Published:Updated:

மண்ணுக்கு மரியாதை! - 19

மண்ணுக்கு மரியாதை!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்ணுக்கு மரியாதை! ( மண்ணுக்கு மரியாதை! )

மகசூலைக் கூட்டும் மகத்தான தொடர்!நீ.செல்வம், ஆ.பாலமுருகன், படம்: கா.முரளி

சத்துக்குறைபாடு... பயிர்களே அடையாளம் காட்டும்!

ளியோரை, வலியோர் வதைக்கும் செயல்... சத்துக்களிலும் உண்டு. மண்ணில் அதிகமாக இருக்கும் சில சத்துக்கள், மற்ற சத்துக்களை பயிர்கள் எடுத்துக்கொள்வதைத் தடுக்கும். குறிப்பாக, பொட்டாசியம், கால்சியம் என்று சொல்லப்படும் சுண்ணாம்பு மற்றும் மெக்னீசியம் சத்துக்களில் ஏதாவது ஒன்று மண்ணில் அதிகமாக இருந்தால், மற்ற சத்துக்களை பயிர் எடுத்துக்கொள்வதைத் தடுத்துவிடும்.

செடிகளில் பொட்டாசியம் சத்துக் குறையும்போது, இரும்புச்சத்து குறைபாடும் ஏற்படும். சுண்ணாம்புச்சத்து அதிகமாக இருந்தால், இரும்புச்சத்து நீரில் கரையாதபடி மண்ணில் நிறுத்திவிடும். சுண்ணாம்பு அதிகமாக இருக்கும்போது, மண்ணில் அதிக இரும்புச்சத்து இருந்தாலும், செடிக்குக் கிடைக்காது.

தழைச்சத்தோடு கந்தகச்சத்து!

மணிச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் அதிகமாக இருந்தால் துத்தநாகக் குறைபாடு ஏற்படும். மாங்கனீசு, தாமிரம், துத்தநாகம் மூன்றும் மற்ற எந்தச் சத்துகளுக்கும் தடையாக இருக்காது. தழைச்சத்து அதிகம் பயன்படுத்தும் இடத்தில் கந்தகச்சத்தின் தேவை அதிகரிக்கும். அதனால் தழைச்சத்து பயன்படுத்தும் போது, கந்தகச்சத்தையும் சேர்த்து இடவேண்டும். ஏனெனில், இவை இரண்டும் புரதச்சத்து உற்பத்திக்குப் பயன்படுகின்றன. 

மண்ணுக்கு மரியாதை! - 19

மறைசத்துக் குறைபாடு!

மனிதர்களுக்கு ஏற்படும் பிணிகளை, உடலில் ஏற்படும் மாற்றங்கள், அறிகுறிகள் மூலமாகத் தெரிந்து கொள்வோம். அதேப்போல சத்துக் குறைபாடுகளை சில அறிகுறிகள் மூலமாக செடிகள் வெளிப்படுத்தும் என்பதை நாம் ஏற்கெனவே பார்த்தோம்.

இலைகளின் மேல்பகுதி அல்லது அடிப்பகுதி மஞ்சளாகத் தோன்றுதல், இலைப்புள்ளிகள், நுனிக்கருகல் போன்ற அறிகுறிகள் மூலமாக வெளிப்படுத்தும் என்பதையும் ஏற்கெனவே பார்த்தோம். ஆனால், சில சத்துக்குறைபாடுகள் வெளியில் தெரிவதில்லை. இதை ‘மறை சத்துக் குறைபாடு’ என்கிறார்கள். இதனால் செடிகளின் வளர்ச்சி குன்றி, மகசூல் பாதிக்கப்படும்.

ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு சத்து!

சிலருக்கு சாம்பார் பிடிக்கும். சிலருக்கு தயிர், சிலருக்கு ரசம் எனப்பிடிக்கும். ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த உணவை அதிகமாகவும், பிடிக்காத உணவைக் குறைவாகவும் எடுத்துக் கொள்வது வழக்கம். அதேபோலத்தான் செடிகளும். சில பயிர்கள் அதிகளவு சத்துக்களையும், சில பயிர்கள் குறைந்தளவு சத்துக்களையும் எடுத்துக்கொள்ளும். இன்னும் சில பயிர்கள் குறிப்பிட்ட சில சத்துக்களை மட்டும் அதிகளவில் எடுத்துக்கொள்ளும். உதாரணமாக, வாழை, கிழங்கு வகைகள், பழ மரங்கள் மற்றும் கரும்பு போன்ற பயிர்கள் சாம்பல் சத்தை அதிகம் எடுத்துக் கொள்பவை. அதனால், இவற்றை  ‘பொட்டாசியம் லவ்விங் பிளாண்ட்’ என ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

அடையாளம் காட்டும் பயிர்!

தீவனப் பயிர்கள், கீரைகள் தழைச்சத்தை அதிகமாக எடுத்துக்கொள்பவை. பயறு வகைப் பயிர்கள் மணிச்சத்தை அதிகமாக எடுத்துக் கொள்பவை. பருத்தி, நிலக்கடலை, தக்காளி போன்றவை சுண்ணாம்புச்சத்தை அதிகமாக எடுத்துக் கொள்பவை. பருத்தி மற்றும் காய்கறிகள் மெக்னீசியம் சத்தை அதிகமாக எடுத்துக் கொள்பவை. ஒரு பயிர் எந்தச் சத்தை அதிகமாக எடுத்துக் கொள்கிறதோ... அதை வைத்தே அந்தப்பயிரில் தோன்றும் சத்துக்குறைபாட்டைக் கண்டறிந்து விடலாம்.

உதாரணமாக வாழை, பொட்டாசியம் சத்துக்களை அதிகமாக எடுக்கும் எனப் பார்த்தோம். வாழைக்கு பொட்டாசியம் (சாம்பல் சத்து) அளவை, வழக்கத்தை விட குறைவாகக் கொடுக்கும்போது, இலை மஞ்சளாக மாறுதல், நுனிக் கருகுதல் போன்ற அறிகுறிகள் தோன்றும். இதை வைத்து, அந்தப்பயிரில் எந்தச் சத்து குறைபாடு உள்ளது எனத் தெரிந்து கொள்ளலாம். எனவே இது போன்ற பயிர்களை ‘இண்டிகேட்டர் பிளாண்ட்’ (அடையாளம் காட்டும் பயிர்) என அழைக்கிறார்கள்.

தழைச்சத்துக்கு... சோளம், மக்காச்சோளம்; மணிச்சத்துக்கு... மக்காச்சோளம், சிறுதானியங்கள், தக்காளி, குதிரைமசால்; சாம்பல் சத்துக்கு... பருத்தி, உருளைக் கிழங்கு; கந்தகச்சத்துக்கு... சிறு தானியங்கள்; துத்தநாகச்சத்துக்கு... மக்காச்சோளம், தக்காளி; தாமிரச்சத்துக்கு... எலுமிச்சை; இரும்புச்சத்துக்கு... சோளம், எலுமிச்சை, அலங்காரச்செடிகள்; போரான் சத்துக்கு... குதிரைமசால்; மாங்கனீசு சத்துக்கு... எலுமிச்சை; மாலிப்டினம் சத்துக்கு... ஃகாலிப்பிளவர் ஆகியவை அடையாளம் காட்டும் பயிர்கள். இந்தப் பயிர்களில் குறிப்பிட்ட சத்தை குறைவாகக் கொடுப்பதன் மூலமாக மண்ணில் மற்ற சத்துக் குறைபாடுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

மண்ணுக்கு மரியாதை! - 19

ஊட்டச்சத்துக்கள் பரவும் வேகம்!

மண்ணிலிருந்து வேர்கள் பல்வேறு சத்துக்களை உறிஞ்சி பயிர்களுக்குள் செலுத்தும்போது இலை, பூ, காய் என ஒரு உறுப்பிலிருந்து மற்ற உறுப்புகளுக்கு நகரும் வேகம் சத்துக்குச் சத்து மாறுபடும். தழை, மணி, சாம்பல் சத்துக்கள் வேகமாகப் பரவும் என்பதால், அனைத்து உறுப்புகளிலும் இச்சத்துக்கள் சீரான அளவில் இருக்கும்.

அடி இலைகள் பழுத்து முற்றும்போது... இந்தச் சத்துக்கள் முற்றிய இலைகளில் இருந்து வெளியேறி, புதிய இலைகளுக்குக் கடத்தப்படுகிறது. இதனால்தான் சத்துப் பற்றாக்குறை ஏற்படும் போது, அடி இலைகள் முதலில் காய்கின்றன. பற்றாக்குறை மிக அதிகமாகும் போதுதான் மேல் இலைகளிலும் பாதிப்புக்கான அறிகுறி தெரிய வருகிறது.

குறைபாட்டைக் காட்டும் அறிகுறிகள்!

மெக்னீசியம், துத்தநாகம், கந்தகம், மாங்கனீசு, மாலிப்டினம், இரும்பு மற்றும் தாமிரசத்து ஆகியவை குறைந்த வேகத்தில் பரவும். எனவே, பற்றாக்குறை ஏற்படும்போது, முற்றிய இலைகளில் இருந்து இளம் இலைகளுக்கு இந்தச் சத்துக்கள் நகர்வதில் தாமதம் ஏற்பட்டு, பற்றாக்குறை அறிகுறிகள் இளம் இலைகளில் முதலில் வெளிப்படும். சுண்ணாம்பு, போரான் சத்து மிகமிகக் குறைந்த வேகத்தில் நகர்வதால், பெரும்பாலும் முற்றிய இலைகளில் தங்கிவிடும். இதனால் வளரும் நுனி இலைகளுக்குச் சத்துக்கள் கிடைக்காமல், பற்றாக்குறை அறிகுறிகள் நுனி இலைகளிலும், மொட்டுக்களிலும் காணப்படும்.

இந்த இரண்டு சத்துக்களும் செடிகள் ஓரளவு வளர்ந்த பிறகு பூக்கும் பருவத்திலும்; பூத்த பிறகு, காய்களிலும் பற்றாக்குறை அறிகுறிகளைக் காட்டும்.

எனவே, சத்துக்கள் பரவும் வேகத்தைப் பொருத்தும்; செடியின் எந்த பாகத்தில் முதலில் பற்றாக்குறை அறிகுறிகள் தோன்றின என்பதைப் பொருத்தும்... எந்தச்சத்து பற்றாக்குறையாக இருக்கிறது என்பதையும் கண்டுகொள்ளலாம். உதாரணமாக, இளம் இலைகளில் முதலில் அறிகுறிகள் தோன்றினால்... மெக்னீசியம், துத்தநாகம், கந்தகம், மாங்கனீசு, மாலிப்டினம், இரும்பு மற்றும் தாமிரசத்துக் குறைபாடு உள்ளது எனவும்; நுனி இலை, பூ, காய் பகுதிகளில் முதலில் அறிகுறிகள் தோன்றினால்... சுண்ணாம்பு, போரான் சத்துக்கள் குறைபாடு உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

பயிர்கள், ஊட்டச்சத்துக்களை உட்கொள்ளும் விதம் பற்றி அடுத்த இதழில் பார்க்கலாம்.

-வாசம் வீசும்
தொகுப்பு: ஆர்.குமரேசன்