Published:Updated:

கார்ப்பரேட் கோடரி - 7

கார்ப்பரேட் கோடரி
பிரீமியம் ஸ்டோரி
News
கார்ப்பரேட் கோடரி ( கார்ப்பரேட் கோடரி )

மண் மீதான வன்முறையைத் தோலுரிக்கும் தொடர்!தமிழகத்தில் பரவும் கோக்கோ பயிர்... உஷார், உஷார்!‘சூழலியலாளர்’ நக்கீரன்

 மிழகத்தில் தற்போது கோக்கோ பயிர் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பின்புலத்தில் காட்பரீஸ் போன்ற கார்ப்பரேட்கள் இருப்பது வெளிப்படை. கோக்கோவை இங்கு திடீரென அறிமுகப்படுத்துவதற்கு இரு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, நிலநடுக்கோட்டுக்கு தெற்கு வடக்காக 20 பாகை வரையுள்ள பகுதிகளில்தான் கோக்கோவை விளைவிக்க முடியும். இரண்டாவது, 2050-ம் ஆண்டுக்குள் கோக்கோவின் தேவை இருமடங்கு அதிகரிக்கும் என்கிற கணிப்பு. இத்தேவையை ஈடுசெய்ய புதிய விளைநிலங்கள் தேவைப்படுகின்றன.

உடனடி லாபம் கருதி உழவர்கள் பணப்பயிர் சாகுபடியில் இறங்கி, பிறகு அவதியுறுவது, உலகளாவியத் தொடர்கதை. பாமாயில், ஜெட்ரோபோ போல பல சான்றுகள் தமிழ்நாட்டிலும் உண்டு. உண்மையில், இத்தகையப் பணப்பயிர்கள் நமது நிலத்துக்கு வருவதற்கு முன்னர் நம்மைவிட ஏமாந்த பல ஏழைநாடுகளுக்குச் சென்றுவிட்டுத்தான் வந்திருக்கின்றன. அந்த நாடுகளில் என்ன நடந்தது அல்லது நடந்து கொண்டிருக்கிறது என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அதே கதையை கார்ப்பரேட்கள் நம்மிடமும் தொடங்கும்போது நாம் விழிப்புடன் இருக்க முடியும். இந்த விழிப்பு உணர்வுதான் இத்தொடரின் முதன்மை நோக்கம்.

கார்ப்பரேட் கோடரி - 7

கோக்கோ மர்மம் உடைந்தது!

கோக்கோவின் தாயகமான ஏண்டீஸ் மலையில் கி.மு 3-ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே ‘மாயன்’ நாகரிகத்தின் சடங்குகளில் கோக்கோவில் செய்யப்பட்ட பானங்களுக்குத் தனி இடம் இருந்திருக்கிறது. நிகாரகுவா நாட்டுக்குச் சென்றிருந்த கொலம்பஸுக்கு கோக்கோவின் சுவை பிடித்துப்போனதால், இதனை ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்றார். அங்கு நீண்ட காலம் இதன் தயாரிப்பு முறை மர்மமாக வைக்கப்பட்டு பணம் குவிக்கப்பட்டது. பிறகு, இந்த மர்மம் உடைபட்டு பொதுமக்களுக்கும் தயாரிப்பு நுட்பம் பரவ... சாக்லேட் சுவைப் பித்து மக்களிடையே அதிகரித்தது. இதனால், இதைப் பயிரிடுவதற்கான நிலத்தேவையும் அதிகரித்தது. 

நிலம் என்றாலே ஐரோப்பாவுக்கு தமது காலனியான ஆப்பிரிக்காதானே நினைவுக்கு வரும். வளமான மேற்கு ஆப்பிரிக்கக் காடுகளுக்கு கோக்கோ பயணமானது. இன்றைய உலகத்தில் ஆண்டுக்கு ஆறு லட்சம் டன் கோக்கோ உற்பத்தியாகிறது. அதில், மேற்கு ஆப்பிரிக்காவின் பங்கு மட்டுமே 70% ஆகும். ‘ஐவரி கோஸ்ட்’ நாடும் கானாவும் இதில் முதன்மையானவை.

கார்ப்பரேட் கோடரி - 7

கோக்கோவுக்காக பரதேசிகளாகும் குழந்தைகள்!

கடந்த 30 ஆண்டுகளில் சாக்லேட்டின் சந்தை 131% உயர்ந்துள்ளதோடு ஆண்டுக்கு 2.9% வளர்ச்சி கண்டும் வருகிறது. இவ்வளர்ச்சியால் ஆப்பிரிக்க உழவர்களுக்கு பணம் குவிந்திருக்கும் என நீங்கள் நினைத்தால் உங்களைப் போல் அப்பாவி எவருமில்லை. மாறாக, இந்த கோக்கோ தோட்டங்கள் ஆப்பிரிக்கக் குழந்தைகளைக் கடத்திச் சென்று விற்கும் புதிய அடிமைச் சந்தைகளை உருவாக்கி இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சிகரமான செய்தி. 

கோக்கோ அதிகம் பயிரிடும் ஐவரி கோஸ்ட்டின் கோக்கோ தோட்டங்களில் அண்டை நாடுகளிலிருந்து கடத்தி வரப்படும் சிறுவர்கள் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டு வேலை வாங்கப்படுகிறார்கள் என்கிற தகவலை சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது, பி.பி.சி. செய்தி நிறுவனம். அருகிலுள்ள மாலி போன்ற ஏழை நாடுகளிலிருந்து ஆசைமொழிகளைக் கூறி சிறுவர்கள் கடத்தப்பட்டு ஐவரி கோஸ்ட், கானா நாடுகளின் கோக்கோ தோட்டங்களுக்கு விற்கப்படுகிறார்கள். தெருவில் விளையாடும் சிறுவர்களையும் கடத்தல் கும்பல்கள் கடத்தின. இச்சிறுவர்கள் அனைவரும் ஒன்பதிலிருந்து பன்னிரண்டு வயதுள்ளவர்கள். இவ்வாறு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். இது தவிர, லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் இந்தத் தோட்டங்களில் கொத்தடிமைகளாக வேலை பார்க்கின்றனர்.

இவ்வாறு கடத்திக் கொண்டு வரப்படும் சிறுவர்கள், கோக்கோ தோட்டத்திலேயே  ஒரு கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டு ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேரத்துக்கு மேல் கடுமையாக வேலை வாங்கப்படுகிறார்கள். சிறுவர்களின் உயரத்தைவிட உயரமான கோக்கோ கனிகள் நிரம்பிய மூட்டையை சுமக்க வைக்கிறார்கள். மறுத்தால் அடி உதைதான். தழும்புகளும் காயங்களும் இல்லாத சிறுவர்களை இத்தோட்டங்களில் காணவே முடியாது. தப்பிக்கும் வாய்ப்பும் இச்சிறுவர்களுக்கு இல்லை. காரணம், இவர்கள் கையில் பணம் கிடையாது என்பது. மற்றொன்று தமது நாட்டுக்கு திரும்பும் வழிவகையும் எப்படி என்று தெரியாது.

இரக்கமற்ற கார்ப்பரேட்கள்!

இச்செய்திகள் வெளியாகி உலகத்தின் மனசாட்சியை உலுக்கின. சாக்லேட் விற்பனைக்கு எதிரான கண்டனக் குரல்கள் எழும்பின. சிறார் தொழிலாளர்களைப் பயன்படுத்துவது என்பது ஐ.நா. சபையின் தீர்மானத்துக்கு எதிரானது. அதிலும் சிறுவர்கள் கடத்தி வரப்பட்டு கொத்தடிமைகளாக்குவது என்பது அசிங்கம். தங்கள் மேல் பழி வந்ததும் உடனே சாக்லேட் நிறுவனங்கள் இதனை மறுத்தன. இவையெல்லாம் ஆப்பிரிக்க மக்களுக்குச் சொந்தமான சிறுசிறு தோட்டங்களில்தான் நடக்கின்றன என்று பதில் சொல்லி அவை தப்பிக்கப் பார்த்தன.

கார்ப்பரேட் கோடரி - 7

உலகளவில் கொள்முதல் செய்யப்படும் கோக்கோவில் 40 சதவிகிதத்துக்கு மேல் இந்த ஐவரி கோஸ்ட் நாட்டில் இருந்துதான் வாங்கப்படுகிறது. இதில் மார்ஸ், நெஸ்லே, ஹெர்சே போன்ற நிறுவனங்களும் அடக்கம். இங்கு என்ன நடக்கிறது என்பது அவற்றுக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் அவை பாதிக்கண்களை மூடிக்கொண்டு நடித்தன. குழந்தைத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் இடங்களில் இருந்து கச்சாப் பொருட்களை வாங்குவது குற்றமென இந்நிறுவனங்களுக்குத் தெரியாதா?

இன்னும் சொல்லப் போனால் இந்த அடிமைக் குழந்தைத் தொழிலாளர் முறையை மறைமுகமாக ஊக்குவிப்பதில் இந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பங்குண்டு எனக் குற்றம் சாட்டுகிறார், ஐவரி கோஸ்ட்டின் பிரதமர்.

“இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் சிறு உழவர்களிடையே கோக்கோவைப் பயிரிட ஊக்குவித்து வந்தன. ஆனால், விளைச்சல் பெருகப் பெருக அவை விலையைக் குறைத்துவிட்டன. இது உழவர்களிடையே நெருக்கடியை ஏற்படுத்தியது. எனவே செலவினங்களைக் குறைக்க இதுபோன்ற நீதிக்குப் புறம்பான வழிகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர். தற்போது கோக்கோவுக்கு அவை வழங்கும் விலையைவிட 10 மடங்கு கூடுதல் விலையைத் தந்தால் இந்த சிக்கல் தானாகவே தீர்ந்துவிடும்” என்கிறார், அவர்.

காடுகளை அழிக்கும் கோக்கோ!

ஓரினப்பயிராக வளர்க்கப்படும் கோக்கோ ஆப்பிரிக்க மண்ணுக்குச் செய்திருக்கும் அழிவுகளும் ஏராளம். கோக்கோவுக்காக உலகின் பழமையான மழைக்காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன. அழிக்கப்பட்ட இப்பகுதிகளில் பாரம்பர்ய கோக்கோவை விடுத்து கானா நாட்டின் கோக்கோ ஆய்வு நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வீரிய ஒட்டு கோக்கோ பயிர் அறிமுகப்படுத்தப்பட்டது. வழக்கமான வீரிய பயிர்களைப் போல இதுவும் விளைச்சலைப் பெருக்கினாலும் வழக்கத்தைப் போலவே மண்ணிலிருந்த நுண்சத்துக்களைத் துடைத்தழிக்க... செயற்கை உர நிறுவனங்கள் மகிழ்ச்சி அடைந்தன.

ஆயினும், கார்ப்பரேட்டின் கோக்கோ பசி அடங்கவில்லை. அவை, ‘இன்னும் இன்னும்...’ எனக் கெஞ்சின. இதனால் உழவர்கள் புதிய குறுக்கு வழியைக் கண்டுபிடித்தனர். வழக்கமாக மரங்களின் கீழுள்ள நிழற்பகுதியில்தான், இந்த மரங்கள் வளரும். ஆனால், புதிய வீரிய ரக கோக்கோ வெயிலிலும் நன்கு வளர்வதைக் கண்டுகொண்ட உழவர்கள் இருந்த மரங்களையும் அழித்துவிட்டு வெயில் நேரடியாக படும்படி செய்தனர். இதனால் பயிரிடும் நிலப்பரப்புக் கூடி விளைச்சலும் அதிகரித்தது. ஆனால், இந்த விளைச்சலையும் தரம் குறைந்து விட்டதாகக் கூறி விலையைக் குறைத்தன, கார்ப்பரேட் நிறுவனங்கள். உழவர்களுக்கு மேலும் நஷ்டம் கூடியது. வெயில் நேரடியாக நிலத்தில் படுவதால் களைகள் பெருக, களைக்கொல்லிச் செலவும் பெருகின. ஒரு காலத்தில் வளமான மண்ணைக் கொண்டிருந்த ஆப்பிரிக்காவின் இம்மேற்கு பகுதி, இன்று ஆப்பிரிக்காவின் வட பகுதியைப் போல் பாலைநிலமாகிக் கொண்டிருக்கிறது.

கோக்கோ உழவர்களின் இத்துயரங்களைக் கேட்டு மனதை ஆற்றிக்கொள்ள, ஒரு கோப்பைக் காப்பி குடித்தால் தேவலாம் போலிருக்கிறது. ஆனால், காப்பி என்றவுடன் இதே ஆப்பிரிக்காவிலுள்ள எத்தியோப்பியாவின் நினைவு வருகிறதே!

நடிகர்களுக்கு கோடிகள்... விவசாயிகளுக்கு?

உண்மைதானே... சாக்லேட்டுக்கான சந்தை மட்டும் ஆண்டுக்காண்டு பல மடங்கு உயருகிறதாம். ஆனால், கொள்முதல் விலை மட்டும் குறைகிறதாம்... கார்ப்பரேட்டுகளின் கல்லாப்பெட்டி நிரம்பி வழிவதால்தானே பல நாடுகளிலும் நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கு பல கோடிகள் கொடுத்து விளம்பரங்களில் நடிக்க வைக்கப்படுகின்றனர். இவற்றில் சிறிதளவுகூட உழவர்களுக்குப் பிட்டுக்கொடுக்க மனம் வருவதில்லை இவர்களுக்கு. கட்டுப்படியாகவில்லையென கூறிக்கொள்ளும் நிறுவனங்கள், பிறகு ஏன் கோக்கோ பயிரிடும் பரப்பை தமிழகம் வரை விரிவாக்கத் துடிக்கின்றன?

சாக்லேட் தரும் 8 ஆயிரம் கோடி டாலர்!

சாக்லேட் வணிகத்தில் மார்ஸ் இன்கார்ப்பரேஷன் (ஸ்நிக்கர்ஸ், எம் அண்ட் எம், மில்கி வே, மார்ஸ், ட்விக்ஸ்) முதலிடம் வகிக்கிறது. அடுத்தடுத்த இடங்களை நெஸ்லே, ஃபெரோரா ஸ்பா (நியூடெல்லா), ஹெர்சே நிறுவனம், காட்பரீஸ் நிறுவனங்கள் வகிக்கின்றன. 2010-ம் ஆண்டில் மட்டும் மொத்த சாக்லேட் நிறுவனங்களும் 8 ஆயிரத்து 320 கோடி டாலர் வருமானம் ஈட்டின. இதில் அமெரிக்கச் சந்தையில் இருந்து கிடைத்தது மட்டும் 2 ஆயிரம் கோடி டாலர்கள். ஏனெனில் 52 சதவிகித அமெரிக்கர்களுக்கு சாக்லெட் மணம் பிடிக்குமாம்.