Published:Updated:

கார்ப்பரேட் கோடரி - 10

கார்ப்பரேட் கோடரி
பிரீமியம் ஸ்டோரி
News
கார்ப்பரேட் கோடரி ( கார்ப்பரேட் கோடரி )

காடுகளைக் கொல்லும் பாமாயில்!மண் மீதான வன்முறையைத் தோலுரிக்கும் தொடர்!‘சூழலியலாளர்’ நக்கீரன்

டந்த மாதத்தில், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு வருகை தந்த வெளிநாட்டினர், அங்கு பனி மூட்டம் சூழ்ந்திருந்ததைக் கண்டு திகைத்தனர். ஆனால், இது அங்கு அடிக்கடி நேரும் வழக்கமான காட்சிதான். சில சமயங்களில் வானூர்தி கூட தரையிறங்க முடியாத அளவுக்கு வெண்திரை பரவியிருக்கும். உண்மையில் அது பனியல்ல, புகை மண்டலம். மக்கள் அனைவரும் அறுவை சிகிச்சை மருத்துவர்களைப் போல் வாயையும் மூக்கையும் கவசத்தால் மூடி நடமாடுவர். மூச்சு விடுவதற்கும் சிரமமாக இருக்கும். இவை அனைத்துக்கும் காரணம், அருகாமை நாடான இந்தோனேசியாவின் காட்டுத் தீ.

கார்ப்பரேட் கோடரி - 10

கரிக்காற்றை அதிகரிக்கும் தீ!

அண்டை நாடுகளுக்கே இவ்வளவு பாதிப்புகளை உண்டாக்கும் இந்தக் காட்டுத் தீ, இந்தோனேசிய மக்களின் உடல்நலத்துக்கு எத்தகைய கேட்டினை உண்டாக்கும்... இது புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான கரிக்காற்றின் (கார்பன்-டை-ஆக்சைடு) அளவையும் வளிமண்டலத்தில் அதிகரிக்கச் செய்கிறது. இதனால், சுற்றுச்சூழலும் கடுமையான பாதிப்படைகிறது.

1997-ம் ஆண்டில் உலகளாவிய கரிக்காற்று வெளியீட்டில்... காட்டுத் தீ ஒரு முதன்மைக் காரணியாக இருந்தது. இந்தாண்டில் பெட்ரோலிய எரிபொருட்கள் வெளியிட்ட மொத்த கரிக்காற்றின் அளவில்... 40 சதவிகிதம் அளவுக்கு இந்தோனேசிய காட்டுத் தீயால் கரிக்காற்று பரவியிருக்கிறது. இதிலிருந்தே அதன் வீரியத்தைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், இக்காட்டுத் தீ தானாக உண்டாகிறதா... அல்லது யாரும் உருவாக்குகிறார்களா என்பதுதான் கேள்வி.

மழைக்காட்டை அழித்து வேளாண்மை!

மழைக்காடுகள் நிறைந்த போர்னியோ தீவில் இந்தோனேசியாவுக்குச் சொந்தமாக்கப்பட்ட இடம் கலிமந்தான். ஆண்டுக்கு 2 ஆயிரத்து 600 மில்லி மீட்டர் மழை பொழியும் அடர்ந்த காட்டுப்பகுதி. இங்குள்ள ஓரிடத்தில் 1983-ம் ஆண்டின் தொடக்கத்தில் காடுகள் அழிக்கப்பட்டு நிலம் திருத்தப்பட்டு... ‘செமம்பான்-I’ என்கிற திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்துக்காக இந்தோனேசியாவின் ஜாவா, பாலி ஆகிய பகுதியிலிருந்து இரண்டாயிரம் குடும்பங்கள் திருத்தப்பட்ட நிலத்தில் குடியேற்றப்பட்டனர். குடும்பத்துக்குத் தலா இரண்டு ஹெக்டேர் நிலம் உடைமையாகத் தரப்பட்டது. அதில், அவர்கள் வேளாண்மை செய்து கொள்ளலாம் என வாக்குறுதி கொடுக்கப்பட்டுத்தான் அவர்கள் குடியேற்றப்பட்டிருந்தனர்.

செம்பனை என்னும் எண்ணெய்ப் பனை!

காட்டை அழித்துத் திருத்தப்பட்ட அந்நிலத்தில் மேல்மண் அரித்துச் செல்லப்பட்டிருந்ததால் மண், நுண்சத்துக்களை இழந்திருந்தது. எப்பயிர்களும் வளர முடியவில்லை. அதனால் இத்திட்டம் படுதோல்வியில் முடிந்தது. அங்கு குடியமர்த்தப்பட்டவர்களுக்கு, குடும்பத்துக்குத் தேவையான பணத்தில் மூன்றில் ஒரு பங்குதான் வருமானமாகக் கிடைத்தது. முன்பு வாழ்ந்த இடத்தில் வளமாக வாழ்ந்த இம்மக்கள் வேறு வழியின்றி பக்கத்திலிருந்த இடங்களைத் தேடிச்சென்று தினக்கூலிகளாக மாறினர். இதுபோன்று வேறு பல திட்டங்களின் வழி குடியேற்றப்பட்டிருந்த மக்களின் கதியும் இதுதான். இந்நிலையில்தான் மேற்கத்திய நாட்டு விவசாயப் பொருளாதார வல்லுநர்கள் உதவிக்கு வந்தனர். இந்த மண்ணில் ஒரு குறிப்பிட்ட பயிர் சிறப்பாக வளர முடியும் எனக் கண்டறிந்தனர். அதுதான் பாமாயிலைத் தரும் ‘செம்பனை’ எனும் எண்ணெய்ப்பனை மரம். 

பாவம் ஒரு பக்கம்... பழி ஒரு பக்கம்!

செம்பனைகள் பெருவாரியாக நடப்பட்டன. ஒரு கட்டத்தில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் செம்பனைத் தோட்டங்கள் பெருகின. ஏற்கெனவே அங்கு குடியேற்றப்பட்டு தினக்கூலிகளாக மாறியிருந்த முன்னாள் உழவர் குடும்பங்களே இத்தோட்டங்களில் தினக்கூலிகளாக வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இது, ‘காக்கா உட்கார பழம் விழுந்த கதையா’ அல்லது ‘திட்டமிட்ட சதியா’ என்பது அரசுக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் மட்டுமே தெரியும். அந்த சமயத்தில், போர்னியோ காடுகளில் அதுவரை நடந்திராத அளவுக்கு காடுகள் ஆங்காங்கே திடீர் திடீரென அடிக்கடி தீப்பிடிக்கத் தொடங்கின. இதற்கானப் பழி, ‘காட்டெரிப்பு வேளாண்மை’ செய்யும் பழங்குடிகள் மீது சுமத்தப்பட்டது.

காட்டெரிப்பு வேளாண்மை என்பது உலகம் முழுவதும் உள்ள பழங்குடிகள் தொன்றுத்தொட்டு பின்பற்றி வரும் ஒரு வேளாண்மை முறை. சங்க காலத்தில் குறிஞ்சி நிலத் தமிழர்கள் ‘தினைப்புனம் எரித்தல்’ எனும் முறையில் இவ்வேளாண்மையை செய்துள்ளனர். பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் இவ்வேளாண் முறையில் எந்தக்காடும் தீப்பிடித்து அழிந்ததில்லை. ஆனால், 1980-களில் இந்தோனேசியக் காடுகள் மர்மமான முறையில் அடிக்கடி தீப்பிடித்து எரியத் தொடங்கின. அதுவும் பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் அளவுக்கு தீப்பற்றி எரிந்தன. இப்படி தீப்பற்றி எரிந்த காடுகள் தம்மை மீட்டுக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. மாறாக அவ்விடங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களின் செம்பனைத் தோட்டங்கள்தான் முளைத்தன.  

செம்பனைகளை வளர்க்க வேண்டுமெனில் மற்ற காட்டுத் தாவரங்கள் வளராமல் தடுப்பது அவசியமாகும். எனவே, அவற்றைப் பயிரிடுவதற்கு முன்னர், ஒன்று விடாமல் எரித்து அழிப்பது என்பது தொடர்ந்து பின்பற்றப்படும் நடைமுறையாக இருப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. மற்ற பணப்பயிர்களாவது, பயிரிட்ட பிறகுதான் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், செம்பனைகளோ பயிரிடப்படுவதற்கு முன்பே பாதிப்பைத் தொடங்கி வைத்து விடுகிறது.

கார்ப்பரேட் கோடரி - 10

அழிவுநிலைக்குச் சென்ற அரிய விலங்குகள்!

காடுகள் என்பது கார்பன் சேமிப்புக்கிடங்கு. செம்பனைக்காக இக்காடுகள் அழிக்கப்படுகையில் மண்ணில் நிலைநிறுத்தப்பட்டிருந்த கரிக்காற்று பெரும்பான்மை அளவில் வளி மண்டலத்தில் கலந்து விடுகிறது. இந்தோனேசியா, மலேசியா மழைக்காட்டுப் பகுதிகள்தாம் உலகிலேயே  பல்லுயிர்ச் செறிவு அதிகமுள்ள காட்டுப்பகுதிகளாகக் கருதப்படுகின்றன.

இத்தகைய காடழிப்பால் போர்னியோ காட்டில் மட்டுமே வாழக்கூடிய  ‘ஒராங்ஊத்தான்’ (Orangutan) மனிதக் குரங்குகள் உள்ளிட்ட பல விலங்குகள் அழிநிலைக்கு சென்று விட்டன. பழங்குடிகளும் தம் வாழ்விடங்களை இழந்து வருகின்றனர். ஆனால், இது குறித்த எக்கவலையும் இன்றி செம்பனை உற்பத்திக்காக காடழிப்பு தொடர்கிறது. செம்பனை மரங்களின் தாயகம், மேற்கு ஆப்பிரிக்காவாக இருந்தாலும், செம்பனைத் தோட்ட உருவாக்கத்துக்காக ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கக் கண்டங்களின் காடுகள் இரையாகின்றன. அந்தளவுக்கு கார்ப்பரேட்களின் ‘செம்பனை லாப வெறி இருக்கிறது’.

2020-ம் ஆண்டில் 2 கோடி ஹெக்டேர்!

எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் செம்பனை மூன்றாம் இடம் வகிக்கிறது. ஆண்டுக்கு 5.5 கோடி டன்கள். கடந்த பத்தாண்டுகளில் இதன் உற்பத்தி இரு மடங்காகப் பெருகியுள்ளது. மற்ற எண்ணெய் வித்துக்களைவிட இதன் எண்ணெய் ஈட்டு திறன் அதிகம் என்பதாலும், பிற எண்ணெய் பயிரைவிட இதில் குறைந்த மனித வளமே தேவைப்படுவதால் ‘கூலி மிஞ்சும்’ என்பதாலும் இப்பயிர் கார்ப்பரேட்களை ஈர்க்கின்றன. மலேசியாவும் இந்தோனேசியாவும் இணைந்து பாமாயில் தேவையில் 80 சதவிகித அளவை நிறைவு செய்கின்றன. தவிர, இந்தோனேசியா தற்போதைய அறுபது லட்சம் ஹெக்டேர் பரப்பை 2020-ம் ஆண்டுக்குள் இரண்டு கோடி ஹெக்டேராக விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது. இவ்வளவு நிலம் காடழிப்பின் மூலம் மட்டுமே கிடைக்க முடியும். காடு என்பது வெறும் மரங்கள், விலங்குகளின் தொகுப்பல்ல... அது ஆறுகளின் உற்பத்தி மூலமாகும். எனவே காடழிப்பின் முதல் பலி... வேளாண் நிலங்களே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இக்காட்டை அழித்துப் பெறப்படும் பாமாயில், உணவுப் பொருளாகப் பயன்படுகிறதா என்றால் இல்லை என்பதே பதில். அது சோப்பு, ஷாம்பூ, சலவைத்தூள், பற்பசை, லிப்ஸ்டிக் போன்றவைத் தயாரிக்கத்தான் பயன்படுகிறது. ‘பாமாயில் கொழுப்பு அதிகம் கொண்டது’ என்பதால், இதை வாங்க மறுக்கும் மேட்டுக்குடிகள்... தம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் சாக்லேட், ஐஸ்கிரீம், உடனடி நூடுல்ஸ், லேஸ், குர்குரே பொட்டலங்கள், உணவகங்களில் வாங்கும் பீட்சா, கே.எஃப்.சி கோழி வறுவல் அனைத்திலும் பாமாயில் இருப்பதை அறிவதில்லை.

தமிழ்நாட்டிலும் பாமாயில் புரட்சி ஏற்பட்ட கதையை நாம் அறிவோம். இங்கு பாமாயில் பயிரிடுவதற்கு ஊக்கப்படுத்தி வரும் ஒரு முன்னணித் தனியார் நிறுவனம், திருவாரூர் மாவட்டத்தில் ஒரு மாதிரிப் பண்ணையை உருவாக்கி இருந்தது. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்தப் பயிர்கள் அழிக்கப்பட்டு வேறு பயிர்களை அது பயிரிடத் தொடங்கிவிட்டது. எனினும் உழவர்களிடம் அந்நிறுவனம் இன்னமும் தம் பாமாயில் திட்டப் பரப்புரையை நிறுத்தவில்லை. சிறிதானாலும், பெரிதானாலும் கார்ப்பரேட் தன்மை ஒன்றுதான். லாபம் மட்டுமே குறி. இப்போது செம்பனை எண்ணெய் உயிரி எரிபொருளாகவும் பயன்படுவதால். இதைப் பெருக்க கார்பரேட் நிறுவனங்கள் முயல்கின்றன.

உணவுப் பொருள், உயிரி எரிபொருளாக மாற்றப்படும் ஆபத்தை அடுத்து பார்ப்போம்.

-தடுப்போம்

ஒரு மில்லியன் மெட்ரிக் க்யூப் (one million M3)மரங்கள் ஒவ்வொரு ஆண்டும்கலிமந்தானிலிருந்து (kalimantan) சாபாவுக்கு (sabah) கடத்தப்படுகிறது

50 சதவிகிதம் மரங்கள் சட்ட விரோதமாக வெட்டப்படுகிறது கடத்தல் காரணமாக ஆண்டுக்கு 580 மில்லியன் டாலருக்குமேல் வருமான இழப்பு ஏற்படுகிறது

கடத்தல் காரணமாக வருமான இழப்பு ஒருபுறம், அத்துடன் வாழ்வாதாரங்கள் இழப்பு மறுபுறம்...

புறக்கணிக்கப்பட்ட மற்றும் அழிக்கப்பட்ட காடுகள்

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பல்லுயிர்கள்

வாழ்வாதாரங்கள் இழப்பு