Published:Updated:

மண்ணுக்கு மரியாதை! - 20

மண்ணுக்கு மரியாதை!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்ணுக்கு மரியாதை! ( மண்ணுக்கு மரியாதை! )

மகசூலைக் கூட்டும் மகத்தான தொடர்!நீ.செல்வம், ஆ.பாலமுருகன், படங்கள்: வீ.சிவக்குமார்10-ம் ஆண்டு சிறப்பிதழ்மண்புழுக்கள், நுண்ணுயிர்களைக் காக்கும் இயற்கை வேளாண்மை!

ரம்ப காலங்களில் விதைக்கும் போதெல்லாம் விளைச்சலை அள்ளி அள்ளிக் கொடுத்த நிலம், தற்போது கிள்ளிக் கிள்ளிக் கொடுத்து வருகிறது. இதற்கான காரணத்தை அறிந்துகொள்வதும், ‘காலுக்குக் கீழுள்ள தூசு’ என்ற அளவில் இருக்கும் மண்ணைப் பற்றிய நமது எண்ணச் சித்திரத்தை மாற்றி, அதனுள் பொதிந்துள்ள அறிவியலை, ஆச்சரியங்களை, லட்சக்கணக்கான நுண்ணுயிர்களைப் பற்றிய அடிப்படை அறிவை அறிமுகப்படுத்துவதுமே இத்தொடரின் நோக்கம். ‘மண்ணில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா’ என உங்கள் விழிகளை விரிய வைக்கிறது, இந்தத்தொடர்.

நாம் இடும் ரசாயன உரங்கள், அங்கக உரங்கள் இரண்டில் இருந்தும் பயிர்கள் சத்துக்களை அப்படியே எடுத்துக் கொள்வது கிடையாது. அவை மண்ணில் பல வேதிவினைகளுக்கு உட்பட்டு, அயனிகளாக உருவாகின்றன. இந்த அயனிகளைத்தான் பயிர்கள் எடுத்துக்கொள்கின்றன. அயனிகளாக உருமாறியவற்றைத் தவிர, எஞ்சிய சத்துக்கள் மண்ணில் நிலைநிறுத்தப்பட்டால்தான்... பயிர்களின் வளர்ச்சி காலம் முழுவதும் தேவையான சத்துக்களை மண் வழங்க முடியும். மணற்பாங்கான மண்ணில் இந்த அயனி மாற்றத்திறன் குறைவாக இருக்கும். அதனால் மண்ணில் நிலைநிறுத்தப்படும் சத்துக்கள், மண் கரைசலுடன் கலந்து வீணாகி விடும்.

அதேநேரம், அங்கக உரங்களைத் தொடர்ந்து பயன்படுத்தும் நிலத்தில் மண்ணின் கூழ்மத்தன்மை அதிகரித்து மண்ணின் வளமும் அதிகரிக்கும். இதனால், சத்துக்கள் மண்ணில் நிலைநிறுத்தப்படுவதால் அடுத்த பயிருக்கு குறைவான உரங்கள் இட்டாலே போதுமானதாக இருக்கும். பயிர் வளர்ச்சிக்குத் தேவையான இரும்பு, தாமிரம், துத்தநாகம், போரான்... போன்ற நுண்ணூட்டச் சத்துக்கள் மொத்தமும் அடங்கிய ஒரே உரம் கிடையாது. அதனால், இவற்றை தனித்தனியாகத்தான் மண்ணுக்குக் (பயிருக்கு) கொடுக்க வேண்டும்.

மண்ணுக்கு மரியாதை! - 20

வேலையைச் சுலபமாக்கும் அங்கக உரங்கள்!

நுண்ணூட்டச் சத்துக்களை, ரசாயன உரங்களுடன் கலந்து கொடுத்தால் அவை, நீரில் கரையாத நிலைக்கு மாறி விடும். கார்பன், மெக்னீசியம், துத்தநாகம் உள்ளிட்ட உலோக அயனிகள் மண்ணில் இடும் மணிச்சத்துடன் இணைந்தால்... மணிச்சத்து, கரையாத நிலைக்கு மாறி விடும்.

அங்கக உரங்கள் இடப்படும் மண்ணில் அங்கக அமிலங்கள் உருவாகும். இந்த அமிலங்களுடன் உலோக அயனிகள் இணையும்போது, ‘கீலேட்’ என்ற கரிம உலோகக் கூட்டுப்பொருள் உருவாகும். இந்தக் கூட்டுப்பொருளை பயிர்கள் எளிதாக எடுத்துக்கொள்ளும். அங்கக உரங்களில் இருந்து உருவாகும் அங்கக அயனிகள், உலோக அயனிகளுடன் இணையும்போது, மணிச்சத்துக்கள் எளிதாகக் கரைந்து பயிர்கள் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு மாறும். அங்ககப்பொருட்களை இடும்போது வளர்ச்சி ஊக்கிகள், நொதிகள் ஆகியவையும் சேர்ந்து உருவாவதால், பயிர் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

கார, அமில நிலை... கவனம்!

மண்ணில் முக்கியமான ரசாயனப் பண்பான கார, அமில நிலை... சமநிலைக்கு அருகில் இருந்தால்தான் மண் வளம் நன்றாக இருக்கும். இதில் சிக்கல் ஏற்படும் போது, பயிர்கள் சத்துக்களை எடுத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். மண்ணின் கார, அமில நிலைக்கு ஏற்றவாறு உரம் இட வேண்டும். காரத்தன்மையுள்ள உரங்களை அதிகமாக இட்டால் கார நிலை அதிகமாகிவிடும். அமிலத்தன்மையுள்ள உரம் அதிகமாக போட்டால் அமில நிலை அதிகரித்து விடும். அதனால், கார, அமில சமநிலை பாதிக்காத அளவுக்கு உரங்களை இட வேண்டும். அதேநேரம் அங்ககச் சத்துக்களை போதுமான இடைவெளியில் கொடுத்து வந்தால், மண்ணின் தாங்கும் தன்மை அதிகரிக்கும். அதனால், ரசாயன உரங்களால் ஏற்படும் கார, அமில நிலை மாற்றம் குறைவான அளவில் இருக்கும்

காற்றோட்டத்தை ஏற்படுத்தும் மண்புழுக்கள்!


விவசாய நிலங்களில் மண், வளமாக இருப்பதற்கு மண்புழுதான் முழுமையாக உதவுகிறது. அதனால்தான் அதை ‘உழவனின் நண்பன்’ என்கிறோம். மண்புழுக்கள் மேலும், கீழும், பக்கவாட்டிலும் நகர்வதால் ஏற்படும் துவாரங்கள் மூலமாக காற்றோட்டம் கிடைத்து பயிர்கள் செழித்து வளர ஏதுவாகிறது. களிமண் நிலங்கள், இறுகி இருப்பதால் காற்றோட்டம் குறைவாக இருக்கும். அது போன்ற நிலங்களில் மண்புழுக்கள்தான் காற்றோட்டம் கிடைக்க வழி அமைத்துக் கொடுக்கின்றன. இந்த மண்புழுக்களுக்கு மண்ணில் உள்ள கரிமப் பொருட்கள்தான் உணவு. மண்புழுக்களின் கழிவு, மிகச் சிறந்த உரமாகவும் விளங்குகிறது.

சத்துக்களைச் சிதைக்கும் நுண்ணுயிர்கள்!


‘மண் ஒரு உயிருள்ள பொருள்’ என்பதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள், மண்ணில் இடும் சத்துக்களை பயிர் எடுத்துக்கொள்ளும் வகையில் மாற்றுகின்றன. அங்ககப் பொருட்களையும் சிதைவடையச் செய்து எளிய பொருட்களாக மாற்றுகின்றன. இந்த நுண்ணுயிர்கள் மண்ணில் இல்லையென்றால் பல ஊட்டச்சத்துக்கள் மண்ணில் இருந்தாலும்... அவை, பயிர்கள் எடுத்துக்கொள்ள முடியாத நிலையில்தான் இருக்கும். இந்த நுண்ணுயிர்களின் வளர்ச்சிக்கும் கரிமப்பொருள் தேவையாகிறது.

இயற்கை விவசாயம் செய்யும் மண்ணில் வளம் அதிகரிக்கிறது. சில நுண்ணுயிர்கள் காற்றிலுள்ள

மண்ணுக்கு மரியாதை! - 20

கரியமில வாயுவில் இருந்து கார்பனை கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தவை. சுருக்கமாகச் சொன்னால் நுண்ணுயிர்கள்தான் பயிர்களுக்கு சத்துக்களை ஊட்டி விடுகின்றன.  எனவே, மண்ணில் இடும் உரங்களைச் சிதைத்து பயிர் சுலபமாக எடுத்துக் கொள்ள வழிவகை செய்யும் நுண்ணுயிர்களுக்காகவும், மண்ணில் காற்றோட்டத்தை ஏற்படுத்தும் மண்புழுக்களுக் காகவும் மண்ணில் இயற்கை உரங்களை இடுவது அவசியம் என்பதை விவசாயிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நுண்ணுயிர்கள் பயிரை வளர்க்கின்றன... அங்ககப் பொருட்கள் நுண்ணுயிரிகளை வளர்க்கின்றன. நமது மண்ணில் இந்த நுண்ணுயிரிகள் வாழ்வதற்குத் தேவையான அங்ககப் பொருட்களை உருவாக்க வேண்டும். தொழுவுரம், கரும்பாலைக்கழிவு, தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம் என ஏதாவது ஒருவகையில் கரிமத்தை மண்ணில் சேர்த்தால் போதும். அங்ககப் பொருட்கள் பல்கிப் பெருகும். இதனால், மண்ணில் பௌதீக, ரசாயன, உயிரியல் பண்புகள் மேம்பட்டு, மண்வளமாகவும், நலமாகவும் இருக்கும். இதன் மூலம் மண்ணில் இடும் பாசன நீர், உரம் ஆகியவற்றில் சிக்கனம் செய்வதுடன், மண்ணின் உற்பத்தித்திறனையும் உயர்த்த முடியும்.

கழிவுகள் மீண்டும் மண்ணுக்கே!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கரிமச்சத்து ஒரு சதவிகிதத்துக்கும் கீழேதான் உள்ளது. மண் வளமாக இருக்க, கரிமச்சத்தின் அளவு குறைந்தபட்சம் 2 சதவிகிதமாவது இருக்க வேண்டும். அப்போதுதான் நுண்ணுயிர்கள் அதிகரித்து, மண்வளத்தைப் பெருக்க முடியும். எனவே, அங்கக இடு பொருட்கள் விவசாயத்துக்கு அத்தியாவசியமாகிறது.

அங்கக உரம் இல்லாமல் ரசாயன உரம் மட்டும் இட்டு விவசாயம் செய்வதால், மண் வளம் எந்த வகையிலும் மேம்படாது. கரிமப்பொருட்களில் முக்கியமானது கம்போஸ்ட் எனப்படும் மட்கு எரு. பண்ணையில் கிடைக்கும் அனைத்துப் பயிர்க்கழிவுகள், கால்நடைக்கழிவுகள், சாம்பல், பசுந்தழைகள் இவை அனைத்தையும் வைத்து மட்கு தயாரிக்கலாம். மிகச்சிறந்த முறையில் தயாரிக்கப்படும் மட்கில் மண்ணின் வளத்தை மேம்படுத்தும் அனைத்துக் கூறுகளும் உண்டு.

ஆடு, மாடுகளை வயலில் கிடை அமர்த்துவதன் மூலமாகவும் இந்த மட்கு மண்ணுக்குக் கிடைக்கச் செய்யலாம். பொதுவாக பயிர்களின் எடையில் 90 சதவிகிதம் நீரும், 10 சதவிகிதம் சத்துக்களும் இருக்கும். அதனால், 10 சதவிகிதம் உள்ள பயிர்க் கழிவுகளை எரிக்காமல், மீண்டும் மண்ணுக்கே கொடுக்கும்போது, மண்ணில் இருந்து பயிர் எடுத்த சத்துக்கள் மீண்டும் மண்ணுக்கே கிடைத்து விடுகிறது.

மூடாக்கு முக்கியம்!

மண்ணை வளப்படுத்த இன்னும் சில முறைகளும் இருக்கின்றன. அதில் முக்கியமானது மூடாக்கு. மானாவாரி, இறவை என இருவகை பாசன நிலங்களுக்கும் மூடாக்கு மிக அவசியமான ஒன்று. கரும்பு, வாழைப் பயிர்களில் மறுதாம்பு மூலமாக தொடர்ச்சியான மகசூல் எடுக்க, மூடாக்கு மிகவும் துணை புரிகிறது. இலைகள் சருகுகள், விலங்கு மற்றும் பயிர்க்கழிவுகளாலும் வேர்ப்பகுதி மண்ணை மூடிவைப்பதன் மூலம், சூரியஒளி நேரடியாக மண்ணில் விழாது. அதனால், மண் உலர்ந்து போகாது. அதே போல, கொழிஞ்சி, தட்டைப்பயறு, சணப்பு போன்றவற்றை உயிர்மூடாக்காகவும் பயன்படுத்தலாம். பலவகை பயிர் விதைப்பு மூலமாகவும் மண்ணை வளப்படுத்தலாம். மேல் மண்ணின் வளத்தைக் கூட்டுவதில் ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளின் வண்டல் சிறப்பாக செயல்படும். நிலத்தில் சாம்பல், எலும்புத்தூள் போன்றவற்றை இடுவதன் மூலமும் மண்ணின் வளத்தை அதிகப்படுத்த முடியும். மேற்கண்ட வழிமுறைகளைக் கடைபிடித்தால் மண்ணை நலமான மண்ணாக மாற்ற முடியும்.

19 பகுதிகளாக வெளிவந்த இந்தத் தொடர் கட்டுரையை இத்துடன் நிறைவு செய்கிறோம். மண்ணின் நலனை மேம்படுத்தும் வழிமுறைகளை விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தத் தொடரை எழுதியுள்ளோம். பொதுவாக மண்ணின் வளத்தில் நாம் கவனம் செலுத்திய அளவு அதன் நலத்தில் கவனம் கொள்ளவில்லை. தற்போது நோயாளியாக உள்ள மண், நலம் பெற இயற்கை விவசாயம் பெரிதும் துணை புரியும். இதை விவசாயிகள் உணர்ந்துகொண்டு, அங்கக கரிமத்தை மண்ணில் நிலைநிறுத்தும் பணியை உடனடியாகத் துவங்க வேண்டும்.

‘சர்வதேச மண் ஆண்டு’ என அறிவிக்கப்பட்ட 2015-ம் ஆண்டில், மண் நலத்தை பற்றிய இத்தொடரை எழுதக் களம் அமைத்துக் கொடுத்த ‘பசுமை விகட’னுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி!

-நிறைவு பெற்றது.

தொகுப்பு: ஆர்.குமரேசன்.