மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...

மரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...

ஆடு வளர்ப்போர் சங்கம் அதிரடி! ஓவியம்: ஹரன்

தேர்தல் கூட்டணி, யார் ஜெயிப்பார்கள், யார் யார் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட்டமெடுப்பார்கள் என்றெல்லாம் சத்தம்போட்டுப் பேசியபடியே ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும், ‘காய்கறி’ கண்ணம்மாவும் தோட்டத்துக்குள் கால் வைத்தனர். வயலில் வேலை செய்துகொண்டிருந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், இவர்களின் பேச்சு சத்தம் கேட்டதும் கை, கால்களைக் கழுவிக் கொண்டு வரப்புக்குத் தாவி ஏறினார். மூவரும் மரத்தடியில் அமர, தூக்குவாளியில் வைத்திருந்த மோர் கலந்த நீராகாரத்தை ஆளுக்குக் கொஞ்சம் கொடுத்தார், ஏரோட்டி.

“வெயிலுக்கும் அதுக்கும் தேவாமிர்தமா இருக்குய்யா” என்று சொல்லிக்கொண்டே மடமடவெனக் குடித்து முடித்த வாத்தியார், ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார்.

“பிரச்னைகளுக்காக பல காலமா குரல் கொடுத்துக்கிட்டே இருந்தாலும், தேர்தல் நெருங்குற நேரத்துல கொடுக்கிற குரலுக்கு இருக்கிற மதிப்பே தனி. அதுக்கு கூடுதல் கவனம் கிடைக்குது. அதனாலதான், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களெல்லாம் சமீபத்துல போராட்டம் நடத்துனாங்க. அவங்ககிட்ட எதிர்கட்சித் தலைவர்களெல்லாம் பேச்சுவார்த்தையும் நடத்துனாங்க. அதேவழியில இப்போ, ஆடு வளர்ப்போர் சங்கத்துக்காரங்களும் அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை வெச்சிருக்காங்க. அதாவது, ‘ஆடு வளர்ப்போருக்கான நலவாரியம் அமைக்க வாக்குறுதி அளிக்கிற கட்சிக்குத்தான் எங்களோட 25 லட்சம் ஓட்டுக்களைப் போடுவோம். இல்லனா... அவ்வளவு ஓட்டும் நோட்டாவுக்குத்தான்’னு அறிவிச்சிருக்காங்க. அதாவது, எங்க ஓட்டு யாருக்கும் இல்லைங்கிற பட்டனை அழுத்தப் போறாங்களாம்’’ என்று வாத்தியார் சொல்ல,

மரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...

‘‘இதென்ன கூத்து, யாருக்குமே போடமாட்டாங்களாமாம். அப்படியென்ன பிரச்னை அவங்களுக்கு?’’ என்று கேட்டார் காய்கறி.

‘‘தமிழ்நாட்டுல மேய்ச்சல் புறம்போக்குனு இருந்த நிலங்களையெல்லாம் பலரும் ஆக்கிரமிச்சிருக்காங்க; தவிர, அரசாங்கமே பலவித பயன்பாடுகளுக்கும் அந்த நிலங்களையெல்லாம் கூறுபோட்டு கொடுத்திட்டிருக்கு; குறிப்பா, நான்கு வழிச்சாலைக்காக பல ஏக்கர் மேய்ச்சல் நிலங்களை அழிச்சிட்டாங்க; லாரி மோதி கூட்டம் கூட்டமா பலியாகிற ஆடுகளுக்கு இன்ஷூரன்ஸ் கிடைக்க மாட்டேங்குது; வனப்பகுதியில் ஆடு மேய்க்க அனுமதி வாங்கணும்னா அதுக்கு ஆயிரக்கணக்குல வனத்துறைக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கு. இதுமாதிரி பல பிரச்னைகள். இதுக்கெல்லாம் தீர்வு காணணும்னா, எங்களுக்குனு ஒரு நலவாரியம் அவசியம். போன தி.மு.க ஆட்சியில இதுக்கான வேலைகளை ஆரம்பிச்சாங்க. ஆனா, செயல்பாட்டுக்கு வரலை. இந்த முறையும் ஏமாற மாட்டோம்னு ஆடு வளர்ப்போர் சங்கத்துக்காரங்க அறிவிப்பு வெளியிட்டிருக்காங்க” என்றார், வாத்தியார்.

“அது சரிதான். இப்போ சொன்னாத்தான் நம்ம பேச்சு எடுபடும். ஆனா, இந்த அரசியல்வாதிக ஓட்டுக்காக வாக்குறுதி கொடுத்துட்டு அப்புறம் அல்வா கொடுக்கிறதைத்தானே வேலையாவே வெச்சிருக்காய்ங்க” என்று சொன்ன ஏரோட்டி, அடுத்த செய்தியை ஆரம்பித்தார்.

“பொள்ளாச்சி பக்கம் தேங்காய்க்கும் கொப்பரைக்கும் விலை ஏறவே இல்லை. ஆனா, இளநிக்கு மட்டும் விலை ஏறிட்டே இருக்கு. பொதுவா, இந்தப் பகுதியில தேங்காயாவும் கொப்பரையாவும் விற்பனை செய்ற விவசாயிகள்தான் அதிகம். இப்போ வெயில்காலம் ஆரம்பிச்சதும் இந்தப் பகுதி இளநிகளை வெளி மாநில வியாபாரிகள் அதிகளவுல வாங்க ஆரம்பிச்சதுல இளநிக்கு விலை அதிகரிச்சி இருக்கு. வியாபாரிங்க தோப்புக்கே வந்து விலைபேசி வாங்கிட்டுப் போயிடுறதால, திப்பம்பட்டியில் உள்ள இளநி ஏல மையத்துக்குக் கூட இளநி வர்றதேயில்லையாம். இப்போ தோட்டத்துலயே மொத்த விலைக்கு ஒரு இளநி 15 ரூபாய்னு விற்பனை ஆகுது. சில்லறை விலையில 40 ரூபாய் வரை விற்பனை செய்றாங்க. அதனால பல விவசாயிங்க இளநியாவே விற்பனை செய்றதுலதான் ஆர்வம் காட்டுறாங்க. இளநியிலேயே லாபம் கிடைக்கும் போது, எதுக்காக தேங்காயா முத்துற வரைக்கும் வெட்டியா வைச்சிருந்து நொம்பலப்படணும்னு நினைக்கிறாங்க. அதேசமயம், நிலைமை இப்படியே நீடிச்சா, தேங்காய்க்கும், கொப்பரைக்கும் அடுத்த மாசத்துல இருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு விலையும் அதிகமாகும்னு காத்திருக்காங்க தேங்காய் விவசாயிங்க பலர்” என்றார், ஏரோட்டி.

“எப்படியோ... விவசாயிகளுக்கு லாபம் கிடைச்சா சரிதானே...” என்ற காய்கறி, கூடையில் இருந்து சிவப்பு கொய்யாப்பழங்களை எடுத்துக் கொடுத்தார்.

“இந்த சிவப்புக் கொய்யாவெல்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சு. திண்டுக்கல் மாவட்டம், ஆயக்குடி பக்கம்தான் அதிகமா விளையுது. இது நல்ல சதைப்பற்றோட இருக்குறதால ஜூஸ் போட ஏற்ற ரகம். போன மாசம் திருச்சியில ‘பசுமை விகடன்’ நடத்தின ‘அக்ரி எக்ஸ்போ’வுல ஒரு ஸ்டால்ல இந்த பழத்துல ஜூஸ் போட்டு விற்பனை செய்தாங்க. ரொம்ப நல்லா இருந்தது” என்று சிலாகித்துச் சொன்ன வாத்தியார், அடுத்த செய்திக்குத் தாவினார்.

“காஞ்சிபுரம் மாவட்டத்தில் போன வருஷம் சுமார் 40 ஆயிரம் ஏக்கர்ல, சுமார் 85 ஆயிரம் டன் நெல் மகசூல் கிடைச்சுது. இந்த வருஷம், நல்ல மழை கிடைச்சதால சாகுபடிப் பரப்பு அதிகரிச்சிருக்குதாம். கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர்ல நெல் சாகுபடி செய்திருக்காங்க. ரெண்டேகால் லட்சம் டன்னுக்கும் மேல நெல் அறுவடையாகும்னு எதிர்பார்க்கிறாங்க. இதுக்காகவே 56 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கிறதுக்காக நுகர்பொருள் வாணிபக் கழகம் திட்டமிட்டிருக்கு. விவசாயிகளோ... ‘உடனடியா பணம் பட்டுவாடா செய்யணும், நெல் மூட்டைகளைப் பாதுகாக்க கிட்டங்கி வசதி ஏற்பாடு பண்ணணும், வயலுக்கே வந்து கொள்முதல் பண்ணணும், அதிகமா நெல்லைக் கழிக்கக் கூடாது’னு கோரிக்கை வெச்சிருக்காங்க’’ என்றார் வாத்தியார்.

‘‘ம்... இந்த நுகர்பொருள் வாணிபக் கழகத்துல ஒரு மூட்டைக்கு இவ்வளவுனு கணக்குப் போட்டு, கீழ்மட்டத்துல வசூல் பண்ணி மேல்மட்டம் வரைக்கும் பாய்ஞ்சிட்டிருக்கு. அப்படியிருக்கிறப்ப எந்த அய்யனார் வந்து இந்தப் பிரச்னையைத் தீர்த்து வைக்கப் போறாரோ...” என்று ஏரோட்டி சொல்லிக் கொண்டிருக்கும்போதே... வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் குரல் கொடுக்க, சட்டென்று எழுந்து சென்றார். அத்துடன் அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது.

துணைவேந்தருக்கு விருது!

மரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.திலகருக்கு, சிறந்த கால்நடை மருத்துவ அறிஞர் விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்திய கால்நடை மருத்துவ மேம்பாட்டு அமைப்புதான், இந்த விருதுக்காக இவரைத் தேர்வு செய்துள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள, கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடந்த, அகில இந்திய கால்நடை மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் பதினாறாவது ஆண்டு விழாவில் துணைவேந்தர் திலகருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

அமராவதி ஆலையில்,அரவை ஆரம்பம்!

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2015-16-ம் ஆண்டுக்கான கரும்பு அரவை தொடங்கியது. இதற்காக நடந்த விழாவில், மேலாண்மை இயக்குநர் இந்துமதி, தலைவர் பழனிசாமி, தொழிலாளர் நல அலுவலர் நவநீதன் மற்றும் நிர்வாகக்குழு இயக்குநர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

‘2015-16-ம் ஆண்டில் மொத்தம் 5 ஆயிரத்து 645 ஏக்கர் நிலத்தில் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. சராசரியாக ஏக்கருக்கு, 44 டன் மகசூல் என்ற அளவில் இப்பருவத்தில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 500 டன் கரும்பு அரவைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2006-07-ம் ஆண்டுக்கு பிறகு, தற்போதுதான் இந்த ஆலையின் முழுதிறனுக்கு கரும்பு அரவை செய்யப்பட உள்ளது. இந்தப் பருவத்தில் 9.75 சதவிகித கட்டுமானத்தில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 275 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என்று ஆலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.