
ஓவியம்: ஹரன்
வாத்தியார்’ வெள்ளைச்சாமி செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டிருக்க, மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு வந்தமர்ந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், தானும் செய்தித்தாளைப் புரட்ட ஆரம்பித்தார். தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு சற்றுநேரத்தில் வந்து சேர்ந்த ‘காய்கறி’ கண்ணம்மா, ‘‘பேப்பர்ல என்னய்யா சிறப்பு செய்தி போட்டிருக்காங்க?’’ என்று கேட்டுக்கொண்டே அருகில் அமர... அன்றைய மாநாடு துவங்கியது.
‘‘எந்த பேப்பரை எடுத்தாலும், இப்போ அரசியல் செய்திதான். ‘இந்தக் கட்சி அந்தக் கட்சியோட கூட்டணி வைக்கப்போகுது. இந்தக் கட்சிதான் ஜெயிக்கப் போகுது, அந்தக் கட்சி தேர்தல்ல டெபாசிட் கூட வாங்காது’னு அவங்கவங்களுக்கு தோணுனபடி எழுதிக்கிட்டு இருக்காங்க. இந்த சமயத்துல அப்படி எழுதுனாத்தான பரபரப்பா இருக்கும்” என்ற வாத்தியார், ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.
‘‘ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்துல வாராவாரம் வியாழக்கிழமை மாட்டுச் சந்தை நடக்கும். இந்த சந்தையில வழக்கமா பொங்கல் பண்டிகைக்கு அப்பறம்தான் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும். வழக்கமா ஜனவரி கடைசி வாரத்துல இருந்து மாடுகள் அதிகளவுல வரும். ஆனா, இந்த வருஷம் பிப்ரவரி மாச மத்தியில்தான் வரத்து அதிகரிக்க ஆரம்பிச்சிருக்கு. கோடைகாலம் வந்தா மாடுகளுக்கு பால் சுரப்பு குறையும். பசுந்தீவன உற்பத்தி பாதிக்கப்படுறதோட மேய்ச்சல் நிலங்கள்ல இருக்கிற புல் பூண்டுகூட காய ஆரம்பிச்சிடும். அதனாலதான் இந்த சீசன்ல மாடுகள் வரத்து அதிகமாகும். அதே நேரத்துல இந்த சீசன்ல வளர்ப்புக் கன்றுகள் விற்பனையும் அதிகளவுல இருக்கும். வரத்து அதிகமா இருக்கிறதால தமிழ்நாடு விவசாயிகள் மட்டுமில்லாம கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள்ல இருந்தெல்லாம் வியாபாரிகள் அதிகமா வர்றாங்க. அதனால, மாடுகளுக்கு நல்ல விலையும் கிடைக்குதாம்” என்றார், வாத்தியார்.

‘‘ஆமாய்யா நானும் கேள்விப்பட்டேன். நானும் போய் ரெண்டு கன்னுக்குட்டிய பிடிச்சுக்கிட்டு வரலாம்னு இருக்கேன்” என்ற ஏரோட்டி, ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.
“ராமநாதபுரத்துல வைக்கோல் விலை ரொம்ப சரிஞ்சு போயிடுச்சாம். அதனால, விவசாயிங்க ரொம்ப கவலையில இருக்கிறாங்க. அங்க ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல நெல் சாகுபடி நடக்குது. இப்போதான் அறுவடை நடந்துட்டு இருக்கு. ஒரே நேரத்துல அறுவடைப்பருவம் வந்ததால, கூலியாள் தட்டுப்பாடு அதிகமாயிடுச்சாம். அதனால, மெஷின் வெச்சுதான் அறுக்கிறாங்க. மெஷின்ல அறுக்கிற வைக்கோலைக் கட்டு கட்டித்தான் விற்பனை செய்வாங்க. அதனால, விலை கொஞ்சம் குறைவாத்தான் கிடைக்கும். இந்த வைக்கோலை போர் போட்டு வைக்கிறது சிரமம்ங்கிறதால, இதை வாங்க உள்ளூர் வியாபாரிகள் ஆர்வம் காட்டலையாம். அதனால, புரோக்கர்கள் மூலமா வெளியூர் வியாபாரிகள்தான் வாங்க வர்றாங்களாம். அவங்களும் ஒரு கிலோ வைக்கோலுக்கு 50 காசு அளவுலதான் விலை கொடுக்கிறாங்களாம். அதனால, பல விவசாயிகள் வைக்கோலை விற்பனை செய்யாம தீ வெச்சு கொளுத்திட்டு அடுத்த போகத்துக்கு வயலைத் தயார் செய்ய ஆரம்பிச்சிட்டாங்களாம்” என்றார், ஏரோட்டி.
தான் கொண்டு வந்திருந்த தர்பூசணிப் பழத் துண்டுகளை ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொடுத்த காய்கறி, “தர்பூசணிப் பழம் இந்த வருஷம் தாமதமாத்தான் விற்பனைக்கு வந்திருக்கு. வழக்கமா பிப்ரவரி முதல் வாரத்திலேயே ஆரம்பிச்சிடும். ஆனா, இந்த வருஷம் இப்போதான் சூடுபிடிக்க ஆரம்பிச்சிருக்கு. இந்த வருஷம் கிலோவுக்கு மூணு ரூபாய் கூடுதலா விற்பனையாகுது. போன வருஷம் ஒரு கிலோ 12 ரூபாய்னு விற்பனையாச்சு. இந்த வருஷம் 15 ரூபாய்னு விற்பனையாகுது. விவசாயிகள்கிட்ட கிலோ 4 ரூபாய்ல இருந்து 8 ரூபாய் வரைக்கும் வாங்குறதா சொல்றாங்க. இப்போதைக்கு ஆந்திராவில் இருந்துதான் பழம் வந்துக்கிட்டு இருக்கு. தமிழ்நாட்டுல அறுவடை ஆரம்பிச்சபிறகுதான் உண்மையான கொள்முதல் விலை தெரியும்” என்றார், காய்கறி.
“பாருடா... நீ கூட சேதி சொல்ல ஆரம்பிச்சிட்ட” என்று கலாய்த்த ஏரோட்டியிடம்,
“நான் என்ன உன்னை மாதிரி அங்க இங்க நகராம ஒரே இடத்துல உக்காந்திருக்கிற ஆளுனு நினைச்சியா... தினமும் மார்கெட்டுக்கு போறதாலதான்யா இந்த விவரமெல்லாம் தெரியுது. நீ, உன்னோட விளைபொருளையே நேரடியா மார்கெட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போகாம வண்டியில அனுப்பி வெச்சுட்டு உக்காந்துக்குவ. கமிஷன் கடைக்காரர் சொல்ற விலையை வாங்கிட்டு கம்முனு விட்டுருவ. நான் அப்படி இருக்க முடியுமா? போய் பேரம் பேசி வாங்கிட்டு வந்தாத்தான நாலு காசு லாபம் பாக்க முடியும்” என்று சூடாகச் சொன்னார் காய்கறி.
‘‘சரியா சொன்ன கண்ணம்மா... விவசாயிகள் நேரடி விற்பனை செய்யாட்டாகூட பரவாயில்லை. குறைஞ்சது, மார்க்கெட்டுக்குக்காவது நேரடியா கொண்டு போனாத்தான் உண்மையான விலை நிலவரம், எவ்வளவு காய் வரத்தாகுது... எவ்வளவு தேவை இருக்குனு தெரிஞ்சுக்க முடியும். அதுக்கேத்த மாதிரி சாகுபடி பண்ண முடியும்” என்று சொன்ன வாத்தியார், அடுத்த செய்தியை ஆரம்பித்தார்.
“தேனி மாவட்டம், வைகை அணை பக்கத்துல இருக்கிற கோவில்பட்டி கிராமத்துல 15 ஏக்கர் அளவுல அரசு தென்னை நாற்றுப் பண்ணை இருக்கு. இங்க இருந்துதான் தேனி, மதுரை, திண்டுக்கல் விவசாயிகளுக்கு மானிய விலையில தென்னங்கன்னு கொடுத்துக்கிட்டு இருக்கிறாங்க. இங்க, நெட்டை குட்டை, நெட்டைனு ரெண்டு ரக கன்னுகளும் விற்பனை செய்றாங்க. 35 வருஷமா இந்தப் பண்ணை செயல்பாட்டுல இருக்கு. விவசாயிகள் தரமான கன்னுகளை நம்பி வாங்கிட்டு இருந்தாங்க. இப்போ, இந்தப் பண்ணையில கடும் தண்ணீர் தட்டுப்பாடு. அதனால அஞ்சு ஏக்கர் அளவுல கூட தென்னங்கன்னு உற்பத்தி இல்லையாம்.
விவசாயிகள் தனியார் பண்ணைகள்ல தான் தென்னங்கன்னு வாங்கிக்கிட்டு இருக்காங்களாம். அந்தக் கன்னுகளுக்கு தரத்துக்கு உத்தரவாதம் கிடையாது. ஆனா, விலை அதிகம். அதனால, அரசாங்கம் உடனே நடவடிக்கை எடுத்து இந்தப் பண்ணையில உற்பத்தியை அதிகரிக்கணும்னு விவசாயிகள் கோரிக்கை வெச்சிருக்காங்க” என்றார், வாத்தியார்.
‘‘வெயில் ஏறிடுச்சு, மாடுகளுக்கு தண்ணி காட்டி, இடம் மாத்தி கட்டணும் கிளம்புறேன்’’ என்று சொல்லிக் கொண்டே ஏரோட்டி எழுந்து போக, அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.
உண்ணாவிரதம் வாபஸ்!
‘அத்திக்கடவு-அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை அரசு ஏற்றுக் கொண்டு அரசிதழில் வெளியிட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்து அத்திக்கடவு-அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்ட கூட்டமைப்புப் போராட்டக் குழுவினர்... பிப்ரவரி 8-ம் தேதியில் இருந்து காலவரையற்ற தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த 18-ம் தேதி, ‘அத்திக்கடவுத் திட்டத்துக்காக 3.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, திட்டத்துக்கான நிர்வாக உத்தரவு அரசிதழில் வெளியிடப்படும்’ என தமிழக அரசு அறிவித்தது. அதனால், போராட்டக் குழுவினர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர்.
-இந்தப் போராட்டம் பற்றி விரிவான செய்தி 60-ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.