
மண் மீதான வன்முறையைத் தோலுரிக்கும் தொடர்!‘சூழலியலாளர்’ நக்கீரன், ஓவியம்: ஹரன்
‘கடல் சுனாமி’ பற்றி எல்லோருக்கும் தெரியும். ‘பட்டினி சுனாமி’ தெரியுமா... கடந்த 2008-ம் ஆண்டில்

உலகத்தை இந்த பட்டினி சுனாமி தாக்கியது. அந்தாண்டில் உணவுப் பொருட்களின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையாக உயர்ந்தது. கிட்டத்தட்ட 140 சதவிகிதம் வரை உயர்ந்தது. உணவு விலைப்பட்டியல் உருவாக்கப்பட்ட 1845-ம் ஆண்டு முதல் இப்படியொரு விலையேற்றத்தை உலகம் சந்தித்ததில்லை.
‘இப்பட்டினி சுனாமியால் ஒரே ஆண்டில் பத்து கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டனர். 100 கோடி மக்கள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டனர்’ என உலக வங்கி அறிக்கை வெளியிட்டது. இதன் தொடர் விளைவாக பல்வேறு நாடுகளில் உணவுக் கலவரங்கள், சூறையாடல்கள் நடைபெறும் அளவுக்கு நிலைமை மோசமாகியது.
ஆனால், அவ்வாண்டில் உணவு உற்பத்தி குறையவில்லை. மக்கள் தொகைப் பெருக்கமும் இதற்குக் காரணமில்லை.
1950-ம் ஆண்டு உலக உணவு உற்பத்தி, 60 கோடி டன் அளவில் இருந்தபோது, அன்றைய மக்கள் தொகை 200 கோடி. 2007-ம் ஆண்டு உணவு உற்பத்தி 207 கோடி டன் என அதிகரித்திருக்க... மக்கள் தொகை 1950-ம் ஆண்டில் இருந்ததை விட 2.6 மடங்கு பெருகியிருந்தது. அதேசமயம் உணவு உற்பத்தியின் பெருக்கம் 3.3 மடங்கு. இந்தக் கணக்கின்படி உலக மக்கள் அனைவருக்கும் சராசரியாக 314 கிலோ உணவு கிடைத்திருக்க வேண்டும். அது எங்கே போனது?
உணவுக்கு உலை வைத்த உயிரி எரிபொருள்!
பசிக்கான தானியங்கள், எரிபொருளாக மாறியதுதான் இந்த விலையேற்றத்துக்கு அடிப்படைக் காரணம். ஆனால், இதை மூடி மறைத்தது, ஐக்கிய அமெரிக்கா. அன்றைய அமெரிக்க அதிபர் புஷ், ‘இந்தியாவிலும் சீனாவிலும் கோதுமை சாப்பிடுபவர்கள் அதிகமாகி விட்டதுதான் காரணம்’ என்றார். அதாவது நாம் அதிகமாக சப்பாத்தி சாப்பிடத் தொடங்கியதுதான், விலையேற்றத்துக்குக் காரணமாம். இச்சமயத்தில்தான் உலக வங்கியின் வெளியிடப்படாத ரகசிய அறிக்கை ஒன்றை லண்டனில் உள்ள ‘கார்டியன்’ பத்திரிக்கை வெளியிட்டு உண்மைகளை அம்பலப்படுத்தியது. ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் இவற்றின் உயிரி எரிபொருள் கொள்கையே இவ்விலையேற்றத்துக்குக் காரணம் என்பதை விளக்கியது, அந்த அறிக்கை. அதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்க வேளாண்துறை, ‘உயிரி எரிபொருள் உற்பத்தியால் மூன்று சதவிகிதம் மட்டுமே விலை உயர்ந்தது’ எனச் சாதித்திருந்தது. உலக வங்கியின் அறிக்கை வெளியிடப்பட்டால், அமெரிக்க அதிபருக்கு சிக்கல் ஏற்படும் என்பதால் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது, அவ்வறிக்கை. இது, உலக வங்கியில் ஐக்கிய அமெரிக்காவின் செல்வாக்குக்கு ஒரு சான்று.
உணவு தானியத்தை ‘எத்தனால்’ என்னும் உயிரி எரிபொருளாக மாற்றும் நடவடிக்கைகளை ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் முன்னெடுக்கத் தொடங்கியிருந்தன.
2007-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா தனது நாடாளுமன்றத்தில், ‘எதிர்காலத்தில் 20 சதவிகிதம் எரிபொருளை தாவரங்களிலிருந்து தயாரிக்க வேண்டும்’ என்று சட்டமே இயற்றியது. இதன்படி 2008-ம் ஆண்டு மொத்த சோள விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு அளவு, எரிபொருள் உற்பத்திக்காக ஒதுக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் சமையல் எண்ணெய் உற்பத்தியில் சரிபாதியை எரிபொருள் உற்பத்திக்காகப் பயன்படுத்துகின்றன. ஆனால், இதற்கெல்லாம் பலியாவது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வயிறுதான்.

மரபணு மாற்றப்பட்ட சோளம்!
கோதுமை, அரிசிக்கு அடுத்து அவசிய உணவுப் பொருளான சோளத்தை எரிபொருளாக மாற்றும் ஆய்வுகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. சோளத்தை எரிபொருள் தேவைக்குத் தேர்ந்தெடுக்கக் காரணம், அதில் ‘லிக்னோ செல்லுலோயிக்’ சார்ந்த எரிபொருள் கிடைப்பதே. ஐக்கிய அமெரிக்க நிறுவனமான ‘டெக்சாஸ் அக்ரி லைஃப்’ என்கிற நிறுவனம் சோளப்பயிரில் பூ பூப்பதை தடுப்பதன் வழியாகவோ, தாமதப்படுத்துவதன் வழியாகவோ இந்த எரிபொருளை அதிகரிக்கலாம் என்று திட்டமிட்டது. இதற்கான ஆய்வில் இறங்கிய அந்நிறுவனம், சோளத்தில் பூ பூப்பதை ஒழுங்குபடுத்தும் மரபணுவை (Ma-4-1) கண்டறிந்தது. இம்மரபணுவின் செயல்பாட்டைக் கட்டுப் படுத்தினால் வழக்கத்தை விட மும்மடங்கு எரிபொருள் கிடைக்கும் எனக் கண்டுபிடித்தது, அந்நிறுவனம்.
வழக்கமாக 60 நாட்களில் பூத்து விடக்கூடிய சோளத்தின் மரபணுவைக் கட்டுப்படுத்தி 200 நாட்கள் கழித்து பூக்கும் சோளம் உருவாக்கப்பட்டது. மும்மடங்கு எரியாற்றல் கிடைப்பதால், தற்போதிருக்கும் தானியச் சோளம், ‘தீவனச் சோளம்’ இவற்றோடு ‘எரிபொருள் சோளம்’ என்கிற புதியவகை சோளமும் எதிர்க்காலத்தில் நிலங்களில் பயிரிடப்படலாம். இதனால், எதிர்காலத்தில் உணவுச் சோளம் பயிரிடப்படும் நிலத்தின் பரப்பளவும் குறையலாம்.
ஒரு லிட்டர் எத்தனாலுக்கு 17,000 லிட்டர் தண்ணீர்!
‘சோளத்திலிருந்து எரிபொருள் (எத்தனால்) தயாரிக்கப் பயன்படும் தண்ணீர், அந்த சோளத்தை விளைவிக்கப் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் எனக் கணக்கிட்டால்... ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க 17,000 லிட்டர் தண்ணீர் தேவை. ‘உயிரி எரிபொருள்களை உற்பத்தி செய்கிற நாடுகள் பயன்படுத்தும் தண்ணீர், உலகம் முழுவதும் மக்கள் வீட்டுத் தேவைக்காகப் பயன்படுத்தும் தண்ணீரில் பாதியளவு’ என்கிறார், கார்னல் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் டேவிட் பிட்மெண்டல்.
‘இந்த உயிரி எரிபொருள், பெட்ரோலியப் பயன்பாட்டைக் குறைப்பதால் இது சூழலுக்கு இசைவான பசுமை வழி உற்பத்தி. இதனால், புவிவெப்பமயமாதல் குறையும்’ என்கிறார்கள், இதன் ஆதரவாளர்கள். ஆனால், அமெரிக்கத் தொழில்நுட்பத்துக்கு இது முற்றிலும் பொருந்தாது. இந்த ஆலைக்கான பெட்ரோலியப் பயன்பாடு, மின்சாரப் பயன்பாடு, கச்சாப் பொருளான தானிய உற்பத்திக்கான ஆற்றல் பயன்பாடு ஆகிய மொத்த ஆற்றலையும் இவர்கள் மறைக்கிறார்கள். ஓர் அலகு ஆற்றலை வழங்குவதற்கு, உயிரி எரிபொருள் உற்பத்தி ஆறு அலகு ஆற்றலை எடுத்துக் கொள்வதாக கணக்கிட்டுள்ளது, கலிபோர்னியா பல்கலைக் கழகம். மேலும் ஐக்கிய அமெரிக்காவின் அலபாமா, அயோவா மாநிலங்களில் உயிரி எரிபொருள் ஆலைகளின் கழிவுகளால் ஆறுகள் மாசடைவதையும் மீன்கள் இறப்பது போன்ற சுற்றுச்சூழலைப் பாதிக்கும் செய்திகளையும் இவர்கள் பேசுவதில்லை.
இருமடங்கு நிலம் தேவை!
இது, பெட்ரோலியத்துக்கு மாற்று என்பதும் மோசடிதான். ஐக்கிய அமெரிக்காவின் முழு சோள விளைச்சலையும் எரிபொருள் தேவைக்குப் பயன்படுத்தினாலும்... அது அந்நாட்டின் போக்குவரத்தில் வெறும் 12 சதவிகிதத் தேவையையே நிறைவு செய்யும். ஆக, கார் வைத்திருப்பவனுக்கும் நிறைவில்லை. மக்களுக்கும் உணவில்லை. ஒரு வேளை, பெட்ரோலியப் பயன்பாட்டை முழுமையாக நிறுத்தி, உயிரி எரிபொருளைப் பயன்படுத்துவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும்... உலகின் விளைநிலம் முழுமையையும் இதற்காகவே பயன்படுத்திக் கொள்ள முடியுமா?. உலகம் முழுமையும் உள்ள விளைநிலம் 430 கோடி ஏக்கர் எனச் சொல்லப்படுகிறது. உயிரி எரிபொருள் உற்பத்திக்கு இதுபோல் இரு மடங்கு விளைநிலம் தேவைப்படும். அவ்வளவு நிலத்தை எங்கே போய்த் தேடுவது?, செவ்வாய்க் கோளிலா...
அழிக்கப்படும் மழைக்காடுகள்!
ஆனால், இதற்காக அழிக்கப்படுவது மூன்றாம் உலக நாடுகளின் நிலங்கள். புன்செய் நிலப்பயிர்களை அழித்து, உயிரி எரிபொருளுக்காக காட்டாமணக்கை பயிரிட்டு... விவசாயிகள் புண்பட்ட கதைகள் இன்னும் நமக்கு மறக்கவில்லையே. ஐரோப்பிய ஒன்றியம் தனக்கான உயிரி எரிபொருள் தேவையில் 58 சதவிகித அளவை வளரும் நாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்கிறது. லத்தீன் அமெரிக்கக் கண்டம்தான், உயிரி எரிபொருளின் முன்னணி ஏற்றுமதியாளர். பிரேசிலில் விளைவதில் 50 சதவிகித அளவு கரும்பு எரிபொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. இன்னும் கரும்பை அதிகமாக விளைவிப்பதற்காக, அமேசான் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே அழிக்கப்பட்ட போர்னியோ காட்டில் விளைவிக்கப்படும் செம்பனையில் தயாரிக்கப்படும் எண்ணெயில் 40 சதவிகிதத்தை... எரிபொருள் தேவைக்கு அளிக்கப் போவதாக மலேசியாவும், இந்தோனேசியாவும் 2006-ம் ஆண்டிலேயே அறிவித்து விட்டன. ஆக, குறையப் போவது உணவு மட்டுமல்ல... நம் உயிர் மூச்சும்தான்.
ஆனாலும், பெட்ரோலிய நிறுவனங்களான ‘பிரிட்டிஷ் பெட்ரோலியம்’, ‘மிட்சுய்’ போன்றவை இப்போட்டியில் வலுவாக இறங்கியுள்ளன. ‘எக்சான் மொபைல்’ என்கிற பெட்ரோலிய நிறுவனம் உயிரி எரிபொருள் ஆய்வுக்காக ‘ஸ்டான்ஃபோர்டு’ பல்கலைக்கழகத்துக்கு 10 கோடி டாலரை தந்துள்ளது. ‘செவ்ரான்’ நிறுவனம் இவ்வகை ஆய்வுக்காக சில பல்கலைக்கழகங்களுக்கு நிதியளித்துள்ளது.
இவ்வகை ஆய்வுகளால் பலனடைந்த, பலனடையப் போகும் உழவர்கள் யார் தெரியுமா? மாதிரிக்கு இருவரைப் பார்ப்போம். முதலாவது பங்குச்சந்தையின் பெரும் முதலீட்டாளரான கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸ். இவருக்கு பிரேசிலில் ஒரு எத்தனால் தொழிற்சாலை உள்ளது. இரண்டாவது கணினி நாயகன் பில்கேட்ஸ். ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரிய எத்தனால் தொழிற்சாலைகளுள் ஒன்று இவருக்குச் சொந்தமானது. சிக்கல்கள் பெரிதானால், இந்த பில்கேட்ஸ் நாளை தோளில் ஒரு பச்சைத் துண்டைப் போட்டுக் கொண்டு ‘நானும் ஒர் உழவர்தான்’ என்று சொல்லும் அவலம் நேரலாம். கவனம் உழவர்களே!
-தடுப்போம்