நாட்டு நடப்பு
Published:Updated:

மரபணு யுத்தம்!

மரபணு யுத்தம்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

இந்திய உணவுப் பயிர்களில், மரபணு மாற்றப்பட்ட விதைகளைப் புகுத்திவிட தொடர்ந்து துடிக்கின்றன அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள். கடந்த காலத்தில் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள், இதற்காக பகீரதப் பிரயத்தனம் செய்தனர். ஆனால், விவசாயிகள், இயற்கை ஆர்வலர்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக அது நடக்கவில்லை. இதனால், தற்போதைய பி.ஜே.பி ஆட்சியில் சாதிக்கும் வெறியோடு பாய ஆரம்பித்துவிட்டன அந்த பன்னாட்டு நிறுவனங்கள். ‘பீகார் மாநில தேர்தல் கலாட்டாக்கள் ஓய்ந்த பின், மரபணு மாற்றப்பட்ட கடுகு களத்துக்கு வந்துவிடும்’ என்கிற செய்தி கசிய ஆரம்பித்துள்ளது.

மரபணு மாற்றுப்பயிர்கள், சுற்றுச்சூழலுக்கும் உயிர்ச்சூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்’ என்றெல்லாம் சொல்லித்தான் எதிர்ப்புக் காட்டப்படுகிறது. இதன் காரணமாகவே ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளும் இதற்கு தடை விதித்துள்ளன.

இந்த நிலையில், ‘மரபணு மாற்றப்பட்ட கடுகு மூலம், தற்போது இருப்பதைவிட, 15% முதல் 25% வரை மகசூலைப் பெருக்கலாம்’ என்று சொல்லி, இந்திய விவசாயிகள் தலையில் அதைக் கட்டப் பார்க்கிறார்கள்.

இப்போதும்கூட ஒற்றை நாற்று நெல் நடவு போல, செம்மை கடுகு நடவு முறையைப் பின்பற்றி, வழக்கத்தைவிட 25% கூடுதல் மகசூல் எடுத்து வருகிறார்கள் வடமாநில விவசாயிகள். இத்தகைய அருமையான தொழில்நுட்பத்தை அனைத்து விவசாயிகளிடமும் பிரபலப்படுத்த வேண்டிய மத்திய அரசோ, முன்பு காங்கிரஸ் அரசு செய்தது போலவே, ‘அமெரிக்க சேவை’யில் அதீத வேகத்தைக் காட்ட துடிக்கிறது.

கடுகு என்பது ஒரு தொடக்கம்தான். கத்திரி, அரிசி, துளசி, வெண்டை... என மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர் விதைகள் வரிசை கட்டி வரத் தயாராக இருக்கின்றன.

இப்போதே விழித்துக் கொள்ளாவிட்டால்... நாளை நம் நாளாக இருக்காது என்பதே உண்மை!

-ஆசிரியர்