செல்லப்பிராணிகள் முதல் செல்வப்பிராணிகள் வரை...இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்
முத்தான வருமானம் தரும் முயல் வளர்ப்பு... 100 முயல்கள்... 40 நாட்கள்... 86 ஆயிரம் ரூபாய்!
கதைகளில் வேகத்துக்கு எடுத்துக்காட்டாக முயலைச் சொல்லி உற்சாகப்படுத்துவார்கள். இந்த முயல், விவசாயிகளுக்கும் உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. ‘முயல் வளர்த்தால் முத்தான வருமானம் உண்டு’ என்கிறார்கள், முயல் வளர்ப்புப் பண்ணையாளர்கள். குறைந்த மூலதனம், குறைந்த நேர பராமரிப்பில் நிறைவான வருமானம் கிடைப்பதால், முயல் வளர்ப்பும் விவசாயத்தின் துணைத் தொழிலாக விவசாயிகள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இவர்களில் ஒருவராக, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சபரிநாதன், முயல் வளர்ப்பில் வருமானம் ஈட்டி வருகிறார்!

ஒத்தக்கடையிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது அரும்பனூர். ஊருக்குள் நுழைவதற்கு முன்பே வயலுக்கு நடுவில் தெரிகிறது ‘ஸ்ரீசாஸ்தா பார்ம்ஸ்’. முயல் கூண்டுகளை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த சபரிநாதனிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.
“எனக்குச் சொந்த ஊர் மதுரைதான். 2010-ம் வருஷம் எம்.பி.ஏ முடிச்சதும், தேனியில ஒரு பெயிண்டிங் கம்பெனியில விற்பனைப் பிரிவு மேலாளரா ஒரு வருஷம் வேலை பார்த்தேன். அதே கம்பெனிக்காரங்க தனியா 40 ஏக்கர் இடம் வாங்கி பரண் மேல் ஆடு வளர்த்து விற்பனை செய்யணும்னு சொன்னாங்க. என்கூட வேலை பார்த்த பால்பாண்டிங்கிறவர்கிட்டயும் என்கிட்டயும் அதுக்கான புராஜக்ட் ரெடி பண்ணித் தரச் சொன்னாங்க. நாங்க ரெண்டு பேருமே விவசாயக் குடும்பம் இல்லை. வீட்டுல ஆடு, மாடு வளர்த்ததும் கிடையாது. இருந்தாலும், உள்ளூர்ல ஆடு வளர்க்கிறவங்களோட பண்ணைகளுக்குப் போய் விவரங்கள் கேட்டோம். அதோட இன்டர்நெட்டுல தேடி சில விஷயங்களை எடுத்து எல்லாத்தையும் சேர்த்து ஒரு புராஜக்ட் தயார் பண்ணிக் கொடுத்தோம். கடைசியில ஃபைனான்ஸ் பிரச்னையினால அதைக் கைவிட்டுட்டாங்க. ஆனா, எங்களால அதை விட முடியலை. ஆடு வளர்ப்பு நல்ல லாபமான தொழில்னு தெரிஞ்சதால, நாங்க ரெண்டு பேருமே வேலையை விட்டுட்டு ஆடு வளர்ப்புல இறங்கலாம்னு முடிவெடுத்தோம்” என்று இடைவெளிவிட்ட, சபரிநாதன் தொடர்ந்தார்.

“மதுரை, கின்னிமங்கலத்துல இருக்கிற என்னோட தோழி இளமதியோட ஒன்றரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தோம். 50 ஆடுகளை வச்சு ஆட்டுப்பண்ணை ஆரம்பிச்சோம். வேலையாட்கள் அடிக்கடி லீவு போட்டதால, நானே தனியா ஆடுகளைப் பராமரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுச்சு. இதற்கிடையில் பால்பாண்டிக்கு தேனியில் வேற வேலை கிடைச்சதுனால அவர் விலகிட்டார். நான் மட்டும் பண்ணையைப் பராமரிச்சுக்கிட்டு இருந்தேன். அப்போதான் முயல் வளர்ப்புப் பத்தி கேள்விப்பட்டேன். கால்நடைப் பல்கலைக்கழகத்தின் மதுரை பயிற்சி மையத்தோட தலைவர் ‘பண்ணை’ முருகானந்தம்கிட்ட ஆலோசனை கேட்டேன். அவர் முயல் வளர்ப்பு சம்பந்தமான ஏராளமான தகவல்களைச் சொன்னார்.
முதல்ல, 5 யூனிட் (ஒரு யூனிட் என்பது 7 பெண் முயல்கள் 3 ஆண் முயல்களைக் கொண்டவை) முயல்களை வாங்கி அதாவது 35 பெண் முயல்கள், 15 ஆண் முயல்கள் வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன். முயல் பண்ணை, ஆட்டுப் பண்ணை வேலையையும் சேர்த்துப் பார்த்தேன். ஆட்டுப் பண்ணையைவிட, முயல்ல பராமரிப்பு சுலபமா இருந்துச்சு. தொடர்ச்சியான வருமானமும் கிடைச்சது. அதனால, ஆடுகளைக் கொஞ்சம் கொஞ்சமா வித்துட்டு, இந்த இடத்துல (அரும்பனூர்) முயல் பண்ணையை 10 யூனிட்டா விரிவுபடுத்தினேன். இப்போ, ரெண்டு வருஷமா முயல் வளர்ப்பு மட்டும்தான். இனப்பெருக்க வயதுக்கு வளர்ந்த 70 பெண் முயல்கள், 20 ஆண் முயல்கள் இப்ப என்கிட்ட இருக்கு. விற்பனையானது போக தற்சமயம் 50 குட்டிகள் இருக்குது” என்ற சபரிநாதன், முயல் வளர்ப்பு குறித்தத் தொழில்நுட்பத் தகவல்களைச் சொல்லத் தொடங்கினார்.
ஐந்து வகை முயல்கள்!
“இந்திய வன விலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் பட்டியல்ல இருக்கிறதால காட்டு முயல்களை வீடுகள்லயோ, பண்ணைகள்லயோ வளர்க்கக்கூடாது. ஆனா, வெளிநாடுகள்ல இருந்து இறைச்சிக்காக இறக்குமதி செய்யப்பட்டு, கால்நடைத்துறை மூலமாகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள முயல் இனங்களை வளர்க்கலாம். நியூசிலாந்து வெள்ளை, வெள்ளை ஜெயண்ட், சின்சில்லா, சோவியத் சின்சில்லா, டச்சு மாதிரியான 5 வகை முயல்களை வளர்க்கத் தடையில்லை. என்னிடம் இந்த 5 வகை முயல்களும் இருக்கு.

40 நாட்களில் 350 குட்டிகள்!
நல்ல தீவனம் கொடுத்து இனப்பெருக்கத்தையும் சரியா பராமரிச்சா... பெண் முயல்களை சரியா 40 நாளுக்கு ஒரு முறை குட்டிகளை ஈன வைக்க முடியும். ஒரு பெண் முயல் ஒரு ஈத்துக்கு 5 முதல் 8 குட்டிகள் வரை ஈனும். ஒரு முயலுக்கு சராசரியா 5 குட்டிகள்னு வெச்சுக்கிட்டாலும், 70 பெண் முயல்கள் மூலமா ஒரு சுற்றுக்கு (சராசரியாக 40 நாட்கள்) 350 குட்டிகள் வரை கிடைச்சிடுது. பிறந்த 3 மாதத்தில் ஒரு குட்டி சராசரியாக 2 கிலோ அளவுக்கு எடை வந்துடும். உயிர் எடையா விற்பனை செய்றப்போ... கிலோ 180 ரூபாய்ல இருந்து 200 ரூபாய் வரை விற்பனையாகுது. 350 குட்டிகள் 3 மாதத்தில் 700 கிலோ அளவுக்கு எடைக்கு வரும். குறைஞ்சபட்ச விலையா கிலோ 180 ரூபாய்னு விற்பனை செய்தாலே... 700 கிலோவுக்கு 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில், பசுந்தீவனம், உலர்தீவனம், வேலையாள் கூலி, சத்து டானிக் செலவுகள் 40 ஆயிரம் ரூபாய் போனாலும், 40 நாள்ல 86 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும். ஒரு மாசத்துக்குனு கணக்கு பார்த்தா 65 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைச்சிடும்” என்ற சபரிநாதன் நிறைவாக,
வீடுகளிலும் வளர்க்கலாம்!
‘‘வீடுகள்ல கூட கொஞ்சம் இடம் இருந்தால் 10 முயல்கள் கொண்ட ஒரு யூனிட் முயல் பண்ணை வைக்கலாம். தினமும் ரெண்டு மணி நேரம் ஒதுக்கினா போதும். அதிலிருந்து மாதத்துக்கு நிச்சயமா 5 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும். அழகுக்காகவும், இறைச்சிக்காகவும் முயலுக்கான தேவை இருக்கிறதால விற்பனை வாய்ப்பு நல்லாவே இருக்கு. என்கிட்ட உற்பத்தியாகிற குட்டிகள் போக, மாசத்துக்கு 100 குட்டிகள் வரை எனக்கே கூடுதலா தேவை இருக்கு.
நாம முயல் பண்ணை வெச்சிருக்கோம்ங்கிறதைத் தெரியப்படுத்துற மாதிரி போர்டுகள் வெச்சு குறைஞ்ச செலவில் விளம்பரம் பண்ணினாலே தேடி வந்து வாங்கிக்கிறாங்க. அழகுக்காக முயல் வாங்க வர்றவங்ககிட்ட முயல் கறியில் இருக்கிற சத்துக்களை எடுத்துச் சொன்னா, அவங்க கறிக்காகவும் வாங்க வாய்ப்பிருக்கு.
தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்குள்ள பண்ணை அமைக்கிறவங்களுக்கு அவங்கவங்க பகுதிக்கு அருகில் இருக்கிற விற்பனையாளர்கள், மொத்த வியாபாரிகள் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்க நான் தயாரா இருக்கேன்” என்று நம்பிக்கையூட்டும் விதமாக ஆலோசனைகளையும் சொன்னார்.
-வளர்ப்போம்
தொடர்புக்கு,
சபரிநாதன்,
செல்போன்: 88834-88855.
முதுகைப் பிடித்தே தூக்கலாம்!
முயலைக் காதைப் பிடித்துத் தூக்குவதை விட... முதுகுப் பகுதியை ஒரு கையாலும், வயிற்றுப்பகுதியை ஒரு கையாலும் தூக்குவது நல்லது. காதைப் பிடித்து தூக்கினால் பயத்தில் கால்களை வேகமாக உதறும். அந்த நேரத்தில் முயலின் கால் நகங்கள் நம் உடலில் பட்டு காயம் ஏற்படுத்தலாம். முதுகைப் பிடித்து தூக்கினால், நமக்கும் பாதிப்பில்லை, முயலுக்கும் பாதிப்பில்லை.
தூக்கினால் முடி உதிரும்!
முயலைத் தூக்கினால் அதன் முடிகள் உதிரும். அவை மூக்கு, வாய்க்குள் போனால், நோய்கள் வர வாய்ப்புள்ளது. அதனால்தான் முயலை வீட்டில் வளர்த்தால் அடிக்கடி சண்டை வரும் என்று பெரியவர்கள் சொல்வார்களாம்.
உணவே மருந்து!
பசுந்தீவனத்தை சிறந்த இறைச்சியாக மாற்றுவதில் முயலுக்கு நிகர் எதுவுமில்லை. ‘ஒயிட் மீட்’ (வெண்கறி) வகையைச் சேர்ந்த முயல்கறிக்கு, புற்றுநோய் செல்களைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளதாக அமெரிக்க மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், முயல் இறைச்சியைச் சாப்பிட்டால் தேவையான புரோட்டீன் சத்து கிடைக்கும். ஆடு, கோழி இறைச்சியைவிட குறைவான கொழுப்பும், அதிகமான புரதமும், உயிர்ச்சத்துக்களும் இருப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. இது விரைவில் செரிமானமாகக் கூடிய உணவு. முயல் இறைச்சி சாப்பிடுவதால் குடல்புண், செரிமானப் பிரச்னை, வாயுத்தொல்லை, மலச்சிக்கல் ஆகியவை வராது. இதய நோயாளிகளும் முயல் இறைச்சி சாப்பிடலாம்.

90-ம் நாளில் அடையாளம் காணலாம்!
22-ம் நாளில் தனியாகப் பிரித்துப் போடப்படும் குட்டிகளை 2 மாதம் வரை ஒன்றாக வளர்க்கலாம். 4 சதுரஅடி கூண்டில் 4 முதல் 5 குட்டிகள் வரை விடலாம். குட்டி போட்ட 90 முதல் 95-ம் நாட்களில்தான் ஆண் முயல், பெண் முயல் என அடையாளம் காண முடியும். ஆண் முயலாக இருந்தால், விதைப் பையும், பெண் முயலாக இருந்தால், பெண் உறுப்பும் தெரியும். அடையாளம் கண்ட உடனே, சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் குட்டிகளை இனப்பெருக்கத்துக்காக வளர்க்கலாம். மற்ற குட்டிகளை இறைச்சிக்காக விற்றுவிடலாம். 90-ம் நாளிலேயே ஒரு முயல் ஒன்றரை கிலோ முதல் இரண்டே கால் கிலோ வரை எடை இருக்கும்
அந்நியர்கள்... கவனம்!
வெள்ளை ஜெயண்ட், சாம்பல் ஜெயண்ட், நியூசிலாந்து வெள்ளை, சின்சில்லா, சோவியத் சின்சில்லா, டச்சு, அங்கோரா என ஐம்பதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு முயல் இனங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில், ‘அங்கோரா’ ரக முயல்கள் மட்டும் உயர்தர உரோமத்துக்காக மலைப்பிரதேசங்களில் வளர்க்கப்படுகின்றன.
பொதுவாக, முயல்கள் 5 முதல் 6 ஆண்டுகள் வரை உயிர் வாழும். முறையாகப் பராமரித்தால் 7 ஆண்டுகள் கூட உயிர் வாழும். முயல் சாதுவான, அமைதியான, பயந்த குணமுடைய பிராணி. அதனால், கூண்டில் இருந்து வெளியில் எடுத்தவுடன் பதற்றப்படும். அப்படி எடுக்கும்போது, முதுகில் தடவிக் கொடுத்தால் பயப்படாது. வெளி நபர்கள் திடீரென்று பண்ணைக்குள் வரும்போது முயல்கள் அங்கும் இங்கும் ஓடும். அதனால், குட்டிகள் மிதிபடலாம். கர்ப்பிணி முயல்களுக்கு கரு கலையவும் வாய்ப்புண்டு. அதனால், வெளியாட்களை கூடுமானவரை அருகில் அனுமதிக்காமல் இருப்பது நல்லது.
ஒரு யூனிட்டுக்கு60 சதுர அடி இடம் போதும்!
ஒரு யூனிட் (10 முயல்கள்) முயல் வளர்ப்புக்கு 60 சதுர அடி பரப்புள்ள இடம் போதுமானது. இதில் கூண்டுக்கு மட்டும் 40 சதுர அடி. சுற்றி நடப்பதற்கு 20 சதுர அடி. 4 அடி அகலம், 10 அடி நீளம் என்ற கணக்கில் இரும்பு வலைக்கூண்டு அமைக்க வேண்டும். இதில், 2 அடி அளவுக்கு தடுப்புகள் அமைத்தால், 10 பிரிவுகள் வரும். ஒவ்வொரு, பிரிவிலும் ஒரு முயல் வீதம் வளர்க்கலாம். 7 பெண் முயல்கள், 3 ஆண் முயல்கள் என்ற விகிதத்தில் வளர்க்க வேண்டும்.
மாதா மாதம் குட்டிகள்!
பெண் முயல், 6-ம் மாதத்திலும், ஆண் முயல் 9-ம் மாதத்திலும் பருவத்துக்கு வரும். பெண் முயல் இணை சேர்ந்த 30-ம் நாளில் குட்டி போடும். குட்டி போட்ட மறுநாளே மீண்டும் இணை சேர்த்துவிட்டு, தாய் முயலை குட்டிகளுடன் கூண்டிலேயே அடைக்கலாம்.
இணைக்கு விட்ட 5 நிமிடத்துக்குள்ளேயே முயல் இணை சேர்ந்துவிடும். 20-ம் நாளில் வயிற்றின் அடிப்பகுதியில் நெல்லிக்காய் போல குட்டிகள் அசைவு தெரியும் அதை வைத்து சினைப் பிடித்ததை உறுதி செய்துவிடலாம். இல்லாவிட்டால், மீண்டும் இணை சேர்க்க வேண்டும். இணை சேர்ந்த பெண் முயல், ஆண் முயலை அருகில் அனுமதிக்காது. இதை வைத்து இணை சேர்ந்ததை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

குட்டிகள் பிறந்த 7 முதல் 9-ம் நாளில் கண் திறக்கும். கண் திறக்கும் வரை, தாய் முயலை நம் மடியில் வைத்துக்கொண்டு குட்டிகளை பால் குடிக்க விட வேண்டும். கண் திறந்த பின் தானாகவே பால் குடிக்கத் தொடங்கிவிடும். பிறந்த 15-ம் நாள் வரை தாய் முயல், குட்டிகளுக்குப் பால் தரும். 15 முதல் 20-ம் நாளில் தாய் முயலுடன் சேர்ந்து குட்டி முயலும் பசுந்தீவனத்தைக் கடித்துச் சாப்பிடப் பழகிவிடும். 22-ம் நாள் குட்டிகளைத் தாயிடமிருந்து தனியே பிரித்து தனிக்கூண்டுகளில் போட்டுவிட வேண்டும். 30-ம் நாளில் தாய் முயல் மீண்டும் குட்டி போடும் என்பதால், இந்தக் குட்டிகள் இருந்தால், குட்டி போடுவது சிரமமாகும்.
30-ம் நாள் இணைசேர்ப்பதைத் தொடர்ச்சியாக செய்வதன் மூலம், மாதா மாதம் குட்டிகளைப் பெறலாம். குட்டி போடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே... குட்டிகள், பால் காம்புகளை எளிதில் தேடி பால் குடிப்பதற்கு வசதியாக, தாய் முயல், தன் உடம்பில் உள்ள ரோமங்களை உதிர்த்துவிட்டு அதன் மீதுதான் குட்டி போடும். இப்படி ரோமத்தை உதிர்த்தால், இன்னும் ஓரிரு நாட்களில் குட்டி போடப்போவதைத் தெரிந்து கொள்ளலாம் குட்டி போட்ட மூன்று நாட்களுக்குள் மீண்டும் ஆண் முயலுடன் இணை சேர்க்காவிட்டால், பத்து நாட்கள் வரை மீண்டும் பருவத்துக்கு வருவது தள்ளிப் போகலாம். காலை சாப்பாட்டுக்கு முன் அல்லது மாலை சாப்பாட்டுக்குப் பிறகு இணை சேர விடலாம். ஓர் ஆண் முயலை இணைக்கு விட்டால் அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்த ஆண் முயலை வேறு பெண் முயலோடு இணை சேர்க்க விடக்கூடாது. அப்படி விட்டால், குட்டிகள் தரம் இருக்காது.
காலையில் கலப்புத் தீவனம்... மாலையில் பசுந்தீவனம்!
காலை, மாலை என முயலுக்கு இருவேளை உணவு கொடுத்தால் போதும். மதியம் தேவையில்லை. தற்போது சபரிநாதனிடம் 90 பெரிய முயல்கள் மற்றும் 60 குட்டி முயல்கள் இருக்கின்றன. இவற்றுக்கு தினமும் 10 கிலோ அளவுக்கு கலப்புத் தீவனம் கொடுக்கிறார்.
அரிசித் தவிடு, கோதுமைத் தவிடு, உளுந்தங்குருணை ஆகியவற்றில் தலா இரண்டரை கிலோ, மக்காச்சோள மாவு ஒரு கிலோ, கம்பு மாவு, கேப்பை மாவு தலா 500 கிராம், கடலைப் பிண்ணாக்கு 250 கிராம், பருத்தி விதை 250 கிராம், உப்பு 50 கிராம், தாது உப்பு 100 கிராம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அதோடு... மருத்துவரால் பரிந்துரை செய்யப்பட்ட சத்து டானிக் 50 மில்லி, கால்சியம் டானிக் 100 மில்லி, நோய் எதிர்ப்புச் சக்தி டானிக் 50 மில்லி ஆகியவற்றையும் கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு (15 முதல் 20 லிட்டர் தண்ணீர்) பிசைய வேண்டும்.
இந்தக் கலவையில் ஒரு முயலுக்கு 100 கிராம் வீதம் காலை 7 முதல் 8 மணிக்குள் தீவனத் தட்டுகளில் வைக்க வேண்டும். மாதம் ஒரு முறை இக்கலவையில் 100 மில்லி குடற்புழு நீக்க டானிக்கைக் கலந்து கொடுக்கவேண்டும். குடற்புழு நீக்க டானிக் கொடுக்கும் நாளில் மற்ற டானிக்குகளைக் கலக்கக்கூடாது. தீவனம் கொடுத்த ஒரு மணி நேரம் கழித்து, ஒரு முயலுக்கு 100 மில்லி அளவு குளிர்ந்த தண்ணீர் வைக்கலாம்.
மாலை 6 முதல் 7 மணிக்குள் அருகம்புல், முட்டைக்கோஸ் தோல், வேலிமசால், அகத்தி, முருங்கைக்கீரை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு முயலுக்கு இரண்டு கை அளவு வைக்க வேண்டும். ஒருநாள் முட்டைக்கோஸ் தோல் வைத்தால், அடுத்த நாள் அருகம்புல் என மாற்றி மாற்றிக் கொடுக்கலாம். குட்டிகளுக்கு மட்டும் மதியம் பசுந்தீவனம் உண்டு. அதேபோல, குட்டி போட்ட முயல்களுக்கு கூடுதலாக அரைக்கை அளவு பசுந்தீவன உணவு உண்டு. முயல்கள், பசுந்தீவன உணவைத்தான் அதிகம் விரும்பிச் சாப்பிடும்.
வீடுகளில் முயல் வளர்ப்பவர்கள் காய்கறிக் கழிவுகளையும் முயலுக்கு உணவாகக் கொடுக்கிறார்கள். அப்படிக் கொடுக்கும்போது, தக்காளி, கத்திரி, பீன்ஸ், கேரட், அவரை மற்றும் கிழங்கு வகைகளைக் கொடுக்கக் கூடாது. இவற்றால் செரிமானப் பிரச்னை வரும். தொண்டையிலும் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புண்டு.
வேலை வாய்ப்பற்றோருக்கு நல்ல தொழில்!

தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ‘பண்ணை’ முருகானந்தத்திடம் முயல் வளர்ப்பு குறித்துப் பேசினோம். “சபரிநாதன் முயல்வளர்ப்பு பயிற்சிக்காக என்னிடம் வந்தார். தற்போது, முயல்வளர்ப்பு மற்றும் விற்பனையை வெற்றிகரமாகச் செய்து வருகிறார். வேலைவாய்ப்பில்லாத சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்களுக்கு (குறைந்தபட்சம் 2 அல்லது 3 சென்ட் அளவு போதும்) முயல் வளர்ப்பு நல்ல லாபகரமான தொழில். மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்வது, இறைச்சிக்காக இறைச்சிக் கடைகளிலேயே விற்பனை செய்வது, வீட்டு வளர்ப்புக்காக விற்பனை செய்வது என விற்பனை வாய்ப்பு பரவலாக இருப்பதால், பயப்படத் தேவையில்லை. முயல் வளர்ப்பு பயிற்சி மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு எங்கள் பயிற்சி மையத்திலேயே ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன” என்றார்.
தொடர்புக்கு, ‘பண்ணை’ முருகானந்தம் செல்போன்: 94435-57579
தினம் ஒரு இலை!
இயல்பாகவே, முயல்களுக்கு நோய் எதிர்ப்புத்திறன் அதிகம் இருந்தாலும், முன்னெச்சரிக்கையாக தினமும் மாலையில் பசுந்தீவனம் கொடுப்பதற்கு முன்பு, அதாவது மாலை 4 மணி அளவில், அட்டவணைப்படி வாரத்தில் ஐந்து நாட்களுக்கு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை இலைகளைக் கொடுத்தால், நோய்த் தாக்குதல் ஏதும் இருக்காது.
கூண்டுகள் சிறந்தவை!
முயலுக்கு அதிக வெளிச்சமும், அதிக குளிர்காற்றும் ஆகாது. கூம்பு வடிவ ஓலைக் கொட்டகை அமைத்து, காற்றோட்டத்துக்காக நான்கு பக்கங்களிலும் சிறிய ஜன்னல் அமைத்தால் போதும். முயல்கள் குறைந்த வெளிச்சம் அல்லது இருட்டையே அதிகம் விரும்புகின்றன. பக்கத்தில் ஆட்கள் இல்லாத போதுதான் அதிகம் இரை எடுக்கின்றன. கொட்டகைக்குள் கூண்டுகளில் முயல்களை வளர்க்கலாம்.

மூன்று பக்கம் மரத்தாலும், ஒரு பக்கம் மட்டும் கம்பி வலையாலும் அமைக்கப்பட்ட கூண்டுகள் முயல் வளர்ப்புக்கு ஏற்றவை. ஆனால், இந்தக் கூண்டுகளை தரையில் படும்படி அமைக்கக்கூடாது. அப்படி அமைத்தால், முயலின் சிறுநீர், கழிவுகள் கூண்டிலும், தரையிலும் தேங்கி நிற்கும். அவை, தீவனத்தட்டுகளில் படுவதோடு, துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும். அதனால் கூண்டு தரையிலிருந்து ஒர் அடி உயரத்தில் இருக்க வேண்டும். கூண்டுக்கு அடியில் பிளாஸ்டிக் ஷீட்களை விரித்து வைத்து கழிவுகளை எளிதாக அப்புறப்படுத்தலாம். வலைக்கம்பிகளில் வார்னிஷ் அடித்து விட்டால் துரு பிடிக்காது.