ஓவியம்: ஹரன்
தோட்டத்துக்குச் செல்லும் பாதையில் உள்ள கரட்டில், முடக்கற்றான் இலைகளைப் பறித்துக் கொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. பிண்ணாக்கு மூட்டையுடன் சைக்கிளில் வந்து கொண்டிருந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், வாத்தியாரைப் பார்த்ததும் நின்று... ‘‘என்னய்யா செய்துக்கிட்டிருக்க?’’ என்று கேட்டார்.
‘‘வீட்டம்மாவுக்கு மூட்டு வலிக்குதாம். அதனால, முடக்கத்தான் பிடுங்கிட்டு வரச் சொன்னா. இதை தோசை மாவுல கலந்து தோசையா சுட்டு சாப்பிடலாம். அல்லது பொரிச்சு சாப்பிடலாம்.
48 நாள் சாப்பிட்டா, மூட்டுவலி காணாமப் போயிடும்’’ என்று சொல்லிக்கொண்டே இலைகளுடன் கீழிறங்கி வந்தார், வாத்தியார்.
‘‘பருவ மழை தொடங்கிடுச்சு. மழையால பாதிக்கப்படறவங்களுக்கு அரசு நிவாரணம் ஏதும் கிடைக்கும்மாய்யா...?’’ என்று கேள்வி கேட்டப்படியே வந்து சேர்ந்தார், ‘காய்கறி’ கண்ணம்மா.

‘‘சரியா கேட்ட கண்ணம்மா. பருவ மழையால பாதிப்பு வந்தா, உடனே நிவராணம் கொடுக்கணும்னு, முதல்வர் ஜெயலலிதா உத்தரவு போட்டிருக்காங்க. கால்நடைகள் உயிரிழந்தா... அதாவது, பசு அல்லது எருமை ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய்; ஆடு, பன்றி, ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய்; ஒரு கோழிக்கு 100 ரூபாய்னு நிவாரணம் கொடுப்பாங்களாம். நெல், நீர்ப்பாசனம் செய்யுற பயிர்கள்னா, ஹெக்டேருக்கு 13 ஆயிரத்து 500 ரூபாயும்; மானாவாரி பயிர்கள்னா, ஹெக்டேருக்கு 7 ஆயிரத்து 410 ரூபாயும், நீண்டகாலப் பயிர்கள்னா, ஹெக்டேருக்கு 18 ஆயிரம் ரூபாயும் நிவாரணமா கொடுப்பாங்களாம்’’ என்றார் வாத்தியார்.
‘‘பாதிக்கப்படறவங்களுக்கு நிவாரண உதவி, முழுமையா கிடைக்கட்டும்’’ என்று சொன்னபடியே ஆளுக்கு இரண்டு பன்னீர் கொய்யாப்பழங்களை எடுத்துக் கொடுத்தார் ‘காய்கறி’.
அதைச் சாப்பிட்டுக் கொண்டே தன்பங்குக்கு ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், ஏரோட்டி.
“திருவண்ணாமலை மாவட்டம், செய்யார்ல ‘சிப்காட்’ தொழில்பேட்டை இருக்கு. இதை விரிவுபடுத்துறதுக்காக, கூடுதலா ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தப் போறாங்களாம். அதுக்காக நவம்பர் அஞ்சாம் தேதி செய்யார்ல கருத்துக்கேட்புக் கூட்டத்தை அரசு அதிகாரிகள் நடத்தினாங்க. இதுல கலந்துக்கிட்ட 200 பேர், நிலத்தை எடுக்கிறதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க. அரசாங்கம் என்ன முடிவு எடுக்கப் போகுதுனு தெரியலை. வழக்கமா அவங்களுக்கு சாதகமான ஆட்களை மட்டும் வரவழைச்சுக் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்துவாங்க. இங்க அந்த மாதிரி செய்ய முடியாமப் போயிடுச்சாம்’’ என்றார், ஏரோட்டி.
‘‘அதெல்லாம் அதிகாரிகளுக்குக் கைவந்த கலை. ஏதாவது ‘போலி ரெக்கார்டு‘ தயார் பண்ணி அரசாங்கத்துக்கு அனுப்பிடுவாங்க. மக்கள்கிட்ட ஆசை வார்த்தை காட்டி எப்படியாவது ஏமாத்தி நிலத்தைப் பிடுங்கிடுவாங்க’’ என்ற வாத்தியார், அடுத்த செய்திக்குத் தாவினார்.
‘‘சேலம், நாமக்கல், விழுப்புரம், ஈரோடு, பெரம்பலூர், தர்மபுரி, திருச்சி, கடலூர்னு எட்டு மாவட்டங்கள்ல அதிகமான அளவுக்கு மரவள்ளிக் கிழங்கு சாகுபடி நடக்குது. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு டன் கிழங்குக்கு 10 ஆயிரம் ரூபாய் விலை கிடைக்கவும் எல்லாரும் மரவள்ளி சாகுபடியில இறங்கினாங்க. போன வருஷம் விலை இறங்கவும்... முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவு பண்ணினாங்க. அப்போ, ஒரு டன் கிழங்குக்கு 7 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகள் கிட்ட கொடுத்து கொள்முதல் பண்ணினாங்க. இந்த வருஷமும் முத்தரப்புக் கூட்டத்துல அதே விலைதான் நிர்ணயிச்சு இருக்காங்க. ஆனா, விவசாயிகள்கிட்ட ஒரு டன்னுக்கு 3 ஆயிரம் ரூபாய்தான் கொடுக்கிறாங்களாம். அதனால, விவசாயிகள் ரொம்பவும் மனசு விட்டுப் போய் இருக்கிறாங்க’’ என்றார், வாத்தியார்.
வடகிழக்குப் பருவ மழையின் உபயத்தில், வானம் இருண்டு மழை பெய்ய ஆரம்பித்தது. மூவரும் எழுந்து ஓட... அன்றைய மாநாடு அத்துடன் முடிவுக்கு வந்தது.
‘கார்ப்ரேட் கோடரி’மற்றும்‘ஒருநாள் விவசாயி’,ஆகிய பகுதிகள் இந்த இதழில் இடம்பெறவில்லை.