Published:Updated:

கார்ப்பரேட் கோடரி - 8

கார்ப்பரேட் கோடரி
பிரீமியம் ஸ்டோரி
News
கார்ப்பரேட் கோடரி ( கார்ப்பரேட் கோடரி )

மண் மீதான வன்முறையைத் தோலுரிக்கும் தொடர்!‘சூழலியலாளர்’ நக்கீரன், ஓவியம்: ஹரன்

னிதஇனம் முதன்முதலில் தோன்றிய இடம், ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள ‘எத்தியோப்பியா’ என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு! ‘இங்கிருந்தே மனிதர்கள் உலகம் முழுதும் பரவிச் சென்றனர்’ என்பது அவர்களின் கணிப்பு.

இதுபோலவே எத்தியோப்பியாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிச் சென்றதுதான் காபி! இன்றும் உலகின் முதல் தரமான காபி, எத்தியோப்பியாவில்தான் விளைகிறது. இந்தக் காபியைக் கண்டுபிடித்தது யார் தெரியுமா? ஓர் ஆடு.

எத்தியோப்பியாவில் ‘கல்தி’ என்பவர் வசித்து வந்தார். ஒரு நாள் இரவு, தன்னுடைய ஆடுகளை பட்டியில் அடைக்கும்போது, சில ஆடுகள் குறைந்திருப்பதை அவர் கண்டறிந்தார். மறு நாள் விடியற்காலையில் அவர் ஆடுகளைத் தேடி புறப்பட்டபோது... காணாமல் போன ஆடுகள் ஒரு குற்றுமரம் அருகே நின்றிருந்தன. இரவு முழுவதும் தூங்காமல் அந்த ஆடுகள் நின்றிருந்ததற்கு அருகில் இருந்த அந்த குற்றுமரத்தின் கனிகளே காரணம் என்பதை, கல்தி புரிந்து கொண்டார். அக்கனிகளைப் பறித்து வந்து காய வைத்து கொட்டைகளை எடுத்துக் கடித்துப் பார்த்தபோது அவை கடினமாக இருந்தன. மிருதுவாக்குவதற்காக அவற்றை சட்டியில் இட்டு வறுத்தபோது நல்ல மணம் எழுந்தது. ஆனாலும், கொட்டைகளைக் கடிக்க முடியவில்லை. பிறகு அக்கொட்டைகளை நீரில் இட்டு கொதிக்க வைத்தபோது நீரின் நிறம் மாறியது. அந்நீரை வடித்து அவர் குடித்துப் பார்த்தார். அவருக்கு நெடுநேரம் தூக்கமே வரவில்லை.

கார்ப்பரேட் கோடரி - 8

சந்தையை ஆக்கிரமித்த ஐரோப்பா!

இச்செய்தி சூஃபி மடத்துக்குச் சென்று சேர்ந்தது. ‘இரவு வழிபாட்டுக்கான கண்விழிப்பு’ என்பது சூஃபிகளுக்கு அவசியமான ஒன்று. எனவே சூஃபி துறவிகள் காபியை தாங்கள் சென்ற பகுதிகளுக்கு எடுத்துச் சென்றனர். இப்படித்தான் ‘பாபா புதான்’ என்றொரு சூஃபித் துறவி இதை இந்தியாவின் குடகு மலைக்கும் கொண்டு வந்தார்.

காபி ஐரோப்பாவுக்குச் சென்ற பிறகு அதன் சுவை அவர்களை அடிமை கொண்டது. இதனால், ஐரோப்பியர்கள் தங்கள் காலனி நாடுகளில் அதை பயிரிடத் தொடங்கினர். தற்போது, காபி தோன்றிய எத்தியோப்பியாவை விட, பிரேசில்தான் காபி ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது.

உறிஞ்சப்படும் உழவனின் உழைப்பு!

காபி, பெட்ரோலுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஏற்றுமதிப் பொருள். இதன் வணிகம் 2 ஆயிரம் கோடி டாலர். 52 நாடுகளில் 2 கோடியே 60 லட்சம் உழவர்கள் காபி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். காபியை அதிகம் உபயோகப்படுத்தும் நாடு ஐக்கிய அமெரிக்கா. ஆனால், அமெரிக்காவில் அது விளையாது என்பதால் இறக்கு மதிதான் செய்யப்படுகிறது. இந்த இறக்குமதிக்குப் பின்புலத்தில் எத்தியோப்பியா என்ற நாடு சுரண்டப்பட்டுக் கொண்டிருந்தது. எத்தியோப்பியாவின் மொத்த ஏற்றுமதியில் காபியின் பங்கு 60 சதவிகிதமாகும். சுமாராக ஆறு லட்சம் சிறு மற்றும் பெரு உழவர்கள் காபியைப் பயிரிடுகின்றனர். நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒன்றரைக் கோடி மக்களுக்கு இது வேலை வாய்ப்பை அளிக்கிறது. ஆனாலும் காபி உழவர்களின் நிலைமையில் முன்னேற்றம் இல்லை. பணக்கார நாடுகளில் ‘காப்புச்சினோ’ என்கிற பெயருடைய காபி ஒரு கோப்பை நான்கு டாலருக்கு விற்பனையாகிறது. ஆனால், அதனை விளைவித்துக் கொடுத்த எத்தியோப்பிய உழவர்களுக்கு சில்லறை விற்பனை விலையில் ஐந்திலிருந்து பத்து சதவிகித விலை கூட கிடைத்ததில்லை. இதனால், 2004-ம் ஆண்டு எத்தியோப்பிய அரசு, ‘தனக்கான சிறப்பு வணிகக்குறியீட்டை உருவாக்குவது’ என்ற அதிரடி முடிவை எடுத்தது.

இதனுள் போவதற்கு முன்பாக காபியைப் பற்றி சில செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். நூற்றுக்கும் மேற்பட்ட காபி வகைகளில் இரண்டு ரகங்கள்தான் சந்தையில் மதிப்பு வாய்ந்தவை. அதனால் இந்த இரண்டு ரகங்கள்தான் உலகில் பெரும்பாலும் பயிரிடப்படுகின்றன. ஒன்று அராபிகா. மற்றொன்று ரோபஸ்டா. இதில் அராபிகா ரகம்தான் முதல் தரமானது. கடல் மட்டத்திலிருந்து 2 ஆயிரத்து 800 மீட்டர் உயரத்துக்கு மேல் விளையும் இந்த ரகம்,  உலக காபி சந்தையில் 70 சதவிகிதத்தைப் பிடித்து வைத்திருக்கிறது. மீதி இடத்தைப் பிடித்து வைத்திருக்கும் ரோபஸ்டா ரகம்... வியட்நாம் போன்ற சமவெளிப் பகுதிகளிலும் கூட இன்று விளைகிறது. ‘உடனடி (இன்ஸ்டன்ட்) காபி’ ரோபஸ்டா ரகத்தில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. ரோபஸ்டாவை விட அராபிகாவின் விலை இரு மடங்கு அதிகம்.

மறுக்கப்பட்ட உரிமை!

எத்தியோப்பியாவில் அராபிகா வகை மட்டுமே பயிரிடப்படுகிறது. இங்குள்ள காலநிலையும் மண்ணும் எத்தியோப்பிய அராபிகா காபியை தனித்துவமிக்கதாக ஆக்கியுள்ளன. குறிப்பாக சிடாமா (Sidama), ஹாரர் (Harrar), யிர்காசெஃபே (Yirgacheffe) ஆகிய பெயர் கொண்ட காபி வகைகள்தாம் உலகிலேயே தலைசிறந்தவை. இவை, எத்தியோப்பியாவில் உள்ள இடங்களின் பெயர்கள். இந்த காபி வகைகளை உலகில் வேறெங்கும் இந்தத் தரத்தில் விளைவிக்க முடியவில்லை. இம்மூன்று காபி வகைகளுக்குத்தான் வணிகக்குறியீட்டை உருவாக்க முடிவெடுத்தது, எத்தியோப்பியா.

ஐக்கிய அமெரிக்காவின் காப்புரிமை மற்றும் வணிகக்குறியீடு அலுவலகத்தில் (USPTO), இம்மூன்று வகைகளுக்குமான வணிகக்குறியீடு கேட்டு எத்தியோப்பியா விண்ணப்பித்தது. இதில் ‘யிர்காசெஃபே’ காபிக்கு மட்டுமே அனுமதி கிடைத்தது. மற்ற இருவகை காபிக்கும் அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி கிடைக்கப்பெற்ற பிறகு ‘யிர்காசெஃபே’ ஒரு பவுண்ட் காபியின் விலை, 60 அமெரிக்க காசிலிருந்து 2 டாலராக அதிகரித்தது. மற்ற இருவகை காபிகளுக்கும் இந்த அனுமதி கிடைத்திருந்தால் அவற்றின் விலையும் உயர்ந்திருக்குமல்லவா... ‘அந்த அனுமதி ஏன் கிடைக்கவில்லை?’ என ஆராய்ந்தபோது இச்செயலுக்கு பின்னால் ‘ஸ்டார்பக்ஸ்’ காபி நிறுவனம் இருப்பது தெரிய வந்தது.

போராடி வென்ற எத்தியோப்பியா!

ஸ்டார்பக்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய சங்கிலித்தொடர் கடைகளைக் கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் கார்ப்பரேட் காபி நிறுவனம். 62 நாடுகளில் 22 ஆயிரத்து 551 கிளைகளைக் கொண்ட இதற்கு சென்னையிலும் கூட நான்கு கிளைகள் இருக்கின்றன. 1,152 கோடி டாலர் (2013-ம் ஆண்டில்) சொத்து மதிப்புக் கொண்ட இந்நிறுவனம் அராபிகா காபியை மட்டும்தான் கொள்முதல் செய்கிறது.

எத்தியோப்பியாவின் காபி கொள்முதலில் இந்நிறுவனத்தின் பங்கு அதிகம். எனவே அனுமதி மறுக்கப்பட்டதின் பின்னணியில் இந்நிறுவனம் இருந்தது. இதன் சதியை முறியடிக்க எத்தியோப்பியா, USPTO-வின்  முடிவை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க... இறுதியில் எத்தியோப்பியாவின் மூவகை காபிகளுக்கும் வணிகக்குறியீடு கிடைத்தது. இவ்வெற்றிக்கு முன், இந்த காபி வகைகளின் சில்லறை விற்பனை விலை, இருபது முதல் முப்பது டாலர்கள்தான். அதில், எத்தியோப்பிய உழவர்களுக்கு கிடைத்தது ஒரு டாலர்தான். இன்று, கிலோவுக்கு ஆறு முதல் எட்டு டாலர் வரை விவசாயிகளுக்குக் கிடைக்கிறது. அதுமட்டுமல்ல முன்னர் சுமார் 40 கோடி டாலர் வணிகமான எத்தியோப்பியாவின் காபி ஏற்றுமதி இன்று 160 கோடி டாலர் வரை உயர்ந்துவிட்டது.

எத்தியோப்பியாவின் மண் இல்லையென்றால், எத்தியோப்பியாவின் காபி இல்லை. எத்தியோப்பியா காபி இல்லையென்றால், அமெரிக்கர்கள் காபியை சுவைக்க முடியாது.  எத்தியோப்பியா போன்ற ஒரு சிறிய நாடு தம் நாட்டின் சொத்துரிமையைக் காக்க போராடி வெல்கிறது. ஆனால், இந்தியா போன்ற ஒரு நாடு பாசுமதி அரிசி, மஞ்சள் போன்ற பொருட்களுக்கு அந்நிய நிறுவனங்கள் உரிமை கொண்டாடியபோது எப்படி வேடிக்கை பார்த்தது என்பதை நாம் அறிவோம். வேம்பைக் காப்பாற்றக்கூட... வந்தனா சிவா, ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார் போன்றவர்கள்தானே முயற்சி எடுக்கவேண்டி வந்தது!

கார்ப்பரேட்களின் களவாணித்தனம்!

ஸ்டார்பக்ஸ் நிறுவனம் இத்தோடு தன் வேலையை நிறுத்தவில்லை. கோஸ்டாரிகா நாட்டில் அந்நிறுவனம் ஒரு காபித் தோட்டத்தை விலைக்கு வாங்கியது. அச்செய்கை பிற வணிக நிறுவனங்களுக்கு வியப்பைத் தந்தது. ஏனெனில், அந்நிறுவனம் அதுவரை காபிக் கொட்டைகளை கொள்முதல் மட்டுமே செய்து வந்தது. அதற்கென்று சொந்தமாக காபித் தோட்டம் ஏதுமில்லை.

‘எத்தியோப்பிய காபியின் தரம் கோஸ்டாரிகாவில் கிடைக்குமா?’ எனக் கேள்வி எழுந்தபோது... காபி பயிர் பற்றிய ஆய்வுகளுக்கு மட்டுமே அந்தத் தோட்டத்தைப் பயன்படுத்தப் போவதாக அந்நிறுவனம் தெரிவித்தது. ஆனால், அதற்குப் பின்புலத்தில் இருந்த உண்மையும் சில ஆண்டுகளில் வெளியே வந்துவிட்டது. தற்போது, ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தனது ஆய்வு நிலையத்திலிருந்து ஒன்பது புதிய எத்தியோப்பிய காட்டு காபியின் வீரிய வகை விதைகள் விற்பனை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு எந்த உரிமத்தொகையும் எத்தியோப்பியாவுக்கு அந்நிறுவனம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதுதான் கவனத்துக்குரிய செய்தி.

இதற்கு முன்னரே, எத்தியோப்பியாவில் காட்டு காபி வகைகளைப் பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்த ஆய்வாளர்களின் நடவடிக்கைகளில் எத்தியோப்பிய அரசுக்கு ஐயம் ஏற்பட்டதால்... அவர்கள், அச்செடி வகைகளை வெளியே அனுப்பக் கூடாது என தடை விதித்தது. ஆனாலும் அது காலம் கடந்த செய்கை என்பதால் பலன் இல்லாமல் போய்விட்டது.

நாம், தற்காலிகமாக ஆப்பிரிக்காவை ஒத்தி வைத்துவிட்டு அடுத்த இதழில் இருந்து ஆசிய கண்டத்தை கொஞ்சம் எட்டிப் பார்த்துவிட்டு வரலாம்.

-தடுப்போம்