுவிக் கொண்டு வர, ஆவாரம்பூ தேநீர் வழங்கப்பட்டது. அதைக் குடித்து விட்டு நன்றி சொல்லி விடை பெற்றனர், ஒரு நாள் விவசாயிகள்.
-பயணம் தொடரும்
தொடர்புக்கு,
தாந்தோணி,
செல்போன்: 93814-57817
நீங்களும் ஒருநாள் விவசாயி, ஆக வேண்டுமா?
‘விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடி கூட தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’ என்று எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே 044-66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, குரல் வழி சேவை மூலம் உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
மாணவர், வேலை தேடிக் கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.
துரை.நாகராஜன்
படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்