மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: பொங்கிப் பாயும் பெருவெள்ளம்... சிலப்பதிகாரம் சொல்லும் தீர்வு!

மாத்தி யோசி, ஓவியம்: ஹரன்

‘அறையும் பொறையும் மணந்த தலைய
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ’
னு புறநானூற்றுல பாடி வெச்சிருக்காங்க.

இந்தப் பாடலோட அர்த்தம், ஏரிக்கரையோட நீளம் குறைவாகவும், எட்டாம் நாள் வானத்தில் தோணுற நிலா வடிவுலயும் ஏரிக்கரையோட அமைப்பு இருக்கணும்கிறதுதான். எட்டாம் நாள், ஏறத்தாழ அரைக்கோள வடிவத்துல நிலா இருக்கும். இந்த வடிவத்துல ஏரி இருந்தா, குறைஞ்ச இடத்துல நிறைய நீரைத் தேக்கி வெச்சு பயன்படுத்த முடியும். கரையும் உடையாதுங்கிற பெரிய தொழில்நுட்பத்தை, இப்படி அற்புதமா சொல்லி வெச்சிருக்காங்க.

மண்புழு மன்னாரு: பொங்கிப் பாயும் பெருவெள்ளம்... சிலப்பதிகாரம் சொல்லும் தீர்வு!

அந்தக் காலத்துல ரெண்டு விஷயத்தை அடக்கி ஆண்டவங்க மட்டுமே, நல்லாட்சி செய்திருக்காங்க. முதலாவது, எதிரியை அடக்குறது. ரெண்டாவது,

மழை நீரை ஏரியில அடக்கி வெக்கிறது.
‘இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப
மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்’
னு சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் பாடி வெச்சிருக்காரு.

முறையாகப் பெய்யும் மழைநீரை ஏரி, குளங்களில் சேமித்து அவற்றைத் தக்கமுறையில் பயன்படுத்தி, நாட்டை வளம்பெறச் செய்யும் மன்னன்ங்கிறதுதான், இந்தப் பாட்டோட அர்த்தம். நீர்நிலைகளைக் காக்க வேண்டியது அரசர்களோட முக்கிய பணி.

ஆயிரம் வருடத்துக்கு முன்னாடி, சோழ மன்னர்கள் வெட்டிய ரெண்டு ஏரிங்க இன்னும் பயன்பாட்டுல இருக்கு. சோழர்கள் புண்ணியத்துல வீராணம், மதுராந்தகம் இந்த ரெண்டு ஏரியும் ஆயிரம் வருஷமா நமக்கு, நல்ல சோத்தையும், தண்ணியையும் கொடுத்துக்கிட்டு இருக்கு. ஏரி வெட்டிய சோழர்கள் கதையைக் கொஞ்சம் தெரிஞ்சிக்குவோம்.

தஞ்சாவூரை ஆண்ட பராந்தகச் சோழனோட காலத்துல, வடக்குல ராஷ்டிரகூடர்களோட எல்லை மீறல் இருந்துச்சு. இதனால, தன்னோட முதல் மகனும், இளவரசனுமான ராஜ ஆதித்தனை பெரிய படையோட அனுப்பி வெச்சான். இந்தப் படை, சோழ நாட்டோட வடமேற்குல படை வீடு அமைச்சு தங்கினாங்க. அதாவது சிதம்பரத்தின் வடமேற்குப் பகுதி அது. அந்தப் பகுதியை சோழப் பேரரசுக்கு அடங்கிய சிற்றரசர்களான சம்புவராயர்கள் ஆண்டு வந்தாங்க. படை வீரருங்க பல மாசம், தங்கி இருந்தாங்க. ஆனா, எதிரிங்க வரவேயில்லை.

சம்புவராயர்களுக்கு நீண்ட காலமாவே ஒரு குறை. அதாவது, ‘வறட்சியான தங்கள் பகுதியில நீர்வளத்தை உண்டாக்கணும்’னு அவங்க வெச்ச கோரிக்கை ரொம்ப நாளாவே நிறைவேறலைங்கிறதுதான். ஆயிரக்கணக்கான வீரர்கள் வேலையில்லாம, சும்மா இருக்கிறத பார்த்த ராஜ ஆதித்தனுக்கு, அந்த நேரத்துல இந்த விஷயம் மின்னலடிச்சுது. இந்தப் படை வீரர்களை வெச்சு, அந்தப் பகுதி மக்களோட நீண்ட நாள் கோரிக்கையைச் செயல்படுத்த திட்டம் போட்டாரு. அந்தக் காலகட்டத்துல கொள்ளிடம்ங்கிற பெரு நதியில இருந்து, வெள்ளநீர் ஓடி, வீணா கடல்ல கலந்துகிட்டிருந்திருக்கு. அந்த வெள்ள நீரைத் தடுத்து, அந்தப் பகுதிக்குப் பயன்படுத்த ஏரி அமைக்க முடிவு செய்தான், இளவரசன். இந்த ஏரியை வெட்ட, தன்னோட படை வீரர்களுக்கு உத்தரவு போட்டான்.

கடகடனு வேலை நடந்து கடல் மாதிரி தண்ணி நின்னிருக்கு அந்த ஏரியில. அந்தக் காலத்தில இருபது கிலோ மீட்டர் நீளமும் ஐந்து கிலோ மீட்டர் அகலமும் கொண்டதா, இருந்திருக்கு இந்த ஏரி. இதுக்கு தன்னோட அப்பா, பராந்தகச் சோழனோட புனைப்பெயரான ‘வீர நாராயணன்’ங்கிற பேரை வெச்சான். பேரு வைச்சா போதுமா, மக்கள் நடமாட்டம், அங்கு, அதிகம் இருக்கிறதுக்காக  கரையில் வீரநாராயண பெருமாளுக்கு கோயிலும் கட்டினான். அந்தப் பகுதிக்குத்தான் இப்போ, காட்டுமன்னார்கோயில். ராஜ ஆதித்தன் வெட்டுன ‘வீர நாராயணன்’ ஏரிதான், ‘வீராணம்’னு பேரும், பரப்பளவும், ஆழமும் சுருங்கிக் கிடக்குது இப்போ.

மண்புழு மன்னாரு: பொங்கிப் பாயும் பெருவெள்ளம்... சிலப்பதிகாரம் சொல்லும் தீர்வு!

நம்ம நாட்டோட மழை வளத்தை கணக்குப் போட்டுத்தான், ஏரிகளை வெட்டி, அதை தெய்வமா பாதுகாத்தாங்க. இன்னைக்கும் ஏரிக்காத்த ராமர், ஏரிக்கரை அய்யனார், ஏரிக்காத்த மாரியம்மன்னு பல கோயில்களைக் கட்டி கும்பிட்டுக்கிட்டிருக்காங்க.

தமிழ்நாடு முழுக்க ஆயிரம் வருடத்துக்கு மேல பயன்பாட்டுல உள்ள, ஆயிரக்கணக்கான ஏரிங்க இருக்கு. அந்த ஏரிகள் இல்லாம போயிருந்தா, மூணு மாசம் பெய்ய வேண்டிய மழை, மூணு நாளையில் பெய்யும்போது, இப்ப நடந்த மாதிரி ஒட்டுமொத்த தமிழ்நாடும் வெள்ளத்துல மூழ்கத்தான் செய்யும். பழையபடி மழைக்குப் பின்னாடி, தமிழ்நாடு பாலைவனமா மாறத்தான் செய்யும்.

ஆனா, ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி சொன்ன, இந்த நுட்பங்களை மறந்தது மட்டுமில்லாம, ஏரிகளை எல்லாம் கண்டபடி ஆக்கிரமிச்சு, அநியாயம் பண்ணிட்டோம். இதுக்கு அரசாங்கம், அதிகாரிகள், அரசியல்வாதிகள் எல்லாம்தான் முக்கியமான காரணம். இதோட விளைவுகளைத்தான்... இப்போ சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர்னு வடமாவட்டங்கள் கொடும் வெள்ளமா அனுபவிச்சுக்கிட்டிருக்கு.