
புறா பாண்டி

‘‘உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்குவதற்கு நபார்டு வங்கி நிதி வழங்குகிறதா?’’
எம்.பரமசிவம், செஞ்சி.சென்னையில் உள்ள நபார்டு வங்கியின் உதவிப் பொதுமேலாளர் எஸ்.கண்ணன் பதில் சொல்கிறார்.

‘‘தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) ‘உற்பத்தியாளர் நிறுவனங்கள் வளர்ச்சி நிதி’ எனும் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் நிதியின் கீழ், உற்பத்தியாளர் நிறுவனங்களின் கடன் தேவைகள், அந்நிறுவனத்தை வலுபடுத்துதல், உறுப்பினர்களின் திறன் மேம்பாட்டுக்கு உதவுதல், விளைபொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கு வழிகாட்டுதல் போன்ற சேவைகளைச் செய்து வருகிறது, நபார்டு.
விவசாயிகள் தனிநபர்களாக இருக்கிற வரை... வியாபாரிகள் மூலமாகவோ, இடைத்தரகர்கள் மூலமாகவோ... அவர்களுக்கு கிடைக்கும் விலை மிகவும் சொற்பம்தான். விவசாயத்தின் முக்கிய குறைபாடான இதைத் தீர்ப்பதற்கு, உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நல்ல பலனைப் பெற முடியும். அதற்கு வழிகாட்டுபவைதான் உற்பத்தியாளர் நிறுவனங்கள். இடுபொருட்களைக் குறைந்த

விலைக்கு வாங்குவது, விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்பது, கடன் வசதிகள் பெறுவது, தொழில்நுட்பப் பயிற்சிகளைப் பெறுவது... என பல செயல்பாடுகளை இந்த நிறுவனங்கள் மூலம் விவசாயிகள் பெறலாம். கடன் மற்றும் மானிய உதவிகள் செய்து தரப்படுவதோடு, ஆரம்ப காலத்தில் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பங்கு மூலதனத்தை உயர்த்துவதற்காகவும் நிதி உதவி செய்கிறது, நபார்டு. ஒருங்கிணைந்து, உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், அந்நிறுவனத்தின் செயல்பாட்டுக்குத் தேவையான பொது உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும் நபார்டு உதவுகிறது. சந்தைப்படுத்துவதற்குத் தேவையான வாகனம் வாங்கவும், இடுபொருள் நிலையம் அமைக்கவும், விளைபொருட்களைத் தரம் பிரிப்பது மற்றும் பதப்படுத்துவதற்கென அனைத்துத் தேவைகளுக்கும் நிதி உதவி செய்கிறது.
முறையாகப் பதிவு செய்யப்பட்டு, குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாவது செயல்பட்டு வரும் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மட்டும் தான் இந்த உதவிகளைப் பெற முடியும். அவ்வாறில்லாத நிறுவனங்கள், தங்களை ஊக்குவித்த நிறுவனத்தோடு இணைந்து அணுகலாம். ஜனநாயக முறையில் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து செயல்படும் நிறுவனமாக இருக்கவேண்டும். அவர்களின் நிதி கையாளும் முறை திருப்திகரமாக இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய நீண்ட, குறுகிய கால கடன் மற்றும் மூலதனக் கடன்களும் பெற முடியும். மேலும், தமிழ்நாட்டில் நபார்டு வங்கி, ஒருங்கிணைந்த மாட்டுப் பண்ணை, விதைநேர்த்தி மையம், இடுபொருள் மையம், சொட்டு நீர்ப்பாசன வசதி ஏற்படுத்துதல், வேளாண் இயந்திரங்கள் வாங்கிப் பராமரித்தல், மீனவர்களின் மீன்பிடிச் சாதனங்கள் வாங்குதல் ஆகியவற்றுக்கும் உதவிகளைச் செய்து வருகிறது.’’
தொடர்புக்கு, தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி, 48, மகாத்மா காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600034. தொலைபேசி: 044-28276088/ 28304444.
‘‘இலுப்பை மரங்களை வரப்பு பயிராக சாகுபடி செய்யலாமா...இந்த மரக்கன்றுகள் எங்கு கிடைக்கும்? ’’
எம்.கே.ரவி, சிதம்பரம்.காரைக்குடியில் உள்ள செட்டிநாடு மானாவாரி ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் மெட்டிர்ல் கிரேஸ் பதில் சொல்கிறார்.
‘‘எங்கள் மையத்தில் இலுப்பை மரங்களை ஆராய்ச்சிக்காக வளர்த்து வருகிறோம். மிகவும் நன்றாக வளர்ந்து வருகின்றன. இலுப்பை மரத்தின் பயன்கள் ஏராளம். ஆனால், இதை வளர்ப்பது படிப்படியாக குறைந்துவிட்டது.

கோயில் நிலங்களில் வளர்க்கப்படும் இலுப்பை மரங்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதனால், விவசாயிகள் இலுப்பை மரங்களை நடவு செய்யப் ஊக்கப் படுத்தி வருகிறோம். இம்மரங்களை வரப்புப் பயிராகவோ அல்லது தனிப்பயிராகவோ சாகுபடி செய்யலாம். அனைத்து மண்ணிலும் இது வளரும். 10 ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கி 50 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கக்கூடியது. இலுப்பை மரங்கள் 100 ஆண்டுகள் கூட வளரும். ஆனால், மகசூல் குறைந்துவிடும். இலுப்பை விதையில் இருந்து எடுக்கப்படும் இலுப்பை எண்ணெய், ‘ஏழைகளின் நெய்’ என்று அழைக்கப்படுகிறது. நெய்க்கு இணையாக இதில் சத்துகள் உள்ளன. அந்தக் காலத்தில் இந்த எண்ணெயில்தான் பலகாரங்கள் தயாரிப்பார்கள். இந்த எண்ணெய் நீண்ட நாட்களுக்குக் கெடாது. இந்த எண்ணெய்... சோப் தயாரிப்பு, இருமல் மருந்து, நெஞ்சு வலிக்கான மருந்து, சதைப்பிடிப்புக்கான களிம்பு, வலி நிவாரணிகள் போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இம்மரத்தின் பட்டை, என அனைத்தும் பலவித மருத்துவகுணங்களைக் கொண்டுள்ளன. இலுப்பைப் பூவில் 73 சதவிகித அளவு சர்க்கரை உள்ளது. ‘இனிப்பு இல்லாத ஊருக்கு, இலுப்பைப் பூ சர்க்கரை’ என்ற பழமொழி கூட உண்டு.
இதன் பூவிலிருந்து ஆல்கஹால் பிரித்தெடுக்க முடியும். இந்த இலுப்பை மரத்தில்தான் வவ்வால்கள் அதிகளவில் வசிக்கும். வவ்வால்கள் கொசுக்களைப் பிடித்து உண்ணும் பழக்கம் கொண்டவை. இலுப்பை மரத்தின் இலைகள் மிகவும் சுவையானவை. இதனால், கால்நடைகள் இந்த மரத்தின் இலைகளை விரும்பி உண்ணும். கால்நடைகள் இளஞ்செடிகளை மேய்ந்துவிடமால் கவனமாக வளர்க்க வேண்டும்.
இலுப்பை மரக்கன்றுகள், மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. சில தனியார் நாற்றுப் பண்ணைகளிலும் இலுப்பைக் கன்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன.’’
தொடர்புக்கு, செட்டிநாடு மானாவாரி ஆராய்ச்சி நிலையம், தொலைபேசி: 04565-283080, மேட்டுப்பாளையம் வன ஆராய்ச்சி நிலையம், தொலைபேசி: 04254-222010.
‘‘சீஸ் சைவமா... அசைவமா?’’

‘‘கடந்த இதழில், நீங்கள் கேட்டவை’ பகுதியில் சீஸ் தயாரிப்பு முறை பற்றி கொடைக்கானலில் பால்பண்ணையுடன், சீஸ் தயாரித்து வரும் பாட்ரிஷியா பதில் சொல்லியிருந்தார். இதில் சீஸ் தயாரிக்க

ரென்னட் (Rennet) பவுடர் சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த ரென்னட் விலங்குகளிலிருந்து எடுக்கப்படும் பொருள். இதனால், இதை சைவ உணவு உண்பவர்கள், ரென்னட் பவுடர் சேர்க்கப்பட்ட அசைவ சீஸை சாப்பிடுவதில்லை’’ என்று மணி என்பவர் இணையதளத்தில் தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார்.
இது குறித்து பாட்ரிஷியாவிடம் விளக்கம் கேட்டோம். ‘‘வெளிநாடுகளில் விலங்குகளிலிருந்து எடுக்கப்படும் ரென்னட் பவுடரை சீஸ் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலும் காளானிலிருந்து எடுக்கப்படும் ரென்னட் நுண்ணுயிரியைத்தான் பயன்படுத்துகிறார்கள். எங்கள் பண்ணையைப் பொறுத்தவரை ஆரம்ப காலத்திலிருந்தே காளானிலிருந்து எடுக்கப்படும் ரென்னட் நுண்ணுயிரியைப் பயன்படுத்தித்தான் சீஸ் தயாரிக்கிறோம். அதனால், இதை ‘சைவ சீஸ்’ என்றே குறிப்பிடலாம். இந்தத் தகவல் அந்த பதிலில் விடுப்பட்டுவிட்டது’’ என்றவர், பசுமை விகடனில் வெளியான சீஸ் தயாரிப்பு குறித்த எனது பதிலைப் படித்த நிறைய விவசாயிகள், தொடர்ந்து தொடர்புகொண்டு வருகிறார்கள். சீஸ் தயாரிக்க அனுபவ ரீதியான பயிற்சி அல்ல, பணி வாய்ப்புகள்தான் வழங்குகிறோம். மூன்று நாட்கள் பயிற்சியில் முழுமையாக கற்றுக் கொள்ள முடியாது. எனவே, மாதக் கணக்கில் பணியாற்றினால் தான், சீஸ் தயாரிப்பை முழுமையாகக் கற்றுக் கொள்ள முடியும்.
முதலில் சீஸ் தயாரிப்பதைக் காட்டிலும் கறவை மாடுகளை நன்றாக வளர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல தரமான பசும்பால் 10 லிட்டர் இருந்தால், ஒரு கிலோ சீஸ் செய்யலாம். சீஸ் தரமாக வருவதற்கு மாடுகளின் வளர்ப்பும் முக்கியம். தமிழ்நாட்டில் சூரிய ஒளி, இயற்கை தந்த கொடை. சூரிய ஒளியில் உள்ள
வைட்டமின்-டி சத்து, பால் மாடுகளுக்கு மிகவும் அவசியமானது. ஆகையால், கறவை மாடுகளை தினமும் சூரிய ஒளி படும்படி மேய்ச்சலுக்கு விட்டால், பால் வளமும் கூடும், சீஸின் தரமும் நன்றாக இருக்கும்’’ என்றார்.
