நாட்டு நடப்பு
Published:Updated:

உழவாளி

ஊழல் பெருச்சாளிகளை சுளுக்கெடுக்க வருகிறான்...உழவாளி, ஓவியம்: ஹரன்

சொட்டுநீர்ப் பாசனக் கொள்ளை... செழிக்கும் அதிகாரிகள்... வாடும் விவசாயிகள்..!

சொட்டுநீர்ப் பாசன மானிய முறைகேடுகள் குறித்து கடந்த இதழில் பதிவு செய்திருந்தோம். அதில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார விவசாயிகள் சங்க துணைத்தலைவர் முத்தையா, தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அதன் தொடர்ச்சி இங்கே...

“மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்துல, கலெக்டரே அதிகாரிகளை எச்சரிக்கை செய்துட்டார். நமக்கு நிச்சயம் சொட்டுநீர் மானியம் கிடைச்சுடும்னு நினைச்சு, ரெண்டு நாள் கழிச்சு தோட்டக்கலைத் துறை அலுவலகத்துக்குப் போனேன். என்னை எதிரி மாதிரி முறைச்சுப் பார்த்த அதிகாரிகள், ‘உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணம் கேன்சல் ஆயிடுச்சு. அடுத்த தடவைதான் பாக்கணும்’னு கடுப்பாக சொன்னாங்க. விவசாயிகள் குறைதீர் கூட்டத்துல அதிகாரிகளை மாட்டி விட்டதுனாலதான் இப்படி செஞ்சாங்கனு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா, என் கூட மானியத்துக்கு அப்ளை பண்ணி, பணம் கொடுத்த விவசாயிகளுக்கெல்லாம் சொட்டுநீர் போட்டுக் கொடுத்துட்டாங்க.

உழவாளி

கைச்செலவுக்கு காசு கொடுக்கணும்!

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சில கம்பெனிகளை மட்டும்தான் ஒதுக்கியிருக்காங்க. அந்த கம்பெனிகள் தயாரிக்கிற பைப்பை மட்டும்தான் வாங்க முடியும். எதிர்த்துப் பேசினா... மானியம் ரத்தாகும், லிஸ்ட்டுல இருந்து பேரை எடுத்திடுவாங்க. அதிகாரிகளை எதிர்த்து கேள்வி கேட்காம, அவங்க சொல்லுற கம்பெனியில கொட்டேஷன் வாங்கிட்டு, அதிகாரிகள் கேட்குற காசைக் கொடுத்தா மட்டும்தான், வேலை நடக்கும். சொட்டுநீர் இணைப்பை ஆரம்பத்தில் 3 இஞ்ச் விட்டம், 2.5 இஞ்ச் விட்டம், கடைசியா 2 இஞ்ச் விட்டம்னு வரிசைப்படி போட்டாத்தான் கடைசிவரை சீராக தண்ணீர் பாயும். ஆனா, மானியத்துல வாங்குறப்ப இதையெல்லாம் கடைப்பிடிக்க மாட்டாங்க. ஒரே விட்டத்துல பைப்பைக் கொண்டு வந்து போடுவாங்க. லாரி அல்லது மினி லாரியில இருந்து பைப்புகளை இறக்குறது, குழி தோண்டுறது, கமிஷன், வந்து போறவங்க கைச்செலவு, காபி, டீ செலவு... தனியா வேற கணிசமா செலவு பண்ண வேண்டியிருக்கும்.

முரண்பாடான விதிகள்!

அப்போதிருந்த கலெக்டர் பாலாஜியிடம், ‘மானியத்துல போடுற டிரிப்களுக்கு கியாரண்டி, வாரண்டி சர்டிபிகேட் கொடுக்கணும், பில் கொடுக்கணும்’னு விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சொன்னோம். உடனே அதிகாரிகளைக் கூப்பிட்டு பில் கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டார். ஆனா, இப்போ வரை அது வெறும் உத்தரவாதான் இருக்கு. தவிர, சிறு விவசாயிகள் சான்றிதழை ஒவ்வொரு வருஷமும் கேட்கிறாங்க. வி.ஏ.ஓ, ஆர்.ஐ, தாசில்தார்னு மூணு பேர்ட்டயும் அலையா அலைஞ்சு... ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா ‘மொய்’ எழுதித்தான் சான்றிதழ் வாங்க வேண்டியதிருக்கு” என்ற முத்தையா, 

உழவாளி

சொந்தமாக அமைப்பதே மேல்!

“மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், ஆந்திரா மாநிலங்கள்ல எல்லாம், சொட்டுநீர் போடுற விவசாயி, அவருக்குப் பிடித்த அல்லது நம்பத் தகுந்த கம்பெனிகள்ல போய் தன்னுடயை தேவைக்கு ஏற்ப பைப்புகளைப் பார்த்து வாங்கிட்டு, உரிய ஆவணங்களைக் காட்டினா, பில்லிலேயே மானியத்தைக் கழிச்சிட்டு கொடுத்துடுறாங்க. தமிழ்நாட்டுல மட்டும்தான் அதிகாரிகள் சொல்ற கம்பெனிகள்ல குழாய்களை வாங்க வேண்டிய நிலைமை. சொட்டுநீர்ப் பாசனத்துக்கு அரசு மானியம் கொடுக்கிறது நல்ல விஷயம்தான். ஆனா, அமைச்சர்கள், இணைஇயக்குநர்கள், அதிகாரிகளோட தலையீட்டால் இந்தத் திட்டம் பலனில்லாமப் போயிடுச்சு. நான் ஒரு தடவை பாதிக்கப்பட்டதுனால பார்க்கிற விவசாயிகளிடமெல்லாம், ‘வட்டிக்குப் பணம் வாங்கினாலும் பரவாயில்ல, சொந்தச் செலவுல நம்ம விருப்பத்துக்கு ஏத்த மாதிரி டிரிப் போடுங்க’னு சொல்றேன். மானியத்துக்கு அலையுறதைவிட சொந்தமா போடுறதே மேல்” என்றார், வேதனையுடன்.

அமைக்கல... ஆனா, அமைச்சிருக்கோம்..!

‘‘நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்துக்கு உட்பட்ட எலச்சிப்பாளையம், மோர்பாளையம், திருச்செங்கோடு ஒன்றியங்களில் நடந்தவை 100 சதவிகிதம் மானியம் அல்ல... 100 சதவிகித முறைகேடு’’ என்கிறார், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் மற்றும் பயனீட்டாளர்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் ‘கொல்லப்பட்டி’ நடேசன்.

“கடந்த 2010-ம் ஆண்டு மேற்படி ஒன்றியங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளிடம்

உழவாளி

வெவ்வேறு காரணங்களைச் சொல்லி வாங்கப்பட்ட ‘ரேஷன் கார்டு ஜெராக்ஸ் காப்பி’யை வைத்து... சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வயல்களில் சொட்டுநீர்ப் பாசனக்கருவிகள் அமைக்காமலேயே, அமைத்துள்ளதாக கணக்கு காட்டியிருக்கிறார்கள். இப்படி, கம்பெனிக்காரர்களும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களும் கைகோத்துக்கொண்டு கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் அளவுக்கு கொள்ளை அடித்திருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் இந்த முறைகேடுகளைத் தெரிந்துகொண்ட முன்னோடி விவசாயிகள் சிலர் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்தனர். இரவோடு இரவாக விவசாயிகள் சிலரின் வயலில் சொட்டுநீர் உபகரணங்களைப் பொருத்திக் கொடுத்து, விஷயத்தை அப்படியே அமுக்கிவிட்டனர். இதுபோல, தமிழ்நாடு முழுதும் நடந்திருக்கும் சொட்டுநீர் மானிய முறைகேடுகள் சொல்லி மாளாது” என்ற நடேசன்,

“இந்த மானியக் கொள்ளைகளை எல்லாம் களைந்து, உண்மையிலேயே விவசாயிகளுக்கு மானியம் கிடைக்க வழி செய்ய வேண்டும். அதேபோல, குழாய்வழிப் பாசனத்துக்கு மட்டும்தான் அரசு மானியம் கிடைக்கிறது. ‘தெளிப்பு நீர்’, ‘ரெயின் கன்’ போன்ற பாசன உபகரணங்களைப் பொருத்தவும் மானியம் வழங்க வேண்டும். விவசாயிகள் வங்கிக் கணக்கில் மானியத் தொகையை நேரடியாகச் செலுத்த வேண்டும். அவர்கள் விரும்பும் நிறுவனத்தின் உபகரணங்களை வாங்க அனுமதி கொடுக்கவேண்டும்’’ என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

அறிவிப்பு வரும்... ஆனா, அரசாணை வராது!

சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பதில் அரசும், அதிகாரிகளும் நடந்து கொள்ளும் விதம் பற்றி  சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் முகவர் ஒருவர் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

பெயர் வெளியிட விரும்பாத அவர், “சொட்டுநீர்ப் பாசனத் திட்டம் விவசாயத்துக்கு ஒரு வரப்பிரசாதம். ஆனால், மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டுல ரொம்ப மோசம். போன வருஷம் ஏப்ரல்-மே மாதம் அறிவித்த சொட்டுநீர்ப் பாசனத்திட்டத்துக்கு இந்த வருஷம் ஜனவரி மாதம்தான் அரசாணை வெளியிட்டாங்க. ஒண்ணரை மாதத்துக்குள்ள திட்டத்தை முடிக்கச் சொல்லிட்டாங்க. இந்த வருஷம் ஏப்ரல், மே மாதங்களில் அறிவித்திருக்க வேண்டிய சொட்டுநீர்ப் பாசன மானியத்தை, ஏதோ புதிய திட்டம் மாதிரி 110-விதியில செப்டம்பர் 22-ம் தேதி சட்டசபையில அறிவிச்சாங்க முதல்வர். இந்த வருஷத்துக்கு 51 ஆயிரத்து 551 ஹெக்டேர் நிலங்களுக்கு 290 கோடி ரூபாய்னு ஒதுக்கீடு செய்து திட்டத்தை அறிவிச்சிட்டாங்க. ஆனா, இதுக்கான அரசாணை இதுவரை வரலை.

சொட்டுநீர் அமைக்கிறதுக்கு அதிகாரிகள் பெரும்பாலும் நேரடியா விவசாயிங்ககிட்ட இருந்து பணம் வசூல் செய்றதில்லை. சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கிற நிறுவனங்கள் மூலம்தான் கமிஷன் தொகையை வசூலிக்கிறாங்க. வட்டார அளவுல இருக்கிற அதிகாரிகளுக்கு 3 சதவிகிதம், மாவட்ட அளவுல இருக்கிற அதிகாரிகளுக்கு 3 சதவிகிதம்னு கமிஷன் கொடுக்கிறோம். இதில்லாம மேல்மட்ட கமிஷன் ஒரு சதவிகிதம்னு கொடுக்கிறோம்” எனக் கொள்ளையைப் போட்டுடைத்தார்.

“சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கிற கம்பெனிகளோட டீலர்களும், அதிகாரிகளும் சேர்ந்து உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம் தாலூகாவுல பல இடங்கள்ல சொட்டுநீர்ப் பாசனம் அமைக்காமலேயே அமைச்சதா சொல்லி, பணத்தைச் சுருட்டினாங்க. இதை, சென்னையில இருந்து வந்த அதிகாரிகள் ஆய்வுல கண்டுப்பிடிச்சு, அந்தச் சொட்டுநீர்ப் பாசன கம்பெனிகளை `கறுப்புப் பட்டியல்’ல வெச்சிட்டாங்க. அதை நீக்கிறதுக்காக கடுமையான முயற்சிகள் செய்துக்கிட்டிருக்கிறாங்க அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவங்க. இதுக்கு வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறையில இருக்கிற பல அதிகாரிகள் உடந்தையா இருக்கிறாங்க” என்கிறார், விழுப்புரத்தில் நான் சந்தித்த ஒரு முன்னோடி விவசாயி.

ஒரே சிட்டா... ஒஹோ!னு வருமானம்!

உழவாளி

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, “இந்த மாவட்டத்துல பல திட்டங்களை மாவட்டத்தோட எல்லையில இருக்கிற தானிப்பாடி பகுதியில செயல்படுத்துறாங்க. அதுக்குக் காரணம் அந்தப் பகுதிக்கு அதிகமா யாரும் ஆய்வுக்கு வர மாட்டாங்க. இந்தத் தானிப்பாடி பகுதியில தோட்டக்கலைத்துறை உதவி வேளாண்மை அதிகாரி சொல்ற கம்பெனியிலதான் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கணும். வழக்கமா மானியத்துல சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் போது, ‘16 எம்.எம் லேட்ரல்’ (குழாய்)  அளவுக்குதான் பயன்படுத்தணும். ஆனால், பல நிறுவனங்கள் 12 எம்.எம் லேட்ரலைத்தான் பயன்படுத்துறாங்க.

அதேபோல சிறு, குறு விவசாயினு சிட்டா வாங்கிக் கொடுக்கிறோம். சிட்டாவுல விவசாயியோட மொத்த நிலத்தின் அளவும் இருக்கும். ஆனா, அந்த விவசாயி ஒரு பகுதி நிலத்துக்குத்தான் சொட்டுநீர் அமைப்பார். மீதி இருக்கிற நிலத்தோட பெயர்ல சொட்டுநீர் அமைச்சதா அதிகாரிகளும், டீலரும் சேர்ந்து பணத்தை எடுத்துக்கிறாங்க. சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கிற டீலர்கள் தேவையில்லாத ‘எல்’ வடிவ குழாய், ‘டி’ வடிவ குழாய் இணைப்புகளை விவசாயி தலையில கட்டிட்டு கணக்குக் காட்டிட்டுப் போயிடுறாங்க” என்றார் வேதனையுடன்.

சொட்டுநீர்ப் பாசனத்துக்கான அரசின் வரையறை, மானிய விவரங்கள், விவசாயிகளின் குற்றச்சாட்டுக்கு அதிகாரிகள் சொல்லும் பதில்...

அடுத்த இதழில்

-வேட்டை தொடரும்...

உங்கள் பகுதிக்கும் ‘உழவாளி’ வர வேண்டுமா?

உங்கள் பகுதியில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் செய்யும் அலட்சியங்களையும் அட்டூழியங்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள். ‘உழவாளி’ உங்கள் ஊருக்கு வந்து உண்மை நிலையை விசாரித்து, அவற்றை உலகறிய செய்வான். உங்கள் பகுதி பிரச்னைகளை 044-66802927 என்ற எண்ணில் அழைத்து, குரல் வழி சேவை மூலம் உங்கள் பெயர், வயது, செய்யும் தொழில், ஊர் மாவட்டம் உள்ளிட்ட விவரங்களைக் கூறி, உங்கள் பிரச்னைகளைச் சொல்லுங்கள். உங்களைப் பற்றிய தகவல்கள், நீங்கள் விரும்பினால் ரகசியமாக வைக்கப்படும். அதேசமயம், உழவாளியின் வேட்டையும் ஆரம்பமாகிவிடும்.