
புறா பாண்டி
‘‘ஃபிரெஞ்சு பீன்ஸ் சாகுபடி செய்ய விரும்புகிறோம். சமவெளியில் வளருமா? மகசூல் எவ்வளவு கிடைக்கும் என்று சொல்லுங்கள்?’’
எம்.சுதாராணி, ஏற்காடு.

ஈரோடு மாவட்டம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தின் தோட்டக்கலைத் தொழில்நுட்ப அலுவலர் ப.பச்சியப்பன் பதில் சொல்கிறார்.
‘‘ஃபிரெஞ்சு பீன்ஸ் என்று அழைக்கப்படும் இந்தப் பயிர் வேர் முடிச்சு குடும்பத்தைச் சார்ந்த ஒரு முக்கியமான பயிர். இதன் காய்கள் அன்றாட உணவுக்காகவும் உணவு பதார்த்தம் செய்வதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இது மலைப்பிரதேசங்களுக்கு ஏற்ற குளிர்காலப் பயிர். இதை கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,000 முதல் 2,000 மீட்டர் உயரம் உள்ள இடங்களில் பயிர் செய்யலாம். அதிக வெப்பத்தைத் தாங்காது. தட்பவெப்பநிலை 18 டிகிரி செல்ஷியஸ் முதல் 28 டிகிரி செல்ஷியஸ் வரை உள்ள சூழ்நிலை காய்கள் முதிர்ச்சிக்கு உகந்தநிலையாகும். இப்பயிரின் வளர்ச்சிப் பருவம், பூக்கும் பருவம் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் பனி பெய்யக் கூடாது.

இந்த பீன்ஸ் பயிரை குளிர்ச்சியான பிரதேசங்களில் முதன்மைப் பயிராகவும், சமவெளியில், காய்கறிப் பயிருக்கு இடையில் ஊடுபயிராகவும் பயிரிடலாம். அதுவும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்கள் மட்டுமே சமவெளியில் ஃபிரெஞ்சு பீன்ஸ் சாகுபடி செய்ய ஏற்ற மாதங்கள். மலைப்பகுதியை ஒப்பிடும்போது சமவெளியில் விளைச்சல் சற்று குறைவாகத்தான் இருக்கும்.
இந்த பீன்ஸ் செடி வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜனை இழுத்து, மண்ணை வளப்படுத்தும். இதை எல்லா மண் வகைகளிலும் பயிரிடலாம். ஆனால், மணல் கலந்த இருமண்பாடு நிலம் மிகவும் ஏற்றது. நல்ல மகசூல் கிடைக்க, மண்ணின் கார அமில நிலை 6.5 முதல் 7.5 வரை இருக்க வேண்டும். மலைப்பகுதியில் பிப்ரவரி -ஆகஸ்ட் வரை விதைப்பு செய்ய ஏற்றப் பருவங்கள்.
ஏக்கருக்கு 20 கிலோ விதை தேவைப்படும். ஃபிரெஞ்சு பீன்ஸில் விதைகள் சிறியதாக இருக்கும்போது அறுவடை செய்ய வேண்டும். பூத்து இரண்டு அல்லது மூன்று வாரங்களில் காய்கள் அறுவடைக்கு வந்துவிடும். அறுவடையைத் தள்ளிப் போட்டாலும், மகசூல் கூடினாலும், காய்களின் தரம் குறைந்துவிடும்.
அர்கா கோமல் என்ற ரகம் 1981-ம் ஆண்டு தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தினால் வெளியிடப்பட்டவையாகும். தேசிய அளவில் சுமார் 70 சதவிதத்துக்கு மேல் பயிரிடப்பட்டு வருகிறது. மழைக் காலங்களில் கூட நல்ல மகசூலைப் பெற்றுத் தருவதாகும்.

செடிகள் சுமார் 2 அடி வரை வளரக்கூடியவை. இதன் காய்கள் இளம் பச்சையாகவும். நடுத்தர நீளம் கொண்டவை. நேராகவும், தட்டையாகவும் நன்கு சதைப்பற்றுள்ளதாகவும் காணப்படும். நெடுந்தூரம் எடுத்துச்செல்வதற்கு ஏற்றவை. விதைத்த 60 முதல் 80 நாட்களில் சராசரியாக 10 முதல் 12 டன் கிடைக்கும்.’’
தொடர்புக்கு, வேளாண் அறிவியல் நிலையம் (மைராடா), 272, பெருமாள் நகர், புதுவள்ளியாம்பாளையம் ரோடு, கோபிச்செட்டிபாளையம் - 638453. ஈரோடு மாவட்டம், தொலைபேசி : 04285-241626.
‘‘பால் பண்ணை வைத்துள்ளோம். கூடவே சீஸ் தயாரிக்க விரும்புகிறோம். இதற்கு அனுபவ ரீதியான பயிற்சி பெற வழி சொல்லுங்கள்?’’
எம்.சி.கணேசன், ஈரோடு.
கொடைக்கானலில் பால்பண்ணையுடன், சீஸ் தயாரித்து வரும் பாட்ரிஷியா பதில் சொல்கிறார்.
‘‘பால் உற்பத்தியில் கவனம் செலுத்தும் தமிழ்நாட்டு மக்கள், அதை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.
‘சீஸ்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ‘பாலாடைக் கட்டி’ புளிப்புச் சுவையுடன் இருக்கும். சீஸ், பலவிதமான சத்துக்கள் நிரம்பிய பொருள்.

இதற்கு, நட்சத்திர விடுதிகள், துரித உணவகங்கள்... போன்றவற்றில் அதிக தேவை இருக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவில் தேவையான அளவு சீஸ் கிடைப்பதில்லை. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலைதான் உள்ளது. ஒரு கிலோ சீஸ், 700 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை விற்பனையாகிறது. 10 லிட்டர் பசும்பாலில் இருந்து ஒரு கிலோ சீஸ் தயாரிக்கலாம். பால் பண்ணை நடத்துபவர்கள் சீஸ் தயாரிப்பில் இறங்கினால், நல்ல லாபம் கிடைக்கும். இதை என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். ஆனால், தயாரிப்பில் இறங்கும் முன்பு, சீஸ் தயாரித்து வரும் பண்ணைகளுக்குச் சென்று பார்வையிட்டு, உங்கள் பகுதியில் உள்ள விற்பனை வாய்ப்பையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
தற்சமயம், எங்கள் பண்ணையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, சீஸ் தயாரிக்க அனுபவ ரீதியான பயிற்சி வழங்குகிறோம். இதற்கு கட்டணம் கிடையாது. தங்குமிடம், உணவு வசதியும் வழங்குகிறோம். மதிப்பூதியமாக நாள் ஒன்றுக்கு `200 கொடுக்கின்றோம்.
தற்போது சீஸ் தயாரிக்கும் முறை பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். கறந்த பாலை 4 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலைக்குக் குளிர வைத்து... அதில், ரென்னட் பவுடர் (ஒருவிதமான நுண்ணுயிர்), லாக்டிக் அமிலம் சேர்த்து... 27 முதல் 28 டிகிரி செல்ஷியஸ் வரை சூடேற்றி, உடனடியாகக் குளிர வைக்க வேண்டும். இந்த சமயத்தில்தான் பால் திரியும். அதில் உள்ள கட்டிகளை வடிகட்டி எடுத்து அலசினால்... அதுதான் சீஸ். இதைத் தேவையான வடிவில் உள்ள அச்சுகளில் வைத்து மரக்கட்டை மூலம் அழுத்தினால், அதில் எஞ்சியுள்ள திரவம் வெளியேறிவிடும். பிறகு, குளிர்பதனப்பெட்டியில் ஒரு மாதம் வரை வைத்திருந்து, அதன்பிறகே எடுத்துப் பயன்படுத்த வேண்டும். பொதுவாக பால் பொருட்களை உடனடியாகப் பயன்படுத்திவிட வேண்டும். இல்லாவிடில், கெட்டுப்போய் விடும். ஆனால், சீஸ் மட்டும் விதிவிலக்கு.

சீஸை, எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும், குளிர்நிலையில் வைத்திருந்து பயன்படுத்தலாம். ‘ஒயின்’ போல நாள்பட நாள்படத்தான் இதன் தரமும் மதிப்பும் கூடும். சீஸை வடிகட்டும்போது கிடைக்கும் திரவத்துக்கு, ‘ஊநீர்’ என்று பெயர். இதில் பலவித சத்துக்கள் நிரம்பியுள்ளன. இதை நாமும் குடிக்கலாம். மாடுகளுக்கும் கொடுக்கலாம்’’
தொடர்புக்கு, தொலைபேசி: 04542-230245, செல்போன்: 92453-96316.
‘‘சவுக்கு சாகுபடி செய்ய இருக்கிறோம். இதை தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் வாங்கிக் கொள்ளுமா..?’’
மா.துரைசாமி, திருக்கழுக்குன்றம்.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் வனத்தோட்டதுறை அலுவலர் பதில் சொல்கிறார்.
‘‘தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், விவசாயிகளிடம், காகிதம் தயாரிப்பதற்காக, ஒப்பந்த முறையில் சவுக்கு சாகுபடி செய்ய ஊக்குவித்து வருகிறது. இதன்படி சவுக்குக் கன்று, ஒன்று `2 க்கு மானிய விலையில் விற்பனை செய்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு, அவர்களின் தோட்டத்துக்கே சென்று நாங்களே, கன்றுகளைக் கொடுத்துவிடுகிறோம். நன்றாக வளர்ந்த பிறகு விவசாயிகளிடமிருந்து சவுக்கு மரங்களை, விலைக்கு வாங்கிக் கொள்கிறோம். தமிழ்நாட்டில் வடிகால் வசதி உள்ள நிலங்களில் மட்டுமே சவுக்கு சாகுபடி செய்ய சொல்கிறோம். மூன்று ஆண்டுகளில் ஏக்கருக்கு 40 முதல் 60 டன் மகசூல் கிடைக்கும். தற்போது, ஒரு டன் `5 ஆயிரம் ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறோம்.’’
தொடர்புக்கு, நாற்றுப்பண்ணை, அறுவடை: செல்போன்: 94425-91408.
