Published:Updated:

கார்ப்பரேட் கோடரி - 12

கார்ப்பரேட் கோடரி
பிரீமியம் ஸ்டோரி
News
கார்ப்பரேட் கோடரி ( கார்ப்பரேட் கோடரி )

மண் மீதான வன்முறையைத் தோலுரிக்கும் தொடர்!‘சூழலியலாளர்’ நக்கீரன், ஓவியம்: ஹரன்10-ம் ஆண்டு சிறப்பிதழ்

சோளத்தில் உயிரி பிளாஸ்டிக்

கொல்லைப்புறத்தில் வரும் மரபணுப் பயிர்கள்!

ரு காருக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்க என்னென்ன பொருட்கள் வேண்டும் என்று  கேட்டால்... அனைவரும் இரும்பு, ரப்பர், பிளாஸ்டிக் என்று சொல்லிவிடுவார்கள். ஆனால், அது பழைய பதில். சோளம், கரும்பு, கிழங்குகள், கோதுமை, நெல்... என்பதே புதிய பதில். ஃபோர்டு காருக்கான மெத்தைகள் மற்றும்  பெயின்ட் போன்றவை, சோயாவிலிருந்து தயாரிக்கப்படுகின்றன என்று ஏற்கெனவே பார்த்தோம். அந்த காரின் கதவில் பொருத்தப்படும் உட்புற பைகள் சர்க்கரைவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. ஒலித்தடுப்பானில் நெல் உமியும் ஒரு பாகமாக இருக்கிறது. இதோடு, வேறு சில தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களும் காரின் உதிரி பாகங்களாகச் சேர்க்கப்பட இருக்கின்றன.

ஆம்... கோதுமை வைக்கோலை உயிரி பிசினாக மாற்றுவதற்கு கனடா நாட்டின் பல்கலைக்கழகங்களோடு இணைந்து ஃபோர்டு நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. தேங்காய் நாரை பிளாஸ்டிக் போல மாற்றும் தொழில்நுட்பமும்;  ஐரோப்பாவில் விளையும் டேன்டலியன் எனும் செடியின் வேரிலிருந்து செயற்கை ரப்பர் தயாரிப்பதற்கான தொழில்நுட்பமும் சாத்தியமாகி விட்டன. இவ்வகை ஆய்வுகள், பிற உணவுப் பயிர்களிலும் நீட்டிக்கப்படலாம். இதனால்தான் தனது காரின் 85 % பொருட்கள் மறு சுழற்சிக்குரிய பொருட்களால் உருவாக்கப்படுவதாக இந்நிறுவனத்தின் விளம்பரமொன்று சொல்கிறது. இது சொல்லாமல் சொல்லும் செய்தி என்னவெனில், ‘இனி விளைவிக்கப் போகும் பயிர்கள் கார் தயாரிப்பதற்கே’ என்பதுதான்.

கார்ப்பரேட் கோடரி - 12

ஒரு காரின் பாகங்களில் பொருத்தப்படும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள், பிளாஸ்டிக்கில்தான் தயாரிக்கப்படுகின்றன.  அதனால்தான், ‘பயோ பிளாஸ்டிக்’ எனும் உயிரி பிளாஸ்டிக் தயாரிக்கும் முயற்சிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. ஃபோர்டு நிறுவனம் 2010-ம் ஆண்டில் இருந்தும், டொயோட்டா நிறுவனம் 2011-ம் ஆண்டில் இருந்தும் உயிரி பிளாஸ்டிக்கை தங்கள் கார்களில் பயன்படுத்தி வருகின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள்  காரின் மொத்த எடையில் 20% அளவுக்கு உயிரி பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தவும் தீர்மானித்துள்ளனர்.

உயிரி எரிபொருள் நிறுவனங்களைப் போலவே, உயிரி பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனங்களும்... ‘நீடித்த வளர்ச்சி, மறுசுழற்சி, மட்கும் தன்மையுடையன, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொண்டவை’ போன்ற கவர்ச்சிகரமான சொற்களைத் தங்கள் விளம்பரத்தில் பயன்படுத்துகின்றன. மக்களுக்கும் இது சரியான முறையாகத் தோன்றுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல. உயிரி பிளாஸ்டிக் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதிலிருந்து பார்த்தால்தான் அதன் பின்புலத்தில் உள்ள விஷயங்கள் புரியும். பெரும்பான்மையான உயிரி பிளாஸ்டிக்... சோளம், கோதுமை, உருளைக்கிழங்கு, மரவள்ளி போன்ற உணவுப் பொருட்களின் ஸ்டார்ச்சிலிருந்து; மரக்கூழ், சணல், பருத்தி ஆகியவற்றின் செல்லுலோசிலிருந்து; மரங்கள், சோளம், காகித ஆலை கழிவுப் பொருட்கள் ஆகியவற்றிலுள்ள  லிக்னைன் என்கிற தாவரப் பொருளிலிருந்து; சோளத்திலுள்ள செய்ன் (Zein) எனும் புரதத்திலிருந்து என நான்கு முறைகளில் உருவாக்கப்படுகின்றன.

ஆக உயிருள்ள மக்களுக்குச் சேர வேண்டிய புரதச்சத்து, உயிரற்ற பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக மாறவிருக்கிறது. ஆலைக்கழிவிலிருந்தும் இதை உருவாக்குவதாகச் சொன்னாலும், எதிர்காலத்தில் இக்கழிவுகளை உற்பத்தி செய்வதற்காகவே இங்கு பயிர் உற்பத்தி செய்யப்படும். ‘மறுசுழற்சிப் பொருட்களைப் பயன்படுத்துவதால், நீர் மிச்சமாகிறது’ என இந்நிறுவனங்கள் சொல்கின்றன. ஆனால், பயிர் விளைவிக்கப் பயன்படும் ‘மறைநீர்’ அளவு கணக்கிடப்படுவதில்லை.

உயிரி பிளாஸ்டிக் உற்பத்தியில் 30 % முதல் 80 % அளவு வரை கரிக்காற்று வெளியாவது தடுக்கப்படுவதாகவும், ஆண்டுக்கு 22  லட்சம் கிலோ பெட்ரோலியம் மிச்சமாவதாகவும் இத்தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் சொல்கின்றன. அதோடு, இவை மட்கும் பொருட்கள் எனவும் அறிவிக்கின்றன. இவை, கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் உண்மை..? இங்கு மட்கும் பொருட்கள் என்கிற சொல்லை எடுத்துக் கொள்வோம். இச்சொல்லைப் பயன்படுத்துவதில் ஒரு நுண் அரசியல் இருக்கிறது. ‘டிகிரேடபிள்’ அல்லது ‘பயோ டிகிரேடபிள்’ என்கிற இரு ஆங்கில சொற்களை மட்கிப்போதல் என்கிற சொல்லுக்கு இணையாகப் பயன்படுத்துகிறார்கள். இவ்விரு சொற்களுக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு.

டிகிரேடபிள் என்கிற சொல்லுக்கு ‘வேதிப்பொருட்களால் மட்கும் பொருள்’ என்பதுதான் உண்மையான பதம். அதாவது, அவை நுண்ணுயிர்களின் செயல்பாட்டால் மட்குவது இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களைச் சிப்பமிடப் பயன்படுத்தும் உயிரி பிளாஸ்டிக்,  ’ஆக்சி-டிகிரேடபிள்’ (Oxy- Degradable) என்கிற வகை. இவை, மட்கும் பிளாஸ்டிக் எனவும் வளம் குன்றா வளர்ச்சிக்கு உதவக்கூடியவை எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதில் 1:1 என்கிற விகிதத்தில் உயிரி பிளாஸ்டிக் பொருட்களோடு, பெட்ரோலில் இருந்து தயாரிக்கப்படும் பாலிபுரோபலைனும் கலக்கப்படுகிறது.

இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துத்தான் உயிரி பிளாஸ்டிக், சூழலுக்கு இசைவான பொருளாக விளம்பரப்படுத்தப்படுகிறது. அனைத்து உயிரி பிளாஸ்டிக்குகளையும் மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியாது என்பதுதான் உண்மை. எனவே இவையும் குப்பைக் கிடங்குகளை அடைக்கத்தான் செய்கின்றன. குப்பையில் சேர்ந்து மட்கும்போது காற்றோட்டச் சூழல் இருந்தால்தான் இவை கரிக்காற்றாகவும், நீராகவும் சிதைவுறும். காற்றற்றச் சூழலில் மட்கும்போது இவை மீத்தேன் வாயுவாக மாறும். இது புவிவெப்பமயமாதலை அதிகரிக்கச் செய்யும் கரிக்காற்றை விட 23 மடங்கு அதிக வலுவுள்ளதாகும்.

கார்ப்பரேட் கோடரி - 12

உண்மையில் சூழலைக் காப்பாற்றும் நோக்கில் இவர்கள் உயிரி எரிபொருளுக்கும், உயிரி பிளாஸ்டிக்குக்கும் மாறவில்லை. பெட்ரோலியப் பொருட்களின் விலை தொடர்ந்து ஏறி வருவதால்... அதற்கு மாற்றாகவே இதை நாடுகின்றனர். உணவு தானியங்களை எரிபொருளாகவும், பிளாஸ்டிக்காகவும் மாற்றி மக்களைப் பட்டினி போட்டால், இவர்களை யார் கேட்கப்போகிறார்கள். பெட்ரோலிய நிறுவனங்களிடம் மோதுவதை விட எளிய உழவர்களை ஏய்ப்பது எளிது. இதனால்தான், காருக்கான பாகங்கள் மட்டுமல்லாமல், உயிரி பிளாஸ்டிக்கைக் கொண்டு பாட்டில், கரண்டி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களும், சிப்பமிடப் பயன்படும் பிளாஸ்டிக் தாள்களும் தயாரிக்கப்படுகின்றன.

 ஐரோப்பிய நாடுகள் மட்டும் ஆண்டுக்கு 50 ஆயிரம் டன் அளவுக்கு உயிரி பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகின்றன. இதற்கான சந்தை ஆண்டுக்கு இருபது சதவிகிதத்தில் இருந்து முப்பது சதவிகிதம் அளவுக்குப் பெருகிக் கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே, உணவுத் தானிய சாகுபடி நிலப்பரப்போடு எரிபொருள் தானிய உற்பத்திப் போட்டியில் இருக்கும்போது...  உயிரி பிளாஸ்டிக்கும் இப்போட்டியில் குதித்துள்ளது. 2007-ம் ஆண்டில் மட்டும் 2 லட்சம் டன் அளவுக்கு உயிரி பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதற்கு, இரண்டரை லட்சம் முதல் மூன்றரை லட்சம் டன் வரை உணவு தானியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2008-ம் ஆண்டு, மதிப்பீட்டின்படி மொத்த பிளாஸ்டிக் சந்தையில், உயிரி பிளாஸ்டிக்கின் சந்தை, வெறும் 0.1 சதவிகிதம் மட்டுமே இருந்தது. இதற்குக் காரணம் இதன் தயாரிப்புக்குத் தேவையான பயிர்களை விளைவிக்கும் நிலப்பரப்பு குறைவாகக் கிடைத்ததுதான். எடுத்துக்காட்டாக, ஐக்கிய அமெரிக்காவின் மொத்த சோள விளைநிலப் பரப்பில் உயிரி பிளாஸ்டிக் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் சோளத்தை விளைவிக்கக் கிடைத்த நிலம் 0.1 சதவிகிதம் மட்டுமே.

தற்போதைய சூழ்நிலையில் உலகில் கிடைக்கும் பெட்ரோலியத்தில் 8  சதவிகித அளவு, பிளாஸ்டிக் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனைக் குறைக்க வேண்டும் என்பதுதான் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் இலக்கு. அப்படியானால், உயிரி பிளாஸ்டிக்குக்கான மூலப்பொருட்கள் சாகுபடிக்கான விளைநிலப் பரப்பு அதிகமாகத் தேவைப்படும். அதற்கு கோடிக்கணக்கான ஏக்கர் நிலம்  தேவைப்படுவதாக இத்தொழிலில் ஈடுபடும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இத்தொழிலில் கார்கில் நிறுவனம், உலகின் மிகப்பெரிய பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனமான டெய்ஜின் (Teijin) நிறுவனம் ஆகியவை இறங்கியுள்ளன. இந்த உயிரி பிளாஸ்டிக்கை சில்லறை வணிக கார்ப்பரேட்களான வால் மார்ட், மெக்டொனால்ட் போன்ற நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.

உயிரி பிளாஸ்டிக் உற்பத்தியைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க ஒரு செய்தி இருக்கிறது. இதற்கான மூலப்பொருட்கள், மரபணு மாற்றப்பட்ட உணவுத் தானியங்களிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன. மரபணு மாற்றுப் பயிர்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கொண்டு வரத் துடிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். மரபணு மாற்றப்பட்ட உணவு தானியங்களைத் தடை செய்த நாடுகளில் கூட சான்ட்விச் போன்ற உணவுப் பொருட்களை சிப்பமிட மரபணு மாற்றுப்பயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட உயிரி பிளாஸ்டிக்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் கொடுமை.

இதைவிடக் கொடுமை ஒன்றுண்டு. அதைக் கொடுமை என்பதை விட கொடூரம் என்றே குறிப்பிட வேண்டும். ‘உலக மயமாக்கல்’ என்கிறப் பெயரில் ஏற்கெனவே கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தி வரும் அட்டகாசங்களை நாம் அறிவோம். ஆனால் ‘கிராமமயமாக்கல்’ என்கிற பெயரில் உழவர்களின் மீதும், அவர்களுடைய மண்ணின் மீதும் தொடுக்கப்பட்டுள்ள போரைப் பற்றி தெரியுமா? அடுத்து அவற்றைக் காண்போம்.

-தடுப்போம்