புறா பாண்டி, படங்கள்: வீ.சிவக்குமார், த.ஸ்ரீநிவாசன்
“எலுமிச்சைப்பழ-முட்டைக் கரைசலை எப்படித் தயாரிப்பது? காய்கறி மற்றும் கீரைச்

செடிகளுக்குப் பயன்படுத்தலாமா?”
ஆர்.கவிதா, திருச்சி.
முன்னோடி விவசாயி பணிக்கம்பட்டி கோபாலகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.
“எலுமிச்சைப்பழ-முட்டைக் கரைசலை கீரை, காய்கறிகளுக்கு மட்டுமல்ல... அனைத்துவிதமான பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இதைத் தயாரிக்க 25 எலுமிச்சைப்பழங்கள், 10 முட்டைகள், 250 கிராம் வெல்லம் அல்லது மொலாசஸ் (கரும்பு ஆலைக் கழிவு) ஆகியவை தேவை. முட்டைகளைப் பொறுத்தவரையில், கோழி, வாத்து என எல்லா பறவைகளின் முட்டைகளையும் உபயோகப்படுத்தலாம். அடைவைத்து குஞ்சு பொரிக்காத கூமுட்டைகளையும் பயன்படுத்தலாம். ஆனால், முட்டை ஓடு உடையாமல் முழுமையாக இருக்க வேண்டும். குறைவான விலையில் கிடைக்கும் கழிவு வெல்லத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் வாளி அல்லது டிரம் எடுத்துக்கொண்டு (உலோக வாளியைப் பயன்படுத்தக் கூடாது), அதனுள் முட்டைகளை உடையாமல் வைத்து, அவை மூழ்கும் அளவுக்கு எலுமிச்சைப் பழங்களின் சாற்றைப் பிழிந்து காற்றுப் புகாமல் இறுக்கி மூடி வைக்க வேண்டும்.

10 நாட்கள் ஆனபிறகு எலுமிச்சைச்சாற்றில் முட்டை ஓடுகள் கரைந்து, முட்டைகள் ரப்பர் பந்து போன்ற நிலையில் இருக்கும். அவற்றை நன்கு பிசைந்து கூழ் போல் ஆக்கி, அதனுடன் வெல்லம் அல்லது மொலாசஸைச் சேர்த்து, மீண்டும் காற்றுப் புகாமல் மூடி வைக்க வேண்டும். அடுத்த இருபது நாட்களில் பயன்பாட்டுக்கு ஏற்ற நிலையில் எலுமிச்சை-முட்டைக் கரைசல் தயாராக இருக்கும். இதை பாட்டில்களில் அடைத்து மூன்று மாத காலம் வரை வைத்திருந்தும் பயன்படுத்தலாம். பாட்டில் மூடிகளில் சிறிய துளை போட வேண்டியது அவசியம். அப்போதுதான் இதில் இருந்து வாயு எளிதாக வெளியேறும். பத்து லிட்டர் தண்ணீருக்கு, 150 மில்லி கரைசல் என்கிற விகிதத்தில் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம்.”
தொடர்புக்கு, செல்போன்: 94431-48224.
‘‘இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். விளைபொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்புகிறேன்.

இதற்கு உதவி செய்யும் அமைப்பு பற்றி சொல்லுங்கள்?’’
எஸ்.ஏ.வேதநாயகம், பாளையங்கோட்டை.
சென்னையில் செயல்பட்டு வரும். இந்திய ஏற்றுமதி அமைப்புகள் சம்மேளனத்தின் (FIEO) தென்மண்டல இயக்குநர், உன்னிகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.
‘‘வெளிநாடுகளில் இந்திய உணவுப் பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், நம்மில் பலர் ஏற்றுமதிக்குத் தகுதியான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதில்தான் கவனக்குறைவாகச் செயல்பட்டு வருகிறோம். இதனால் இங்கு உற்பத்தியாகும் உணவுப் பொருட்கள் மீது வெளிநாட்டவர்கள் வைத்துள்ள மதிப்பு குறைகிறது. உதாரணத்துக்கு, இந்தியாவில் முக்கியமாகத் தமிழகத்தில் விளைவிக்கப்படும் வாழைப்பழங்களுக்கு மேலை நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விளைவிக்கிறோமா என்றால், இல்லை. இன்றைக்கு பல விவசாயிகள் செய்யும் தவறு, ரசாயனங்களைப் பயன்படுத்தி விளைவிப்பதுதான். தவிர, அதை பேக்கிங் செய்யும்போது ஏற்படும் சேதத்தினால் லாபத்தை இழக்கின்றனர். இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க, எங்கள் அமைப்பு மூலம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.
முதன்முதலாக ஏற்றுமதித் தொழிலில் இறங்குபவர்கள், இந்தியாவுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு நாட்டுக்கு, அங்கு அதிக தேவை உள்ள ஒரு பொருளைத் தேர்வு செய்து, அனுப்பலாம். சின்னச் சின்ன ஆர்டர்கள் எடுத்து அனுப்பி, நன்கு அனுபவப்பட்ட பின் பெரிய ஆர்டராக எடுத்தால், இந்தத் தொழிலில் நீண்டகாலத்துக்கு நிலைக்க முடியும். ஏற்றுமதியை ஆரம்பிப்பவர்கள் ஆரம்பத்தில் அதற்கான உரிமம் பெறுவது பற்றி யோசிக்க வேண்டாம். முதலில், ஐ.இ.சி எண்ணை [Import-Export Code (IEC) Number] வாங்க வேண்டும். இதற்கு http://zjdgft.tn.nic.in என்கிற இணையதள முகவரிக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கான செலவு வெறும் 500 ரூபாய் மட்டும்தான்.

இறக்குமதி ஏற்றுமதிக்கான எண்ணைப் பெற்ற பிறகே, ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி செய்ய தேர்வு செய்திருக்கும் பொருட்கள் அடிப்படையில், அந்தந்த புரமோஷனல் கவுன்சிலிடம் உரிமம் பெற வேண்டும். பல பொருட்களை ஏற்றுமதிக்காகத் தேர்வு செய்கிறீர்கள் என்றால், எஃப்.ஐ.இ.ஓ-விடம் உரிமம் பெற்றுக்கொள்ளலாம். இன்றைய நிலையில், நம்பிக்கையான இறக்குமதியாளர்களின் பட்டியலை எங்கு சென்றும் பெறமுடியாது. காரணம், பெரும்பாலான இறக்குமதியாளர்கள் அவர்களாகவே தங்களுக்குத் தேவையான பொருட்களைத் தேடி அதை பெற்றுக் கொள்கிறார்கள். குறிப்பிட்ட நாடுகள் மற்றும் குறிப்பிட்ட பொருட்களுக்கான இறக்குமதியாளர்கள் விவரங்கள், அவர்களின் தொடர்புகளை இன்று பல இணையதளங்கள் வழங்கி வருகின்றன. இருப்பினும், இதிலுள்ள தகவல்களை முழுமையாக நம்பாமல், தீர விசாரித்துத் தெரிந்து கொள்வது நல்லது.
அடுத்து, www.fieo.org என்கிற எங்களின் இணையதளத்திலும் நாடுகள் வாரியாக, பொருட்கள்வாரியாக இறக்குமதியாளர்களின் விவரங்களைக் கொடுத்திருக்கிறோம்.
விகடன் குழுமத்திலிருந்து வெளியாகும், ‘நாணயம் விகடன்’ இதழுடன் இணைந்து ஏற்றுமதி குறித்து தொடர்ந்து பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறோம். அதில் கலந்து கொண்டும் பயன்பெறலாம்.
தொடர்புக்கு, இந்திய ஏற்றுமதி அமைப்புகள் சம்மேளனம் (FIEO), எண்: 706, 7-வது மாடி, ஸ்பென்ஸர் பிளாசா, 769, அண்ணா சாலை, சென்னை-600002. தொலைபேசி: 044-28497744/55/66.’’
‘‘பந்தலில் காய்கறிகள் சாகுபடி செய்து வருகிறோம். காற்று வீசுவதால் செடிகள் ஒடிந்து விழுகின்றன. இதைத் தடுக்க முடியுமா?’’
சி.கணபதி, உடுமலைப்பேட்டை.
திண்டுக்கல் மாவட்டம், மெய்ஞானபுரத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி சி.கலைச்செல்வன் பதில்

சொல்கிறார்.
‘‘பந்தலில் கொடிவகைப் பயிர்களை சாகுபடி செய்யும்போது, கல்தூணில் இருந்து மூன்று அடிகள் தள்ளித்தான் விதை ஊன்றுவார்கள். இதனால், அந்த இடம் காலியாகத்தான் இருக்கும். பந்தல் உள்ளே கொடிவகைப் பயிர்கள் அவரை, பாகல், புடலை, பீர்க்கு, தக்காளி, கோவைக்காய், சுரைக்காய், இதுபோன்ற பயிர்கள் சாகுபடி செய்யும்போது அதிகமாக காற்று அடித்தால், பந்தலே சாயக்கூடிய நிலை ஏற்படும்.
மேலும், பூக்களில் உள்ள மகரந்தங்கள் அடித்துச்செல்லப்படும். அதிகமாக காற்று அடித்தால் தண்ணீர் ஆவியாகி விடும். உடனே, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால், கொடிகள் வாடி வதங்கிக் காணப்படும். பூ, பிஞ்சுகள் பிடிப்பது குறையும்.
இவற்றைத் தடுக்க, காலியாக உள்ள அந்த இடத்தில் ஒரு அடிக்கு ஒன்று வீதம் அகத்தி விதையை நடவு செய்தால், மூன்று மாதத்தில் மரம் நன்றாக வளர்ந்துவிடும். சூரிய வெப்பமும் அதிகம் தாக்காது, பூச்சி, நோய்த்தாக்குதலும் குறையும். அடுத்த வயலிலிருந்து நம்முடைய வயலுக்கு பூச்சிகள் வராது. அகத்திச் செடிகள் காற்றில் உள்ள, தழைச்சத்துக்களை இழுத்து மண்ணையும் வளப்படுத்தும். அகத்திக் கீரையை ஆடுகள் நன்றாக தின்னும்.
ஒரு ஏக்கர் நிலத்தைச் சுற்றியும் அகத்தி நடவு செய்தால், நான்கு ஆடுகளுக்கான தீவனம் அதில் கிடைத்துவிடும். கால்நடைகள் இல்லாவிட்டால், கீரையாக விற்றால்கூட நல்ல லாபம் கிடைக்கும். என்னுடைய வயலில், காற்றுத் தடுப்புக்கு இந்த நுட்பத்தைத்தான் பயன்படுத்தி வருகிறேன்.’’
தொடர்புக்கு, செல்போன்: 97877-87432.
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் அனுப்பலாம்.