மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: பனங்கருப்பட்டியும்,ஜால வித்தையும்!

மாத்தி யோசிமண்புழு மன்னாரு, ஓவியம்: ஹரன்

‘தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்’

திருவள்ளுவர் தாத்தா பாடி வெச்சிருக்காரு. அதாவது, ஒருத்தர் செய்யுற தினையளவு நன்மை கூட, நன்றியுள்ள மனுஷனுக்கு பனை அளவுக்குத் தெரியும்ங்கிறதுதான், இந்த பாட்டோட அர்த்தம். பனை மரம் தர்ற பலன்களை அனுபவிச்சு தெரிஞ்சுக்கிட்டதால, அதை குறள்ல நல்லாவே பயன்படுத்தியிருக்கார் திருவள்ளுவர். ஆனா, நாம, அற்புதமான இந்த பனைமரங்களை, அதனுடைய ஆயுள் முடியறதுக்கு முன்னயே வெட்டி வெட்டி, செங்கல் சூளைக்கு அனுப்பிக்கிட்டிருக்கோம்.

ஒரு பனை மரத்தில இருந்து, ஒரு வருஷத்துக்கு பதநீர்-180 லிட்டர், பனை வெல்லம் - 25 கிலோ, பனஞ்சீனி - 16 கிலோ, தும்பு (மிதியடி, பிரஸ் தயாரிக்கப் பயன்படுகிறது) - 11.4 கிலோ, ஈக்கு - 2.25 கிலோ, விறகு - 10, கிலோ, ஓலை - 10 கிலோ, நார் - 20 கிலோ.... அளவுக்குக் கிடைக்குதுனு விஞ்ஞானிங்க பட்டியல் போட்டு சொல்லியிருக்காங்க. தென்னை மரத்தோட ஒப்பிட்டா, பனை மரத்துலதான் நிறைய பலன் உண்டு. ஆனா, தென்னை மரத்தைக் கொண்டாடுற மாதிரி, பனை மரத்தை நாம கொண்டாடுறதில்ல. நம்மளோட தயவு இல்லாமலே, மகசூல் கொடுக்கிற பனை மரத்துக்கு இனிமேலாவது நன்றி சொல்வோம்.

வெள்ளைக்காரன் நம்ம மண்ணுல காலடி வெச்சதிலிருந்துதான் பனைக்கு நேரம் சரியில்லாமா போயிடுச்சு. வெள்ளைக்காரன்தான், பனை மரம் ஏறி பதநீர் இறக்கிறவங்களுக்கு லைசென்ஸ் முறையைக் கொண்டு வந்தான். ஏன்னா, வெளிநாட்டு கம்பெனி பீருக்கும், பிராந்திக்கும் போட்டியா இருந்தது, கள்ளும், பதநீரும்தான். அடுத்து, தமிழ் மக்களோட உணவுல பனங்கருப்பட்டிக்கு (பனைவெல்லம்) தனியிடம் இருந்துச்சு. இதை ஒழிச்சுகட்டிப்புட்டு, வெள்ளைச் சர்க்கரையைக் கொண்டு வர திட்டம்போட்டான். கறுப்பா இருக்கிற பனங்கருப்பட்டியை விட, வெள்ளையா இருக்கிற சர்க்கரை சாப்பிடறதுதான் நல்லதுனு பொய்ப்பிரசாரம் வேற நடந்திருக்கு. கூடவே, நம்ம தமிழ் மக்களோட வெள்ளை நிற மோகம், பனங்கருப்பட்டியைத் தூக்கி எரிய வெச்சிடுச்சு.

மண்புழு மன்னாரு: பனங்கருப்பட்டியும்,ஜால வித்தையும்!

‘‘கரும்பைக் காட்டிலும், பனை மரம்தான் சிறந்தது. ‘பணப்பயிர் கரும்பு’ என்று சொல்பவர்களை நம்ப வேண்டாம். கிராம மக்களுக்கு ஏற்றது கருப்பட்டிதான்’’னு காந்தியப் பொருளாதார மேதை ஜே.சி.குமரப்பா, இந்தியா சுதந்தரம் வாங்கின உடனே, குரல் கொடுத்தாரு. ஆனா, அது ஏற வேண்டியவங்க காதுல ஏறவே இல்ல. இதோட, பலாபலனை இப்போ அனுபவிக்கத் தொடங்கிட்டோம்.

‘‘பனங்கருப்பட்டியும், பனங்கற்கண்டும் சாப்பிட்டால் வாத பித்தம் நீங்கும். பசியைத் தூண்டும். புஷ்டி தரும்...’’னு ஆயுர்வேத மருத்துவம் சொல்லுது.

பனங்கற்கண்டை, பசும்பால்ல காய்ச்சி குடிச்சவங்களுக்குத்தான், அந்த ருசியோட அருமை தெரியும். தொண்டைப் புண், வலி மற்றும் சளி பிரச்னைக்கு பனங்கற்கண்டுப் பால் கண் கண்ட மருந்து. புகழ்பெற்ற பேச்சாளர்களும், இனிய குரல் வளமுள்ள பாடகர்களும் பனங்கற்கண்டுப் பாலைக் குடிக்காம, மேடை ஏற மாட்டாங்க. இனிமையான குரலுக்கும், கம்பீரமான பேச்சுக்கும் அடித்தளம் போட்டுக் கொடுக்கிற சக்தி பனங்கற்கண்டுல இருக்கு.

பனங்கருப்பட்டியை மறந்து, நாம எவ்வளவு தூரம் வந்தோமோ, அந்த அளவுக்கு அதைத் தேடி ஓட வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கு.

பஞ்சு மில், நிலக்கரிச் சுரங்கம்... மாதிரியானப் இடத்துல வேலை செய்யுறவங்களுக்கும், வாகனம் அதிகமா இருக்கிற நகர பகுதியில குடியிருக்குறவங்களுக்கும் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனை இருக்கும். இதைத் தடுக்கக்கூடிய வல்லமை பனங்கருப்பட்டிக்கு உண்டுனு விஞ்ஞானிங்க கண்டுபுடிச்சு சொல்லியிருக்காங்க. இந்த பனங்கருப்பட்டி சோதனை முதல்ல எலிகளுக்குத்தான் நடந்திருக்கு. இந்த ஆராய்ச்சி வெற்றிகரமா முடிஞ்சவுடனே, பனங்கருப்பட்டியோட புகழைப் போற்றி பாடிக்கிட்டிருக்காங்க.

இந்த சங்கதியை பல நூறு வருஷங்களுக்கு முன்னாடியே சொன்ன ஆட்கள் நம்ம சித்தர் பெருமக்கள்தான். அந்தக் காலத்துல பனங்கருப்பட்டியோட மகிமையை எளிய மக்களுக்கும், தெளிவா சொல்ல, சித்தர்கள் சில ஜால வித்தை செய்து காட்டுவாங்களாம். கந்தகப் பொடியை சாம்பிராணிக் கரண்டியில வெச்சு, புகைமூட்டம் போட்டு, சிகப்பு நிற ரோஜாவை புகையில காட்டுவாங்களாம். உடனே, அந்த ரோஜாப் பூ, கந்தக விஷத்தால வெள்ளை நிறமா மாறிடுமாம். அடுத்து, பனங்கருப்பட்டியை, புகை போட்டு, அந்த வெள்ளையான ரோஜாவை புகைக்குள்ள காட்டுவாங்கலாம். சட்டுனு, சிகப்பு நிறத்துக்கு ரோஜா மாறிடுமாம். ‘கந்தகத்தோட விஷத்தை, பனங்கருப்பட்டிப் புகை நீக்கிடிச்சு. இதே போல, மனுஷன் உடம்புல இருக்குற நச்சுப் பொருளை வெளியேத்த, கட்டாயம் பனங்கருப்பட்டி சாப்பிடுங்கடா மக்காள்....’னு அறிவுரை சொல்லியிருக்காங்க சித்தருங்க!