
மாத்தி யோசி, ஓவியம்: ஹரன்
-இப்படி ஒரு பழமொழி தமிழ்நாட்டுல பரவலா இருக்கு.
மாகாளிக்கும், நன்னாரிக்கும் தாவரவியல் ரீதியா, எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனா, நன்னாரி வாசமும், மாகாளி கிழங்கு வாசமும் ஒரே மாதிரி இருக்கும். அதனால, இப்படி ஒரு பழமொழி இருக்கு. மாகாளி, மாவிலங்குக் கிழங்கு, பெருநன்னாரி, வரணி, குமாரகம்னு ஏகப்பட்ட பேரு இந்த மாகாளிக் கிழங்குக்கு உண்டு. இதோட தாவரவியல் பேரு டிகாலெபிஸ் ஹாமில்டோனி (Decalepis Hamiltonii). பேரு வாயில நுழையாட்டாலும் பரவாயில்லை. இந்த மாகாளிக்கிழங்கு ஊறுகாயை ஒரேயொரு முறை நீங்க சாப்பிட்டிருந்தா, மாகாளிக்கிழங்குக்கு ரசிகர் மன்றம் வைக்கிற அளவுக்கு, அந்தக் கிழங்குப் புராணத்தைப் பாடுவீங்க.

இந்த மாகாளிக் கிழங்கு சென்னை, வேலூர், சேலம், திருச்சி... பகுதியில இப்பவும் விற்பனை செய்றாங்க. சென்னையில மாம்பலம், மயிலாப்பூர் பகுதிகள்ல கூறுகட்டி விக்கிறாங்க. இதை யாரும் தனிப் பயிரா சாகுபடி செய்றதில்லை. மலைப்பகுதியில இருந்துதான், கிழங்கைச் சேகரிச்சுக்கிட்டு வந்து விற்பனை செய்றாங்க. பொதுவா மலைச்சாரல் பகுதியில இந்த மாகாளிக் கிழங்கு வளரும் தன்மை கொண்டது.
சித்த, ஆயுர்வேத மருத்துவ முறையில மாகாளிக்கு தனியிடம் உண்டு. இந்தக் கிழங்குல செய்யுற ஊறுகாய் உடம்புக்குக் குளிர்ச்சியூட்டக் கூடியது, உணவு செரிமானத்தைத் தூண்டும், வயிறு சம்பந்தமான பிரச்னையைச் சரிசெய்யும், ரத்தத்தைச் சுத்தம் செய்யும், சளி, காய்ச்சல், இருமல், வாந்தி, வீக்கம் ,தோல் நோய், கர்ப்பப்பைக் கோளாறு, மூட்டுவலி, சிறுநீரகக் கோளாறுகளுக்கு கண் கண்ட மருந்துனு இதோட மருத்துவப் பயன் பட்டியல் ரொம்பவே நீளும்.
நம்ம ஊர்ல நன்னாரி சர்பத் எப்படி பிரபலமோ, அதே மாதிரி ஆந்திராவுல மாகாளியில சர்பத் போட்டு விற்கிறாங்க. நம்ம ஊர்ல, மோர்ல மாகாளிக் கிழங்கை ஊற வைச்சு ஊறுகாய் போடுறதுண்டு. மாகாளிக் கிழங்குல நார்ப்பகுதியை உரிச்சு எடுத்துட்டு, கிழங்கை சின்னச் சின்ன துண்டா, வெட்டி உப்பு, மிளகாய்த்தூள், சிறிது எலுமிச்சைப் பழச்சாறு கலந்துடணும். இதுல மோரையும் கலந்து வெச்சிட்டா ஒரு வாரத்துக்குள்ள ஊறுகாய் தயாராயிடும்.
ஐ.யு.சி.என் (International Union for Conservation of Nature)ங்கிற சுவிட்சர்லாந்துல இருக்கிற பன்னாட்டு உயிரினப் பாதுகாப்பு நிறுவனம் உலகளவில் அழிவில் இருக்கிற சிவப்புப் பட்டியல் தாவரங்கள்னு (Red Listed Medicinal Plant) ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கு. இந்தப் பட்டியல்ல மாகாளிக் கிழங்கும் உண்டு. இந்த பன்னாட்டு நிறுவனத்துல உள்ள பெரிய பெரிய விஞ்ஞானிக எல்லாம், அழிவுல இருக்குனு கண்டுப்புடிக்கிறதுக்கு முன்னாடியே, இதைச் சேகரிக்கிற நம்ம மலைவாழ் மக்கள் அதை உணர்ந்துட்டாங்க.
மாகாளிக்கிழங்கு, கிழக்குத் தொடர்ச்சி மலையிலதான் விளையுது. தமிழ்நாட்டுல கல்வராயன் மலை, சேர்வராயன் மலை(ஏற்காடு),... ஆந்திராவுல திருப்பதி மலைப்பகுதியிலயும், இந்தக் கிழங்கு விளையுது. கொஞ்சம் வறட்சியை விரும்பும், மாகாளிக் கிழங்குச் செடி பாறையிலதான் படர்ந்து வளரும். எனக்கு பழக்கமான கல்வராயன் மலைப்பகுதியில இருக்கிற, மாகாளிக் கிழங்கு சேகரிப்பாளர்கிட்ட, இந்தச் செடிங்க அழிஞ்சுக்கிட்டு வருதுனு, வெளிநாட்டுக்காரர் சொல்றாரே?னு கேட்டேன்.
‘அய்யா, எங்க மலைவாழ் மக்கள் கிழங்கைத் தோண்டினா, இன்னும் பல நூறு வருஷம் ஆனாலும், இந்தச் செடி அழியாது. ஏன்னா, நாங்க யாரும் முழுக்கிழங்கையும் தோண்டி எடுக்கமாட்டோம். ஒரு செடியில, அதிகபட்சம் மூணு கிழங்குதான் எடுப்போம். மீதிக் கிழங்கை அப்படியே, மண்ணைப் போட்டு மூடுவோம். அடுத்த 12 மாசம் கழிச்சித்தான், அந்தச் செடிப் பக்கம் திரும்பவும் போவோம். அப்போ, நாங்க தோண்டி எடுத்த பகுதியில இருந்து, புதுக்கிழங்கு வளர்ந்து வந்திடும். இப்படி, கிழங்கை விட்டுட்டு அறுவடை செய்றதால, எப்பவும் இந்தச் செடியில இருந்து , எங்க மலைவாழ் மக்களுக்கு அந்த பூமித்தாய் கிழங்கைக் கொடுத்துக்கிட்டே இருக்கா.
இந்தப் பூமித்தாய், மண்ணுல விளையுற ஒவ்வொரு பயிரையும், நமக்கு தாய்ப்பால் மாதிரி கொடுக்கிறா. பேராசைப்பட்டு, அவளோட மார்பை கடிச்சு, ரத்தத்தை உறிஞ்சுற வேலைதான், நாட்டுக்குள்ள நடக்குது. பூமியை சாமியா நினைக்கிற நாங்க, எந்தக் காலத்துலயும், செடி, கொடிகளை அழிச்சு, எங்க வயிறை வளர்க்க மாட்டோம்’னு உணர்ச்சிகரமா பேசினாரு.
இனி, மாகாளி ஊறுகாயை தொடறப்ப வெல்லாம், இயற்கையை தெய்வமா வணங்குற அந்த மலைவாழ் மக்கள் முகம்தான் கண்ணுக்கு முன்னால வந்து போகும்.