மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையும்... முத்தான பலன்களும்!

மாத்தி யோசி ஓவியம்: ஹரன்

‘அன்னம், பரபிரம்ம ஸ்வரூபம்’னு சமஸ்கிருதத்துல சொல்லியிருக்காங்க. இதோட அர்த்தம், ‘எல்லா உயிரினங்களும் அன்னத்திலிருந்தே ஆரம்பம் ஆகின்றன. எனவே, அன்னம்தான் கடவுள்’னு சொல்றாங்க. இதைத்தான், நம்ம ஆளுங்க, ‘சோத்துல இருக்கிறான் சொக்கநாதன்’னு தெளிவா சொல்லியிருக்காங்க.

சாப்பாட்டு விஷயத்துல கண்ணும் கருத்துமா இருக்கிறவங்களுக்குத்தான் உடம்பு வில்லு மாதிரி கிண்ணுனு இருக்கும். ஆஸ்பத்திரி பக்கம் போக வேணாம்னு ஆசைப்படுறவங்களுக்கு கீரைகள்தான் தீர்வு. எதையுமே, வெளிநாட்டுக்காரங்க சொன்னாத்தான் நமக்கும் புரியும். நாமளும் ஏத்துக்குவோம்.

இதோ, இந்தியாவோட முருங்கைக்கீரை மகத்துவத்தை அமெரிக்கக்காரங்க பெருமையோடு பேசறாங்க. அதனால, முருங்கைக்கீரை பக்கம் கவனத்தைத் திருப்புங்க. அதாவது, உலகத்துல இருக்கிற, வேற எந்த தாவர வகைகளிலும் இல்லாத ஒரு பொருள், அதிக அளவில முருங்கைக்கீரையில இருக்குது. அதாவது, முதுமையைத் தாமதப்படுத்தி உயிரணுக்களை அதிகமா பெருக வைக்கிற ‘சித்தின்’ (zeatin) என்ற ஊட்டச்சத்து அதில் இருக்குனு கண்டுபிடிச்சிருக்காங்க.

மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையும்... முத்தான பலன்களும்!

எப்பவும், சுறுசுறுப்பா இருக்கணும்னு ஆசைப்படுறவங்க முருங்கைக்கீரை, முருங்கைக்காயை மறக்காம சாப்பிடுங்கனு, வெளிநாட்டு மருத்துவ விஞ்ஞானிங்க, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆலோசனை சொல்லி கோடிகோடியா பணம் சம்பாதிச்சிக்கிட்டு இருக்காங்க. ஆனா, நம்ம தெருக்கோடியில, இதை கூவிக்கூவி வித்தாலும், வாங்கி சாப்பிடறதுக்கு யோசிக்கிறோம்.

‘முருங்கைக் கீரையில் சுமார் 90 வகையான ஊட்டச்சத்துக்கள் இருக்குது... இதில் புற்றுநோயைக் கட்டுப்படுத்தக் கூடிய இரண்டு வகை சத்துக்களும் இருக்கு’னு நவீன விஞ்ஞான முறைப்படி கண்டுபுடிச்சு சொல்லியிருக்காங்க. 300 வகையான நோய்களைத் தீர்க்கக்கூடிய திறன் முருங்கைக்கு உண்டுனு பல நூறு வருஷத்துக்கு முன்னயே ஆயுர்வேத மருத்துவத்துல எழுதி வெச்சிருக்காங்க.

முருங்கைக்கீரையில பாலைவிட இரண்டு மடங்கு புரதச்சத்தும், நான்கு மடங்கு கால்சியமும், ஏழு ஆரஞ்சு பழத்துல இருக்கிற வைட்டமின்-சி உயிர்ச்சத்தும், மூணு வாழைப்பழத்துல உள்ள பொட்டாசியமும், கடல்பாசியைவிட மூணு மடங்கு இரும்புச் சத்தும், கேரட்டைவிட நான்கு மடங்கு வைட்டமின்-ஏ உயிர்ச்சத்தும் இருக்குனு பட்டியல் போட்டுச் சொல்றாங்க.

‘நெய்யில கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கு. அதனால, அதைச் சாப்பிடவே மாட்டோம்!’னு சிலர் பெருமையா பேசிக்குவாங்க. நெய்யைப் பக்குவமா பயன்படுத்தத் தெரியாதவங்க, நெய் மேல, குத்தம் சொல்றாங்க. அந்தக் காலத்துல, நெய் காய்ச்சும் போது, ஒரு கைப்பிடி முருங்கை இலையை அதுல போடுவாங்க. முருங்கை இலையைப் போட்டதுக்கு அப்புறம்தான், நெய் மணம் தூக்கலா அடிக்கும். முருங்கை இலையை மணத்துக்கு மட்டுமில்லீங்க, நெய்யில இருக்கிற தீமை செய்யுற கொழுப்பு வகையை நீக்கவும்தான் நெய்யில பயன்படுத்துறாங்க.

சித்த மருத்துவத்தில, முன்னோடியான அகத்தியர், ‘நன் முருங்கைத்தழை, நெய் வார்த்துண்ணில்... யாளி யென விஞ்சுவார்’னு பாடி வெச்சிருக்காரு. அதாவது, தினமும் முருங்கைக் கீரையை நெய்யில பொரிச்சு சாப்பிட்டா, ‘யாளி’ மாதிரி பலம் உண்டாகுமாம். ஒரு ‘யாளி’ பத்து யானையோட பலம் கொண்டதுனு சொல்றாங்க. அந்தக் காலத்துல உடம்பை புஷ்டியா வைச்சுக்க ஆசைப்படுறவங்களுக்கு, சித்த மருத்துவருங்க, அகத்தியர் சொன்ன சூத்திரத்தைத்தான் சொல்லி அனுப்புவாங்களாம்.

இந்த அவரச யுகத்துல வெண்ணெய் எடுத்து, நெய் காய்ச்ச முடியாவிட்டாலும், கடையில வாங்கற நெய்யில, முருங்கைக் கீரையைச் சேர்த்துக் காய்ச்சி சாப்பிடலாம்தானே!

சிலவகை உணவுகளைச் சாப்பிடும்போது, நிறைய தண்ணீர் தாகம் எடுக்கிறது என்றால், அந்த உணவு சரியில்லை என்று அர்த்தம்’னு தமிழ் மருத்துவம் சொல்லுது. உதாரணத்துக்கு மசால் தோசையைச் சாப்பிட்டு முடிச்சவுடனே,  முக்கால் லிட்டர் தண்ணி குடிச்சாத்தான் தாகம் அடங்குது. தோசையில இருந்த அதிகமான புளிப்புத் தன்மையை சமம் செய்துக்கத்தான், நம்ம உடம்பே மருத்துவராகி தண்ணி குடிக்க வைக்குது.

பொதுவா, எந்த ஒரு உணவையும் சாப்பிட்டவுடனே, லிட்டர் கணக்குல தண்ணி, குடிக்க வைச்சா, அது சரியில்லாத உணவுனு நீங்களே முடிவு செய்துடலாம். முருங்கைக் கீரை, முருங்கைக்காயை.... உணவுல சேர்த்துக்கிட்டா,  உடனே தண்ணி தாகம் வராது. இதுவே, முருங்கை நல்ல உணவுனு சொல்றதுக்கான அறிகுறி!