
புறா பாண்டி, படம்: வீ.சிவக்குமார்
‘‘மரச்செக்கு மூலம் எண்ணெய் எடுக்கும் தொழிலைத் தொடங்க விரும்புகிறோம். லாபகரமாக

நடத்தும் வழிமுறையைச் சொல்லுங்கள். இதற்கு வங்கிக்கடன் கிடைக்குமா?’’
சு.சா.அன்புமதி, மதுரை.
மரச்செக்கு மூலம் எண்ணெய் எடுத்து வரும் திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூரைச் சேர்ந்த சதீஷ் பதில் சொல்கிறார்.
‘‘பசுமை விகடன்’ இதழ் தொடங்கியது முதற்கொண்டே... மரச்செக்கு எண்ணெயின் மகிமையைப் பற்றிய செய்திகள் மற்றும் தகவல்களை, அவ்வப்போது வெளியிட்டு வாசகர்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறது. இப்போது, ‘சோசியல் மீடியா’ என்று சொல்லப்படும், ‘ஃபேஸ்புக்,’ ‘வாட்ஸ் அப்’... போன்ற வற்றிலும் மரச்செக்கு எண்ணெய், சிறுதானிய உணவுகள் குறித்த விழிப்பு உணர்வுச் செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. இதனால், மரச்செக்கு எண்ணெய் விற்பனையும் விறு விறுப்படைந்துள்ளது.
முன்பெல்லாம் மரத்தின் மூலம் செய்யப்பட்ட செக்கில், மாடுகள் மூலம்தான் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்... போன்றவற்றை ஆட்டி வந்தார்கள். காலப்போக்கில், கால்நடைகள் குறைந்து போனதாலும், மரச்செக்கின் மகத்துவம் தெரியாமல் போனதாலும், இந்தத் தொழிலின் வளர்ச்சி குறைந்துபோனது. மரச்செக்குகளின் இடத்தை இயந்திரங்கள் (ரோட்டரி) பிடித்துவிட்டன. ஆனால், மீண்டும் மரக்செக்குகள் வளரத் தொடங்கிவிட்டன. ஆனால், மாடுகளைப் பயன்படுத்தாமல், சிறிய அளவிலான மின்சார இயந்திரத்தைக் கீழே பொருத்தி, வாகை மரத்தில் செய்யப்பட்ட செக்கைக் கொண்டு எண்ணெய் எடுக்கப்படுகின்றது.

மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்போது, எண்ணெய் சூடேறாது. வாசனையும் மாறாமல் இருக்கும். நல்ல ருசியுடனும் ஒரு வருட காலத்துக்குக் கெட்டுப் போகாமலும் இருக்கும். மாதந்தோறும் ஒரு குடும்பத்துக்கு 5 லிட்டர் கடலை எண்ணெய் பயன்படுத்துகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்தக் குடும்பத்துக்கு மரச்செக்கு மூலம் ஆட்டப்பட்ட எண்ணெய் 3 லிட்டர்தான் செலவாகும். காரணம், இந்த எண்ணெய் அடர்த்தியாக இருக்கும். இதனால், குறைவான எண்ணெயைப் பயன்படுத்தினாலே போதும்.
மரச்செக்கு எண்ணெய்க்கு நல்ல விற்பனை வாய்ப்புகள் உள்ளன. சுமார் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நான் வாடகைக்குத்தான், மரச்செக்கு மூலம் எண்ணெயை ஆட்டி விற்பனை செய்தேன். தற்போது, சொந்தமாக மரச்செக்கு எண்ணெய் எடுக்கும் ஆலையை அமைத்துள்ளேன். முதலில் இந்தத் தொழிலில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள, வாடகைக்கு எண்ணெய் ஆட்டுவதுதான் சிறந்தது.
குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மரச்செக்கு எண்ணெய் எடுக்கும் தொழிலுக்கு வங்கிக்கடன் பெற வழிகாட்டுகிறார்கள். 10 லட்சம் ரூபாய் வரை வங்கிக்கடன் கிடைக்கும். கடன் தொகையில் 35% மானியமும் உண்டு. மின்சாரக் கட்டணத்தில் கூட 3% தள்ளுபடி செய்கிறார்கள். கிராமப்புறத் தொழிலான, மரச்செக்கு வளர்ச்சி அடைய, அரசு சார்பில் இப்படி உதவிகள் வழங்கப்படும் செய்தியே பலருக்கும் தெரியாமல் இருக்கிறது வேதனையான விஷயம்.
விற்பனை வாய்ப்பு என்று பார்த்தால், இயற்கை அங்காடிகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள்.... மரச் செக்கு எண்ணெயை விரும்பி வாங்கிக் கொள்கின்றன. தற்சமயம் மரச்செக்கு கடலை எண்ணெய் ஒரு லிட்டர் 210 ரூபாய்க்கும், நல்லெண்ணெய் 350 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மரச்செக்குப் பிண்ணாக்கில், 50 சதவிகிதத்துக்கு மேல் எண்ணெய் சத்துக்கள் உள்ளன. இதனால், இயற்கை விவசாயத்துக்கு நல்ல உரமாகவும், கால்நடைகளுக்கு அருமையான தீவனமாகவும் உள்ளது.’’
தொடர்புக்கு, செல்போன்: 94435-88224.
‘‘மைசூரில் உள்ள மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையத்தில் சைக்கிள் மூலம் இயங்கும் சிறுதானிய தோல் நீக்கும் இயந்திரம் உள்ளது என்று கேள்விப்பட்டேன். இதன் விவரம் சொல்லுங்கள்?’’
தி.சுரேஷ், ஓமலூர்.
கர்நாடக மாநிலம், மைசூரில், செயல்பட்டு வரும் மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் (Central Food Technological Research Institute-CFTRI) விஞ்ஞானி மஞ்சுநாத் பதில் சொல்கிறார்.
‘‘வேளாண் விளைபொருட்களுக்கான அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள், மதிப்புக் கூட்டும் வழிமுறைகள், மதிப்புக் கூட்டும் கருவிகள், புதிய உணவு தானியப் பயிர்களை அறிமுகப்படுத்துதல், ஆலோசனைகள்... எனப் பல்வேறு வகையிலும் விவசாயிகளுக்கு உதவும் விதமாக இயங்கி வரும் இந்த நிலையம், பல்வேறு பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. எங்கள் மையத்தின் மூலம் சைக்கிள் மூலம் இயங்கும் சிறுதானிய தோல் நீக்கும் இயந்திரம் (Pedal powered Millet Mill) உருவாக்கப்பட்டுள்ளது. ஒருவர் சைக்கிள் மீது ஏறி பெடலை சுற்றினால், வரகு, சாமை... உள்ளிட்ட சிறுதானியங்களின் தோல் நீங்கி, அரிசி கிடைக்கும். தற்போது, இதற்கான ஆராய்ச்சிப் பணிகள் முடிவடைந்துவிட்டன.

எங்கள் மையத்துக்கு வரும் பார்வையாளர்களை, இந்த தோல் நீக்கும் இயந்திரத்தை இயக்கிக் காட்டும்படி சொல்கிறோம். எங்கள் மையத்தில் இந்தக் கருவியை விற்பனை செய்வதில்லை. வெளிநிறுவனங்களுக்கு இதற்கான தொழில்நுட்பத்தை வழங்குவோம். அந்த நிறுவனங்கள் விவசாயிகளுக்குத் தேவையான கருவிகளை வடிவமைத்து வழங்குவார்கள்.’’
தொடர்புக்கு,
Head,
Information & Publicity, CFTRI, Mysore-570020 Telephone : 0821-2515910.
E-mail: ttbd@cftri.res.in,
Website : www.cftri.res.in
‘‘கால்நடைகளுக்கு ஏற்ற பசுந்தீவன மரங்கள் பற்றி சொல்லுங்கள்?’’
எம்.ஆர்.பலராமன், ஈரோடு.
காட்டுப்பாக்கம், கால்நடை ஆராய்ச்சி மையத்தில் உள்ள, கால்நடை உணவியல் நிலையத்தின்

விஞ்ஞானி முனைவர். வெ.செ.மைனாவதி பதில் சொல்கிறார்.
‘‘கோடைக் காலங்களில் பசுந்தீவனங்கள் கிடைக்காத தருணத்தில் மரத்தழைகள் சிறந்த பசுந்தீவனமாகப் பயன்படுகின்றன. இவை, மற்ற தீவனங்களைக் காட்டிலும் ஊட்டச்சத்து மிகுந்ததாக விளங்குகின்றன. மரத் தழைகளில் பொதுவாக 20 முதல் 40 சதவிகித உலர்பொருள், 10 முதல் 15 சதவிகிதப் புரதச்சத்து மற்றும் 40 முதல் 65 சதவிகித அளவு செரிமானமாகக்கூடிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சவுண்டல் (சூபாபுல்), அகத்தி போன்ற மரத்தழைகள் 30 சதவிகித புரதச்சத்தை அளிக்கக் கூடியவை. இந்தத் தழைகளை தீவனத்தின் ஒரு பகுதியாக பயன்படுத்துவதன் மூலம் தீவனச் செலவு கணிசமாகக் குறைகிறது. வன்னி, கருவேலம் மற்றும் கொருக்காப்புளி போன்றவை வறண்ட பகுதிகளிலும் நன்றாக வளரக்கூடியவை. இவற்றின் தழைகள் மற்றும் காய்கள் இப்பகுதிகளில் உள்ள ஆடுகளின் தீவனத் தேவையை நிறைவேற்றுகின்றன.
மரத்தழைகளின் புரதச்சத்து, இரைப்பையில் நுண்ணுயிர்களால் அவ்வளவாகச் சிதைப்படுவதில்லை. அப்படி சிதைக்கப்படாத புரதம் சிறுகுடலில் செரிமானமாக்கப்படுவதால் சிறந்த பயனைக் கொடுக்கிறது. மரங்களின் காய்களிலும் புரதச்சத்து மிகுந்து காணப்படுகின்றது.மரத்தழைகளில் சுண்ணாம்புச் சத்து மற்ற தீவனங்களைக் காட்டிலும் இரண்டில் இருந்து மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. உயிர்ச்சத்து ‘ஏ’ தேவைக்கு மேல் அதிகமாக மரத்தழைகள் மூலம் கிடைக்கின்றது. அகத்தி, முருங்கை, ஆச்சா போன்ற மரங்களின் தழைகள் இரும்புச்சத்தை அதிகம் கொண்டுள்ளன.

மரத்தழைகளில் உள்ள ஊட்டச்சத்து விகிதங்கள் வறட்சியினால் பாதிக்கப்படுவதில்லை. ஆகையால், வறட்சிக் காலங்களிலும் ஊட்டச்சத்து நிறைந்த சிறந்த பசுந்தீவனமாக மரத்தழைகளைப் பயன்படுத்தலாம். நார்ச்சத்தைக் குறைவாகவும், புரதச்சத்தை அதிகமாகவும் கொண்ட சவுண்டல் (சூபாபுல்), அகத்தி போன்ற மரத்தழைகளை வெயிலில் உலரவைத்து, அரைத்து கோழித் தீவனத்தின் ஒரு பகுதியாகச் சேர்ப்பதன் மூலம் தீவனச் செலவு குறைவதோடு, முட்டையின் மஞ்சள் கரு அதிக மஞ்சள் நிறம் கொண்டதாக விளங்குகிறது. கோடைக் காலங்களில் கோழிகளுக்கு, அகத்தி இலைகளை நறுக்கி வழங்குவதன் மூலம், கோடை வெப்பத்தின் பாதிப்பைத் தவிர்க்கலாம்.
கல்யாணமுருங்கை, அகத்தி போன்ற மர இலைகளை முயல்கள் விரும்பி உட்கொள்கின்றன. மர இலைகளில் இயற்கையாகவே நச்சுப் பொருட்கள் உள்ளன. இவற்றைப் போக்க, வெயில் மர இலைகளை சற்று காயவைத்துக் கொடுத்தால், அந்த நச்சுத்தன்மை நீங்கும்.’’
