மற்ற எபிசோடுகள்
Published:Updated:

'ஒரு நாள் விவசாயி!'

பண்ணையை நோக்கி பயனுள்ள பயணம்ஜி.பழனிச்சாமி, படங்கள்: பா.பிரபாகரன்

ஈரியோபைட்டை விரட்டும் இயற்கை விவசாயம்...
20 ஆண்டுகால பிரச்னைக்கு எளிய தீர்வு!

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது, ‘பசுமை விகடன்’. ‘ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை, அவர்களின் மனதில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள நரிக்கல்பதி கிராமத்தில் உள்ள முன்னோடி விவசாயி மது.ராமகிருஷ்ணனின் பண்ணையில் ‘ஒரு நாள் விவசாயிகள்’ பயிற்சி நடைபெற்றது குறித்து, கடந்த இதழில் எழுதியிருந்தோம். அதன் தொடர்ச்சி இங்கே...

அறுசுவை சிறுதானிய உணவை ருசித்துச் சாப்பிட்ட கையோடு, குளுகுளு நிழல் பூங்காவில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தனர், ஒரு நாள் விவசாயிகள் அனைவரும்.

'ஒரு நாள் விவசாயி!'

இரவில் விலங்குகள்தான் முதலாளிகள்!

‘‘ஓய்வு எடுத்தது போதும், இன்னும் அரைநாள் பயிற்சி அப்படியே இருக்கு... சட்டுபுட்டுனு எழுந்து வாங்க. சாயங்காலம் 6 மணிக்குள் பயிற்சியை முடிச்சிட்டு உங்கள பத்திரமா அனுப்பி வைக்கணும். 6 மணிக்கு மேல இங்க யானைகள் கூட்டமா வந்துடும்.

விடியற்காலையிலதான் திரும்பிப் போகும். இந்தப் பண்ணைக்கு பகல்ல மட்டும்தான் நான் முதலாளி. இரவு முழுதும் இங்க சுத்துற விலங்குகள்தான் முதலாளிங்க. என்கிட்ட பயிற்சி எடுக்க நினைக்கிறவங்க இப்ப வாங்க, யானைங்ககிட்ட பயிற்சி எடுக்க நினைக்கிறவங்க பொறுமையா உக்காந்துக்கிட்டிருங்க” என மது.ராமகிருஷ்ணன் சொல்லவும், கூட்டத்தில் ஒருவர், ‘அய்யோ’ என்று அலற, அனைவரும் எழுந்து அடுத்த பயிற்சிக்கு ஆயத்தமாயினர்.

அவர்களை, தென்னந்தோப்புக்குள் அழைத்துச் சென்றார், ராமகிருஷணன். அங்கு மலைபோல் தேங்காய்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை டிராக்டரில் ஏற்றிக் கொண்டிருந்தனர், தொழிலாளிகள்.

“அடுத்து நான் உங்களுக்குக் கொடுக்கும் பயிற்சி, களப்பயிற்சி அல்ல... உடற்பயிற்சி. இப்ப நீங்க எல்லாரும் எங்க ஆட்களோடு சேர்ந்து தேங்காய் பாரம் ஏத்தணும்” என்று ராமகிருஷ்ணன் சொல்ல... ‘‘ஓ...இவ்வளவுதானா, நாங்க ரெடி” என அனைவரும் களமிறங்கினர். கட்டட வேலையில் செங்கற்களை கை மாற்றுவது போல ஒரு நாள் விவசாயிகள் அனைவரும் வரிசையாக நின்று தேங்காய்களை கை மாற்றி வீச... அதை டிராக்டரில் நின்று கொண்டிருந்த நந்தக்குமார், லாகவமாகப் பிடித்து அடுக்கினார்.

தென்னையும் பாக்கும் நட்பு!

‘‘இங்க மட்டும் எப்படீங்க எல்லா தேங்காய்களும் ஒரே அளவில இருக்கு?” என்று ஆச்சர்யமாகக் கேட்டார், சுப்ரபாரதி மணியன்.

‘‘முக்கியமான கேள்வி” என்று பேச ஆரம்பித்த ராமகிருஷ்ணன், “இந்த மகிழ்வனத்தில் மொத்தம் 1,650

'ஒரு நாள் விவசாயி!'

தென்னை மரங்கள் காய்ப்பில் இருக்கு. அதுல ஊடுபயிரா காய்ச்சுக்கிட்டிருக்கிற 800 பாக்கு மரங்கள் இருக்கு. தென்னையும் பாக்கும் நட்புப்பயிர்னு சொல்லுவாங்க. இந்த ரெண்டும் கலந்திருக்கிற பண்ணை எப்பவுமே செழிப்பா இருக்கும். தென்னையில ஈரியோபைட் என்கிற ஒரு வகை சிவப்புச் சிலந்தி தாக்கி,20 வருஷங்களாக தென்னை விவசாயிகளை ஆட்டிப்படைக்குது. இந்த சிலந்தி தாக்கினா... தேங்காய்களோட மேற்பகுதி சொறி பிடித்தது போல மாறிடும். வளர்ச்சி தடைபட்டு காய்கள் சிறுத்துப் போயிடும். இந்தப் பூச்சியைக் கட்டுப்படுத்த வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தொடர் ஆராய்ச்சிகள் பண்ணிக்கிட்டிருக்காங்க. இப்போ, தானாவே இந்தப் பூச்சிகள் கொஞ்சம் குறைஞ்சிருக்கு. ஆனா, முழுமையா கட்டுப்படலை. தொடர்ந்து, இயற்கை இடுபொருட்களை மட்டும் பயன்படுத்துற பண்ணைகள்ல 90 சதவிகிதம் அளவுக்கு இந்தப் பூச்சித்தாக்குதல் குறைஞ்சிருக்கு. இங்க, தென்னை மரங்களுக்கு ஜீவாமிர்தம், அமுதக்கரைசல், மண்புழு உரம், தொழுவுரம், வேப்பெண்ணெய்னு கொடுத்துட்டு வர்றதால ஈரியோபைட் குறைஞ்சு, தரமான தேங்காய் விளையுது. அதுதான் இயற்கை விவசாயத்தின் மகிமை” என்றார்.

‘‘அணில்தாண்டா தென்னை ஆயிரம் வைத்திருப்பவன், அரசனுக்கு சமம்னு சொல்வாங்க. நீங்க 1,650 மரம் வெச்சிருக்கீங்க” என்றார், வாத்தியார் சுகுந்தன்.

உடனே, “அஞ்சு மரம் வைச்சிருத்தாலும் சரி... அஞ்சாயிரம் மரம் வெச்சிருந்தாலும் சரி... அவனோட பேரு விவசாயிதான். அதனால, எல்லா விவசாயிகளுமே உலகுக்கு உணவளிக்கிற அரசர்கள்தான். அதில் சின்னவன், பெரியவன் பாகுபாடு கிடையாது” என்றார் ராமகிருஷ்ணன்.

அப்படியே அனைவரும் நடக்க ஆரம்பிக்க, ஓங்கி வளர்ந்த மலைவேம்பு மரம் ஒன்றைக் கட்டிப்பிடித்து கைகோர்த்துப் பார்த்தனர், சுப்ரபாரதி மணியனும், அருணாச்சலமும்.

‘‘அப்பா இவ்வளவு பெரிய மரமா இருக்கு’’ என அனைவரும் ஆச்சர்யம் காட்ட, 

“இது மலைவேம்பு மரம். இதுக்கு இருபது வயசு ஆகுது. அதனாலதான், ரெண்டு பேரு கட்டிப்பிடிக்கிற அளவுக்கு  பெருத்திருக்கு. இன்னிக்கு இதை வெட்டி வித்தா கூட பல ஆயிரம் ரூபாய் கிடைக்கும். வேளாண் காடுகள் அமைக்க விரும்புறவங்க அவசியம் மலைவேம்பு கன்னுகளை நடவு செய்யணும். தேக்கு, ஈட்டி, சந்தனம், செம்மரம் மாதிரியான மரங்கள் நடவு செய்து 20 வருஷம் பராமரிப்பு செய்த பிறகுதான் நல்ல விலைக்கு விற்க முடியும். மலைவேம்பு சீக்கிரமா வளரக்கூடிய மரம். மத்த மரங்களை ஒப்பிடும்போது சீக்கிரம் பெருத்துடும். தண்ணீர் வசதி நல்லா இருந்தா, நடவு செய்த7 வருஷத்திலேயே வெட்டி விற்பனை செய்ய ஆரம்பிச்சிடலாம். சவுக்கு, மூங்கில் மாதிரியான மரங்களும் குறுகிய காலத்துல லாபம் கொடுக்கிற மரங்கள்” என்றார் ராமகிருஷ்ணன்.

'ஒரு நாள் விவசாயி!'
'ஒரு நாள் விவசாயி!'

அய்யாவின் ஆசை!

பண்ணையின் ஓரிடத்தில் நூற்றுக்கணக்கில் நாற்றுக்கள் பதியன் போட்டு பைகளில் வைக்கப்பட்டிருந்தன. “இது என்ன நாற்று?” என்று ஆர்வமுடன் கேட்டார், மல்லிகா.

“பல மருத்துவ குணம் கொண்ட வேப்பமர நாற்றுக்கள். ஒவ்வொரு வீட்டிலும் இது இருக்கணும். விவசாய நில வரப்புகள், களத்துமேடு, மேய்ச்சல் காடு, பள்ளி, கல்லூரிகள்னு எல்லா இடத்துலயும் வேப்பங்கன்னுகளை வளர்க்கணும்னு நம்மாழ்வார் அய்யா ஆசைப்பட்டார். அவரோட விருப்பத்தை நிறைவேற்ற நிறைய பேர் வேப்பமரக்கன்னுகளை வளர்த்துக் கொடுக்கிறாங்க. அதுல அடியேனும் ஒருவன்.

இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேப்பங்கன்னுகளை வளர்த்துக் கொடுத்திருக்கேன். நான், இலவசமாத்தான் கொடுக்கணும்னு நினைச்சேன். ஆனா, நம்மாழ்வார் அய்யாதான், ‘இலவசமாக பெறப்படுற எந்தப்பொருளும் அதன் மதிப்பை இழந்துடும். அதனால எதையும் இலவசமா கொடுக்காதீங்க, குறைந்த விலைக்குக் கொடுங்க’னு சொன்னார். அதனால குறைஞ்ச விலைக்குக் கொடுத்துக்கிட்டிருக்கேன். அதேமாதிரி அதிகமா மழையை ஈர்க்கிற பூவரச மரக் கன்னுகளையும் உற்பத்தி செய்துக்கிட்டிருக்கேன். கூடவே தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மன்ற உறுப்பினராகவும், கோயம்புத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கத்தின் பொருளாளராகவும் இருக்கிறேன்” என்று மது.ராமகிருஷ்ணன் சொல்ல, அனைவரும் கரவொலி எழுப்பினர்.

‘’பாராட்டியது போதும்... சூரியன் மேற்கே இறங்க ஆரம்பிச்சிடுச்சு... பயிற்சியோட இறுதிக்கட்டத்துக்கு வருவோம்” என்ற ராமகிருஷ்ணன், “எல்லோரும் ஒண்ணை மறந்திட்டீங்களே?’’ என்று பீடிகை போட... ‘‘என்ன அது?’’ என அனைவரும் ஒருவர் முகம் ஒருவர் பார்த்து யோசிக்க ஆரம்பித்தனர்.

“நானே சொல்லிடுறேன். பண்ணை நூலகத்தில் இருந்து ஆளுக்கு ஒரு புத்தகம் எடுத்துப் படிச்சீங்களே... படிச்சதில் பிடிச்ச சில வரிகளை மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கச் சொன்னேன். இப்போ சரியா சொல்றவங்களுக்கு சின்ன பரிசு கொடுக்கப் போறேன்” என்றார் ராமகிருஷ்ணன்.

'ஒரு நாள் விவசாயி!'

“வீட்டுக்கு ஒரு நாட்டு மாடு... வியாதிக்கு பூட்டுப் போடு!’’ என ஆரம்பித்த நந்தக்குமாரைத் தொடர்ந்து ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த வரிகளைச் சொன்னார்கள்.

“சபாஷ்! எல்லோரும் நல்ல கருத்துக்களைத்தான் பதிவு செஞ்சிருக்கீங்க. அதனால, எல்லாருக்குமே என் அன்பு பரிசு உண்டு. இது இயற்கைக் குளியல் சோப்புக்கட்டி. இந்தப் பண்ணையில தயாரானது” என்றபடி அனைவருக்கும் வழங்கினார், மது.ராமகிருஷ்ணன். மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்ட ஒருநாள் விவசாயிகள், நன்றி சொல்லி விடைபெற்றனர்.

- பயணம் தொடரும்

நீங்களும் ஒருநாள் விவசாயி, ஆக வேண்டுமா?

‘விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடி கூட தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’ என்று எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே 044-66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, குரல் வழி சேவை மூலம் உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.

மாணவர், வேலை தேடிக் கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.