
மாத்தி யோசி, ஓவியம்: ஹரன்
குமரகம்...
அவ்வப்போது, பத்திரிகையில அடிபடுற பேரு. கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில வேம்பனாடு காயல் கரையில் இருக்கிற அழகான ஊர். காயல்னா, ‘நல்ல தண்ணி ஏரி’னு அர்த்தம். இந்த குமரகம் பிரபலமானத்துக்கு சினிமா நடிகருங்க, அரசியல்வாதிங்க முக்கிய காரணம். அவங்கள்லாம், தங்களோட உடம்புக்கு புத்துணர்ச்சி உண்டாக்கிக்கிறதுக்காக தேடி வர்ற இடம், இந்த குமரகம்!
நான் போயிருந்த நேரத்துல ஏராளமான வெளிநாட்டுப் பயணிகளும் வந்திருந்தாங்க. படகு வீடு, பசுமை நிறைந்த ரிசார்ட்டுனு விலைக்குத் தக்கப்படி விடுதிங்க இருக்கு. எல்லாரும், ஏ.சி வைச்ச ரிசார்ட்டு பக்கம் போக, ஒரு வெளிநாட்டுக் குழு மட்டும், எங்களுக்கு பாரம்பர்ய கேரள வீடு வேணும்னு அடம்பிடிச்சாங்க. நானும் அவங்க கூடவே ஒட்டிக்கிட்டேன். நூறாவது வருஷம் கொண்டாடப்போற ஒரு ஓட்டு வீட்டுக்கு எங்க எல்லாரையும், கூட்டிக்கிட்டுப் போனாங்க.
வெளிநாட்டுக்காரங்க, ‘வெரி நைஸ், வெரி நைஸ்’ னு சொல்லிக்கிட்டு உள்ளே போனாங்க. ஆனா, எனக்கு மட்டும் அந்த வீடு புடிக்கல.
பல்லி, சிலந்தி... னு வீட்டுக்குள்ள பல்லுயிர்களோட நடமாட்டம் அதிகமா இருந்துச்சு. அந்த நேரத்துல, தாடியும், கையில மூலிகை மருந்துப் பெட்டியையும் வைச்சுக்கிட்டு கேரளாவைச் சேர்ந்த ஒரு பெரியவர் வந்து நின்னாரு. பார்த்த மாத்திரத்திலேயே, அவரு ஆயுர்வேத மருத்துவர்னு தெரிஞ்சது.

‘‘இந்த வீட்டில் பல்லி, சிலந்தி.. இருப்பதைப் பார்த்து பயந்துவிட்டீர்களா..? உண்மையைச் சொல்லணும்னா, பல்லியும், சிலந்தியும் இல்லாத வீட்டில் வாழத்தான் பயப்படணும். அடுக்குமாடி வீட்டில் வாழ்பவர்களுக்கு, வீடு சுத்தமாக இருந்தால்தான் பிடிக்கும். சின்ன உயிரிகள் வாழ முடியாத அந்த, வீட்டுல எப்படி பெரிய மனுஷன் வாழ முடியும்? வீட்டில் பல்லியும், சிலந்தியும், தோட்டத்துல தேனீக்களும் இருந்தாத்தான் அந்த இடம் ஆரோக்கியமா இருக்கிறதா அர்த்தம்’னு சொல்லிட்டு, என்னைக் கைபிடிச்சு வீட்டுக்குள்ள அழைச்சுக்கிட்டு போனாரு.
ஆயுர்வேத மருத்துவம் சித்த மருத்துவத்துல இருந்து பிரிஞ்சதா சொல்றாங்க. ஒரு காலத்துல இதுக்கு ‘ராஜ வைத்தியம்’னு பேரு. ஏன்னா, இந்த மருத்துவத்துக்கு நிறைய செலவு ஆகும். அதனால, மன்னர்கள், ஜமீன்தார்கள் பெரிய ஆட்களுக்கான மருத்துவ முறையா இருந்திருக்கு. கால மாற்றத்துல அரமண்னையைத் தாண்டி, எல்லா மக்களுக்குமான மருத்துவ முறையா ஆயுர்வேதம் மாறியிருக்கு.
‘டெங்கு’, ‘பன்றிக் காய்ச்சல்’ வந்த பிறகுதான், சித்த மருத்துவத்தை நம்ம ஆட்கள் மதிக்க ஆரம்பிச்சிருக்காங்க. ஆனா, கேரளாவுல ஆயுர்வேத மருத்துவத்தை மக்கள் தலையில தூக்கி வைச்சிக் கொண்டாடுறாங்க.
வீட்டைச் சுத்திக்காட்டின அந்த ஆயுர்வேத பெரியவர், இன்னும் சில விஷயங்களையும் சொன்னாரு.
‘‘ஈரமான காலநிலை நோயைக் குணப்படுத்துறதுக்கும் ஆரோக்கியம் தர்றதுக்கும் ஏற்றதா இருக்குது. பாரம்பர்ய ஆய்வுகள், பருவமழைக்காலம்தான் புத்துணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற காலம் என்பதையும் சொல்லாம சொல்லுது. வானிலை தூசு இல்லாமலும் ஈரப்பதத்துடனும் இருக்கிறதால அது உடலிலுள்ள துவாரங்களைப் பெரிதுபடுத்துறதால மூலிகை எண்ணெய் மற்றும் தெரபிகள் பயன்படுத்த, இது ஏற்ற காலமா இருக்குது’னு தமிழும் மலையாளமும் கலந்த மொழியில சொன்னார்.
இரவு, சூடான சிவப்பு அரிசி சாதமும், கொடம்புளிக் குழம்பும் ஆவி பறக்க, புல் வெளியில் பரிமாறுனாங்க. வெளிநாட்டுப் பெண்கள், கொடம்புளிக் குழம்பை ரசிச்சு, ருசிச்சு சாப்பிட்டபடி, அதன் வரலாற்றைக் கேட்டாங்க.
காசித் துண்டை மேலுக்கு போர்த்தியிருந்த வயதான பெண்மணி, கொடம்புளியோட மருத்துவத் தன்மையைப் பட்டியல்போட ஆரம்பிச்சாங்க.
‘‘கொடம்புளி, சமையல்ல பொதுவாக சுவையைக் கூட்டவும் செரிமானத்துக்கும் பயன்படுது. இதுல தயாரிக்கப்படுற ஒருவித சாறு, வாதத்துக்கு சிறந்த மருந்து. ஹோமியோபதி மருத்துவத்துல வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்த, கொடம்புளியில் தயாரிச்ச மருந்தைத்தான் தர்றாங்க. இதயம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும் தன்மையும் இதுல இருக்கு. ஒரு காலத்துல தமிழ்நாட்டிலயும் கூட, கொடம்புளியை வைச்சுத்தான் சமையல் நடந்திருக்கு’னு என் பக்கம் திரும்பி பார்த்து, அந்த கேரள பாட்டி சொன்னாங்க.
‘முப்பது நாட்களில் உடல் எடையைக் குறைக்கலாம்’’னு இப்போ விளம்பரம் செய்றதைப் பார்த்திருப்போம். உடல் எடையைக் குறைக்குற மருந்துல கொடம்புளிக்கும் இடம் உண்டு. இந்த கொடம்புளியில உடல் எடையைக் குறைக்கத் தேவையான ‘ஹைட்ராக்ஸி-சிட்ரிக் ஆசிட்’ என்னும் பொருள் இருக்காம். இதனால, வெளிநாட்டு கம்பெனிங்க, கொடம்புளியை இறக்குமதி செய்துகிட்டிருக்காங்களாம்.