
மகசூலைக் கூட்டும் மகத்தான தொடர்!நீ.செல்வம், ஆ.பாலமுருகன்
சத்துக்குறைபாடு... அடுக்கடுக்கான காரணிகள்!
ஆரம்ப காலங்களில் விதைக்கும்போதெல்லாம் விளைச்சலை அள்ளி அள்ளிக் கொடுத்த நிலம், தற்போது கிள்ளிக் கிள்ளிக் கொடுத்து வருகிறது. இதற்கான காரணத்தை அறிந்துகொள்வதும், ‘காலுக்குக் கீழுள்ள தூசு’ என்ற அளவில் இருக்கும் மண்ணைப் பற்றிய நமது எண்ணச் சித்திரத்தை மாற்றி, அதனுள் பொதிந்துள்ள அறிவியலை, ஆச்சரியங்களை, லட்சக்கணக்கான நுண்ணுயிர்களைப் பற்றிய அடிப்படை அறிவை அறிமுகப்படுத்துவதுமே இத்தொடரின் நோக்கம். ‘மண்ணில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா’ என உங்கள் விழிகளை விரிய வைக்கிறது, இந்தத் தொடர்.
ஒவ்வொரு பயிரிலும் சத்துக்குறைபாட்டின் அறிகுறிகள், அதை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் குறித்துப் பார்க்கும் முன்பாக... குறைபாட்டுக்கான காரணிகளைப் பற்றி தெரிந்துகொள்வது அவசியம். முன்பு, மண்ணுக்கு ஏதாவது ஓர் ஊட்டச்சத்து மட்டும் பற்றாக்குறையாக இருக்கும். அதற்கான ஊட்டத்தை மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தோம். உதாரணமாக, தழைச்சத்துப் பற்றாக்குறையாக இருந்தால் அதை மட்டும் கொடுப்போம். ஆனால், தற்போது நுண்ணூட்டச்சத்து உள்ளிட்ட அனைத்துச் சத்துக்களையும் மண்ணுக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்குக் காரணம் குறிப்பிட்ட நிலத்தில், திரும்பத் திரும்ப ஒரே பயிரை சாகுபடி செய்ததுதான்.

ஒரே பயிர் சாகுபடியால் மண்ணின் வளம் குறைகிறது. அதனால், பயிர், பல்வேறு சோதனைகளைச் சந்திக்கிறது. அத்துடன் பூச்சிகள், நோய்கள் வேறு பெரும் பிரச்னையாக இருக்கின்றன. இந்நிலையில் பயிரில் ஏற்பட்ட பாதிப்பு, பூச்சி அல்லது நோயால் ஏற்பட்டதா... இல்லை, சத்துப் பற்றாக்குறையால் ஏற்பட்டதா? என்ற குழப்பம் விவசாயிகளுக்கு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அதைத் தெரிந்து கொள்ளும் விதமாக, சத்துப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் காரணங்களையும் பற்றாக்குறைகளுக்கான அறிகுறிகளையும் பார்ப்போம்.
பயிர்களை பல விஷயங்கள் பாதித்தாலும் அவற்றில் முக்கியமானது, ஊட்டச்சத்துப் பற்றாக்குறைதான். மருத்துவ அறிவியலில் இவ்வளவு வளர்ச்சி அடைந்த நிலையிலும்... மனிதனுக்கான நோய்களுக்கே முழு காரணிகளைக் கண்டறிய முடியவில்லை. இத்தனைக்கும் நம்மால் என்ன பிரச்னை என்று அறிகுறிகளைச் சொல்ல முடியும். ஆனால், இது எதுவும் இல்லாத நிலையில் பயிர்களுக்கு ஏற்படும் நோய்களைத் தெரிந்து கொள்வது கடினம்தான். பயிர்களில் தோன்றும் சில அறிகுறிகள் மூலமாகத்தான் அவற்றைக் கண்டறியமுடியும். பெரும்பாலான நோய்கள், சத்துக்குறைபாட்டால் வருகின்றன எனப் பார்த்தோம்.
கழிவுகள் பயன்பாடு அவசியம்!
அணை, குளங்கள் போன்ற புதிய பாசனத் திட்டங்களால் நிலத்தின் அடிப்பாகத்தில் இருந்த உப்புகள், தண்ணீரில் கரைந்து அது தாழ்வான பகுதிகளில் தேங்கியதால்... நிலம் களர், உவர் தன்மைகளைப் பெற்றுவிட்டன. அதனால், ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு மகசூல் குறைகிறது. பாரம்பர்ய விவசாயத்தில் ஒரு நிலம் எடுத்துக்கொண்ட சத்துக்கள், கழிவுகளாகவும், குப்பைகளாகவும், எருவாகவும் மறுபடியும் நிலத்துக்கே திருப்பிக் கொடுக்கப்பட்டன. மனிதர்களுக்கு தானியங்களும், மாடுகளுக்கு வைக்கோலும் உணவாகி, அதன் கழிவுகள் மறுபடியும் நிலத்தில் கொட்டப்பட்டன.
ஆனால், நவீன விவசாயத்தில், ரசாயனத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, பயிர் கழிவுகள் வீணடிக்கப்படுகின்றன. இதனால், நிலத்தில் இருந்து வெளியேறிய நுண்ணூட்டங்கள், மறுபடியும் நிலத்துக்கு வராமல் போயின. கொடுக்கல் வாங்கல் சரியாக இருந்தால்தானே... வியாபாரம் தொடர்ந்து சரியாக நடக்கும். ஆனால், நாம் கொடுக்க மறந்து, எடுத்துக் கொண்டே இருந்தால் எத்தனை நாளைக்கு சரியாக இருக்கும்?. அதுதான் நிலத்திலும் நடக்கிறது. பயிர் கழிவுகளை நிலத்துக்குக் கொடுக்காமல்... ஆண்டுக்கணக்காக மகசூலை மட்டும் எடுத்துக்கொண்டே இருப்பதால், நுண்ணூட்டங்கள் குறைந்து சத்துக்குறைபாடு ஏற்படுகிறது.

தேவை பயிர் சுழற்சி முறை!
அடுத்த காரணம் பயிர்சுழற்சி முறையைப் பயன்படுத்தாதது. ஒரே பயிரைத் தொடர்ந்து பயிரிடுவதால், நிலத்தில் இருந்து ஒரு சில குறிப்பிட்ட சத்துக்கள் மட்டும் அதிகளவு உறிஞ்சப்பட்டு சத்துப் பற்றாக்குறை ஏற்படுகிறது. உதாரணத்துக்கு ஆண்டுதோறும் கரும்பு மட்டும் பயிர் செய்யக்கூடிய நிலத்தில் சாம்பல் சத்துக் குறைபாடு இருக்கும். எனவே, மாற்றுப்பயிர்களை சுழற்சி முறையில் பயிரிட்டால், நிலத்தில் இருந்து குறிப்பிட்ட சில சத்துக்கள் மட்டும் குறைவது தடுக்கப்படும்.
நிலம் சமப்படுத்துதல், காற்று, மழைநீர் போன்ற காரணங்களால் ஏற்படும் மேல் மண் அரிமானம் போன்றவற்றாலும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படும். உதாரணமாக, பயிர்கள் எளிதில் எடுத்துக்கொள்ளும் விதமாக 15 சென்டி மீட்டர் ஆழத்தில்தான் (மேலாகத்தான்) துத்தநாகச்சத்து இருக்கும். மேல் மண், அரிமானத்தால் போய்விட்டால், அந்த நிலத்தில் துத்தநாகச்சத்துக் குறைபாடு ஏற்படும்.
‘வலுத்தவன் வாழ்வான்’ என்பார்களே... அதே கதைதான், சத்துக்களிலும். மண்ணில் பெரும்பான்மையாக உள்ள சத்துக்கள், மற்ற சத்துக்களை பயிர் எடுக்க விடாமல் தடுத்துவிடும். உதாரணமாக, நிலத்தில் சுண்ணாம்புச்சத்து அதிகமாக இருக்கும்போது... மணிச்சத்து, சாம்பல் சத்து, இரும்புச்சத்து, மாங்கனீசு மற்றும் துத்தநாகச்சத்து போன்றவற்றின் குறைபாடுகளைத் தோற்றுவிக்கும். தொழுவுரம் அதிகம் இடப்பட்ட நிலங்களில் தாமிரச்சத்துக் குறைபாடு தோன்றும்.
சத்துக்களிடையே நட்பும்... பகையும்!
பொட்டாசியம், சோடியம், அமோனியம், கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு ஆகிய சத்துக்கள் எல்லாமே நேர் அயனிச் சத்துக்கள். நைட்ரேட், பாஸ்பேட், சல்பேட், குளோரைட் ஆகியவை எதிர் அயனிகள். ஒரு பயிருக்கு ஒரு சத்து தேவையென்றால், அது இந்த இரண்டு அயனிகளும் சேர்ந்ததாகத்தான் இருக்கும். உதாரணமாக, பொட்டாசியம் தேவையென்றால், அதை பொட்டாசியம் நைட்ரேட், பொட்டாசியம் சல்பேட் என மாற்றித்தான் பயிர் எடுத்துக்கொள்ளும்.
வேர்கள் சத்துக்களை உறிஞ்சும்போது நேர் அயனிகளுக்கு இடையேயும் எதிர் அயனிகளுக்கிடையேயும் போட்டி இருக்கும். உதாரணமாக, பொட்டாசியம், சோடியம் ஆகிய இரண்டும் நேர் அயனிகள்தான். ஆனால், இவை இரண்டில் யார் முதலில் வேர் வழியாக உள்ளே போவது என்பதில் இரண்டுக்கும் கடுமையான போட்டியே நடக்கும்.
நம் கண்ணில் தெரிவது மண்ணும், பயிரும் மட்டும்தான். ஆனால், அதற்குள் ஒர் உலக யுத்தமே நடந்துகொண்டிருக்கிறது. அவற்றையும், சத்துக்குறைபாடுகளுக்கான அறிகுறிகளையும் அடுத்தடுத்த இதழ்களில் பார்க்கலாம்.
-வாசம் வீசும்
தொகுப்பு: ஆர்.குமரேசன்
சர்வதேச மண் தினம்!
அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் மண்ணையும் சேர்க்கும் நிலை ஏற்பட்டிருப்பதைக் கவலையோடு பார்க்கும் ஐ.நா.சபை, இந்த ஆண்டை (2015) சர்வதேச மண் ஆண்டாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து தேசிய மண்வள அட்டை இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.
மக்களுக்கும், அரசுக்கும் இடையே மண்ணைப் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துதல்; உணவுப் பாதுகாப்பு, பருவநிலை மாற்றத்தை எதிர்த்து நிற்பது மண்தான் என்பதை உணர்வுபூர்வமாக உணர்த்துவது; உலக நாடுகளுக்கு இடையில் மண்ணைப் பாதுக்காப்பதற்கான சட்டங்களை உருவாக்குதல்; மண்ணைப் பாதுகாக்க நிலையான முதலீட்டை ஏற்படுத்துதல்; புதுவிதமான வழிமுறைகளை முன்னெடுத்து வளமான மண்ணை நலமான மண்ணாக மாற்றுதல் ஆகிய ஐந்தும் சர்வதேச மண் ஆண்டின் முக்கிய குறிக்கோள்கள்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5-ம் தேதி சர்வதேச மண் தினமாகக் கொண்டாடப்படுகிறது.