புறா பாண்டி

‘‘குறைந்த செலவில் இயற்கை விவசாயச் சான்றிதழ் பெற வழிகள் உண்டா?’’
எம்.ஆர்.சுகந்தி, வேலூர்.
கோவா மாநிலத்தில் செயல்பட்டு வரும் ‘ஆர்கானிக் ஃபார்மிங் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’ (OFAI- Organic Farming Association of India) அமைப்பைச் சேர்ந்த கிளாடு ஆல்வாரிஸ் பதில் சொல்கிறார்.
‘‘எங்கள் அமைப்பு, இயற்கை வேளாண்மையில் விளைந்த பொருட்கள் என்பதற்கான சான்று வழங்குவதைக் கண்காணிக்கும், அகில இந்திய அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. எங்கள் அமைப்பின் வழிகாட்டுதல்படி இரண்டுவிதமான சான்றுகள் வழங்கப்படுகின்றன. ஒன்று... ‘பி.ஜி.எஸ்.’ எனப்படும் ‘பார்ட்டிசிபேட்டரி கியாரன்டி சிஸ்டம்’ (PGS-Participatory Guarantee System) எனப்படும் சான்று. நான்கைந்து விவசாயிகள் குழுவாக இணைந்து இதை

வழங்கலாம். சான்று வழங்குவதற்கான அடிப்படை விதிகள் மற்றும் விளைபொருட்களின் தரம் அனைத்தையும் பரஸ்பரம் கண்காணித்து, அவர்களாகவே வழங்கிக் கொள்ளக்கூடிய சான்று இது. ரசாயனத்தில் விளைவித்த பொருட்களை இயற்கை என்று காட்டுவது போன்ற தவறான செயல்களில் ஈடுபட்டால், சான்றிதழ் பறிக்கப்படும். சான்று வழங்கிக்கொள்ளும் விவசாயிகளில் யாரொருவர் தவறு இழைத்திருந்தாலும் மொத்த விவசாயிகளின் சான்றும் பறிபோய்விடும். எனவே, இந்த விஷயத்தில் விவசாயிகளே விழிப்பாக இருப்பார்கள்.
மற்றொன்று... ‘டி.பி.எஸ்.’ எனப்படும் ‘தேர்ட் பார்ட்டி அப்ரைசல்’ (TPS-Third Party Appraisal) சான்று. இயற்கை விவசாயத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த விவசாயிகள் இதை வழங்கமுடியும். இந்த விவசாயிகள், குறிப்பிட்ட பண்ணையைக் கண்காணித்து, எங்கள் அமைப்புக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். சிறிய மற்றும் பெரிய அளவிலான தனிநபர் பண்ணைகளுக்கு இத்தகைய முறையின் மூலம் சான்றிதழ் பெறமுடியும். ஆயிரக்கணக்கில் செலவு செய்யாமல், இயற்கை விவசாயச் சான்றிதழ் கிடைத்தாலும், இதற்கு சர்வதேச அளவில் வரவேற்பு உள்ளது. இந்தச் சான்றிதழை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் செய்துள்ளது. இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார், இயற்கை விவசாயிகள் இந்த முறையில் சான்றிதழ் பெற ஊக்கப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடதக்கது. பி.ஜி.எஸ். சான்றிதழ் பெறும் முறைக்கு விளம்பர தூதர் போல நம்மாழ்வார் செயல்பட்டார்.’’

தொடர்புக்கு, OFAI, G-8, St.Britto’s Apartments., Feira Alta,
Mapus-403507-Goa,
தொலைபேசி: 0832-2255913.
‘‘அசோலாவை கால்நடைகளுக்கு உணவாகக் கொடுக்கலாமா?’’ எளியமுறையில் வளர்க்க முடியுமா?’’
தி.ராம்குமார், அரக்கோணம்.

அசோலா வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ‘அசோலா’ பாலகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.
‘‘அய்யா நம்மாழ்வார், கம்மல் பாசியை வளருங்கய்யா... என்று விவசாயிகளிடம் அடிக்கடி, சொல்வார். பார்ப்பதற்கு கம்மல் போல இருப்பதால் ‘கம்மல் பாசி’ என்று கிராமங்களில் சொல்கிறார்கள். ஆரம்பத்தில் நெற்பயிர்களுக்கு மட்டும்தான், அசோலாவை உரமாகப் பயன்படுத்தினோம். நம்மாழ்வார் அய்யாதான் ஆடு, மாடு, கோழி, மீன்களுக்கும்கூட அசோலாவைப் பயன்படுத்தலாம் என்று சொன்னார். இதன் பிறகு, கால்நடை வளர்ப்பவர்களும் அசோலாவை வளர்க்கத் தொடங்கினார்கள். இதை பால் மாடுகளுக்குக் கொடுத்தால், அதிகபட்சம் 2 லிட்டர் வரை கூடுதல் பால் கிடைக்கும். 25% தீவனச் செலவு குறையும். கோழிகளுக்குக் கொடுத்தால் அதிக முட்டையிடும். மீன்களுக்குப் போட்டால் விரைவாக வளரும். புரதச்சத்து மிகுந்த இந்த பாசியில் வடை, போண்டா செய்து மனிதர்களும் சாப்பிடலாம்.
அசோலா, அமுதசுரபி போல வளர்ந்துகொண்டே இருக்கும். ஒருமுறை வளர்க்கத் தொடங்கி விட்டால், பல மடங்கு வளர்ந்து பலன் கொடுத்துக் கொண்டே இருக்கும். குறைந்த செலவில், எளிய முறையில் அசோலாவை வளர்க்க முடியும். அதற்கு ஒரு பாத்திரம் அல்லது தொட்டியில் 7 சென்டி மீட்டர் முதல் 10 சென்டி மீட்டர் உயரத்துக்கு தண்ணீரைத் தேக்கிக் கொள்ளவும். பாலிதீன் ஷீட் மற்றும் செங்கற்களைப் பயன்படுத்தியும் தரையிலேயே தொட்டியை உருவாக்கிக் கொள்ளலாம். சூரிய ஒளிபடும் இடத்தில் இந்தத் தொட்டி இருக்க வேண்டும்.

தொட்டியில் இருக்கும் தண்ணீரில் சாணம் ஒரு கிலோ, பாறைத்தூள் ஒரு கைப்பிடி, அசோலா ஒரு கைப்பிடி போட்டுக் கலக்கி விடவும். அடுத்த ஒரே வாரத்தில் பத்து மடங்கு அளவுக்கு அசோலா பெருகியிருக்கும். மீண்டும் அசோலா வேண்டும் என்றால், சாணம் மற்றும் பாறைத்தூளைத் தொட்டியில் போட்டால் போதும். பெருக ஆரம்பித்து விடும். இந்த அசோலாவை நெல் வயலுக்கு இட்டால் கூடுதல் மகசூல் கிடைக்கும். வயலில் இரண்டாம் களை எடுக்கும்போது, அசோலாவை மிதித்து விட வேண்டும். தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து என முக்கியமான சத்துக்கள் அடங்கிய அருமையான தாவரம் அசோலா. ’’
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் அனுப்பலாம்.