
உலகப்பசி தீர்ப்போமா? அல்லது ‘கார்ப்பரேட் அடிமை’ ஆவோமா?‘சூழலியலாளர்’ நக்கீரன், ஓவியம்: ஹரன்சுற்றுச்சூழல்
*வளரும் நாடுகளிலுள்ள ஒர் உழவனின் ஒரு நாளைய சராசரி வருமானம் 2 டாலர். ஆனால், ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் மானியம் 3 டாலர்.
*குடகு மலையைச் சீரழித்து தேயிலை நட்டபோதும், சோலைக்காடுகளை அழித்து தைல மரங்களை நட்டபோதும், காவிரிப்படுகை உழவர்கள் கவலைப்படவில்லை. விளைவு, இன்று காவிரியில் நீரைக் காணோம்.
*இயற்கை வேளாண்மைக்கே கூட காலநிலை மாற்றம், பாதிப்பை ஏற்படுத்தவுள்ளது. தமிழகத்தில் அடுத்த முப்பதாண்டுகளுக்குள் சராசரியாக ஒரு டிகிரி செல்ஷியஸ் வெப்பம் உயரப் போகிறது.
*நம்மிடம் கைநீட்டிக் கெஞ்ச வேண்டிய அந்நாடுகள், நமக்கு கை தட்டி உத்தரவிடுகின்றன.
ஒரு பேராசிரியர் தம் மாணவர்களுடன் ஆய்வு செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வீரியமிக்க ஓர் அமிலம் தரையில் கொட்டி விட்டது. உடனே அந்்தப் பேராசிரியர் மாணவர்களை எச்சரித்து, ஆய்வகத்திலிருந்து வகுப்பறைக்கு அழைத்துச் சென்றார். ஆபத்தான அந்த அமிலத்தை அப்புறப்படுத்தும் புதிய வேதிப்பொருளைத் தயாரிக்க வேண்டும். கொட்டிய அமிலத்தின் மூலக்கூறுகளை, எந்த வகை மூலக்கூறுகளைக் கொண்ட வேதிப்பொருளால் அழிக்க முடியும் என்பதைக் கண்டுபிடிக்க, மூலக்கூறு விளக்கப் படங்களை வரைந்தார். பிறகு ஒரு வழியாக, புதிய வேதிப்பொருளுக்கான சூத்திரத்துடன் அனைவரும் ஆய்வகம் திரும்பினர். ஆனால், அங்கு அமிலம் கொட்டிய இடம் துடைக்கப்பட்டு காலியாக இருந்தது. அதிர்ச்சியடைந்த பேராசிரியர், ‘ இதை யார் துடைத்தது?’ எனக் கேட்க, அங்கிருந்த ஆய்வகத் தொழிலாளி, ‘நான் தான் துடைத்தேன்’ என்றார். பேராசிரியருக்கோ பெரும் வியப்பு. ‘என்ன சூத்திரம் பயன்படுத்தினாய்?’ எனக் கேட்டார். அதற்கு அந்தத் தொழிலாளி சொன்னார், ‘ஒரு விளக்கமாறும், ஒரு வாளித் தண்ணீரும்’.

இக்கதையில் வரும் பேராசிரியர்தான் கார்ப்பரேட் வேளாண்மை. எளியமுறையில் தீர்வு கண்ட தொழிலாளிதான் இயற்கை வேளாண்மை. இந்நிகழ்வுக்குப் பிறகு உண்மையான அறிவு எங்கிருக்கிறது என்பதை அறிந்துகொண்ட சில மாணவர்கள், அப்பேராசிரியரை விட்டு விலகிவிட்டனர். அவர்கள்தான் இயற்கை உழவர்கள். இருப்பினும், அப்பேராசிரியரோடு இன்னும் பல மாணவர்கள் இருக்கிறார்களே...
தரிசுக்கும் மானியம் தரும் அமெரிக்கா!
கார்ப்பரேட் வேளாண்மையின் பேச்சை இன்னமும் கேட்டுக் கொண்டிருக்கும், வளரும் நாடுகளிலுள்ள ஓர் உழவனின் ஒரு நாளைய சராசரி வருமானம் 2 டாலர். ஆனால், ஐக்கிய அமெரிக்காவிலுள்ள மாட்டுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் மானியம் 3 டாலர். ஆக, நம் நாட்டில் உழவராக இருப்பதை விட அமெரிக்காவில் மாடாக இருக்கலாம் என்பதே உண்மை நிலை. இங்கு, ‘வேளாண் மானியத்தை அறவே ஒழிக்க வேண்டும்’ என அழுத்தம் கொடுப்பவர்கள், ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் ‘பச்சைப் பெட்டி’ என்ற பெயரில் விளைந்த தானியங்களுக்கும், ‘ஆம்பர் பெட்டி’ என்ற பெயரில் விளையாத தானியங்களுக்கும் மானியம் அளிக்கின்றனர்.
அது என்ன விளையாத தானியம்? நிலத்தை சில காலம் தரிசாகப் போட்டால் அதற்கும் மானியமாம். மற்ற நாடுகளில் மிகையான உற்பத்தி நடந்து விட்டால், ஏற்றுமதிச் சந்தையில் அவர்கள் நாட்டு விளைபொருளுக்கு விலை குறைந்துவிடக் கூடாதாம். அதற்குத்தான் மானியம். இந்நிலையை மாற்ற நம் உழவர்கள் இனியாவது இரு துறைகள் குறித்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. ஒன்று சூழலியல் அறிவு, மற்றொன்று அரசியல் அறிவு.
சூழலியல் அறிவு!
இனி வேளாண்மையைத் தனித்துறையாகச் சுருக்கிப் பார்க்கக் கூடாது. பண்டைத் தமிழர்கள் வேளாண்மையை சூழலியலோடுப் பொருத்திப் பார்த்ததன் அடையாளம்தான் ஐந்திணைப் பகுப்பு. ஐந்திணைகளில் மருதத்தை மட்டும் கணக்கிலெடுத்துக் கொண்டு வாழ்ந்த காலம் முடிந்து விட்டது. மற்ற திணைகளின் அழிவென்பது, மருதத்தின் அழிவும்தான். அன்று குடகு மலையை சீரழித்து தேயிலை நட்டபோதும், சோலைக்காடுகளை அழித்து தைல மரங்களை நட்டபோதும், காவிரிப்படுகை உழவர்கள் கவலைப்படவில்லை. விளைவு, இன்று காவிரியில் நீரைக் காணோம்.
இதுபோல நெய்தல் நிலம் நெடுக தொழிற்சாலைகள் முளைத்தபோது கண்டு கொள்ளாததன் விளைவு, இறால் பண்ணைகள். கடல் நீர் நன்னீருக்குள் ஊடுருவி வேளாண்மையைக் கெடுக்கிறது. காலநிலை மாற்றத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டும். இயற்கை வேளாண்மைக்கே கூட காலநிலை மாற்றம், பாதிப்பை ஏற்படுத்தவுள்ளது. தமிழகத்தில் அடுத்த முப்பதாண்டுகளுக்குள் சராசரியாக ஒரு டிகிரி செல்ஷியஸ் வெப்பம் உயரப் போகிறது. மழைப்பொழிவும் 4 விழுக்காடு குறையப் போகிறது. இதை எதிர்கொள்ள உழவர்கள் தயாராக வேண்டும்.
அரசியல் அறிவு!
இது, ‘கரைவேட்டி அரசியல்’ அல்ல. ‘உலகமயமாக்கல்’ என்கிற பெயரில் உலக வங்கியின் வழியாக கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்திவரும் அரசியல் குறித்த அறிவு. இன்றைக்கு ஒரு நாட்டின் தலைமையையே தீர்மானிக்கும் அளவுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ந்துள்ளன. உலக நாடுகள் அனைத்தும், ‘வளரும் நாடுகள்’, ‘வளர்ந்த நாடுகள்’ என இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன. இதன் உண்மையான பொருள் ‘சுரண்டும் நாடுகள்’, ‘சுரண்டப்படும் நாடுகள்’ என்பதே. இதைத்தவிர நிலநடுக்கோட்டை முன்வைத்து ‘வடக்கு நாடுகள்’, ‘தெற்கு நாடுகள்’ எனவும் பிரிப்பதுண்டு. இதில் வடக்கு நாடுகள் சுரண்டும் நாடுகளாக இருக்க, தெற்கு நாடுகளோ சுரண்டப்படும் நாடுகளாக விளங்குகின்றன. தெற்கு நாடுகள் அனைத்தும் ஆப்பிரிக்கா, தென்அமெரிக்கா, ஆசியா ஆகிய மூன்று கண்டங்களுக்குள் அடங்குவதால், இக்கண்டங்களின் மண்ணில் நிகழ்த்தப்பட்ட வன்முறை மட்டும் இந்தத் தொடர் கட்டுரையில் பேசப்பட்டது.
பொருளாதாரத்தில் முன்னேறிவிட்ட பிறகும்... சுரண்டும் நாடுகள் தங்களின் உணவுக்காக சுரண்டப்படும் நாடுகளையே நம்பியிருக்கின்றன. நம்மிடம் கைநீட்டிக் கெஞ்ச வேண்டிய அந்நாடுகள், நமக்கு கைத்தட்டி உத்தரவிடுகின்றன. நாமும் கட்டிப்போட்டு பழக்கப்படுத்தப்பட்டு விட்ட கோயில் யானைகளைப் போல் சொந்த வலுவை மறந்து அந்நாடுகளிடம் அடிபணிந்துக் கிடக்கிறோம்.
வடக்கு நாடுகளில் விளையும் பயிரினங்கள் வெறும் இருபது வகைகள்தான். இந்தியா முழுக்க விளையும் பயிர்களோ இருநூற்று அறுபது வகைகள். 20 பயிரை விளைவிப்பவர்களுக்கே இவ்வளவு திமிர் இருந்தால், 260 பயிர்களை விளைவிப்பவருக்கு எவ்வளவு திமிர் இருக்கவேண்டும்... ஆனால், நிலைமை என்ன?
உழவர்கள், உற்பத்தியாளர் என்கிற தம் அடையாளத்தை இழந்து பன்னாட்டு நிறுவனங்களின் விதை, உரங்களை வாங்கும் நுகர்வோராகி விட்டனர். உணவை, தெற்கு நாடுகள் விளைவித்தாலும்... உணவுச் சந்தையை வட அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளே இதுவரையிலும் கட்டுப்படுத்துகின்றன. இவை, தம்நாட்டு உழவர்களுக்கு உலகின் ஒட்டுமொத்த தெற்கு நாடுகளுக்குக் கொடுக்கப்படும் மானியத்தைவிட... நான்கு மடங்கு கூடுதலான மானியத்தைக் கொடுத்து, பிறநாட்டு உழவர்களைப் போட்டியிலிருந்து வெளியேற்றுகின்றன. இத்தகைய கொள்கையானது, உலகின் 26 கோடி மக்களை பட்டினியில் சிக்க வைக்கப் போகிறது.
பணப்பயிர் எனும் தூண்டில்!
காலநிலை மாற்ற பாதிப்பால் எதிர்வரும் 2050-ம் ஆண்டுக்குள் 20 சதவிகித அளவு பட்டினி பெருகப் போகிறது. இதன் பொருள் உணவு விளைச்சல் குறையப் போகிறது என்பதே. இந்நிலையில்தான் எஞ்சியிருக்கும் உணவுப் பொருள் விளையும் நிலங்களையும் பறித்து... தொழிற்சாலைக்கான கச்சா பொருட்களை உற்பத்தி செய்யும் வேலைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் முடுக்கியுள்ளன. இதற்கு உழவர்கள் இணங்கிவிடக் கூடாது. பணப்பயிர் என்பதெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்கானதே ஒழிய, உழவர்களின் வளர்ச்சிக்கானதல்ல. எனவே, உணவுப் பயிருக்கே முதலிடம் தந்து பொருள் ஈட்ட முயல வேண்டும். அதேவேளை உணவுப்பயிர்கள் தொழிற்சாலையின் கச்சா பொருளாக மாறாமலும் கண்காணித்து எதிர்க்க வேண்டும்.
பிரிட்டிஷார் ஆட்சியில் இந்திய உழவர்களின் விளைபொருட்களைத் தம் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யுமாறு கட்டாயப்படுத்தினர். இதனால், ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையால் 1875-ம் ஆண்டு முதல் 1900-ம் ஆண்டு வரை இரண்டு கோடி மக்களுக்கு மேல் பட்டினியால் மடிந்தனர். ஆனால், இதே காலத்தில்தான் இந்தியாவின் உணவு தானிய ஏற்றுமதி 30 லட்சம் டன் என்ற அளவிலிருந்து 100 லட்சம் டன் அளவுக்கு உயர்ந்தது. இன்று எத்தியோப்பியாவில் நடப்பதும் இதுதான். நாளை இந்தியாவில் நடக்கவிருப்பதும் இதுதான். எனவே ஏற்றுமதிப் பயிர் என்பது சொந்த நாட்டு மக்களைப் பட்டினி போடுவதற்கான கருவி என்பதை நம் உழவர்கள் உணர வேண்டும்.
உழவர்கள், உலகுக்கு உணவளிப்பவர்கள். மற்றவர்கள் அவர்களை தொழுது பின் செல்பவர்கள் என்றார், வள்ளுவர். அய்யா நம்மாழ்வார், ‘அக்ரி கல்ச்சர்’ என்பது ‘அக்ரி பிசினஸ்’ என மாற்றப்பட்டதே வேளாண்மையின் அடிப்படைச் சிக்கல்’ என்று அடிக்கடிக் கூறுவார்.
வெடிகுண்டில் பிறந்த நவீன வேளாண்மைக் கதையில் இந்தத்தொடர், தொடங்கி, ஏண்டீஸ் பழங்குடிகளிடம் நவீன அறிவியல் தோற்றது, உணவுப் பயிர்கள் தொழிற்சாலையின் கச்சா பொருளாக மாறியது, பணப்பயிரை ஊக்குவித்து உழவர்களை வஞ்சித்தது, அவர்தம் நிலத்திலிருந்தே விரட்டியடித்தது, விளைமண்ணில் வன்முறைகளை நிகழ்த்தியது, நாடுகளையே நாசமாக்கியது என கார்ப்பரேட் நிறுவனங்களின் பல அட்டூழியங்களை உங்களிடம் பேசியது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு காசு பணம்தான் முதன்மை. கார்ப்பரேட் நிறுவனங்கள், இங்குள்ள மோசடி நிதி நிறுவனங்களைப் போல ஒரு நாட்டில் ஏமாற்றிவிட்டு, இன்னொரு நாட்டுக்குச் சென்று புதிதாக கடை விரிப்பவர்கள். அப்படி புதிய இடத்துக்கு மாறும்போதும் ஏற்கெனவே பழைய இடத்தில் எப்படி ஏமாற்றினார்களோ, அதே முறையைத்தான் தொடர்வார்கள். இதுதான் இவர்களை அறிந்துகொள்ள நமக்கு வசதியாக இருக்கிறது. மற்ற நாடுகளில் இப்படியெல்லாம் ஏமாற்றி இருக்கிறார்கள், இப்போது இங்கு வந்திருக்கிறார்கள் என்று, இந்தத்தொடர் எச்சரிக்கை கொடுத்து விட்டது.
முடிவு உங்கள் கையில்தான். இதோ இரண்டு விரல்கள். நீங்கள் எதை தொடப் போகிறீர்கள்?
உலகப்பசிக்கு உணவா? கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கச்சா பொருளா?