மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: கால்நடைத் தீவனமாகும்... வேலிக்காத்தான்...!

நீங்கள் கேட்டவை: கால்நடைத் தீவனமாகும்... வேலிக்காத்தான்...!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை: கால்நடைத் தீவனமாகும்... வேலிக்காத்தான்...!

புறா பாண்டி, படங்கள்: வீ.சிவக்குமார், கா.முரளி

நீங்கள் கேட்டவை: கால்நடைத் தீவனமாகும்... வேலிக்காத்தான்...!

‘‘சம்பங்கி சாகுபடி செய்துள்ளோம். நூற்புழுக்கள் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதை இயற்கை முறையில் கட்டுப்படுத்த தொழில்நுட்ப வழி சொல்லுங்கள்?’’

கே.ஆர்.ராஜா, திருவண்ணாமலை.

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் நூற்புழுவியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். எஸ்.சுப்பிரமணியன் பதில் சொல்கிறார்.

‘‘மலர் சாகுபடியைப் பொறுத்தவரை, சம்பங்கியில் நூற்புழுக்கள் தாக்குதல் அதிகமாக காணப்படும். நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால், சம்பங்கி மகசூலில் இழப்பு ஏற்படும். பல்வேறு நூற்புழுக்கள் இருந்தாலும், சம்பங்கியை வேர்முடிச்சு நூற்புழுக்களே அதிகமாகத் தாக்கி அதிகமான சேதத்தை விளைவிக்கின்றன. வேரில் முடிச்சுகள் காணப்படும். தாக்கப்பட்ட செடிகள் வளர்ச்சி குன்றி இலைகள் மஞ்சள் நிறமாகி காய்ந்து காணப்படும். அதிகமாக பாதிக்கப்பட்ட வயல்களின் செடிகள், ஆங்காங்கே திட்டுத் திட்டாக வளர்ச்சி குன்றி காணப்படும்.

பயிர் செய்வதற்கு முன்பு மண், வேர் மாதிரிகளை நூற்புழுக்களுக்கான ஆய்வு செய்து, பரிந்துரைக்கேற்ப மேலாண்மை முறைகளை மேற்கொள்வது மிகச் சிறந்ததாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட நடவு வயலைக் கோடையில் ஆழ உழவு செய்த பின்பு ஒரு மாதத்துக்கு தரிசாக வைத்திருந்தால், நூற்புழுக்கள் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும்.

சூரிய வெப்பமூட்டல் முறை மூலமும்கூட நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். அதாவது, சம்பங்கி நாற்றங்கால் பகுதியை மார்ச் முதல் மே மாதங்களில் பாலிதீன் விரிப்பு மூலம் மூடி, மண்ணின் வெப்பநிலை 10 -முதல் 15 சென்டிகிரேடு வரை அதிகரிக்க வைக்க வேண்டும். இந்த வெப்பநிலையில் நூற்புழுக்கள் இறந்துவிடும்.

நீங்கள் கேட்டவை: கால்நடைத் தீவனமாகும்... வேலிக்காத்தான்...!

நூற்புழுவின், எதிரித் தாவரமான சாமந்தியை ஊடுபயிராகப் பயிரிடுவதன் மூலமாகவும் நூற்புழுக்களின் தாக்குதலைக் குறைக்கலாம். நூற்புழுக்களைக் கவர்திழுக்கக் கூடிய தன்மை தட்டைப்பயறுக்கும் உண்டு. இதனால், தட்டைப்பயறை விதைத்து 25 முதல் 30 நாள்களுக்குள் வேருடன் பிடுங்கி அழிப்பதன் மூலம் நூற்புழுக்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கலாம்.

பெசிலோ மைசஸ் லிலாசினஸ் என்ற உயிரி நூற்புழுக்கொல்லியை ஹெக்டேருக்கு 5 கிலோ வீதம் 50 கிலோ மட்கிய தொழுவுரத்துடன் கலந்து இடுவதன் மூலமும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தி விளைச்சலை அதிகரிக்கலாம். பெசிலோ மைசஸ் லிலாசினஸ் நுண்ணுயிர் எண்ணிக்கையைப் பெருக்க, 50 கிலோ தொழுவுரத்துடன் தண்ணீர் தெளித்து நிழலான இடத்தில் 10 நாட்கள் வைத்திருந்து சம்பங்கி வயலில் தூவி விடலாம். இதன் மூலம் நூற்புழுக்களின் தாக்குதலை விரைவாகக் கட்டுப்படுத்த முடியும்.’’
தொடர்புக்கு, தொலைபேசி: 0422- 6611264

‘‘வேலிக்காத்தான் (சீமைக்கருவேல்) காய்களை கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாமா..?’’

தி.சிவா, மதுரை.

நீங்கள் கேட்டவை: கால்நடைத் தீவனமாகும்... வேலிக்காத்தான்...!தூத்துக்குடி மாவட்டம், வாகைக்குளம் வேளாண் அறிவியல் நிலையத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர். சீனிவாசன் பதில் சொல்கிறார்.

‘‘வேலிக்காத்தான், வேலிக்கருவை, ஆபீஸ் முள், காட்டுக்கருவை, சீமைக்கருவை... என பல பெயர்களில் இம்மரத்தை அழைப்பார்கள். பொதுவாக, இந்த மரங்கள் தரிசாகக் கிடக்கும் நிலங்களில்தான் முளைக்கின்றன. கடுமையான வறட்சியைத் தாங்குவதோடு வேகமாகவும் வளரும் தன்மையுடையவை இவை. தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் வேலிக்கருவை அதிகமாக உள்ளன. பெரும்பாலும், எரிபொருள் உபயோகத்துக்குத்தான் இவற்றைப் பயன்படுத்துகிறார்கள். அதனால், இவற்றைத் தனிப்பயிராகவும் சிலர் சாகுபடி செய்வதுண்டு.

பெரு, மெக்ஸிகோ... போன்ற நாடுகளில் இதை கற்பக விருட்சமாகப் பார்க்கிறார்கள். இந்த மரம் இருபது ஆண்டுகளில் நன்கு வைரம் பாய்ந்து விடுவதால், அதைக் கொண்டு மரச்சாமான்கள் தயாரிக்கிறார்கள். இதில் தயாரிக்கப்படும் சாமான்கள் வலிமையாக இருப்பதோடு, ரோஸ்வுட், தேக்கு... போன்றவற்றைக் காட்டிலும் நீண்ட காலம் உழைக்கக் கூடியவையாகவும் இருக்கின்றனவாம்.

வெளிநாடுகளில் இந்த மரத்தின் காய்களைத் தூள் செய்து, காபி போல பானம் தயாரித்துக் குடிக்கிறார்கள். இதில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. இந்தக் காயைக் காய வைத்துத் தயாரிக்கப்படும் மாவில் பூரி, சப்பாத்தி, ரொட்டி... போன்ற உணவுகளையும் தயாரிக்கலாம்.

நீங்கள் கேட்டவை: கால்நடைத் தீவனமாகும்... வேலிக்காத்தான்...!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சென்ட்ரல் அரைடு ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் (Central Arid Zone Research Institute)ல் வேலிக்காத்தான் குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்தார்கள். வேலிக்காத்தானின் உலர்ந்த காய்களை கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தாலம் என்று பரிந்துரை செய்தார்கள். இதன்படி எங்கள் கே.வி.கே மூலம் வேலிக்காத்தான் கால்நடைத் தீவனம் பற்றி தொடர்ந்து பயிற்சி கொடுக்கத் தொடங்கினோம். விளாதிக்குளம் பகுதியில் சுந்தரராஜ் என்ற விவசாயி, உலர்ந்த வேலிக்காத்தான் காய்களை அரைத்து, கால்நடைத் தீவனமாக விற்பனை செய்து வருகிறார். வேலிக்கருவை நெற்றுக்களைத் தவிடுக்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம்.’’

தொடர்புக்கு, வேளாண் அறிவியல் மையம், வாகைக்குளம், தூத்துக்குடி மாவட்டம். தொலைபேசி: 0461-2269306

‘‘ஆட்டுப்பாலின் அருமையை ‘பசுமை விகடன்’ படித்துத் தெரிந்துகொண்டோம். பாலுக்கு ஏற்ற ஆட்டு இனங்கள் எவை..?’’

எம்.ராதா, திருவெறும்பூர்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி முனைவர். குமாரவேல் பதில் சொல்கிறார்.

‘‘ஆட்டுப்பாலின் மகத்துவம் அறிந்து நம் முன்னோர்கள் அதை மருந்தாக பயன்படுத்தினார்கள். இப்போது, ஆட்டுப்பாலில் உள்ள சத்துக்கள் பற்றி, மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாலுக்காக இதுவரை யாரும் ஆட்டுப்பண்ணை வைக்கவில்லை. வடஇந்தியாவில் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் பாலுக்காக ஆடுகளை வளர்க்கிறார்கள். இந்தியாவில் உள்ள ஆட்டு இனங்களில் நன்றாக பால் கொடுக்கும் திறன் கொண்ட ஒரே ரகம்... ஜமுனாபாரி. ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பால் கொடுக்கும்.

நீங்கள் கேட்டவை: கால்நடைத் தீவனமாகும்... வேலிக்காத்தான்...!

மாட்டுப்பால் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு ஆட்டுப்பால்தான் சிறந்த உணவு. முற்றிய நிலையில் உள்ள காச நோயாளிகளுக்கு ஆட்டுப்பாலைக் கொடுத்து குணப்படுத்தும் வழக்கம் நாட்டு வைத்தியத்தில் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. அல்சர் நோய்க்கு சிறந்த மருந்தாகவும் இருக்கிறது. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு, பாலாடைக் கட்டி தயாரித்தல் போன்றவற்றுக்கும் இது பயன்படுகிறது. மேலும் ஜமுனாபாரி ஆட்டில் பால் நிறைய கிடைப்பதால், அதைக் குடித்துவிட்டு குட்டிகளும் வேகமாக வளரும்.

நன்றாக வளர்ந்த ஜமுனாபாரி ஆடு, 9-ம் மாதம் சினைக்கு வந்துவிடும். இரண்டு வருடத்தில் மூன்று முறை குட்டிகள் போடும். பால் என்ற விஷயத்தை மனதில் வைத்து, ஜமுனாபாரி ஆடு வளர்ப்பை நம் விவசாயிகள் கையில் எடுக்கலாம். மற்றபடி கறிக்காக இந்த ரகத்தைத் தேர்வு செய்ய வேண்டாம். இதற்கு அடுத்தபடியாக தலைச்சேரி என்ற கேரள மாநில ஆட்டு ரகம் தினமும் 800 மில்லி வரை பால் கொடுக்கும். இதைப் பாலுக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கலாம். கேரளாவின் காசர்கோடு பகுதியில் ஆட்டுப்பாலில் காபி, டீ தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.’’

நீங்கள் கேட்டவை: கால்நடைத் தீவனமாகும்... வேலிக்காத்தான்...!