மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்!

மரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்!

ஓவியம்: ஹரன்

காலையில் சீக்கிரமே வயலுக்கு வந்து விட்ட ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். வெயில் ஏறுமுன்னே வியாபாரத்தை முடித்து விட்டு வந்த ‘காய்கறி’ கண்ணம்மா ஊருக்குள் வரும்போது... தேநீர் கடையில் அமர்ந்திருந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் அவரோடு இணைந்துகொண்டார். இருவரும் பேசிக்கொண்டே தோட்டத்துக்கு நடக்க ஆரம்பித்தனர்.

‘‘பங்குனி மாசமே இவ்வளவு வெயில் அடிக்குது... இன்னும் சித்திரை மாசமெல்லாம் என்னா போடு போடப் போகுதோ... அப்பப்பா தாங்க முடியலை’’ என்றார், காய்கறி.

‘‘பருவநிலையே மாறிப்போச்சு கண்ணம்மா. வருஷா வருஷம் ஒரு டிகிரி, ரெண்டு டிகிரி அளவுக்கு வெப்பம் அதிகரிச்சுக்கிட்டே இருக்குதுனு விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிருக்காங்க. பூமி வெப்பமாகிறதைக் குறைச்சாதான் இதெல்லாம் சரியாகும்’’ என்றார், வாத்தியார்.

மரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்!

வயலுக்குள் இருவரின் தலையும் தென்படவும், வாய்க்கால் மடையை மாற்றி விட்டு, அவர்களோடு வந்து அமர்ந்த ஏரோட்டி, ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார்.

‘‘திண்டுக்கல், தேனி மாவட்டங்கள்ல அதிகளவுல முருங்கை சாகுபடி நடக்குது. பொங்கலுக்கு முன்னாடி வரைக்கும் முருங்கைக்கு ஓரளவுதான் விலை கிடைச்சுதாம். பொங்கல் முடிஞ்சப்பறம், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்ல கொஞ்சம் கொஞ்சமா விலை ஏறி,  நல்ல விலை கிடைச்சுக்கிட்டு இருந்ததாம். ஒரு கிலோ 60 ரூபாய் வரை விற்பனையாகிட்டு இருந்ததாம். மார்ச் மாசம் பதினஞ்சாம் தேதி வரைக்கும் கூட இதே விலைதான் கிடைச்சுதாம். ஆனா, திடீர்னு விலை இறங்கி, இப்போ கிலோ பத்து ரூபாய்ல இருந்து பதினாறு ரூபாய் வரைதான் விற்பனையாகுதாம். அதனால, விவசாயிகளுக்கு அறுவடைக்கூலிக்கு கூட கட்டுபடியாகலையாம். முருங்கை விவசாயிகளெல்லாம் ரொம்ப கவலையில இருக்கிறாங்களாம்’’ என்றார், ஏரோட்டி

‘‘ஆமாய்யா, மார்க்கெட்ல விலை குறைவாத்தான் இருக்குது. வரத்து அதிகமாயிட்டதாலதான் விலை குறைஞ்சிடுச்சுனு பேசிக்கிட்டாங்க’’ என்று சொன்ன காய்கறி, தான் கொண்டு வந்திருந்த தர்பூசணிப் பழங்களை வெட்டி இருவருக்கும் கொடுத்தார்.

அதைச் சாப்பிட்டுக் கொண்டே பேச ஆரம்பித்த வாத்தியார், ‘‘இந்த வருஷம் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள்ல மாங்காய் சீசன் இப்பவே ஆரம்பிச்சிடுச்சு. வழக்கமா ஏப்ரல் மாசம்தான் ஆரம்பிக்குமாம். இந்த வருஷம் பத்து, இருபது நாள் முன்னாடியே ஆரம்பிச்சிடுச்சாம். தமிழ்நாட்டின் மற்ற பகுதிகள்ல மாமரங்கள்ல இப்போதான், பூ, பிஞ்சு பருவங்கள்ல இருக்குதாம். எல்லா பகுதிகள்லயுமே, வழக்கமா பூக்கிறதை விட இந்த வருஷம் நல்லாவே பூ பிடிச்சிருக்குதாம். அதனால, இந்த வருஷம் மா விளைச்சல் நல்லா இருக்கும்னு சொல்றாங்க. ஆனா, இந்த சமயத்துல பூ உதிராம காப்பாத்துறது முக்கியமாம். அப்படி காப்பாத்திட்டா நல்ல விளைச்சல் எடுத்திட முடியுமாம்’’ என்றார்.

அடுத்த செய்தியை ஆரம்பித்த ஏரோட்டி, ‘‘ஏற்கெனவே டெல்டா மாவட்டங்கள்ல மீத்தேன் கேஸ் எடுக்கப்போறோம்னு கிளம்பி விவசாயிகளை பீதியாக்கியிருந்தாங்க. இப்போ, ராமநாதபுரம் மாவட்டத்துல அடுத்த வில்லங்கத்துக்கு அடிபோட்டிருக்காங்க. ராமநாதபுரம் மாவட்டத்தில் 300 மீட்டர் ஆழத்துலயே எரிபொருளா பயன்படுற ஒரு வகையான கேஸ் கிடைக்குதுனு விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிருக்காங்க. இந்த கேஸ் மூலமா மின்சாரம் தயாரிக்க முடியுமாம். இந்த கேஸை எடுத்து அதுல மின்சாரம் தயாரிக்கிறது குறித்து, விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்துக்கிட்டிருக்காங்களாம். அமெரிக்கா, உக்ரைன் நாட்டு விஞ்ஞானிகளும் இந்தத் திட்டத்துக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளைக் கொடுக்கிறாங்களாம்’’ என்றார்.

மரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்!

‘‘அடப்பாவிகளா... இப்படியே எல்லா இடத்தையும் தோண்டிக்கிட்டே போனா, எங்கதான் விவசாயம் செய்றது, எங்கதான் மனுஷன் வாழ்றது’’ என்று புலம்பினார், கண்ணம்மா.

‘‘அதப்பத்தியெல்லாம் யாரு கண்ணம்மா கவலைப்படுறா... கோடிகள்ல திட்டம் போட்டோமா, கமிஷன் அடிச்சோமானுதான் எல்லாரும் இருக்கிறாங்க’’ என்றவர், ‘‘யோவ் ஒரு முக்கியமான விஷயம்யா’’ என்று சொல்ல ஆரம்பித்தார்.

‘‘கோடை காலத்துல கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் வருமாம். இந்த நோய் பிராய்லர் கோழி, நாட்டுக்கோழி, முட்டைக்கோழினு எல்லா வகையான கோழிகளையும் தாக்கும். இந்த நோய் தாக்கினா உயிரிழப்பு அதிகமா இருக்கும். அதனால, முன்னெச்சரிக்கையா தடுப்பூசி போட வேண்டியது அவசியம். ஒவ்வொரு சனிக்கிழமையும் எல்லா அரசு கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்கள்ல இந்த தடுப்பூசியை இலவசமா போடுவாங்க. கோழிகள் வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் கழிஞ்சா இந்த நோய் தாக்கியிருக்குனு அர்த்தம். நோய் தாக்கினா, தலை ஒரு பக்கமாக இழுத்துக்கும். கோழிகள் நடக்கும்போது தள்ளாடும். பின்னாடியே நடக்கும். இரை எடுக்காமல் இருக்கும். குஞ்சு பிறந்த 7-ம் நாள், 25-ம் நாள், 75-ம் நாள்னு மூணு முறை தடுப்பூசி போடணும். தொடர்ந்து ஒவ்வொரு முறை பருவம் மாறும்போதும் தடுப்பூசி போடணும்’னு ஈரோடு மண்டல கால்நடை இணை இயக்குநர் ரவிச்சந்திரன், சொல்லியிருக்கார்’’ என்றார், வாத்தியார்.

‘‘நான்லாம் போன வாரமே அத்தனை கோழியையும் தூக்கிட்டுப் போய் ஊசியைப் போட்டுட்டு வந்துட்டேன்’’ என்ற ஏரோட்டி, 

‘‘மடத்துக்குளம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில 2015-16-ம் வருஷத்துக்கான கரும்பு அரவை, மார்ச் 5-ம் தேதி தொடங்கியிருக்கு. இந்த வருஷம், 4 ஆயிரத்து 276 ஏக்கர்ல நடவு கரும்பு,

1,369 ஏக்கர்ல கட்டைக்கரும்பு நடவுனு மொத்தம் 5 ஆயிரத்து 645 ஏக்கர் கரும்பு பதிவு ஆகியிருக்குதாம். ஏக்கருக்கு சராசரியா 44 டன் மகசூல்ங்கிற கணக்குல இந்தப் பருவத்தில் சுமாரா ரெண்டரை லட்சம் டன் அளவுக்கு கரும்பு அரவை செய்றதுக்கு முடிவு செஞ்சு, புது இயந்திரங்கள் மாட்டியிருக்காங்க. ஆனால், அதிகாரிகள் மெத்தனமா இருக்கிறதால, வேலைகள் ரொம்ப மெதுவாத்தான் நடந்துக்கிட்டிருக்காம். புது இயந்திரங்கள் மூலமா தினமும் 1,400 டன் கரும்பு அரவை செய்யணுமாம். ஆனா, 400 டன் அளவுக்கு கூட அரவை நடக்கிறதில்லையாம். கரும்பு வெட்டுறதுக்கு போதுமான அளவுக்கு தொழிலாளர்களை ஏற்பாடு செய்யாததால கரும்பு வரத்தே குறைவாத்தான் இருக்குதாம். இந்த ஆலையில ஏழு கரும்பு அலுவலர்கள் இருந்தும், அடிப்படையான வேலைகளைக் கூட சரியா செய்றதில்லையாம். இதனால இயந்திரங்களை அடிக்கடி நிறுத்தி நிறுத்தி ஓட்ட வேண்டியிருக்குதாம். இந்த வருஷம், ஆலைக்கு அதிகளவுல நஷ்டம் வர வாய்ப்பிருக்குதுனு பேசிக்கிறாங்க.

மரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்!

அடிக்கடி நிறுத்தும்போது, கரும்புச்சாறு இயந்திரங்கள்ல தேங்குறதால, உள்ள அசுத்தமாகி சர்க்கரையோட தரம் குறையுதாம். மார்ச் 5-ம் தேதியில் இருந்து 22-ம் தேதி வரைக்கும் 24 ஆயிரம் டன் கரும்பை அரைச்சிருக்கணுமாம். ஆனா, 8 ஆயிரம் டன் அளவுலதான் கரும்பு அரைச்சிருக்காங்களாம். கரும்பை தாமதமா வெட்டுறப்போ, வயல்ல கரும்பு காயுறதால சர்க்கரை கட்டுமானம் குறையுதாம். அதனால, விவசாயிகளுக்கு இந்த வருஷம் அதிக நஷ்டம் வர வாய்ப்பு இருக்குதாம். அடுத்த சாகுபடியை ஆரம்பிக்கவும் தாமதமாகுமாம். தேர்தல் நேரங்கிறதால கலெக்டர் மாதிரியான அதிகாரிகள்கிட்ட புகார் கொடுக்கவும் வாய்ப்பில்லையாம். இதனால கரும்பு விவசாயிங்களெல்லாம் புலம்பிக்கிட்டு இருக்கிறாங்க’’என்றார்.

அந்த நேரத்தில் கிணற்று மோட்டாரிலிருந்து கரகரவென சத்தம் வர...‘‘தண்ணி இறங்கிடுச்சு போல, போய் மோட்டார் ஸ்விட்சை அமுத்திட்டு வந்துடுறேன்’’ என்று ஏரோட்டி எழுந்து ஓட, அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது.