நாட்டு நடப்பு
Published:Updated:

"விவசாயப் பாடத்தை, பண்ணையில்தான் படிக்க முடியும்”

‘அறச்சலூர்’ ரா.செல்வம்

“தென்னைக்கு தினசரி 50 லிட்டர், 60 லிட்டர் தண்ணீர் தேவை என்பதெல்லாம் சரியல்ல. நான் 10 நாளைக்கு அல்லது 15 நாளைக்கு ஒரு முறைதான் தண்ணீர் தருகிறேன். ஆண்டுக்கு 350-க்கும் அதிகமானக் காய்களைத் தருகின்றன”.

பாஸ்கர் சாவே... இந்திய இயற்கை விவசாய வரலாற்றில் மறக்கமுடியாத பெயர். ‘கூட்டுறவுதான் இயற்கையின் ஆதார விதி’ என்ற தத்துவத்தையும், ‘நமக்கு இங்கே வேலை, விளைவிப்பது அல்ல... அன்பு செலுத்துவது மட்டுமே’ என்ற இயற்கைச் சித்தாந்தத்தையும் பரப்பியவர். ‘இயற்கையை எந்த வகையிலும் இம்சிக்காமல் வாழ வேண்டும்’ என்பதை வார்த்தைகளில் மட்டும் அல்லாமல், வாழ்க்கையிலும் கடைபிடித்த அந்த 93 வயது மாமனிதரை... சமீபத்தில் இயற்கை தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டது. அவரைப் பற்றிய சில நினைவுகள் இங்கே...

"விவசாயப் பாடத்தை, பண்ணையில்தான் படிக்க முடியும்”

‘‘உலகில் பல்வேறு பண்ணைகளைப் பார்த்திருக்கிறேன். அவை அனைத்திலும் தலைசிறந்தது இந்தப் பண்ணை’’ என ஜப்பானின் இயற்கை வேளாண் விஞ்ஞானி மசானபு ஃபுகோகா வியந்து பாராட்டிய பெருமையுடையது, பாஸ்கர் சாவேவுடைய ‘கல்பவிருட்சம் பண்ணை’.

ஒரு முறை குஜராத் மாநிலத்துக்குச் சென்றிருந்தபோது, காந்தியவாதியான, பாஸ்கர் சாவே-வின் பண்ணைக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். பண்ணையில் பாஸ்கர் சாவே எங்களிடம் பேசும்போது, “இது 18 ஏக்கர் தோட்டம். தென்னை, நெல், சப்போட்டா, பப்பாளி பேரீச்சை, முருங்கை, பாக்கு, மா பலா, சீதா, நாவல்... சாகுபடி செய்துள்ளேன். தென்னைக்கு தினசரி 50 லிட்டர், 60 லிட்டர் தண்ணீர் தேவை என்பதெல்லாம் சரியல்ல. நான் 10 நாளைக்கு அல்லது 15 நாளைக்கு ஒரு முறைதான் தண்ணீர் தருகிறேன். எனது மரங்கள் ஆண்டுக்கு முன்னூற்றைம்பதுக்கும் அதிகமானக் காய்களைத் தருகின்றன. தென்னையின் தண்ணீர் உறிஞ்சும் வேர் அடிமரத்திலிருந்து வெகுதொலைவில் உள்ளது. அடிமரத்தில் உள்ள வேர்கள் அந்த மரத்தைத் தாங்கும் வேர்கள். அடி மரத்தில் தண்ணீரைப் பாய்ச்சி, தண்ணீர் உறிஞ்சும் வேர்களை இங்கே கொண்டு வந்து குவித்து விட்டால், எப்படி விளைச்சல் வரும்? இந்தப் பண்ணையில், இரண்டு வரிசை மரங்களுக்கும் நடுவே ஓர் அடிக்கு ஓர் அடி அகல, ஆழமுள்ள வாய்க்காலில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. அதனால் குறைவில்லாத மகசூல் தருகிறது’’ என்ற பாஸ்கர் சாவேவிடம்,

‘‘நீங்கள் இயற்கை விவசாயத்தை எங்கு கற்றீர்கள்?’’ என்றேன். அவர் சொன்ன பதில்

“எனது பண்ணைதான் எனக்கு ஆசிரியர், எனது பல்கலைக்கழகம். ஒருவர் இயற்கை விவசாயப் பாடத்தை தனது பண்ணையில்தான் படிக்க முடியும்!”