மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சை!

மரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும்  எண்டோசல்ஃபான் சர்ச்சை!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சை!

ஓவியம்: ஹரன்

*எண்டோசல்ஃபானால் 6 ஆயிரம் குழந்தைகள் பாதிப்பு!

*ஒரு ஏக்கர் நிலத்தில் 8,333 கிலோ மக்காச்சோளம் மகசூல் எடுத்த விவசாயிக்கு விருது

*ஆட்கள் பற்றாக்குறையால் விருத்தாச்சலம் மார்கெட் கமிட்டியில் நெல் தேக்கம்


யலில் வற்றலுக்காக பழுக்க விடப்பட்டிருந்த மிளகாய்களைப் பதம் பார்த்துக் கொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். வரப்பில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார், ‘காய்கறி’ கண்ணம்மா. வங்கிக்குச் சென்றிருந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி சற்று நேரத்தில் வந்து சேர்ந்தார். வாத்தியார், முகம் கழுவி மரத்தடியில் சென்று அமர... ஏரோட்டியும், காய்கறியும் அவரோடு சேர்ந்துகொண்டனர்.

“ரசாயன பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தினா, மனிதர்களோட வாழ்க்கையையே அதுக்கு விலையா கொடுக்க வேண்டியிருக்கும்னு பல நாட்டு விஞ்ஞானிகளும் எச்சரிக்கை கொடுத்துக்கிட்டே இருக்காங்க. இதுக்கு வாழும் உதாரணமா காலம்பூரா கண்ணீர்ல கரைஞ்சிக்கிட்டிருக்காங்க, காசர்கோடு மக்கள்” என்று சோகம் பொங்கும் குரலில் ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார் வாத்தியார். மற்ற இருவரும், அந்தச் சோகத்தில் மூழ்க ஆரம்பித்தனர்.

மரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும்  எண்டோசல்ஃபான் சர்ச்சை!

‘‘கேரள மாநிலத்துல காசர்கோட் பகுதியில முந்திரி அதிகமா விளையும். பரந்து பட்டு முந்திரிச் செடிகள் இருக்கிறதால, அந்த செடிகள்ல பூச்சிகளைக் கட்டுப்படுத்துறதுக்காக ஹெலிகாப்டர்ல இருந்தபடி பூச்சிக்கொல்லி தெளிப்பாங்க. 1976-ம் வருஷத்திலிருந்து 2000-ம் வருஷம் வரை, எண்டோசல்ஃபான்’ங்கிற பூச்சிக்கொல்லியைத்தான் அங்க பயன்படுத்தியிருக்காங்க. வருஷத்துக்கு மூணு தடவை இப்படி பூச்சிக்கொல்லியைத் தெளிச்சிருக்காங்க. அதனால, அந்தப்பகுதியில குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரை பயங்கர பாதிப்புக்குள்ளாகி இருக்காங்க. குழந்தைகள் மனவளர்ச்சி இல்லாம, கை, கால் சூம்பிப் போய் பிறந்து ரொம்ப கஷ்டப்படறாங்க. பாதிக்கப்பட்டவங்களுக்கு நிவாரணம் கேட்டு இன்னமும் அங்க போராட்டங்கள் நடந்துக்கிட்டிருக்கு’’ என்று நிறுத்தினார் வாத்தியார்.

‘‘கிட்டத்தட்ட 40 வருஷமாவா தொடருது இந்தப் போராட்டம்... நாம ஜனநாயக நாட்டுலதானே வாழறோம்?’’ என்று நொந்து போனவராக காய்கறி கேட்க...

தலையாட்டியபடியே தொடர்ந்த வாத்தியார், ‘‘கிட்டத்தட்ட 6 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறதா கணக்கு எடுத்திருக்காங்க. அப்படி பாதிக்கப்பட்டவங்களுக்கு இப்போ இருக்கிற கேரள அரசு, ‘மருத்துவ உதவி, நிதி உதவி செய்ய தயாரா இருக்கு’னு அறிவிச்சிருந்தது. அதை 3 ஆயிரம் குழந்தைகளோட பெற்றோர் ஏத்துக்கிட்டாங்களாம். மீதி பேர், ‘எங்களுக்கும் வயசாகுது. நாங்க இருக்கிற வரைக்கும் மன நலம், உடல் நலம் பாதிக்கப்பட்ட எங்க குழந்தைகளை வெச்சுக் காப்பாத்துவோம். எங்களுக்குப் பின்னாடி அவங்க என்ன செய்வாங்க? அவங்களுக்கு அரசு ஏதாவது நிரந்தர ஏற்பாடு செய்யணும்’னு போராட்டம் பண்றாங்க. திருவனந்தபுரத்துல மனநலம் பாதிக்கப்பட்ட 80 குழந்தைகளோட, 100 பெண்கள் தொடர் போராட்டத்துல ஈடுபட்டிருக்காங்க. அரசாங்கம் இன்னமும் பதில் சொல்லாததால விஷயம் இழுத்துக்கிட்டே இருக்கு’’ என்றார், வாத்தியார்.   

‘‘சூரிய மின் தகடு விஷயத்துல, சரிதா நாயர்ங்கிற பெண்மணி சுமத்தின ஊழல் குற்றச்சாட்டுல இருந்து தப்பிக்க முடியாம தவிச்சிட்டிருக்கிறார் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி. இந்த நிலையில, 40 வருஷ கண்ணீரையெல்லாம் அவர் எங்க கண்டுக்கப் போறார்? அதுசரி, நம்ம மாநிலத்துல எண்டோசல்ஃபானை தடை பண்ணிட்டாங்களா?’’ என்று கேட்டார், ஏரோட்டி.

அதற்கு பதில் சொன்ன வாத்தியார், ‘‘இங்கயும் விற்பனை செய்யக்கூடாதுனு தடை இருக்கு. ஆனா, கண்டும் காணாம விற்பனை நடந்துக்கிட்டுதான் இருக்கு. அதை விட பெரிய கொடுமை என்னான்னா... எண்டோசல்ஃபானை விட கொடிய பூச்சிக்கொல்லிகளுக்கு இங்க தடை இல்லைங்கிறதுதான்’’ என்றார்.

‘‘அடப்பாவிகளா’’ என்ற ஏரோட்டி அடுத்த செய்திக்குத் தாவினார்.

‘‘தேனி மாவட்டம், போடிக்குப் பக்கத்துல இருக்குற மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த விவசாயி, பெத்தனன். இவர், மக்காச்சோள சாகுபடி செய்றார். இவர், ஒரு ஏக்கர் நிலத்தில் 8 ஆயிரத்து 3,33 கிலோ மக்காச்சோளம் மகசூல் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடிச்சிருக்கார். அதனால, மத்திய அரசு வழங்கும் ‘கிரிஷி கர்மான்’ விருதுக்கு இவரைத் தேர்ந்தெடுத்திருக்காங்க. தமிழக அளவில் போன மூணு வருஷமா மக்காச்சோள சாகுபடியில் தேனி மாவட்டம்தான் முதலிடத்தில் இருக்குது’’ என்றார்.

‘‘பரவாயில்லையே...’’ என்ற காய்கறி கூடையிலிருந்து ஆளுக்கு ஒரு கொய்யாப்பழத்தை எடுத்துக் கொடுத்தார்.

அதைச் சாப்பிட்டுக் கொண்டே பேசிய வாத்தியார், ‘‘சம்பா பட்டத்துல போட்டிருந்த நெல் அறுவடை ஆரம்பித்ததும், விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு தினமும் பத்தாயிரத்துல இருந்து 25 ஆயிரம் மூட்டை வரை நெல் வரத்து இருக்குதாம். அதில்லாம எள், வேர்க்கடலை, உளுந்து, மக்காச்சோளம், வரகு...னு மூட்டை மூட்டையா வரத்தாகிக்கிட்டிருக்குதாம். ஆனா, கமிட்டியில ஊழியர் பற்றாக்குறையால அவ்வளவையும் கொள்முதல் பண்ண முடியலையாம். மொத்தமே 60 பணியாளர்கள்தான் இருக்கிறாங்களாம். அதனால, விவசாயிகள் கிட்டத்தட்ட மூணு நாளுக்கு மேல பனியிலயும், வெயில்லயும் காத்துக்கிடக்க வேண்டியிருக்குதாம். ரொம்பத் தவிச்சுபோய் இருக்கிறாங்க விவசாயிகள்’’ என்றார்.

அந்த நேரத்தில் மிளகாய் அறுவடைக்கு கூலி பேச ஆட்கள் வரவே, எழுந்து சென்றார், ஏரோட்டி. அத்தோடு மாநாடும் முடிவுக்கு வந்தது.