மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: ஜப்பானும், தஞ்சாவூர் நெல் சாகுபடியும்..!

மாத்தி யோசி, ஓவியம்: ஹரன்

‘‘நெஞ்சுக்கு நெருக்கமானவர்களே..!’’னு இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார், பேச ஆரம்பிச்சாருன்னா, படிச்சவங்க, படிக்காதவங்க அத்தனைப்பேரும், அசந்து போய் கேட்பாங்க. தந்தை பெரியாருக்கு அப்புறம் வாழ்நாள் முழுக்க மக்களுக்காக, மக்களோடவே இருந்த மகத்தான மனுஷன் நம்மாழ்வார். இவர் பேசும்போது, ஒரு வெளிநாட்டுக்காரர் பேரை அடிக்கடி சொல்லுவாரு.

‘மசானபு ஃபுகோகா’. இவர்தான் இயற்கை விவசாயத்தை ஜப்பான் நாட்டுல வெற்றிகரமா செய்தவர். ‘ஜப்பான் நாட்டு இயற்கை விவசாய அனுபவம், தமிழ்நாட்டுக்கு சரிப்பட்டு வருமாய்யானு....’’ நம்மாழ்வார் கிட்ட கேட்டப்போ, நம்மாழ்வார் சொன்ன பதிலைக் கேளுங்க...

‘‘ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, ஜப்பான் நாட்டுக்காரர் ஒருத்தர் பீகார் மாநிலத்துல, ரெண்டு வருஷம் இருந்தார். அவரை சந்திக்கும்போது, ‘இந்திய நிலைமை வேறு, ஜப்பான் நிலைமை வேறு. ஜப்பானில் 52 வாரமும் மழை பெய்கிறது. இந்தியாவில் 3 மாதத்துக்குள் எல்லா மழையும் பெய்துவிடுகிறது. ஆனால், இரண்டு நாடுகளிலும் பெய்யும் மழையளவு சம அளவுதான்.

மண்புழு மன்னாரு: ஜப்பானும், தஞ்சாவூர் நெல் சாகுபடியும்..!

கோடையில் நிலத்தில் விழும் சருகுகள் எல்லாம் காய்ந்து கருகுகின்றன. ஆனால், அங்கு சருகுகள் எல்லாம் பூமியில் விழுந்து எருவாகிவிடுகின்றன. ஆகவே, நிலம் வளமாக இருக்கிறது. அங்கு நெல் நன்றாக விளைகிறது. இங்கு வெயில் அதிகமாக இருப்பதால் வெயிலை வாங்கிக்கொண்டு காடு நன்றாக வளர்கிறது. எனவே, பூமிக்குள் ஈரம், காற்று, குளிர்ச்சி எல்லாம் வந்துவிடுகிறது. கோடையில்கூட காட்டுக்குள் தண்ணீர் இருக்கிறது. காடுகளில் மரம் உயரமாக வளர்ந்து நிலத்தை மூடிக்கொள்கிறது. காடு வளர்ப்புக்கு இந்தியா பொருந்தும். நெல் விளைவதற்கு ஜப்பான் பொருந்தும்’னு அந்த ஜப்பானியர் சொன்னாரு. நாம தஞ்சாவூர் டெல்டா, திருச்சி, ஆற்றுப்படுகைகளில் நெல் சாகுபடி செய்துக்கணும். மத்த மாவட்டத்துல மரப்பயிர்கள், சிறுதானியம்னு பயிர் செய்யணும். கூடவே, மாடு, ஆடு, கோழி, பசு...னு கால்நடைகளையும் வளர்க்கணும்.

தமிழ்நாட்டுல கடுமையான வெயில் இருக்கிறதால ஃபுகோகாவோட நெல் பயிர் சுழற்சி முறையை அப்படியே பயன்படுத்த முடியாது. புதுச்சேரி பக்கத்துல ஆரோவில் இருக்குது. இங்க பல வருஷமா பெர்னார்டு கிளார்க்னு பெல்ஜியம் நாட்டுக்காரர் இருக்காரு. இவர்தான், எனக்கு இயற்கை விவசாய குரு. தமிழ்நாட்டுக்குத் தகுந்த மாதிரி பயிர்ச் சுழற்சி முறையை கிளார்க் உருவாக்கினாரு. முதல்ல ஆறு மாசத்துக்கு நெல்லை விதைக்கிறது. அடுத்த மூணு மாசம் சோளம் விதைக்கிறது. சோளத்தை மட்டும் எடுத்துக்கிட்டு,  தட்டையை நிலத்தில போட்டுடணும். இன்னொரு மூணு மாசங்களுக்கு உரச் செடிகளை விதைச்சு விடணும்.  உரச் செடிங்க வளர்ந்தவுடனே, இதை அறுத்துப்போட்டு மண்ணை வளப்படுத்தணும். இதுதான் மூணு பயிர் சுழற்சி முறை.

அந்தக் காலத்துல தஞ்சாவூர் விவசாயிங்க இப்படித்தான் செய்தாங்க. ஒரு குறுகியகால நெல், அடுத்து, நீண்டகால நெல், பிறகு கொழுஞ்சி.

எல்லா மனுஷங்களுக்கும், தொலைவுல இருக்கிறதுதான் கவர்ச்சியா தெரியுது. எனக்கும் கூட ஜப்பான்காரன் சொன்னதுதான் பெரிசா தெரிஞ்சுது. ஒரு நாள் பொறுமையா சிந்திச்சு பார்க்கும் போது, நம்ம ஊர்லயும் இதைத்தானே செய்தாங்கனு தெரிஞ்சுது. இன்னமும் கூட தஞ்சாவூர் டெல்டா பகுதியில நாம கத்துக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியில மிளகாய் அதிகமா பயிர் செய்யுறாங்க. பாத்தி பாத்தியாகப் போட்டு மிளகாய் நடுவாங்க. ஒரு வரிசையில அகத்தியை நடுவாங்க. அகத்திச் செடி, தன்னோட  நிழலை மிளகாய்ச் செடிக்குக், கொடுப்பதோடு காத்துல இருக்கிற நைட்ரஜனை இழுத்து அதன் வேர்ல, கொடுக்கும். இதனால, பணம் கொடுத்து உப்பு உரத்தைக் கொட்டுறது மிச்சமாகும். ஆடு, மாடுகளுக்கு அகத்திக் கீரை அருமையான தீவனம். பந்தலுக்கு அகத்திக் கம்பைப் பயன்படுத்தலாம். ஆனா, இப்போ சாத்தூரில் முருங்கையை நடறாங்க. முருங்கை மரத்தை வளர்த்தா, அதுக்கு நாம சத்து தரணும். அகத்தியை வளர்த்தால் நமக்கு அது சத்து கொடுக்கும்.

ஆறாயிரம் வருஷமா இந்தத் தமிழ் மண்ணுல விவசாயிகள் சமூகம் தாக்குப்பிடிச்சு நிக்குது. இதுக்கு முக்கிய காரணம், இங்க ஒரு அறிவு அமைப்பு உயிரோட்டத்தோட இருக்கு. ஒரு கிராமத்துக்கு கொஞ்சம் அறிவிருந்தாலும் போதும். ஒரு விவசாயியைப் பார்த்து, இன்னொருத்தர் கத்துக்குவார். இதைத்தான் ‘வயல் வெளியே பல்கலைக்கழகம்’னு சொல்றோம். தனிமனிதர்களோட அறிவை, சொத்தாகவோ, உரிமையாகவோ நம் சமூகம் பார்க்கிறதில்லை. ஒவ்வொருத்தோரட அறிவும் சமூகத்தோட அறிவுதான். சமூகத்திலிருந்துதான் நம்ம ஒவ்வொருத்தருக்கும் அறிவு கிடைக்குது. அதனாலத்தான் ஆயிரக்கணக்கான வருஷமா, நிலைச்சு நிற்க முடியுது.’’

சமூகத்துக்காகவே சிந்திச்ச, கடைசி மூச்சுவரை சமூகத்துக்காகவே வாழ்ந்ததாலதான் நம்மாழ்வாரை ‘பசுமைப் பெரியார்’னு பலரும் சொல்றாங்க