
மகசூலைக் கூட்டும் மகத்தான தொடர்!நீ.செல்வம், ஆ.பாலமுருகன்
சத்துக்குறைபாடு... நீங்களே கண்டறியலாம்!
ஆரம்ப காலங்களில் விதைக்கும்போதெல்லாம் விளைச்சலை அள்ளி அள்ளிக் கொடுத்த நிலம், தற்போது கிள்ளிக் கிள்ளிக் கொடுத்து வருகிறது. இதற்கான காரணத்தை அறிந்துகொள்வதும், ‘காலுக்குக் கீழுள்ள தூசு’ என்ற அளவில் இருக்கும் மண்ணைப் பற்றிய நமது எண்ணச் சித்திரத்தை மாற்றி, அதனுள் பொதிந்துள்ள அறிவியலை, ஆச்சரியங்களை, லட்சக்கணக்கான நுண்ணுயிர்களைப் பற்றிய அடிப்படை அறிவை அறிமுகப்படுத்துவதுமே இத்தொடரின் நோக்கம். ‘மண்ணில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா’ என உங்கள் விழிகளை விரிய வைக்கிறது, இந்தத் தொடர்.
இந்தியாவில், பசுமைப் புரட்சியின் விளைவாக... உணவு உற்பத்தி 4.5 மடங்கும்; பழவகைகள், காய்கறிகள் உள்ளடக்கிய தோட்டக்கலைப் பயிர்கள் உற்பத்தி 6 மடங்கும்; மீன் உற்பத்தி 9 மடங்கும்; கால்நடை, பால் உற்பத்தி 6 மடங்கும்; முட்டை உற்பத்தி 27 மடங்கும் அதிகரித்ததாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் ‘வானவில் புரட்சி’ நடைபெற்றது என்று வர்ணிக்கப்படுகிறது. அதாவது, உணவு தானிய உற்பத்தியில் ‘பசுமைப் புரட்சி’ என்றும், பால் உற்பத்தியில் ‘வெள்ளைப் புரட்சி’, எண்ணெய் வித்துக்களில் ‘மஞ்சள் புரட்சி’, மீன் உற்பத்தியில் ‘நீலப்புரட்சி’... என பட்டியல் நீளுகிறது. இவற்றை உள்ளடக்கிய ‘பசுமைப் புரட்சி’யின் விளைவாக நன்மைகள் இருந்தாலும், அது ஏற்படுத்திய எதிர்விளைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன.

கடந்த நான்கைந்து ஆண்டுகளாக உணவு உற்பத்தி தேக்க நிலை அடைந்திருக்கிறது. நல்ல விதை, நல்ல தண்ணீர் மற்றும் உரங்கள் இவை மூன்றும்தான் உணவு உற்பத்தி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. இவை மூன்றுக்கும் அடிப்படை, மண். சுவர் இருந்தால்தானே சித்திரம் தீட்ட முடியும். மண் சரியாக இருந்தால் மட்டுமே இம்மூன்றையும் கொண்டு உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியும். பசுமைப் புரட்சியின் எதிர்விளைவுகளில் முக்கியமானது, மண் வளமிழந்து போனதுதான். இதனால், மண்ணில் இடும் உரங்கள் மற்றும் ஊட்டங்கள் வீணாகின்றன.
மனிதர்களுக்கு எப்படி அனைத்துச் சத்துக்களும் அடங்கிய சரிவிகித உணவு தேவைப்படுகிறதோ, அப்படித்தான் பயிர்களுக்கும். பேரூட்டம், நுண்ணூட்டம் என 16 வகையான சத்துக்களைக் கொடுத்தால்தான் மண் வளமாக இருக்கும். அந்த மண்ணில் சாகுபடி செய்யும் பயிர்களும் ஆரோக்கியமாக வளர்ந்து நல்ல மகசூலைக் கொடுக்கும். வீரிய ஒட்டு ரகங்கள், வீரிய விதைகளைப் பயன்படுத்தும்போது... அவற்றுக்கேற்ற சமச்சீரான உரத்தை இடாமல் இருப்பதுதான் மண் நலம் கெட முக்கியக் காரணம். தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து ஆகிய மூன்றை மட்டும் விவசாயிகள் அதிகளவு பயன்படுத்துகிறார்கள். ஆனால், நுண்ணூட்டச் சத்துக்களை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. இதனால் பயிர்களில் சத்துக் குறைபாடு ஏற்பட்டு வளர்ச்சியும் மகசூலும் பாதிக்கப்படுகிறது.
உணவு உட்கொள்ள முடியாத நிலையில் மருத்துவமனையில் கிடக்கும் நோயாளியின் நிலையில் இருக்கிறது, மண். அதைச் சரி செய்ய, உடனடியாகக் கொடுக்க வேண்டிய குளுக்கோஸ்தான், சமச்சீர் உரங்கள். பயிர்களுக்குத் தேவையான சத்துக்களைப் பற்றி 1939-ம் ஆண்டே அர்னான், ஸ்டவுட் என்ற இரண்டு விஞ்ஞானிகள் பட்டியலிட்டுள்ளனர். 16 வகையான சத்துக்கள் இல்லாமல், ஒரு பயிர் தனது வாழ்க்கைச் சுழற்சி முறையை நிறைவு செய்ய முடியாது. “ஒரு சத்து செய்யும் பணியை மற்றொரு சத்தால் ஈடுசெய்ய முடியாது” என்பது, அவர்களது ஆணித்தரமான கருத்து. அவர்களைத் தொடர்ந்து இக்கருத்தை பல விஞ்ஞானிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நாம் இடும் உரங்களிலிருந்து பயிர்கள் சத்துக்களை அப்படியே எடுத்துக் கொள்வதில்லை. அவை மண்ணில் வேதிவினைகளுக்கு உட்பட்டு அயனிகளாக உருவாகின்றன. இந்த அயனிகளைத்தான் பயிர்கள் எடுத்துக் கொள்கின்றன. பயிர்களுக்குத் தேவையான சத்துக்களை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். என்றாலும், ஒரு சிறு நினைவூட்டல். இயற்கையாகப் பயிர்களுக்குக் கிடைக்கக்கூடிய நீர், மண் மற்றும் காற்றில் இருந்து கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகியவையும்; மண்ணில் இடப்படும் உரங்கள் மூலமாக, தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, கால்சியம், மெக்னீசியம், சல்பர், இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு, காப்பர், போரான், மாலிப்டினம், குளோரின் ஆகிய சத்துகளும் பயிர்களுக்குக் கிடைக்கின்றன. பயிர்களுடைய தேவையின் அடிப்படையில் சத்துக்களானது ‘முதன்மைச் சத்துக்கள்’, ‘இரண்டாம் நிலைச் சத்துக்கள்’, ‘நுண்ணூட்டச் சத்துக்கள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகியவை முதன்மைச் சத்துக்கள். இதற்கு அடுத்தபடியாக கால்சியம், மெக்னீசியம், கந்தகம் ஆகியவை இரண்டாம் நிலைச் சத்துக்கள். இதற்கு அடுத்துள்ளவை நுண்ணூட்டச் சத்துக்கள். இதில் நுண்ணூட்டச் சத்துக்களின் தேவை குறைவுதான். என்றாலும், அது இல்லாமல் பயிர் முழுமையான வளர்ச்சியை அடைய முடியாது. பயிர் வளர்ச்சிக் குறைவாக இருப்பது, பச்சையம் இல்லாமல் இருப்பது, நிற மாற்றம், இலை காய்தல் போன்ற சில அறிகுறிகள் மூலமாக நுண்ணூட்டச் சத்துக்குறைபாடுகளைக் கண்டறியலாம்.
தாவரங்களில் ஊட்டச்சத்துக்கள் நகர்ந்து செல்லும் திறனைப் பொறுத்து... இளம் இலைகள் அல்லது முதிர்ந்த இலைகளில் இந்த அறிகுறிகள் தோன்றும். பல ஊட்டச்சத்துகளின் குறைபாடு ஒரே மாதிரியான அறிகுறிகளைக் காட்டும். இதனால் பெருங்குழப்பம் ஏற்படும். இருந்தாலும், ஒவ்வொரு ஊட்டச்சத்துக் குறைபாட்டையும் சில அறிகுறிகளை வைத்துக் கண்டறியலாம். ஒவ்வொரு பயிரிலும், ஊட்டச்சத்துக் குறைபாடு பல விதங்களில் வெளிப்படும். எடுத்துக்காட்டாக... ஒளிச்சேர்க்கை, புரதச்சத்துக் குறைபாடு உள்ள தாவரங்கள் வளர்ச்சி குன்றி காணப்படும். ஊட்டச்சத்துக் குறைபாடு பற்றிய அடிப்படை அறிவும், போதிய அனுபவமும் உள்ளவர்களால் மட்டுமே இதை அறிய முடியும். தற்போது நுண்ணூட்டச்சத்துக் குறைபாடு அதிகளவில் காணப்படுகிறது. இதைச் சில வழிமுறைகள் மூலமாக விவசாயிகளும் தெரிந்து கொள்ளலாம்.

தாவரங்களின் குறிப்பிட்ட பாகங்களில் சத்துக்குறைபாடுகளுக்கான அறிகுறிகளைக் காணலாம். உதாரணமாக அடி இலைகளில் (முதிர்ந்த இலைகள்) தழை, மணி, சாம்பல்சத்து, மக்னீசியம், துத்தநாகம், மாலிப்டினம் ஆகிய சத்துக்களின் குறைபாடுகளை அறியலாம்.
தாமிரம், இரும்பு, கந்தகம், மாங்கனீசு இந்த நான்கு வகையான சத்துக்களின் குறைபாடு நுனி இலைகளில் (இளம் இலைகள்) தெரியும். கால்சியம், போரான் ஆகிய சத்துக்களின் குறைபாடு நுனிக்குருத்துகளில் தெரியும். இலை நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதி மஞ்சள் நிறமடைதல், இலை நரம்புகளின் நிறமாற்றம் ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சில பயிர்களில் இலை நரம்பு மட்டும் பச்சையாக இருக்கும், மற்ற இடங்களெல்லாம் மஞ்சளாக இருக்கும். இதுவும் குறைபாட்டின் அறிகுறிதான்.
நுனி காய்தல், இலைகளின் ஓரங்கள் கருகியிருப்பது, இலைகள் கீழே கவிழ்ந்த நிலையில் இருப்பது, குருத்துகளின் தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் சத்துக் குறைபாடுகளைக் கண்டறியலாம். இந்த அடிப்படையில் ஒவ்வொரு பயிரிலும் சத்துக்குறைபாட்டின் அறிகுறிகள், அவற்றை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் குறித்து அடுத்தடுத்த இதழ்களில் தொடர்ந்து பார்க்கலாம்.
-வாசம் வீசும்
தொகுப்பு: ஆர்.குமரேசன்