Published:Updated:

கார்ப்பரேட் கோடரி - 9

கார்ப்பரேட் கோடரி
பிரீமியம் ஸ்டோரி
News
கார்ப்பரேட் கோடரி ( கார்ப்பரேட் கோடரி )

மண் மீதான வன்முறையைத் தோலுரிக்கும் தொடர்!‘சூழலியலாளர்’ நக்கீரன்

‘வெள்ளைத்தங்கம்’ என்று அழைக்கப்பட்டாலும், பருத்தியின் உண்மையான நிறம் சிவப்பு என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், பல கோடி மக்களின் குருதியில் வளர்க்கப்பட்டதுதான் நவீன வகைப் பருத்தி. ஆப்பிரிக்காவிலிருந்து முன்பு கறுப்பினத்தவர்களைக் கடத்திச் சென்று அடிமைகளாய் விற்ற வெள்ளையர்கள் தங்களுடைய நாட்டிலிருந்து சிவப்பு நிறத்துணிகளைக் கொண்டு வந்து ஆப்பிரிக்காவில் விற்றிருக்கிறார்கள். அந்தச் சிவப்புநிறத் துணிகளைக் கண்டதும் ஆப்பிரிக்கர்கள் அஞ்சி ஓடினர். அடிமைகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட ஆப்பிரிக்கர்களின் குருதியைத்தான் அத்துணிகளில் பூசியுள்ளனர் என அவர்கள் நம்பியதே, அதற்குக் காரணம். ‘இந்த நம்பிக்கை உண்மையல்ல’ எனினும் முழுக்கவும் பொய்யுமல்ல. அன்றும் சரி, இன்றும் சரி... பருத்தி சாகுபடியில் மறைமுகமாக உழவர்களின் குருதி உறிஞ்சப்படுகிறது. இதற்கு இந்தியாவே சிறந்த சான்று.

கார்ப்பரேட் கோடரி - 9

அழிக்கப்பட்ட ‘மஸ்லின்’!

இந்திய வேளாண்மை மீதான வன்முறை பருத்தியிலிருந்துதான் தொடங்கியது. பிரிட்டிஷாரின் காலத்தில் இந்தியப் பருத்தியினாலான மஸ்லின் துணிகள், ஐரோப்பாவில் புகழ்பெற்று விளங்கின. பத்து முழச் சேலையை ஒரு தீப்பெட்டிக்குள் அடைத்து விடும் அளவுக்கு மெல்லியவை, இந்த மஸ்லின் துணிகள். இங்கிலாந்து மக்கள், உள்ளூர் துணிகளை விட மஸ்லின் துணிகளையே அதிகமாக விரும்பியதால்... உள்ளூர் உற்பத்தி விற்பனையாவதில் தேக்கநிலை ஏற்பட்டது. இந்தச் சிக்கலை முடிவுக்குக் கொண்டு வர நினைத்தது, இன்றைய கார்ப்பரேட்களின் முன்னோடியான அன்றைய கிழக்கிந்திய கம்பெனி.

மஸ்லின் துணிக்கு கச்சாப்பொருளாக இருந்த இந்தியப் பருத்தி, பிரிட்டன் ஆலைகளிலுள்ள இயந்திரங்களுக்கு ஏற்றதாக இல்லை என்பதால், ‘மஸ்லின்’ நெசவாளிகளை நசுக்கியதோடு, ‘பாரம்பர்ய இந்தியப் பருத்தி தரமற்றது’ என்கிற பரப்புரையையும் மேற்கொண்டனர், வெள்ளையர்கள். எனவே இங்கிலாந்தின் ‘டி-73’ பருத்தியை வாழ வைப்பதற்காக, மஸ்லின் துணியும் பாரம்பர்ய இந்தியப் பருத்தியும் தம் வாழ்வை இழந்தன. டி-73 தொடங்கி இன்றைய பி.டி பருத்தி வரை, இந்திய உழவர்களின் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கும் பருத்தியின் நிறம் சிவப்பு அல்லாமல் வேறென்ன?

முந்தைய சோவியத் ஒன்றியம்தான் ‘பருத்தி சாகுபடி வன்முறை’க்கு இன்றைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ‘வேளாண்மையைப் பெருக்க வேண்டும்’ என்கிற நல்ல நோக்கத்தில் கொண்டு வந்த திட்டமாக இருந்தாலும் சூழல் அழிவுக்கு முன்னுதாரணமாக மாறிப்போனது இத்திட்டம். ‘புவிக்கோளின் மிக மோசமான சூழலியல் பேரிடர்களில் ஒன்று’ என அழைக்கப்படும் இத்திட்டம், ‘இயற்கையின் போக்கில் மனித அறிவு வரைமுறையற்று குறுக்கிட்டால், என்ன நேரும்?’ என்பதற்குச் சரியான பாடமாக விளங்குகிறது.

ஏரல் கடல் கதையைப் பற்றி பலர் அறிந்திருக்கலாம். இன்றைக்கும், ‘நதிகளை இணைத்தால் என்ன நேரும்?’ என்பதற்கு இதனைத்தான் சூழலியலாளர்கள் சுட்டிக் காட்டுவார்கள். இது, உண்மையில் கடல் அல்ல. கடலளவுக்கு காட்சியளிக்கும் பெரிய ஏரி. இதன் பரப்பளவு, 68 ஆயிரம் சதுர கிலோ மீட்டர். இதுதான் உலகின் நான்காவது பெரிய ஏரி. தெற்கிலிருந்து பாயும் அமுர் தாரியா, கிழக்கிலிருந்து பாயும் சிர் தாரியா என்கிற இரு ஆறுகள்தான் இந்த ஏரல் கடலுக்கு (ஏரியாக இருந்தாலும், இதை அனைவரும் கடல் என்று குறிப்பிடுவதால், நாமும் அப்படியே அழைப்போம்) நீர்வளம் அளித்தவை. இது, முந்தைய சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியான இன்றைய கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளில் அமைந்திருந்தது. ‘ஆம்... அமைந்திருந்தது’ என்று இறந்த காலத்தில்தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த ஏரல், இன்று இறந்து விட்டது. அதன் சாவுக்குக் காரணம், பருத்தி.

கார்ப்பரேட் கோடரி - 9

புடவை கைக்குட்டையானது!

‘வளர்ச்சி’ என்கிற மோசமான மந்திரச் சொல்லுக்கு அன்றைய சோவியத்தும் விதிவிலக்கல்ல. அது, தன் ஏற்றுமதியைப் பெருக்க ஓரினப்பயிராகப் பருத்தியை சாகுபடி செய்யத்  திட்டமிட்டது. அதில் மிகப்பெரியத் திட்டமாக அமைந்தது, ஏரல் கடல் திட்டம்தான். இது நாற்பது லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் அமுர் தாரியா, சிர் தாரியா ஆறுகளிலிருந்து கால்வாய்களின் மூலம் நீரையெடுத்து அமைக்கப்பட்ட பாசனத்திட்டம். 1961-ம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு இந்த இரு ஆறுகளினால் மட்டும் ஏரல் கடலுக்கு ஆண்டுதோறும் கிடைத்த நீரின் அளவு 56 கன கிலோ மீட்டர். இத்திட்டம் செயல்படத் தொடங்கியதும் இந்த ஆறுகளிலிருந்து வரும் நீர்வரத்து, படிப்படியாகக் குறையத் தொடங்கியது. ஏரல் கடலுக்கு வரும் சிர் தாரியா ஆற்றின் நீர், 1986-ம் ஆண்டு அடியோடு நின்று போக... அமுர் தாரியா ஆறும் 1989-ம் ஆண்டு நீர்வழங்குவதை நிறுத்திக் கொண்டது. இதனால், ஒரு காலத்தில் 1,064 கன கிலோ மீட்டர் கொள்ளளவைக் கொண்டிருந்த ஏரல், தன் 13.5 மீட்டர் ஆழத்தையும் இழந்து சுருங்க ஆரம்பித்தது. பெருமளவில் அதன் தரைப்பகுதி வெளியே தெரியத் தொடங்கியது. 2007-ம் ஆண்டில் அதன் உண்மையான பரப்பளவில் வெறும் பத்து சதவிகிதம் அளவு மட்டுமே இருந்தது, சுருங்கச் சொன்னால், ‘ஒரு புடவை, கைக்குட்டையானது’. அல்ல, அல்ல ஒரு நூலிழையாகிப்போனது.

செயற்கைப் பாலைவனம் ஏற்படுத்திய சோகம்!

2014-ம் ஆண்டு நாசா எடுத்த செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்று ஏரல் கடலின் பரிதாப நிலையை அப்பட்டமாக எடுத்துக் காட்டியது. அதன் கிழக்குப்பகுதி முழுவதுமாக வறண்டு விட்டதை அப்புகைப்படம் காட்டியது. அந்த வறண்ட பகுதி, இன்று புவியில் புதிதாகத் தோன்றிய பாலைவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பாலை நிலத்தின் பெயர் ‘அரால்கம்’ (aralkum) பாலைவனம். இது, ‘மனிதர்களால், செயற்கையாக உருவாக்கப்பட்ட பாலைவனம்’ என்பதால் உயிர்ச்சூழலைப் பாதித்தது. சுற்றுப்புறப்பகுதிகளில் இருந்த நன்னீர், உவர்நீராக மாறியது. இதனால், கடுமையான நன்னீர் பஞ்சம் ஏற்பட்டது. இதன் பாதிப்பை தெளிவாக விளக்க வேண்டுமெனில், இதைக் கடல் நீரோடுதான் ஒப்பிட வேண்டும். கடல் நீரில் ஆயிரத்துக்கு முப்பத்தைந்து பங்கு உப்பு இருக்கிறது. முன்பு ஆயிரத்துக்கு ஒரு பங்கு மட்டுமே இருந்த ஏரலின் உப்பு அளவு இன்றைக்கு ஆயிரத்துக்கு நூறு பங்காகி விட்டது. இது கடலில் உப்பின் அளவை விட அதிகம்.

வறண்டு விட்ட ஏரல் கடலில் இன்று முப்பது லட்சம் ஹெக்டேர் அளவுக்கு உப்பு படிந்து கிடக்கிறது. இப்பகுதியில் ஏற்படும் புழுதிப்புயலால் இந்த உப்புக்கள் டன் கணக்கில் வெகு தொலைவு வரை அடித்துச் செல்லப்படுகின்றன. இதனால், பல நூறு கிலோ மீட்டர் தொலைவு வரையுள்ள வேளாண் நிலங்களிலும் உப்பு படிந்து சாகுபடிக்குப் பயனற்ற உவர்நிலமாகி விட்டன.

கார்ப்பரேட் கோடரி - 9

அறிந்தே செய்த அதிகாரிகள்!

இதையெல்லாம்விட கொடுமை எது தெரியுமா? ‘இத்திட்டத்தின் முடிவு இப்படித்தான் ஆகும்’ என்று அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரியும் என்பதுதான். ‘ஏரல் கடலின் நீர் ஆவியாதலைத் தடுக்க முடியாது என்பது அனைவருக்கும் அறிந்த செய்திதான்’ என்று சொல்லியிருக்கிறார், சோவியத் பொறியாளர் ஒருவர். ‘இத்திட்டத்தை பற்றித் தெரிந்திருந்தாலும் அது குறித்துக் கேள்வி எழுப்பும் துணிவு அன்று எவருக்கும் இல்லை’ என்கிறார், மற்றொரு நீர்த்திட்ட அதிகாரியான அலெக்சாண்டர் அசாரின் என்பவர்.

பொதுவுடைமை அரசு என்று பெருமையோடு வர்ணிக்கப்பட்ட சோவியத் நாட்டிலேயே உயரதிகாரிகளின் எண்ணம் இப்படி இருந்ததென்றால், இன்றைக்கு ‘மக்களாட்சி’ என்கிற பெயரில் நடக்கும் மறைமுக கார்ப்பரேட் ஆட்சியில் என்னென்ன நடக்கக் காத்திருக்கிறதோ?!
அடுத்து, காட்டை அழித்து, பாமாயில் தயாரிக்கும் ஒரு நாட்டை, எட்டிப் பார்த்துவிட்டு வருவோமா?

-தடுப்போம்

பென்குயின் குருதி வரை படிந்துள்ள நச்சு!

புழுதிப்புயல், வெறும் உப்பை மட்டும் கொண்டு செல்வதில்லை. பருத்தியில் தெளிக்கப்பட்ட ரசாயன உயிர்க்கொல்லி நச்சையும் சேர்த்தே அது எடுத்துச் செல்கிறது. இப்பகுதி வலுவான கிழக்கு, மேற்கு காற்றோட்ட திசையில் அமைந்திருப்பதால், புவிச்சுழற்சியின் காரணமாக அனைத்துத் திசைகளுக்கும் இப்புழுதித் தூசு பரவலாக எடுத்துச் செல்லப்படுகிறது. இதன் விளைவாக வடதுருவத்தின் ஆர்டிக் பகுதியின் கிரீன்லாந்து பனிப்பாளங்களிலிருந்து தென்துருவ அண்டார்டிகாவில் வசிக்கும் பென்குயின் பறவையின் குருதி வரை இத்தூசு படிந்துள்ளது.

காவு கொடுக்கப்பட்ட மீனவர் வாழ்வு!

இப்பகுதியில் வசிக்கும் மனிதர்களின் உடல் நலத்தையும் இச்சீர்கேடு பாதித்துள்ளது. புற்றுநோயிலிருந்து நுரையீரல் நோய் வரைக்கும் இதன் பாதிப்புள்ளது. தாய்மார்களின் தாய்ப்பாலிலும், மனிதர்களின் கொழுப்புத்திசுவிலும் பயிர்களில் தெளிக்கப்பட்ட வேதிப்பொருட்கள் கலந்துள்ளதே, இந்நோய்க்குக் காரணம். சில பகுதிகளில் பச்சிளங்குழந்தைகளின் இறப்பு பத்து சதவிகித அளவுக்கு இருக்கிறது. இத்தோடு பொருளாதார இழப்பும் அதிகம். ஒரு காலத்தில் ஏரல் கடலில், 40 ஆயிரம் மக்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். சோவியத் ஒன்றியத்தின் மொத்த மீன் பிடிப்பில் ஆறிலொரு பங்கு, மீன் ஏரல் கடலிலிருந்தே கிடைத்தது. இதெல்லாம் இன்று பழங்கதை. மீன் பிடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட பெரும் படகுகள் இன்று வறண்டு விட்ட ஏரியின் தரையில் துருப்பிடித்து சாய்ந்துக் கிடக்கின்றன. உழவர்கள் மட்டுமல்ல, மீனவர்களின் வாழ்வும் காவு கொடுக்கப்பட்டுவிட்டது.