நாட்டு நடப்பு
Published:Updated:

வருகிறது பெப்சி ஆலை...குடிநீருக்கும் விவசாயத்துக்கும் உலை!

இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பெப்சி குளிர்பான நிறுவனத்துக்கு ஆலை அமைக்க அனுமதி அளித்திருக்கிறது, தமிழக அரசு. இதையடுத்து, விவசாயத்துக்கும் குடிநீருக்கும் தண்ணீர் இல்லாமல் போய்விடும் என்று சொல்லி விவசாயிகள், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்... எனப் பலரும் போராட்டங்களில் குதித்துள்ளனர்.

வருகிறது பெப்சி ஆலை...குடிநீருக்கும் விவசாயத்துக்கும் உலை!

இதைப் பற்றி பேசிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், “2005-ம் ஆண்டில் இருந்து ‘கோகோ கோலா குளிர்பான கம்பெனி அங்கு இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் ஒரு நாளுக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுப்பதாக அனுமதிபெற்று, தற்போது 10 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் எடுக்க அனுமதி பெற்று, எடுத்தும் வருகிறார்கள். அங்கேயே தற்போது அமெரிக்க நிறுவனமான பெப்சி, 36 ஏக்கரில் ஆலை கட்டும் வேலைகளைத் தொடங்கியுள்ளது.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் உள்ளடங்கிய மாநகராட்சிப் பகுதிக்கு வாரம் இரண்டு நாட்கள் மட்டும்தான் தற்போது குடிநீர் கிடைத்து வருகிறது. பெப்சியும் தண்ணீர் எடுக்க ஆரம்பித்தால், மாவட்டத்தில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். வரையறையே இல்லாத தாமிரபரணி நீர்க்கொள்ளையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 86 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் பாதிக்கப்படும்” என்று எச்சரித்தார்.

வருகிறது பெப்சி ஆலை...குடிநீருக்கும் விவசாயத்துக்கும் உலை!

இந்நிலையில், அக்டோபர் 27 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சிப்காட் வளாக முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, 3 பேரின் மண்டை உடையும் அளவுக்கு வெறித்தனமாக தடியடி தாக்குதலை நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர் காவல் துறையினர். இதையடுத்து, ‘‘இன்னும் ஒரு மாதத்துக்குள் பெப்சி நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்யாவிட்டால், நாங்களே பொக்லைன் கொண்டு கட்டடத்தை இடிப்போம்” என்று அக்கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வருகிறது பெப்சி ஆலை...குடிநீருக்கும் விவசாயத்துக்கும் உலை!

இந்த விவகாரம் குறித்து சிப்காட் மேலாண்மை இயக்குநர் டாக்டர். செல்வராஜிடம் பேசியபோது, “விவசாயிகளின் எதிர்ப்பு தற்போதுதான் அரசாங்கத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. பெப்சி கம்பெனிக்கு தண்ணீர் எடுப்பதால் குடிநீருக்கும், பாசனத்துக்கும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுமா என்பதை ஆராய்ந்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சொன்னார்.