Published:Updated:

மண்ணுக்கு மரியாதை! - 16

மண்ணுக்கு மரியாதை!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்ணுக்கு மரியாதை! ( மண்ணுக்கு மரியாதை! )

கழிவுகள்... இனி, கரிமப்பொருட்கள்!அசத்தும் அனிலா அடுப்புகள்!நீ.செல்வம், ஆ.பாலமுருகன்

ண்ணில் அங்ககச் சத்தை நிலைநிறுத்த உதவும் பயோசார் என்ற உயிரிக் கரிமத்தூள் குறித்துப் பார்த்தோம். உயிரிக் கரிமத்தூள் தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து, இனி பார்ப்போம்.
இந்தியாவில் சுமார் 60 சதவிகித கிராம மக்கள், 20 சதவிகித புறநகர் மக்கள், 10 சதவிகித நகர்ப்புற மக்கள் மரங்களை எரிபொருளாகப் பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இவர்கள், பெரும்பாலும், விறகு அடுப்புகளையே சமைப்பதற்குப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அடுப்புகளைப் பயன்படுத்துவதால் விறகில் இருந்து வெளிப்படும் தீயின் சக்தியில் 5 முதல் 15 சதவிகிதம் மட்டுமே உணவு சமைக்கப் பயன்படுகிறது. மீதி சக்தி அனைத்தும் வீணாகிறது. மேலும் இந்த அடுப்புகளில் இருந்து வெளிப்படும் புகையில் பலவித நச்சு வாயுக்களும், நச்சுப் பொருட்களும் உள்ளன. இப்புகையை நாள் கணக்கில் சுவாசித்துக்கொண்டே இருந்தால் பல உடல் நலக்கேடுகள் ஏற்படுகின்றன.

சாதாரணமாக கிராமப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் அடுப்புகள் குறைந்த எரிதிறன் கொண்டவை என்பதால், சமைக்கும் நேரம், எரிபொருள் செலவு அதிகமாகிறது. இதனால், பெண்கள் பெரும்பாலான நேரத்தை சமையலறையிலேயே கழிக்க வேண்டியுள்ளது.
 

இப்பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வாக வந்தது... வெப்ப எரிவாயு அடுப்பு. இதில், பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, கண்டுபிடிக்கப்பட்டது ‘மேம்படுத்தப்பட்ட வெப்ப எரிவாயு அடுப்பு’ என்கிற ‘அனிலா அடுப்பு’. ரவிக்குமார் என்பவர் கண்டுபிடித்த இந்த அடுப்பு, இன்றைக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மண்ணுக்கு மரியாதை! - 16

மரம் மற்றும் வேளாண் கழிவுப்பொருட்களைக் குறைவான காற்றுடன் வெப்ப சிதைத்தலுக்கு உட்படுத்தும் போது வெப்ப எரிவாயு உற்பத்தியாகிறது. இந்த வெப்ப எரிவாயு குறைந்தளவு எரிதிறன் கொண்டது. இதன் மூலம் வேளாண் கழிவுகளை, வெப்ப ஆற்றலாகவும், அதிலிருந்து கிடைக்கக்கூடிய கரிப்பொருளை, உயிரிக் கரிமப்பொருளாகவும் (பயோசார்) நிலங்களில் பயன்படுத்த முடியும். இயற்கையான காற்று சுழற்சி முறையில், கட்டுப்படுத்தப்பட்ட காற்றளிப்பு மூலம் மேல்நோக்கிச் செல்லும் கொள்கையின் அடிப்படையில் இந்த அடுப்பு வடிவமைக்கப்படுகிறது.

கடினமான துத்தநாகத் தகடு மூலம் செய்யப்பட்ட இந்த அடுப்பில் பெரிதும், சிறிதுமாக இரண்டு உருளை வடிவ கலன்கள் இருக்கும். இவை உள்புறம் ஒன்று, வெளிப்புறம் ஒன்று என இருக்கும். வெளிப்புறக் கலனில் வேளாண் கழிவுகளை இடவேண்டும். கழிவு எத்தனை பெரிதானதாக இருந்தாலும் சிறுசிறு துண்டுகளாக வெட்டி இதனுள் போடலாம். அடிப்பகுதியில் கூம்பு வடிவ துளையிடப்பட்ட அமைப்பு ஒன்று உள்ளது. இதன் வழியாக வரும் காற்று மேலே செல்வதால் அடுப்பு பிரகாசமாக எரிகிறது. வேளாண் கழிவுகளை அடுப்பில் இட்டு, தீ மூட்டினால் ஜுவாலை விட்டு எரியும்.

இதில், நன்றாக எரியக்கூடிய அனைத்து வேளாண் கழிவுகளையும் பயன்படுத்தலாம். குறிப்பாக, பெரிய மரத்துண்டு, தேங்காய் மட்டை, பாக்கு மட்டை, பருத்தி மிளார், மக்காசோளத் தட்டை போன்றவற்றைப் பயன்படுத்தலாம். நமக்குத் தேவையான வெப்பம் மற்றும் உயிரிக் கரிமத்தூளின் அளவுக்கு ஏற்ற அடுப்புகளைப் பயன்படுத்த வேண்டும். வேளாண் கழிவுகளைப் பதன் செய்ய பெரிய அடுப்புகளைப் பயன்படுத்த வேண்டும். நேரடியாக விறகை எரிக்கும்போது வெப்பநிலை 400 முதல் 500 சென்டிகிரேட் என்ற அளவில்தான் இருக்கும். ஆனால், இந்த வெப்ப எரிவாயு அடுப்பு மூலம் 600 முதல் 700 சென்டிகிரேட் வரை வெப்பம் இருக்கும். சாதாரண அடுப்பில் வெப்ப எரிதிறன் 12 முதல் 15 சதவிகிதம்தான் இருக்கும். வெப்ப எரிவாயு அடுப்புகளில் 40 சதவிகிதம் இருக்கும். இதனால், 10 சதவிகிதம் எரிபொருள் மீதமாவதுடன், 40 சதவிகித நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது.

எங்கெங்கு பயன்படுத்தலாம்?

கால்நடைப் பண்ணைகளில் கஞ்சி, குடிநீர் தயாரிக்க; பள்ளிகளில் மதிய உணவு தயாரிக்க; சிறிய அளவில் நெல் அவித்தல், பாக்கு வேகவைத்தல் போன்ற பல்வேறு செயல்களுக்கு இந்த அடுப்பைப் பயன்படுத்தலாம். அடுப்பின் வெளிப்பக்க உருளையில் ஒரு முறை 3 கிலோ கழிவுகளை நிரப்பி எரிய வைத்தால், ஒரு மணி நேரம் எரியும். அதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தை பல வகையில் பயன்படுத்தலாம். ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தால் உள்ளே இட்ட கழிவுகள் எரிந்து கரித்தூள் போல காணப்படும். அப்போது அடுப்பை நிறுத்தி, அந்தக் கரித்தூளை வெளியே எடுக்க வேண்டும். இந்தக் கரித்தூள்தான் உயிரிக் கரிமத்தூள் எனப்படுகிறது. இதை மண்ணில் அங்ககச்சத்தை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தலாம்.

உலகளவில் உயிரிக் கரிமத்தூள் தொடர்பான விழிப்பு உணர்வு பரவி வருகிறது. உயிரிக் கரிமத்தூளை நிலத்தில் எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்பது இன்னும் வரையறை செய்யப்படவில்லை. தற்சமயம் பொதுவான ஒரு பரிந்துரையை மட்டும்தான் உலகம் முழுவதும் பின்பற்றுகிறார்கள். இதை ஒரு சதுர மீட்டர் மண்ணில் அரை கிலோ முதல் 5 கிலோ வரை பயன்படுத்தலாம். ஒரு முறை நிலத்தில் இட்டால், குறைந்தது 10 ஆண்டுகளுக்கு மண்ணில் இருக்கும்.

மண்ணுக்கு மரியாதை! - 16

மண்ணில் விழும் மழைநீரைப் பிடித்து வைப்பது, பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்தை எடுத்துக் கொடுப்பது, மண்ணில் கார அமிலத்தன்மை மாறாமல் சீர்திருத்தம் செய்வது போன்ற பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கும்.

இந்த அடுப்புகளைப் பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு இரண்டு வகையான பயன்கள் கிடைக்கின்றன. தோட்டத்தில் சேரும் விவசாயக் கழிவுகளை சுழற்சி செய்வதுடன், விளைநிலங்களுக்குத் தேவையான உயிரிக் கரிமத்தூளையும் உற்பத்தி செய்து கொள்ள முடியும்.
அனிலா அடுப்பு தொடர்பான பயிற்சி மற்றும் செயல் விளக்கத்துக்கு, தூத்துக்குடியில் உள்ள ஸ்காட் வேளாண் அறிவியல் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு, செல்போன்: 99429-78497

-வாசம் வீசும்

தொகுப்பு: ஆர்.குமரேசன்

கழிவு மேலாண்மை...

இனி கவலையில்லை!

விறகு அடுப்பின் தேவைக்காக அதிகப்படியான மரங்கள் வெட்டப்படுகின்றன. அதேசமயத்தில், அதிகபடியான வேளாண் கழிவுகள் வீணாக்கப்படுகின்றன. அதற்கு மாற்றாக வெப்ப எரிவாயு அடுப்பைப் பயன்படுத்துவதால் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. கழிவுகளை எரிப்பதால் உயிரிக் கரிமத்தூள் கிடைக்கிறது. அதைப் பயிருக்கு உரமாகக் கொடுக்கிறோம். பயிர் அறுவடையானதும் அதன் கழிவுகளை மறுபடியும் உயிரிக் கரிமத்தூளாக மாற்றுகிறோம். இந்த சுழற்சி முறையால் கழிவு மேலாண்மை பற்றி கவலைப்படத் தேவையில்லை.