Published:Updated:

கார்ப்பரேட் கோடரி - 13

கார்ப்பரேட் கோடரி
பிரீமியம் ஸ்டோரி
News
கார்ப்பரேட் கோடரி ( கார்ப்பரேட் கோடரி )

மண் மீதான வன்முறையைத் தோலுரிக்கும் தொடர்!‘சூழலியலாளர்’ நக்கீரன், ஓவியம்: ஹரன்

கிராமமயமாக்கல்... புறப்பட்டது புது பூதம்!

மூன்றாம் உலக நாட்டு மக்களை ஒழித்துக்கட்ட கார்ப்பரேட் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட கருத்தாக்கமே ‘உலகமயமாக்கல்’. இன்று இதன் சாயம் வெளுத்துவிட்டாலும், இதுபோன்ற புதிய கருத்தாக்கங்கள் உருவாக்கப்படுவது நின்றபாடில்லை. அதிலொன்றுதான் ‘கிராமமயமாக்கல்’. தற்போது ஆப்பிரிக்க கண்டத்தில் நடைமுறையிலிருக்கும் இதை, விரைவில் இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம். கிராம வளர்ச்சிக்கானது போல தோற்றம் தரும் இச்சொல்லாடலின் பின்புலத்திலிருக்கும் பல வன்முறைக் கதைகளிலிருந்து ஒரு சில காட்சிகளை மட்டும் பார்ப்போம்.

ஆப்பிரிக்க கண்டத்தின், ‘மொசாம்பிக்’ நாட்டிலுள்ள ‘லிம்போபா’ ஆற்றுப்படுகையில் ஒரு நாள் பெரும் டிராக்டர் ஒன்று வந்தது. அவ்வளவு பெரிய டிராக்டரை அம்மக்கள் அதற்கு முன் பார்த்ததில்லை. அவர்கள் வியந்து கொண்டிருக்கும்போதே, அது அவர்களுடைய வாழைத் தோட்டங்களைச் சாய்த்துத் தள்ளியது. சோளப்பயிர்கள், பயறு வகைகள், கிழங்கு வகைகளென அடுத்தடுத்துப் பலியாகின. அனைத்தும் சில நிமிடங்களில் நடந்து முடிய... செய்வதறியாத மக்கள் சினம் கொண்டு அரசு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். அதிகாரிகளோ, அம்மக்களுடைய ஐம்பதாயிரம் ஏக்கர் நிலமும் சீன கார்ப்பரேட் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டு விட்டதாக அலட்சியமாகச் சொன்னார்கள்.

கார்ப்பரேட் கோடரி - 13

எத்தியோப்பியா நாட்டின்  மண் வளமிக்க பகுதி, ‘காம்பெல்லா’. ‘அனுவாக்‘, ‘நூயர்’ என்கிற இரு தொல்குடி இனங்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த பகுதி இது. இத்தொல்குடிகள் இன்று தம் நிலங்களை இழந்து நிற்கின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களால் இவர்களது நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. அதோடு இவர்களை நிலத்திலிருந்து உடைமைகளுடன் வெளியேறு மாறும் கட்டாயப்படுத்தியது, அரசு. போக மறுத்தவர்களின் வீடுகள் உடைக்கப்பட்டன.

இத்தனைக்கும் இந்நிலத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கும் முன்னர் இம்மக்களிடம் ஒரு முறை கூட அரசு கலந்து பேசவில்லை. நிலத்துக்கான இழப்பீடும் கொடுக்கவில்லை. காரணம், இவர்கள் தொல்குடிகள் என்பதுதான். உலகில் எந்த தொல்குடிகளுக்கு நில பட்டா இருக்கிறது?.

ஆப்பிரிக்க தொல்குடிகளுக்கு நிலம் என்பது பொதுவானது. ‘நிலத்தின் பலன்களை மட்டுமே மனிதர்கள் அனுபவிக்க உரிமையுண்டு’ என்கிற கொள்கை உடையவர்கள். நூறாண்டு காலமாக உழவுத்தொழில் செய்து வந்தாலும், நில பட்டா இல்லாத காரணத்தால் இவர்களின் நிலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சட்டப்பூர்வமாகவே கைமாற்றப்பட்டு விட்டது. இத்தொல்குடிகளால் புகாரும் அளிக்க முடியாது. மீறி அளித்தபோது, புகார் அளித்தவர்களையே கைது செய்தனர். ஆக, பட்டா இல்லாத பழங்குடிகளானாலும் சரி, பட்டா வைத்திருக்கும் வேளாண் குடிகளானாலும் சரி... இருவரையுமே நிலத்தை விட்டு வெளியேற்றும் இத்திட்டத்துக்கு பெயர்தான் ‘கிராமமயமாக்கல்’.

கிராமத்தையே காலி செய்யும் திட்டத்துக்கு எப்படி ‘கிராமமயமாக்கல்’ என்று பெயர் வைத்தார்கள்? என்பதுதான் வேடிக்கை. காலி செய்யப்படும் மக்கள் அனைவரையும் புதிதாக உருவாக்கப்பட்ட கிராமத்தில் குடியேற்றுவதால் இதன் பெயர் கிராமமயமாக்கல். இப்படி குடியேற்றப்பட்ட இடத்தில் தண்ணீர் வசதி உட்பட எந்தவொரு அடிப்படை வசதியும் கிடையாது. மரபார்ந்த அறிவைக் கொண்டு வேளாண்மை செய்து, தற்சார்புடன் வாழ்ந்த இம்மக்கள், இன்று உள்நாட்டு அகதிகள். சர்வதேச மனித உரிமைகள் சட்டம் முற்றிலும் மதிக்கப்படவில்லை. கடந்த 2010-ம் ஆண்டு முதல் பல்லாயிரக்கணக்கான ஆப்பிரிக்க உழவுக்குடிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக தங்கள் மூதாதையர் நிலத்திலிருந்து இவ்வாறு விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க மண், கார்ப்பரேட் நிறுவனங்களின் வேட்டைக் காடாக மாறிவிட்டது.

மடகாஸ்கர் நாட்டில் உயிரி எரிபொருள் உற்பத்திக்காக, 99 ஆண்டுகள் குத்தகைக்கு கொரியாவின் ‘டேவூ’ நிறுவனம் விலை பேசிய 30 லட்சம் ஏக்கர்; கென்யா நாட்டில் கத்தார் நாடு வாங்கிய ஒரு லட்சம் ஏக்கர் என இப்பட்டியல் மிகப்பெரியது. சுருக்கமாகச் சொன்னால் 5 கோடி ஏக்கர் அளவிலான ஆப்பிரிக்காவின் விளை மண், இன்று அந்நாடுகளின் உழவர்கள் கையில் இல்லை. இதில் முன்னணியில் இருப்பது எத்தியோப்பியா.

2008-ம் ஆண்டிலிருந்து எத்தியோப்பியாவில் மட்டும் ஃபிரான்ஸ் நாட்டின் பரப்பளவுக்கு ஈடான நிலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. 

புதிய வகை காலனியமாக உருவாகியுள்ள கிராமமயமாக்கல் என்கிற பெயர் எத்தியோப்பியாவில்தான் சூட்டப்பட்டது. 1980-களில் கடும் வறுமையினால் ஒட்டிய வயிறும், எலும்பும் தோலுமாகக் காட்சியளித்த குழந்தைகளைக் கொண்ட நாடாக உலகுக்குக் காட்டப்பட்ட எத்தியோப்பியா, நமக்கு நினைவில் இருக்கும். அதற்கு நேர்மாறாக இன்று அதன் தலைநகரமான ‘அடீஸ் அபாபா’ கவின்மிகு கட்டடங்களோடு செல்வச் செழிப்புடன் காட்சியளிக்கிறது. இன்றைய நிலையில், ஆப்பிரிக்காவிலேயே அதிக கோடீஸ்வரர்கள் உருவாகும் நாடு, எத்தியோப்பியாதான். இதற்கான முதன்மைக் காரணங்களுள் ஒன்றாக இந்த கிராமமயமாக்கல் சுட்டப்படுகிறது. அப்படியானால், உழவர்கள் எல்லாம் செல்வந்தர்களாகி விட்டார்களா? என்றால் அதுதான் இல்லை.

இந்நாட்டின் ஒன்பது கோடி மக்களில் 90 சதவிகித மக்களுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளே ஒழுங்காகக் கிடைப்பதில்லை. இன்றும் 3 கோடி மக்கள் பட்டினியுடன்தான் வாழ்கின்றனர். ஆனால், இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜி.டி.பி 108 சதவிகிதம் என்கிற புள்ளி விவரம் மலைக்க வைக்கிறது. இந்திய ஆட்சியாளர்களாலும்,  இந்த ஜி.டி.பிதான் அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கார்ப்பரேட் கோடரி - 13

இங்கு ஏன் இந்தியா சுட்டப்படுகிறது என்றால், இந்த கிராமமயமாக்கல் என்கிற சொல்லாடலின் மாற்று வடிவம்தான் மோடி அரசு, கொண்டுவரத் துடிக்கும் ‘நிலம் கையகப்படுத்தும் சட்டம்’. ஏற்கெனவே சட்டீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களின் பழங்குடிகள் தம் வாழ்விடங்களை இழந்துள்ளனர். இப்போது வேளாண் குடிகளையும் தம் வாழ்நிலத்தை இழக்கச் செய்யும் முயற்சியே இச்சட்டம். ‘இது அவ்வளவு எளிதில் நடக்காது’ என்று அசட்டையாகவும் இருந்து விட முடியாது. ஏனெனில் தொழில் வளர்ச்சி மேம்பாட்டுக்காக இதுவரை ஆறு கோடி பேரை சூழலியல் அகதிகளாக மாற்றிய நாடுதான் இந்தியா.

வேளாண் நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கையளிக்கும்போது, ‘வேளாண் பொருட்களின் உற்பத்தி பெருகும்’ என்பதே எல்லா நாட்டு அரசுகளும் கூறும் புளுகு. ஆனால், இன்றைய நிலையில் உயிரி எரிபொருள் உற்பத்திக்கே நிலம் பயன்படுத்தப்படுகிறது. மீறி உணவுப்பொருட்கள் விதைக்கப்பட்டாலும்... அவை, சொந்த நாட்டு மக்களின் வயிற்றை நிரப்பாது. இதற்கு சாட்சி, எத்தியோப்பியா. காம்பெல்லா பகுதியில் சவுதி அரேபியா 25 ஆயிரம் ஏக்கர் நிலம் வாங்கி, அதில் நெல் சாகுபடி செய்கிறது. இதில் கொடுமை என்னவெனில், அப்பகுதி மக்கள் அரிசியை உண்ணுவதில்லை என்பதுதான். அங்கிருந்து சவுதி மற்றும் வளைகுடா நாட்டு மக்களுக்கு தான் அரிசி ஏற்றுமதியாகிறது. தம் நாட்டு மக்கள் உண்ணாத ஒன்றை ஏன் விளைவிக்க வேண்டும் என்கிற கேள்விக்கு, ‘அம்மக்களுக்கு நெல் பயிரிடக் கற்றுக் கொடுக்கிறோம்’ என்று ஆணவமாக பதில் தருகிறது, அந்நாட்டு அரசு.

இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களும் ஆப்பிரிக்காவில் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்திருக்கின்றன. எத்தியோப்பியாவில் மட்டும் 15 லட்சம்  ஏக்கர் நிலங்களை இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் நீண்ட கால குத்தகை அடிப்படையில் வாங்கி அம்மக்களை நிலத்திலிருந்து விரட்டியுள்ளன. இந்நிறுவனங்கள், ஆப்பிரிக்காவில் முதலீடு செய்து இந்தியர்களுக்கு உணவளிக்கப் போகிறது, என யாரும் கற்பனை செய்து விட வேண்டாம். உலகமயமாக்கல் கொள்கையின் அடிப்படையில் இந்த விளைபொருளை உலகின் எந்த மூலையில் லாபம் கிடைக்கிறதோ, அங்குதான் விற்பார்கள். ஆக, இவர்களுடைய முதலீடு சொந்த நாட்டு மக்களுக்கும் உதவுவதில்லை. ஆப்பிரிக்க மக்களுக்கும் உதவப் போவதில்லை. சுருக்கமாக, இது ஒரு மண் திருட்டு.

‘கருத்தூரி குளோபல்’ எனும் இந்திய நிறுவனம் காம்பெல்லா பகுதியில் 8 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது. சொந்த நாட்டிலேயே வெளிநாட்டுக் காதலர்களுக்கான ரோஜாவை சாகுபடி செய்யும் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்றான இது, ஆப்பிரிக்க நிலத்தில் உயிரி எரிபொருள் தேவைக்காக சோளம், செம்பனை வளர்க்கத் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவன அதிகாரியிடம் அப்பகுதி தொல்குடி உழவர்களின் மீதான மனித உரிமை மீறல் குறித்துக் கேட்கப்பட்ட போது, அந்நிறுவனம் சொன்ன பதில், ‘இதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை’ என்பதுதான்.

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்... இன்று எப்படி இந்நிறுவனம் எத்தியோப்பியாவின் சட்டத்துக்குப் பின்னே ஒளிந்துகொண்டு தப்பிக்கிறதோ, அதேபோல,  நாளை இந்தியாவிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய சட்டத்துக்கு பின்னால் ஒளிந்து கொண்டு இதே பதிலைச் சொல்லும். பன்னாட்டு நிறுவனங்களுக்காக அல்ல, உள்நாட்டு நிறுவனங்களுக்காக நிலம் கையகப்படுத்தப் பட்டாலும், இதுதான் நிலைமை. இது போன்ற இன்னும் பல எச்சரிக்கைகளை இறுதி அத்தியாயத்தில் காண்போம்.