பண்ணையை நோக்கி பயனுள்ள பயணம்ஜி.பழனிச்சாமி, படங்கள்: பா.பிரபாகரன்
18 கோடி ரூபாய்க்கு மரங்கள்! கோடீஸ்வரனாக்கும் வேளாண் காடுகள்.!
விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது, ‘பசுமை விகடன்’. ‘ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை, அவர்களின் மனதில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

இந்த முறை ஒரு நாள் விவசாயிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்... கேரள மாநிலம், பாலக்காடு அடுத்துள்ள எருத்தேன் பதி கிராமத்தைச் சேர்ந்த ‘தனியார் கல்லூரி ஊழியர்’ அனுரேவதி, பொள்ளாச்சி, வடக்கிப்பாளையத்தைச் சேர்ந்த ‘அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர்’ சுகுந்தன், பொள்ளாச்சியைச் சேர்ந்த ‘அரசு மருத்துவமனை தலைமைச் செவிலியர்’ மல்லிகா, திருப்பூரைச் சேர்ந்த ‘சுற்றுச்சூழல் எழுத்தாளர்’ சுப்ரபாரதி மணியன், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த ‘அமராவதி சர்க்கரை ஆலையின் ஓய்வுபெற்ற தரக்கட்டுப்பாட்டு அதிகாரி’ அருணாச்சலம், தாராபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தன்ராஜ், சிங்கப்பூர் செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் தியாகராஜன் ராமசாமி, ‘தனியார் மேலாண்மைக்கல்லூரி ஆசிரியர்’ பாலாஜி விக்னேஷ், ‘தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்’ வீரக்குமார், கோயம்புத்தூரைச் சேர்ந்த ‘பயோ-டெக் மாணவர்’ நந்தக்குமார் ஆகியோர்.
இவர்களை நாம் களப்பயிற்சிக்காக அழைத்துச் சென்றது... இயற்கை ஆர்வலரும் முன்னோடி

விவசாயியுமான மது.ராமகிருஷ்ணனின் ‘மகிழ்வனம்’ பண்ணைக்கு. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து தென்மேற்கு திசையில் 30 கிலோமீட்டர் தூரம் பயணித்தால் வருகிறது, மேற்குத்தொடர்ச்சி மலைச்சாரலில் உள்ள நரிக்கல்பதி கிராமம். இங்கு, ஓங்கி உயர்ந்து நிற்கும் பல வகையான மரங்கள் சூழ, 50 ஏக்கரில் பரந்து விரிந்து பசுமை பூத்துக்கிடக்கிறது, மகிழ்வனம் பண்ணை.
கொலுசு கட்டி குதித்தாடும் குதூகலக் குழந்தைப் போலக் காட்டில் இருந்து புறப்பட்டு கண்ணாடி போல தண்ணீர் கொண்டு வரும் சிற்றோடை ஒரு புறம்... காரை வாய்க்கால் வழி வந்து விழும் சிற்றருவி ஒருபுறம்... பண்ணையின் எல்லையில் ஓடும் உப்பாறு... என நீர் சூழ்ந்து இருக்கிறது, மகிழ்வனம். மலையில் இருந்து வரும் நீர், மனிதர்கள் கைபடுவதற்கு முன் முதன்முதலில் நுழையும் பண்ணை என்கிற பெருமையும் மகிழ்வனத்துக்கு உண்டு. அங்கு நிலவிய கானக அமைதிக்கு மகுடமாய் பண்ணையின் மையத்தில் வீற்றிருக்கிறது, அழகிய பண்ணை வீடு. அதில் நுழைந்தால், கல்நாற்காலி மேசைகள், வலை ஊஞ்சல், வட்டத்திண்ணை... என கிராமிய வடிவத்தில் குளுமை காட்டும் நிழல் பூங்காவும் உண்டு.
‘ஒரு நாள் விவசாயிகள்’, பண்ணைக்குள் நுழைந்ததுமே, கரம் கூப்பி உற்சாகமாக வரவேற்ற மது.ராமகிருஷ்ணன், ‘‘எல்லா வனவிலங்குகளும் நம்ம பண்ணைக்கு வந்து போகுங்க... பட்டாம் பூச்சி தொடங்கி பருந்து வரை பறந்து திரியும் இடம்ங்க’’ என்று சொல்ல, ஆச்சர்யப்பட்ட ‘ஒரு நாள் விவசாயிகள்’ மிகவும் ஆர்வமாயினர்.
அனைவரையும் பூங்காவில் அமர வைத்து பருப்பு வடையும் தேங்காய் பாலும் கொடுத்தார், மது.ராமகிருஷணன். அந்தப் பண்ணையில் பிளாஸ்டிக் பயன்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ள காரணத்தால், மெருகேற்றப்பட்ட தேங்காய்ச் சிரட்டைகளில் தேங்காய்ப் பால் கொடுக்கப்பட்டது.
சாப்பிடும்போதே அனைவருக்குமான அறிமுகப்படலமும் முடிந்தது. தொடர்ந்து பேச ஆரம்பித்த மது.ராமகிருஷ்ணன், “விவசாயத்துல ரெண்டு விதமான முறைகள் உண்டு. ஒண்ணு நல்ல விவசாயம், இன்னொண்ணு கெட்ட விவசாயம்” என்று சொல்லும்போதே... “அதென்ன கெட்ட விவசாயம்?” என்று குறுக்கிட்டார், அனுரேவதி.

“இல்லம்மா... இயற்கை விவசாயம் நல்ல விவசாயம், ரசாயன விவசாயம் கெட்ட விவசாயம்னு சொல்ல வந்தேன். மனிதர்கள் மட்டும்தான் உணவு முறைகளை மாத்திக்கிட்டு மண்ணையும் தண்ணீரையும், காற்றையும் கெடுத்து வெச்சிருக்காங்க. ஆனால், பறவைகளைப் பாருங்க, அவை எதையும் மாற்றலை. அவை தோன்றிய காலத்துல இருந்து ஒரே முறையான வாழ்க்கைதான் வாழ்கின்றன. இரை தேடுவது, இனப்பெருக்கம் செய்றது, மரங்கள்ல அண்டுறது, எச்சங்கள் மூலம் உரம் கொடுப்பது, விதைகள் தூவுவதுனு ஆரோக்கியமான வாழ்வியலைக் கொண்டுள்ள பறவைகளுக்கு மருத்துவமனைகள் தேவைப்படுறதில்லை. பாஸ்போர்ட் எடுக்காம விசா வாங்காம கடல் தாண்டி வந்து போகிற பறவைகள் மட்டும்தான் இன்றைய தேதியில் இயற்கை வாழ்வியல் குறியீடு. அப்படிப்பட்ட சூழல் உள்ள பண்ணைதான் இது” என்று சொல்லி அனைவரையும் பண்ணைக்குள் அழைத்துச் சென்றார், மது.ராமகிருஷ்ணன்.
நடக்கும்போதே, “விவசாயம் நஷ்டம் என்று தற்கொலை செய்து கொள்கிறார்களே? அதை மாற்ற வழி இல்லையா?’’ என எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அக்கறையோடு கேட்க... பண்ணையில் இருந்த தேக்குமரம் ஒன்றில் சாய்ந்து நின்றபடி பதில் சொன்னார், மது.ராமகிருஷ்ணன்.
“கடன் தொல்லை, மகசூல் இழப்பு, கட்டுபடியாகாத விலை மாதிரியான காரணங்களால்தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ரசாயன விவசாயிகள்தான். இயற்கை விவசாயிகள் யாரும் இந்தக் காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்வதில்லை. விவசாயம் ஒரு வாழ்வியல். அது விவசாயிக்கு மட்டுமல்ல அவனைச் சார்ந்துள்ள கால்நடைகளின் வாழ்க்கைக்கும் தேவையான அனைத்தையும் கொடுக்குது” என்றவர், மசானபு ஃபுகோகா, நம்மாழ்வார் ஆகியோரின் கருத்துக்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டார்.
களைக்கொல்லி தேவையில்லை!
ஓற்றையடிப் பாதை போல மலையில் இருந்து வரும் காரை வாய்க்காலின் இருபுற மண் வரப்பில் பச்சைப்புற்கள் புதராய் காட்சி அளித்தன. “இவ்வளவு புதர் மண்டிக்கிடக்கு களைக்கொல்லி தெளிக்கவேண்டியதுதானே?’’என பாலாஜி விக்னேஷ் கேட்க, “பூச்சிக்கொல்லி தெளித்தால் காய்கறிகள் மட்டும்தான் நஞ்சாகும். ஆனால், களைக்கொல்லி விஷத்தைத் தெளித்தால் அமிலம் பட்டது போல எரிந்து மண் நஞ்சாவதுடன் வெந்தும் போய் விடும். அது போன்ற விஷயங்களுக்கு இந்தப் பண்ணையில் அனுமதியில்லை” என்றார், மது.ராமகிருஷ்ணன்.
“அப்போ, களையை எப்படிக் கட்டுப்படுத்துவீங்க?” என்றார், வீரக்குமார்.

“அதைத்தான் இப்ப செய்யப்போறோம். அதோ அந்த மரத்தடியில் கிடக்கும் மண்வெட்டிகளை ஆளுக்கு ஒண்ணா எடுத்துட்டு வாங்க’’ என்று அன்புக்கட்டளை இட்டு ஒரு மண்வெட்டியால் களைகளை வெட்டிக் காட்டினார், மது.ராமகிருஷ்ணன்.
அருணாச்சலம், சுப்ரபாரதிமணியன், வீரக்குமார், தியாகு ஆகிய நால்வரும் கால்சட்டையை மடித்து விட்டபடி புதரை வெட்டத் தொடங்கினர். அதே சமயம் மற்றொரு மூலையில், குவிக்கப்பட்டிருந்த சாணக் கழிவுகளை எடுத்து, அதை வண்டல் மண்ணில் கொட்டி, தொழுவுரமாக மாற்றும் பணியில் ஈடுபட்டனர், சுகுந்தன், தன்ராஜ், மல்லிகா, அனுரேவதி ஆகியோர்.
சிறிது நேரம் கழிந்ததும் அவர்களை அழைத்த மது.ராமகிருஷ்ணன்,
“எவ்வளவு வேலையாட்கள் நம்ம பண்ணையில் இருந்தாலும், தினந்தோறும் சில மணி நேரமாவது குனிந்து நிமிர்ந்து ஏதாவது ஒரு வேலையை நம் கையால் செய்யணும். அப்பத்தான் மண்ணு மேல நமக்கு நேசம் வரும் ’’ என்றார்.
மட்க வைத்துத்தான் பயிர்களுக்குக் கொடுக்கணும்!
அப்போது, ‘‘சாணத்தை வண்டல் மண்ணுடன் ஏன் கலக்கணும்?” என்று சந்தேகம் கேட்டார், தன்ராஜ். “எந்த இயற்கை உரத்தையும் ஈரப்பதத்தோட நேரடியா பயிருக்குக் கொடுக்கக்கூடாது. அப்படிக் கொடுத்தால் அதில் உள்ள கிருமிகள், வேர் சம்பந்தமான நேய்களை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கு. அதுவும் தென்னை மரங்களுக்கு முதல் எதிரி பச்சை சாணம்தான். காண்டாமிருக வண்டு, கூன்வண்டு, ஊசிவண்டு எல்லாம் பச்சை சாணத்துலதான் உருவாகும். இந்த வண்டுகள் தென்னை மரத்துல நிறைய சேதத்தை ஏற்படுத்தும். அதனாலதான் பச்சை சாணத்தை வண்டல் மண்ணோட கலந்து காய வெக்கிறோம். காய்ஞ்சதை, பயிர்களுக்குக் கொடுத்தால் பாதிப்பு இருக்காது” என்றார், மது.ராமகிருஷ்ணன்.

அந்த நேரத்தில், ‘‘ஆலமரம் புளியமரம் ஏலேலங்கிளியே...
அணி அணியாய் தென்னை மரம் ஏலேலங்கிளியே...
பாக்குமரம் தேக்கு மரம் ஏலேலங்கிளியே...
பணம்கொடுக்கும் எங்க மரம் ஏலேலங்கிளியே..’’
எனப் பாட்டு சத்தம் கேட்க... அந்தத் திசை நோக்கி அனைவரும் திரும்பிப் பார்த்தால், காரை வாய்க்கால் வழியே ஓடி வந்து சின்னஞ்சிறு அருவிபோல விழும் ஆற்றுத் தண்ணீரில் சுகமான குளியல் போட்டுக் கொண்டிருந்தார், சுப்ரபாரதி மணியன்.
ஆசை தீரக் குளித்து வந்தவரிடம், ‘‘பாட்டு பிரமாதம் சார்... என்று அனைவரும் கைகொடுத்துப் பாராட்டினர். ‘‘ஆனாலும் அந்தப் பாட்டு வரிகளில் ஒரு சந்தேகம் உண்டு’’ என்ற அனுரேவதி, ‘‘பணம் கொடுக்கும் எங்க மரம் ஏலேலங்கிளியேனு பாடினீங்களே எந்த மரங்க பணம் கொடுக்குது?” என்றார்.
“அதுக்கு பதிலை நானே சொல்றேன். வாங்க என் பின்னாடி, பணம் கொடுக்கும் மரங்களைக் காட்டுறேன்’’ என்ற மது.ராமகிருஷ்ணன், அனைவரையும் ஓங்கி வளர்ந்த மரங்களுக்குள் அழைத்துச் சென்றார்.
பணம் கொடுக்கும் மரங்கள்!
‘‘மரம் வளர்ப்பதில் இரண்டு லாபம் உண்டு. ஒன்று உலகில் வாழும் ஜீவராசிகளுக்கு உயிர்மூச்சு கொடுப்பதுடன், மழை ஈர்ப்பு மையமாகச் செயல்படும் மரங்கள். ஆலமரம், புளியமரம், அரசமரம், கொன்றை, வேம்பு, வாகை, பனை உள்ளிட்ட நாட்டு மரங்கள் ஆக்சிஜன் கொடுப்பதுடன் பறவைகளின் சரணாலயமாகவும் திகழ்கின்றன.
2,000 வருஷங்கள் வரை கூட வாழ்ந்து பலன் தரக்கூடியவை, இந்த வகை நாட்டுமரங்கள். நடாமல், உரம் இடாமல், யாரும் தண்ணீர் கொடாமல் சுயம்புவாய் வளர்ந்து நின்று நன்மை செய்கின்றன, அந்த வகை மரங்கள். ஆனால், இந்த மகிழ்வனத்தில் வளர்ந்து நிற்கும் அந்த மரங்களுடன் சேர்த்து வருமானம் கொடுக்கும் பல வகை மரங்களையும் வளர்த்துட்டு இருக்கேன். அதற்கு ‘வேளாண் காடுகள்’னு பெயர். இதை நாம நடவு செய்து மழையில்லா நாட்களில் தகுந்த நீர்ப்பாசனமும் செய்து பராமரித்தால், அந்த மரங்கள் நம்மை கோடீஸ்வரனாக்கும்” என்றதும் ஆர்வமாயினர், ஒரு நாள் விவசாயிகள்.

18 கோடி ரூபாய் மதிப்புக்கு மரங்கள்!
தொடர்ந்து பேசிய மது.ராமகிருஷ்ணன், ‘‘காடு வளர்த்தால் காசு கிடைக்கும். இதில் மாறுபட்ட கருத்துக்கு இடமே இல்லை. இன்னைக்கு தேதிக்கு இந்த மகிழ்வனத்தில் வளர்ந்து நிற்கிற வேளாண் காட்டின் மொத்த மதிப்பு குறைந்த பட்சம் 18 கோடி ரூபாய். குறிப்பா, 22 வயதுடைய 5 ஆயிரம் தேக்குமரங்கள் இந்தப் பண்ணையில் இருக்கு. இன்னிக்கு நான் வெட்டி விற்றால் கூட ஒரு மரம் 15 ஆயிரம் ரூபாய்க்கு விலை போகும். அதுல மட்டும் எனக்கு ஏழரைக்கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். இன்னும் இருக்கிற ஈட்டி, மலைவேம்பு, சவுக்கு,வேம்பு உள்ளிட்ட மரங்களின் மதிப்பும் கோடியில்தான். ஆனால், உடனே இந்த மரங்களை வெட்டி விற்கப்போவதும் இல்லை. என்னுடைய தேவை போக மீதமுள்ள மரங்களை இன்னும் பல வருஷங்கள் வளர்த்து அடுத்த தலைமுறைக்கு அழியா சொத்தா அர்பணிக்கப் போறேன்” என்றார்.
அடுத்து அனைவரையும் பம்ப்செட் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார், மது.ராமகிருஷ்ணன். பெரிய தொட்டி ஒன்றில் பம்ப்செட் தண்ணீர் கொட்டி, வழிந்து வாய்க்கால் வழியே ஓடிக்கொண்டிருந்தது.
அனைத்து மரங்களுக்கும் அமுதக்கரைசல்!
“சொட்டுநீர்ப் பாசனம், நேரடி வாய்க்கால் பாசனம் ரெண்டு முறையும் இங்க இருக்கு. மலையில் இருந்து ஓடி வரும் ஓடைத்தண்ணீரை நிலத்தின் மேட்டுப்பகுதியில் தொட்டி அமைத்து சேமித்து வைக்கிறேன். அதை திறந்து விட்டா கீழ் பகுதியில் உள்ள பயிர்களுக்கு தானாகவே பாசனம் நடக்கும். இதற்கு மின்சார பம்ப்செட் தேவையில்லை. அதே போல் மின்சார பம்ப்செட் மூலம் பாசனம் நடக்கும் இந்தத் தொட்டிக்குள், அமுதக் கரைசலைக் கலந்து விட்டு அதை தோட்டம் முழுக்க பாசனம் செய்றேன். எல்லா மரங்களுக்கும் அமுதக்கரைசல் போய் சேந்துடும்.
அமுதக்கரைசல் தயாரிக்கிறதுக்காக 20 காங்கேயம் மாடுகளை வளர்க்கிறேன். எல்லா மாடுகளும் மலைக்கு மேய்ச்சலுக்குப் போயிருக்கு. சாயங்காலம் வந்திடும். நேரம் இருந்தால் பார்க்கலாம்” என்று மது.ராமகிருஷணன், சொல்லும்போதே... “சாப்பாடு தயார்?” என நிழல் பூங்காவில் இருந்து குரல் வரவும், அனைவரும் நகர்ந்தனர்.
குதிரைவாலி, சாமை, தட்டைப்பயறு, பச்சைக் குறுமிளகு, மிளகு உள்ளிட்ட பல வகை தானியங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவைச் சுவைத்தனர், ஒரு நாள் விவசாயிகள். தொடர்ந்து அவர்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள், அடுத்த இதழில்...
- பயணம் தொடரும்
நீங்களும் ஒருநாள் விவசாயி, ஆக வேண்டுமா?
‘விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடி கூட தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’ என்று எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே 044-66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, குரல் வழி சேவை மூலம் உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
மாணவர், வேலை தேடிக் கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.