மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: ‘‘தென்னை மரம் ஏறும் கருவி எங்கு கிடைக்கும்?’’

புறா பாண்டி, படங்கள்: வீ.சிவக்குமார்

‘‘இன்சுலின் செடி பற்றி கேள்விப்பட்டோம். இதன் பலன்கள் பற்றி சொல்லுங்கள்?’’

நீங்கள் கேட்டவை: ‘‘தென்னை மரம் ஏறும் கருவி எங்கு கிடைக்கும்?’’

சரோஜினி, சென்னை.

புதுச்சேரியைச் சேர்ந்த சித்த மருத்துவர் பிரேம்குமார் பதில் சொல்கிறார்.

‘‘இந்தச் செடி வளமான ஈரப்பதம் உள்ள இடங்களில் நன்கு வளரக் கூடியது. இதன் தாயகம் அமெரிக்காவின்  புளோரிடா மாகாணம். இதைப் பற்றி அறிந்த ஐரோப்பியர்கள் தற்போது, இதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகின்றனர். இது மலைக்காடுகளிலும் நீர்நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்துக்கு மேல் வளரக்கூடியது. இதை பல நூறு கன்றுகளாக உருவாக்க, 3 கணுக்களை உடைய முதிர்ந்த குச்சிகளை கரும்பு நடுவது போல் நட்டால் போதும், நன்றாக வளர்ந்து விடும். ஆரம்பத்தில் அடிக்கடி தண்ணீர் விட வேண்டும். இதன் இலைகள் ‘மா’ இலை போன்று இருக்கும். ஆனால், இலைகள் அடுக்காக விசிறி போல் சுற்றிக் கொண்டு மேல் நோக்கி வளரும். சுவை சிறிதளவு புளிப்பு கலந்திருக்கும்.

‘காஸ்டஸ் பிக்டஸ்’ என்ற இந்த இன்சுலின் செடியின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு இன்சுலின் செடியின் இலைகள் சிறந்த மாற்று மருந்து என்று, மருத்துவ விஞ்ஞானிகள் பரிந்துரை செய்கிறார்கள். மேலும், இந்த இலைகளைச் சாப்பிடுவதால் எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை. தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலையில் நன்றாக வளர்கின்றது. இதன் கன்றுகளை தனியார் நர்சரிகளில் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு கன்றின் விலை `50.’’

தொடர்புக்கு, செல்போன்: 90250-90494.

நீங்கள் கேட்டவை: ‘‘தென்னை மரம் ஏறும் கருவி எங்கு கிடைக்கும்?’’

‘‘தென்னை மரம் ஏறும் கருவி எங்கு கிடைக்கும்? இதன் பயன்களை விளக்கமாகச் சொல்லுங்கள்?’’

உ.ஆனந்த், வள்ளியூர்.

சென்னையில் செயல்பட்டு வரும் தென்னை வளர்ச்சி வாரியத்தின் மண்டல இயக்குநர் லுங்கர் ஒபேத் பதில் சொல்கிறார்.

‘‘தென்னை விவசாயிகளுக்கு காய்கள் பறிப்பது முக்கியமான வேலை. தென்னை மரங்கள் உயரமாக வளர்ந்தால், காய் பறிக்க ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால், நஷ்டம் ஏற்படும். சில விவசாயிகள் உயரமான மரங்களை அழித்துவிட்டு, குட்டை ரக கன்றுகளை நடுகிறார்கள். ஆனால், உயரமான மரங்களை அறுத்து எரிய வேண்டாம். இதற்கு எளிய தீர்வு உண்டு.

நீங்கள் கேட்டவை: ‘‘தென்னை மரம் ஏறும் கருவி எங்கு கிடைக்கும்?’’

தென்னை மரத்துடன் இணைத்துக் கொண்டு மரம் ஏறும் கருவியை நாங்கள் அறிமுகப்படுத்திஉள்ளோம். இதன் மூலம், 60 அடி உயரம் கொண்ட மரத்தில்கூட ஐந்து நிமிடத்தில் ஏறிவிட முடியும். பெண்கள்கூட எளிதாக இந்தக் கருவியைப் பயன்படுத்தி மரம் ஏற முடியும். அந்தளவுக்கு மிகவும் பாதுகாப்பானது. இதில் ஏறும்போது பயமும் ஏற்படாது. இதன் விலை `3 ஆயிரம். கேரளாவில் செயல்பட்டு வரும் மண்டல விவசாயத் தொழில் வளர்ச்சி கூட்டுறவு சங்கத்தில் (Regional Agro Industrial Development Co Operative Of Kerala) தென்னை மரம் ஏறும் கருவி விற்பனை செய்கிறார்கள். திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் தென்னை மரம் ஏறும் கருவியின் செயல்பாடுகள் பற்றிய பயிற்சியைக் கொடுத்து வருகிறார்கள். இங்கு பயிற்சி பெற்றவர்கள், தென்னை மரம் ஏறும் கருவி மூலம் தினமும் `500 வரை வருமானம் எடுத்து வருகிறார்கள்.’’

தொடர்புக்கு,
1.Regional Agro Industrial Development Co Operative Of Kerala Ltd,
P.B.NO.407, SPCA Road, Kannur-2
Phone: 0497-2700276/875, 2702445.

2. மண்டல இயக்குநர், தென்னை வளர்ச்சி வாரியம், பிளாட் எண்: 14/20, 25 வது தெரு, தில்லை கங்கா நகர், நங்கநல்லூர், சென்னை - 600061. தொலைபேசி: 044- 22673685.

‘‘நாட்டுக்கோழிகள் வளர்த்து வருகிறோம். வெள்ளைக் கழிச்சல் ஏற்பட்டு சில கோழிகள் இறந்துவிட்டன. இதைக் கட்டுப்படுத்த வழி சொல்லுங்கள்?’’

பி.கந்தசாமி, கொளத்தூர்.

கால்நடை மருத்துவர் ஜெகத்நாராயணன் பதில் சொல்கிறார்.

“வெள்ளைக் கழிச்சல் என்று சொல்லப்படும் இதற்கு ‘ராணிகட் நோய்’ என்றும் இன்னொரு பெயர் உண்டு. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ராணிகட் என்ற இடத்தில் இந்த நோய் முதலில் கண்டறியப்பட்டது. இதனால், அந்த இடத்தின் பெயரும் நோய்க்கு வந்துவிட்டது. இந்த நோய் வந்தால், கோழிகளின் இறப்பு விகிதம் அதிகரிக்கும்.

நீங்கள் கேட்டவை: ‘‘தென்னை மரம் ஏறும் கருவி எங்கு கிடைக்கும்?’’

ஒரு கோழிக்கு நோய் வந்தால், அருகில் உள்ள அனைத்து கோழிகளுக்கும் பரவிடும் அபாயம் உள்ளது. சில பகுதிகளில் இந்த நோய் கண்டவுடன் சின்ன வெங்காயத்தை நறுக்கி, மருந்தாகக் கொடுக்கிறார்கள். சாராயம், பிராந்தி போன்ற மது வகைகளை ஒரு மூடி அளவுக்குக் கொடுக்கிறார்கள். இதுபோன்ற வைத்தியங்களின் மூலம், எப்போதாவது கோழிகள் பிழைத்துக் கொள்ளும். மற்றபடி விடாப்பிடியாக இந்த முறைகளைப் பின்பற்றுவது சரியானதல்ல.

கால்நடை மருத்துவமனைகளில் சனிக்கிழமை தோறும் ‘ராணிகட்’ நோய்க்கு இலவசமாகவே தடுப்பூசி போடப்படுகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பொதுவாக 8 முதல் 9 வார வயதுடைய கோழிகளுக்கு இந்தத் தடுப்பூசியைப் போடவேண்டும். ஆறு மாதத்துக்கு ஒரு தடவை போடுவது நல்லது. இதனால் நோய் எதிர்ப்புத் திறன் கூடும். மேலும் கோழிகளுக்கு மாதம் ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்வது மூலம் வயிற்றைச் சுத்தப்படுத்தலாம். இதன் மூலமும் ‘ராணிகட்’ நோய் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். இதற்கான மருந்தும் கால்நடை மருத்துவமனைகளில் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது.’’

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் அனுப்பலாம்.