மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: தேனீக்கள் யானைகளை விரட்டுமா?

நீங்கள் கேட்டவை: தேனீக்கள் யானைகளை விரட்டுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை: தேனீக்கள் யானைகளை விரட்டுமா?

புறா பாண்டி10-ம் ஆண்டு சிறப்பிதழ்

‘‘ஊறுகாய்ப்புல் தயாரிப்பது எப்படி? எத்தனை மாதங்களுக்கு இதைப் பயன்படுத்தலாம்?’’

நீங்கள் கேட்டவை: தேனீக்கள் யானைகளை விரட்டுமா?ஏ.சரவணன், திருச்சி.


திருச்சி வேளாண்மைக் கல்லூரி முன்னாள் முதல்வர் ராஜாகண்ணு பதில் சொல்கிறார்.

‘‘ஊறுகாய்ப்புல் வறட்சியான நேரத்தில் கைகொடுக்கக் கூடியது. கோ-3 அல்லது கோ-4 புல்லை நடவு செய்த 40-ம் நாள் அறுவடை செய்து, அதே வயலில் இரண்டு மணி நேரம் போட்டு வைக்கவேண்டும். பிறகு சிறுசிறு கட்டுகளாகக் கட்டவேண்டும், தரையில் ஆழமாக குழிதோண்டி, அதன் உள்ளே பிளாஸ்டிக் ஷீட்டை விரித்து, அதன் மீது புல் கட்டுகளை சீராக அடுக்கவேண்டும். காலால் நன்கு மிதித்து, காற்று இல்லாதவாறு வெளியேற்ற வேண்டும். பிறகு, ஒரு டன் புல்லுக்கு 4 கிலோ என்ற விகிதத்தில் கல் உப்பைத் தெளிக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீரில் இரண்டு கிலோ வெல்லத்தைக் கரைத்துத் தெளிக்க வேண்டும். உள்ளே அடுக்கப்படும் புல் கட்டுகளின் எடைக்கு ஏற்ப கல் உப்பு, வெல்லக் கரைசல் ஆகியவற்றின் அளவுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். முதல் அடுக்கு முடிந்ததும், மீண்டும் அதன் மீது புல் கட்டுகளை அடுக்கி,

நீங்கள் கேட்டவை: தேனீக்கள் யானைகளை விரட்டுமா?

காலால் மிதித்து, காற்றை வெளியேற்றி, கல் உப்பு, வெல்லக் கரைசலைத் தெளிக்க வேண்டும். இதேபோல் குழி நிரம்பும் அளவுக்கு அடுத்தடுத்த அடுக்குகளை அமைக்கலாம். பிறகு, அதன் மீது பிளாஸ்டிக் ஷீட்டை விரித்து, அதன் மீது குவியலாக மண்ணைக் குவிக்க வேண்டும் (டூம் வடிவில்). அப்போதுதான் மழை நீர் உள்ளே இறங்காது. காற்றும், தண்ணீரும் உள்ளே செல்லக்கூடாது. குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் வரை மூடியிருக்க வேண்டும். அதன் பிறகு, மண்ணை அப்புறப்படுத்தி, பிளாஸ்டிக் ஷீட்டை நீக்கி, தேவையான அளவு தினந்தோறும் இந்த ஊறுகாய்ப் புல்லை கால்நடைகளுக்குக் கொடுக்கலாம். தினமும் புல் எடுத்தவுடன், மீதமுள்ளவற்றை பிளாஸ்டிக் ஷீட்டால் மூடி விட வேண்டும். அதன் மீது மண் போடத் தேவையில்லை. மழைக் காலத்தில் கோ-3, கோ-4 நடவுக்கு 20 நாள் முன்பாக தனியாக 15 சென்ட் நிலத்தில் தீவனச் சோளத்தை விதைக்கவேண்டும். (அப்போதுதான் ஒரே சமயத்தில் அறுவடை செய்து, ஊறுகாய்ப்புல் தயாரிப்புக்குப் பயன்படுத்த முடியும்). முக்கால் டன் தொழுவுரம் போட்டு, எட்டு கிலோ விதையைத் தூவினால் போதும். 60-ம் நாள் அறுவடை செய்துவிடலாம். இதை ஒருமுறை மட்டும் சாகுபடி செய்தாலே போதும். இதேபோல கோ-3 அல்லது கோ-4 புல்லை முதல் தடவை, வெறும் 5 சென்ட் பரப்பில் மட்டும் முழுமையாக அறுவடை செய்து, இரண்டையும் சேர்த்து பதப்படுத்தி வைத்துக்கொண்டால்... வறட்சி நிலவும்போது ஒரு மாடு மற்றும் ஐந்து ஆடுகளின் தீவனத்தேவையைச் சமாளிக்கலாம்.

நீங்கள் கேட்டவை: தேனீக்கள் யானைகளை விரட்டுமா?

ஒரு மாட்டுக்கு தினமும் 20 கிலோ, ஆட்டுக்கு மூணு கிலோ அளவவில் பசுந்தீவனம் கொடுக்க வேண்டும். ஜூலை முதல் பிப்ரவரி மாதம் வரைக்கும் இந்தத் தீவனப் புல் நன்றாக வளரும். இந்த எட்டு மாதத்துக்கு  தீவனப் பிரச்னை இருக்காது. மார்ச் முதல் ஜூன் வரைக்கும் கடுமையான வறட்சி இருக்கும். அப்போதுதான், தீவனத் தட்டுப்பாடு வரும். அதை சமாளிக்கத்தான் ஊறுகாய்ப்புல் கை கொடுக்கும். கம்பு , சோளம் உள்ளிட்ட புல் வகைப்பயிர்களில் மட்டுமே ஊறுகாய்ப்புல் தயாரிக்க முடியும். முயல் மசால், குதிரை மசால்... போன்றவற்றில் ஊறுகாய்ப்புல் தயாரிக்க முடியாது.’’

தொடர்புக்கு, செல்போன்: 94867-50149.

‘‘திருவோடு மரம், தமிழ்நாட்டில் வளருமா..?’’

கே.கண்ணன், மயிலாடுதுறை.

முன்னோடி மூலிகை விவசாயி மோகனகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை: தேனீக்கள் யானைகளை விரட்டுமா?

‘‘திருவோட்டுக் காய் மரம் தமிழ்நாட்டில் நன்றாக வளர்கிறது. என்னுடைய தோட்டத்தில் கூட இந்த மரங்கள் உள்ளன. சைவ மடங்களில், திருவோடு மரங்கள் பரவலாக உள்ளன. செங்கல்பட்டு அருகில் உள்ள தண்டரை கிராமத்திலும், இந்த மரங்கள் உள்ளன. இந்த மரத்தின் அறிவியல் பெயர் Crescentia cujete. அதிகபட்சம் 10 அடி உயரம் வளரும். நடவு செய்த சுமார் 10 ஆண்டுகளுக்குள் காய்ப்புக்கு வந்துவிடும். இந்த மரத்தின் நன்றாக முற்றிய காயை, வெட்டி காய வைத்தால், திருவோடு தயாராகிவிடும். நமது துறவிகள், திருவோட்டைத் தேர்வு செய்து பயன்படுத்தியதற்கு மூலக் காரணம் உண்டு. இந்த மரத்தின் ஓட்டில் உணவை வைத்திருந்தால், சீக்கிரமாக கெட்டுப் போகாது. உடலுக்கும் வலுவைக் கொடுக்கும். அதனால்தான். இந்த ஓட்டுக்கு, ‘திரு’ என்று அடைமொழியை மரியாதையாக வைத்தார்கள். இந்த மரம் வட மாநிலங்களில், திருவோடு தேவைக்காக வளர்க்கப்படுகிறது. ஏக்கர் கணக்கில் யாரும், சாகுபடி செய்வதில்லை. ஆனால், தென் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் நிறைய வளர்க்கிறார்கள். நாம் நாட்டில் திருவோடுகளில் துறவிகள் மட்டுமே, உணவு உண்கிறார்கள். வெளிநாடுகளில், திருவோட்டின் மீது, அழகான படங்கள் வரைந்து, தட்டு, கோப்பை... போன்றவற்றை தயாரிக்கிறார்கள். இதை நட்சத்திர உணவு விடுதிகளில் உணவு, உண்பதற்கு பயன்படுத்துகிறார்கள்.’’

தொடர்புக்கு, செல்போன்: 98944-01680.

நீங்கள் கேட்டவை: தேனீக்கள் யானைகளை விரட்டுமா?

‘‘ஆப்பிரிக்காவில், யானைகள் பயிர்களை நாசம் செய்வதைத் தடுக்க, தேனீக்களை வளர்ப்பதாக வாட்ஸ்அப்பில் பார்த்தேன். இது உண்மையா..?’’

தி.காமாட்சி, ஓசூர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். மனோகரன் பதில் சொல்கிறார்.

‘‘நானும் கூட அந்த வாட்ஸ்அப் செய்தியைப் படித்தேன். அதில், ‘ஆப்பிரிக்க விவசாயிகள் எல்லோரும் விலங்கியலாளர் டாக்டர் லூசி கிங்குக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆப்பிரிக்க யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து, பயிர்களை நாசம் செய்வது அங்கே வழக்கமான விஷயமாக இருந்து வந்தது. அவர்களின் பிரச்னையைத் தீர்க்க யானைகளும் தேனீக்களும்’ என்ற ப்ராஜக்டை உருவாக்கினார் லூசி. விவசாய நிலங்களைச் சுற்றிலும், 30 மீட்டர் இடைவெளியில் தேனீ வளர்ப்பு தொட்டிகளை வைத்தார். விளைந்திருக்கும் பயிர்களின் வாசத்தை வைத்தே யானை அந்த இடம் நோக்கி வரும். அப்படி வரும் யானைகள் தேனீக்களின் ரீங்காரம் கேட்டவுடன் பின்வாங்கும். எல்லா கூடுகளும் ஒரே கம்பியால் இணைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை தேன்கூட்டை யானை தொட்டுவிட்டால், கம்பி அதிர்வதன் மூலம் கூடுகளில் உள்ள தேனீக்கள் யானைகளைக் கொடுக்கால் தாக்க ஆரம்பித்துவிடும். யானை அலறியடித்துகொண்டு ஓடிவிடும்...’ என்பதுதான் அந்த வாடஸ் அப் செய்தி. ஆனால், உண்மையில் டாக்டர் லூசி கிங் யானைகளைப் பாதுகாக்கத்தான் தேனீக்களைப் பயன்படுத்தினார். காரணம், ஆப்பிரிக்காவில் யானைகள் தந்தங்களுக்காக கொல்லப்படுகின்றன.

வழிதவறி ஊருக்குள் வந்தால், அந்த யானையைக் கொன்றுவிடுவார்கள். எனவே, யானை வழித் தடங்களில், வரிசையாக இத்தாலிய தேனீப் பெட்டிக்களை, கம்பியால் இணைத்து வைத்துள்ளார்கள். யானை வழித்தடத்தைத் தாண்டி யானைகள் சென்றால், கம்பிகள் இழுக்கப்பட்டு, பெட்டியில் உள்ள தேனீக்கள் யானைகளைக் கொட்டும். இதனால், யானைகள் திரும்பவும், காட்டுக்குள் சென்றுவிடும்.

தற்போது இலங்கையில், இந்தியத் தேனீக்களை வைத்து, யானைகளை விரட்டும் ஆராய்ச்சியும் நடந்து வருகிறது.’’

தொடர்புக்கு, தொலைபேசி: 0422-6611214.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’,பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் அனுப்பலாம்.