மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை

'மடிநோயை எப்படி குணப்படுத்துவது?''

புறா பாண்டி
படங்கள்: கே. ராஜசேகரன், வீ. நாகமணி, எஸ். தேவராஜன்

 ''எனது தோட்டத்தில் நடவு செய்திருக்கும் வீரிய ரகத் தென்னை மரங்களில் குருத்தழுகல் நோய் அதிகமாகத் தாக்குகிறது. இதை இயற்கை முறையில் எப்படி கட்டுப்படுத்துவது?'

கே. கந்தசாமி, திண்டிவனம்.

இயற்கை விவசாய வல்லுநர் ஏங்கல்ஸ் ராஜா பதில்  சொல்கிறார். ''குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் வேண்டும் என்றுதான் வீரிய ரகங்களைத் தேர்வு செய்கிறோம். ஆனால், அவற்றைத்தான் அதிகளவில் நோய்கள் தாக்குகின்றன என்பதை மறந்து விடுகிறோம். பெரும்பாலும் வீரிய ரகங்களின் தாய், தந்தைத் தேர்வில் கோளாறு இருப்பதுதான் அதிகளவிலான நோய்த் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கிறது.

நீங்கள் கேட்டவை
##~##

நோய் வந்த பிறகு மருந்து கொடுப்பதைக் காட்டிலும் வருமுன்னே காப்பதுதான் சிறந்தது. வீரிய ரக தென்னங்கன்றுகளை நாற்றுப் பருவத்திலேயே கவனமாக வளர்க்க வேண்டும். கன்றுகள் திடமான வேர்களை விடும் வகையில் ஒவ்வொரு நாற்றுக்கும் ஒரு அடிக்கு மேல் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

கன்றுகள் வளர்ந்த பிறகு, அவற்றை எடுத்து நடவு செய்யும்போது, ஊடுபயிராக வாழையையும் சேர்த்து நடவு செய்ய வேண்டும். இதனால் நோய்கள் தாக்குவது குறையும். அதேபோல சோற்றுக்கற்றாழை, தாழை... போன்ற செடிகளையும் நடவு செய்யலாம். இவை மருத்துவ குணத்தைக் கொண்டிருப்பதால், குருத்தழுகல், வேர்புழுத் தாக்குதல் போன்றவை தாக்காது.

குருத்தழுகல் நோய் வந்துவிட்டால், அதைத் தடுப்பதற்கும் இயற்கையில் வைத்தியம் இருக்கிறது. 5 கிலோ ஆட்டு எருவைத் தூளாக்கி, ஒரு லிட்டர் பஞ்சகவ்யாவில் கலந்து மரத்துக்கு இட்டு பாசனம் செய்ய வேண்டும். இது ஒரு மரத்துக்கான அளவு. இதை கொடுக்கும்போது உடனே மரம் பசுமைக் கட்டி வளர ஆரம்பிக்கும். மரம் பலமாகி விட்டால் நோய்கள் தாக்காது.

தென்னையைப் பொறுத்தவரை பாரம்பரிய ரகக் கன்றுகளை நடவு செய்வதுதான் நல்லது. என்பதை எப்போதும் மனதில் கொள்ளவும்.'

தொடர்புக்கு, அலைபேசி (செல்போன்): 94421-21473.

'கறவை மாடுகளுக்கு அடிக்கடி மடிநோய் வருகிறது. ஆங்கில மருந்துகள் நிறைய கொடுத்தும் குணப்படுத்த முடியவில்லை. இப்பிரச்னைக்கு பாரம்பரிய மருத்துவம் உண்டா?''

எஸ். செல்வராசன், வெங்கிகால்.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி, ஜெயம் பிராணிகள் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், கௌரவப் பிராணி நல அலுவலருமான கே.வி. கோவிந்தராஜ் பதில் சொல்கிறார்.

''பொதுவாக மடிநோய் பிரச்னை கலப்பின மாடுகளுக்குத்தான் அதிகளவில் வருகிறது. இவற்றுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதுதான் காரணம். இந்நோய் தாக்கினால்... திடீரென பால் குறையும். சமயங்களில் பாலே வராமல் போய் விடும். மாடு சரியாக தீனி எடுக்காது. மாட்டுக்குக் காய்ச்சல் அடிக்கும். மடிப்பகுதி வீங்கி சூடாக இருக்கும்.

நீங்கள் கேட்டவை

மடியைத் தொட்டால், வலி தாங்க முடியாமல் உதைக்கும். பால் நீர்த்துப் போய் ரத்தம் கலந்து வெளி வரும். இவையெல்லாம் மடிநோய்க்கான அறிகுறிகள்.

நோய் ஆரம்ப கட்டத்தில் உள்ள மாட்டுக்கு தினமும் இரண்டுவேளையும் கால் கிலோ அளவில் கொத்தமல்லி தழையைக் கொடுத்தால் சரியாகி விடும். நோய் கொஞ்சம் முற்றிய மாடுகளுக்கு, சோற்றுக்கற்றாழையின் சோறு-200 கிராம், மஞ்சள் தூள்-50 கிராம், சுண்ணாம்பு-10 கிராம் ஆகியவற்றை அரைத்து மடியில் தடவ வேண்டும். தடவுவதற்கு முன்பு பாலை நன்றாக கறந்துவிட்டு, வேப்பிலை போட்டுக் கொதிக்க வைத்த வெந்நீரால் மடியைக் கழுவ வேண்டும். மூன்று நாட்களுக்கு தினமும் இரண்டுவேளை இக்கலவையைத் தடவி வந்தால், நோய் குணமாகி விடும். இந்த வைத்திய முறையை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமும் ஏற்று பின்பற்றவும் ஆரம்பித்துள்ளது.

பொதுவாக, பால் கறக்கும் முன்பு கைகளையும் மடிக்காம்புகளையும் வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். சுத்தமாக இருக்கும்போது நோய்த் தாக்குதல் குறைகிறது.''

தொடர்புக்கு, அலைபேசி (செல்போன்): 94425-41504.

'ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண்ணை விவசாய நிலத்துக்காக எடுக்க, யாரிடம் அனுமதி பெற வேண்டும்?'

இரா. செல்லையன், பின்னையூர்.

தானம் தொண்டு நிறுவனத்தின், வயலகம் கண்மாய் அறக்கட்டளையின் முதன்மை நிர்வாகி, ஏ. குருநாதன் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை

''முன்பெல்லாம் ஏரி, குளம், குட்டை போன்றவை அந்தந்த கிராமங்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால், ஆண்டுக்கு ஒரு முறை ஊரிலுள்ள அனைவரும் வண்டல் மண்ணை எடுத்துக் கொள்வது வழக்கமாக இருந்தது. அதனால் நீர்நிலைகளும் தூர்ந்துப் போகாமல் இருந்தன. இப்போது, ஏரி, குளங்கள் போன்றவை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அனுமதி பெற்றுதான் எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கொடுக்க வேண்டும். விவசாயத் தேவைக்காகத்தான் என்பதை உறுதி செய்து கொண்டு அவர் அனுமதி வழங்குவார். இதற்குக் கட்டணம் கிடையாது. ஒரு அடி ஆழம் வரைதான் மண் எடுக்க வேண்டும்.

தற்போது நீர்நிலைகளில் ரசாயனக் கழிவுகளும் அதிக ளவில் கலப்பதால், மண் கெட்டுப்போக அதிகளவில் வாய்ப்பிருக்கிறது. அதனால் மண் எடுக்கும் முன்பு, பரிசோதனை செய்து கொள்வது நல்லது. வண்டல் மண் எடுக்க அனுமதி மறுத்தால், எங்கள் அமைப்பைத் தொடர்பு கொள்ளவும்''

தொடர்புக்கு, தொலைபேசி: 0452-2601673.

'காளான் விதையை உற்பத்தி செய்ய எளிய வழிகள் உள்ளனவா?'

எஸ். பால்ராஜ், பொன்மலைப்பட்டி.

சென்னை, சோழிங்கநல்லூரைச் சேர்ந்த முன்னோடி காளான் பண்ணையாளரும், பயிற்றுநருமான கே.பாண்டியன் பதில் சொல்கிறார்.

'காளான் விதை உற்பத்தி செய்வது எளியத் தொழில்நுட்பம்தான். ஆனால், கொஞ்சம் கவனமாகச் செய்ய வேண்டும். இதற்கான மூல விதைகள் காளான் வளர்ப்பவர்களிடமும், பல்கலைக்கழகத்திடமும் கிடைக்கும். அதை வாங்கி வந்து, அதற்கென இருக்கும் பாலிதீன் பையில் நெல் உமி, சோளம், கோதுமை போன்ற ஏதாவது ஒன்றை ஊடகமாக பயன்படுத்தி, விதைகளை உற்பத்தி செய்யலாம்.

நீங்கள் கேட்டவை

தினமும் 25 கிலோவுக்கு மேல் காளான் உற்பத்தி செய்யும் பண்ணையாளர்கள்தான் விதைக்காளான் உற்பத்தியில் இறங்க வேண்டும். அப்போதுதான் லாபகரமாக இருக்கும். காளான் விதை உற்பத்தி செய்யும் அறை மிகவும் தூய்மையாக இருக்கவேண்டும். தட்ப வெப்ப நிலை சீராக இருக்க வேண்டும்.

இப்போது விதைக்காளான் உற்பத்திக்காக 'லேமினேர் ஃப்ளோ கேபினெட்’ என்கிற பெயரில் அறை வடிவ அமைப்பு 35 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தி விதை உற்பத்தி செய்யலாம். இதுபற்றி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் பயிற்சி கொடுக்கப்படுகிறது. பயிற்சிக்குப் பிறகு உற்பத்தியில் இறங்குவது நல்லது.'

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், காளான் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை-3. தொலைபேசி: 0422-6611336.

''பால் கறக்கும் கருவி தேவை. அவற்றை இயக்க எங்கு பயிற்சிக் கொடுக்கிறார்கள்?'

எஸ். தமிழ், நாட்டறாம்பள்ளி.

நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில், பால் கறக்கும் கருவியைப் பயன்படுத்த பயிற்சி கொடுக்கிறார்கள். தரமானக் கருவிகள் வாங்கவும் வழிகாட்டுகிறார்கள்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0428-6266345.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை

'நீங்கள் கேட்டவை' பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்  PVQA (space)- உங்கள் கேள்வி (space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.