இயற்கைக் கொடி பிடிக்கும் வேளாண்மை அதிகாரிகள்!பசுமைக்குழு, படங்கள்: தி.விஜய், க.தனசேகரன், ரமேஷ் கந்தசாமி

சென்ற இதழ் தொடர்ச்சி...
கடந்த செப்டம்பர் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஈரோடு மாநகரில் ‘பசுமை விகடன்’ சார்பாக நடைபெற்ற வேளாண் கண்காட்சி குறித்து கடந்த இதழில் எழுதியிருந்தோம். கண்காட்சியின் ஒரு பகுதியாக நான்கு நாட்களும் நடந்த கருத்தரங்கில்... முன்னோடி விவசாயிகள், விவசாய விஞ்ஞானிகள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், வேளாண்மைத்துறை அதிகாரிகள் எனக் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். அவர்கள் பகிர்ந்ததில் சில இங்கே இடம் பிடிக்கின்றன.

உயிர்ச்சங்கிலியை உடைக்காமல்...
25-ம் தேதி மதிய அமர்வில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வளம்குன்றா அங்கக வேளாண்மைத்துறைத் தலைவர், முனைவர்.சோமசுந்தரம் பேசியபோது... “நாம் முதலில் மண்ணில் உள்ள உயிரிகளின் நுண் கட்டமைப்பு பற்றி அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும். ஒரு சதுர மீட்டர் மண்ணில் 18 முதல் 20 லட்சம் நூற்புழுக்கள், ஒரு லட்சத்து இருபதாயிரம் கரையான் உண்ணிகள், 10 ஆயிரம் ஸ்பிரிங்டைல் பூச்சிகள், 5 ஆயிரம் எறும்புகள், 200 முதல் 2 ஆயிரம் மண்புழுக்கள், 50 முதல் 5 ஆயிரம் வரை நத்தை இனங்கள், ஆயிரம் பறக்கும் பூச்சிகள் மற்றும் 750 முதல் 1000 வரை பூரான், அட்டை போன்ற ஊர்வன என இருக்கின்றன. ஒரு ஏக்கர் மண்ணில் 407 கிலோ மண்புழுக்களும், 678 கிலோ பாக்டீரியா மற்றும் பூஞ்சணங்களும் இருக்கின்றன.
பயிர் வளர்ச்சிக்கு சத்துக்கள் அதிகமாகத் தேவை. இயற்கை உரம் எது, செயற்கை உரம் எது என கீழே இருக்கும் வேருக்குத் தெரியாது. வேருக்கு தனிம வடிவத்தில் சத்துக்கள் கிடைக்க வேண்டும், அவ்வளவுதான். அங்கக மண்ணில் 16 முதல் 20 வகையான சத்துக்கள் இருக்கின்றன. ஒரு நெல்லை பகுப்பாய்வு செய்து பார்த்தால், அதில் குறைந்தது 16 சத்துப்பொருட்கள் இருக்கும். பயிர்களுக்கு கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகிய மூன்றும் மிக முக்கியம். சாதகமான காற்றோட்ட மண்டலம் ஒரு பயிருக்கும், மண்ணுக்கும் மிகமிக அவசியம். மண் கட்டமைப்பு, நீர்ப்பிடிப்புத் திறன், காற்றோட்டம் இவை மூன்று பண்புகளும் மண்ணுக்கு மிகவும் முக்கியம். அங்கக மண்ணில் 60% காற்றோட்டம், 40% நீர் என இருந்தால், அது வளமான மண்ணாகும்.

ரசாயன பண்புகளைத் தவிர்ப்பதற்கு 100% அங்கக மண் வகை இருக்க வேண்டும். ரசாயன உரம் போடும்போது மண்ணில் உள்ள மணி, சாம்பல் சத்துக்களும் காற்றில் இருக்கும் தழைச்சத்தும் முழுமையாகப் பயிருக்குக் கிடைக்காது. உரம் பயிருக்கு கிடையாது. மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளுக்குத்தான் உரமிட வேண்டும். உயிரியல் முறையில் சத்துக்கள் கொடுக்கப்பட வேண்டும். அதற்கு, மண் வளத்தை அங்கக முறைப்படி மாற்ற வேண்டும். மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் உயிர்ச்சங்கிலியை உடைக்காமல் அதன் வளத்தைப் பாதுகாப்பது மிகவும் நல்லது. விவசாயிகளின் கவனம் முழுக்க இயற்கை விவசாயத்திலும், அங்கக முறைப்படி சத்துக்களை கொடுப்பதிலும்தான் இருக்க வேண்டும்” என்றார்.
முடிந்தவரை இயற்கை உரங்கள்!
26-ம் தேதி காலை அமர்வுக்கு வருகை தந்திருந்த ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கார்த்திகேயன், “நாம் என்றைக்கு ராகி, கம்பு போன்ற நம்முடைய பாரம்பர்ய விவசாயத்தை மறந்தோமோ... அப்போதே நம்முடைய வாழ்வியலை விட்டு விலகி விட்டோம். அதனால்தான் இன்றைக்கு நிலத்தில் ரசாயன உரங்களைக் கொட்டி பயிர்களை விளைவிக்கிறோம். முதியவர்கள், 70 வயதில் கூட கடினமான வேலைகளை சுலபமாக செய்கிறார்கள். ஆனால், இந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு மூன்று மாடி ஏறுவதற்குள் மூச்சு வாங்குகிறது.

ஒரு மனிதனுக்கு குடிநீரும், காற்றும் மாசுபடாமல் கிடைக்க வேண்டும். ஆனால், நாம் இரண்டையும் மாசுபடுத்திக் கொண்டு இருக்கிறோம். நம்மிடையே வளமான மண்வளம் இருக்கிறது. அதற்கு என்ன வேண்டுமோ, அதை மட்டுமே கொடுக்க வேண்டும். அதற்கு எதிராக ஏதாவது செய்தால் நம்மையே மீண்டும் எதிர்க்கும். முடிந்தளவு இயற்கை உரங்களைப் பயன்படுத்துங்கள்” என்றார்.
அதிக மழையிருந்தும், தண்ணீர் பஞ்சம் ஏன்?
திண்டுக்கல் மாவட்ட நீர்வடிப்பகுதி வேளாண்மைப் பொறியாளர், பிரிட்டோ ராஜ், “ஆரம்ப காலங்களில் ‘இந்தப் புரட்சி’, ‘அந்தப்புரட்சி’ என்ற நோக்கத்தில் இந்தியாவைக் கொண்டு சென்றதால், வந்த விளைவுதான் இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் தண்ணீர் பஞ்சம். அது பயனளித்த விதமும் சற்றே சோகமானது. மழைக்காலங்களும், மழை நாட்களும் இப்போது பொய்த்துவிட்டன. வீட்டின் குடிநீர்த் தேவைக்கு மட்டுமே தண்ணீரைப் பற்றி பெரும்பான்மை மக்கள் கவலைப்படுகிறார்கள். ஆனால், விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை என்றால் அவ்வளவாக கவலைப்படுவதில்லை.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஹோட்டல் விலைப்பட்டியலில் தண்ணீர் முதலிடம் பிடித்துவிடும். அந்த அளவுக்கு மோசமாகப் போய்க்கொண்டு இருக்கிறது, தமிழ்நாட்டின் தண்ணீர் ஆதாரம். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 575 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. 400 மில்லி மீட்டர் மழை இருந்தாலே விவசாயத்தைக் காப்பாற்றி விட முடியும். ஆனால், அதை விட அதிக மழை கிடைத்தும் நீர் பஞ்சம் ஏன் வருகிறது? தண்ணீர் செல்லும் ஓடைகளையும், குளங்களையும் முறையாகப் பராமரிக்காமல் விட்டதுதான் காரணம்.

வேளாண்மைக்கு அடிப்படை நீர்.
10 ஆண்டுகளுக்கு முன்பு 300 முதல் 350 அடிக்குள் தண்ணீர் கிடைத்தது. தற்போது 1,200 அடிக்கு மேல் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கிறது. நிலத்தடி நீரை அதிகரிக்க வேண்டுமானால், மழை நீரை பூமிக்குள் கொண்டுபோக வேண்டும். இதற்கு மழைநீர்ச் சேமிப்பு அவசியம். போர்வெல்லுக்குப் பக்கத்தில் மழை நீரைக் கொண்டு சென்றால் மழை நீரானது பூமிக்குள் எளிதாக இறங்கிவிடும். பொதுவாக, முதல் ஊற்று 42 அடியில் கிடைக்க ஆரம்பிக்கிறது, கடைசி ஊற்று 550 அடியில் கிடைக்கிறது. ஒவ்வொரு ஊற்றும் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை இருந்திருக்கிறது. ஆனால், அந்த நீர்வளம் இப்போது இல்லை. இதனால் பூமியில் தண்ணீரை அதிகப்படுத்துவது அவசியம். விவசாயிகள் தண்ணீரை அரசிடம் கேட்க வேண்டாம். உங்கள் நிலங்களில் பண்ணைக்குட்டை, நீர்த்தேக்கங்களை அமைத்தாலே போதும். நிலத்தடி நீர் பெருகிவிடும்” என்றார்.

நீங்களே விலை நிர்ணயிக்க வேண்டும்!
தொடர்ந்து பேசிய திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பந்தல் காய்கறி முன்னோடி விவசாயி ‘கேத்தனூர்’ பழனிச்சாமி, “விவசாயிகளின் காய்கறிகளுக்கு விவசாயிகளே விலை நிர்ணயிக்க வேண்டும். அதற்கு இயற்கை விவசாயம் செய்தால் மட்டுமே முடியும். என்னுடைய நிலத்தில் பீர்க்கங்காய் ஒரு கிலோ 35 ரூபாய் என்றால், அந்த விலைக்குத்தான் மக்கள் வாங்க வேண்டும். விவசாயிகள் நேரடி விற்பனையில் ஈடுபட வேண்டும். விளைவிக்கும் காய்கறிகளின் தரம் மிகவும் முக்கியம். எல்லா மாவட்டத்திலும் எல்லா காய்கறிகளையும் விளைவிக்கலாம். முக்கியமாக நடவு செய்வதற்கு முன் விதைநேர்த்தி முக்கியம்.
இயற்கை விவசாயத்தில் பயிர் செய்தால் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலம் வளமாக மாறிவிடும். பண்ணைக்கு வெளியே இடுபொருட்கள் வாங்குவதை நிறுத்துங்கள். பஞ்சகவ்யா, அரப்பு-மோர்கரைசல், ஜீவாமிர்தம் என எல்லாவற்றையும் நீங்களே தயார் செய்து பயன்படுத்துங்கள். விவசாய நிலத்தில் நாட்டுமாடுகள் வளருங்கள். உங்களுக்கு தேவையானவற்றையும் மாடுகளின் மூலம் பெற முடியும். இதுதான் விவசாயத்தில் வெற்றிக்கான வழி” என்றார்.
மற்ற கருத்துரையாளர்கள் ஆற்றிய உரைகள் அடுத்த இதழில்...