
ஓவியம்: ஹரன்

சித்திரை மாச வெயில பார்த்து, நம்ம ஊர்ல பயப்படாத ஆட்கள் இருக்கவே முடியாது. ஆனா, மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர், வார்தா பகுதிக்கு சித்திரை மாசம் போயிட்டு வந்தா, நம்ம ஊர் வெயிலை குறை சொல்லமாட்டோம். அப்படி ஒரு சித்திரை மாசம்தான், வார்தாவுக்கு பக்கத்துல நடந்த திருமணத்துக்குப் போயிருந்தோம்.
மகாராஷ்டிராவுல, சில சமூக மக்கள் சித்திரை மாசம்தான் கல்யாணம், காட்சியெல்லாம் நடத்துறாங்க. இவ்வளவு கடுமையான வெயில் அடிச்சாலும், அந்தப் பகுதி மக்கள் யாரும், வெயிலைக் கண்டு அசரல. இதுக்கு மாறாக, வெயிலைக் கொண்டாடிய காட்சியைத்தான் பார்த்தோம். வறட்சியான தர்மபுரியில இனிப்பான மாம்பழம் விளையுற மாதிரி, நாக்பூர் பகுதியில சுவையான ஆரஞ்சு பழம் விளையுறத்துக்கு வெயில்தான் மூலக்காரணமா இருக்கு. இது இயற்கைக் கொடுத்த கொடை.
திருமணத்துக்குப் போயிட்டு, வார்தா நகரத்துல தங்குறதுக்கு ஓட்டல், ஓட்டலா ஏறி இறங்கினத பார்த்த ஒரு ஆட்டோக்காரர், ‘‘நீங்கள் சேவாகிராமம் போனால், நிச்சயம் தங்குவதற்கு இடம் கிடைக்கலாம்’’னு சொன்னதோடு ஏழு கிலோ மீட்டர் தூரத்துல இருந்த சேவா கிராமத்துக்கு எங்களை அழைச்சுக்கிட்டும் போனார். இந்த சேவா கிராமம், மகாத்மா காந்தியடிகள் வசிச்ச இடம். இதை ‘வார்தா காந்தி ஆசிரமம்’னு சொல்லுவாங்க. அந்த ராத்திரி நேரத்துல தங்குவதற்கு நல்ல குடிலையும், சுவையான மராத்தி உணவையும் கொடுத்து உபசரிச்சாங்க.
காந்தி ஆசிரமத்தில் அவர் தங்கியிருந்த வீடு, ஏறத்தாழ தமிழ்நாட்டு ஓட்டு வீடு போல இருந்துச்சு. மண் சுவர், நாட்டு ஓடுகள், சாணம் மெழுகிய தரை என... அருமையாக இருந்துச்சு. காந்தியடிகள், தமிழ்நாட்டுக்கு அடிக்கடி பயணம் செய்த நேரத்துல, மண் சுவர் உள்ள ஓட்டு வீடுகளை அதிசயமா பார்த்திருக்காரு. காரணம், ஓட்டு வீடுங்க குளிர் காலத்துல வெப்பம் கொடுத்திருக்கு, வெயில் காலத்துல குளிர்ச்சியா இருந்திருக்கு. இதனாலதான், காந்தி வார்தா ஆசிரமம் கட்டும்போது, தமிழ்நாட்டு மாடல்ல ஓட்டு வீட்டைக் கட்டியிருக்கார்.
குஜராத் மாநிலம், அகமதாபாத்ல, சபர்மதி நதிக்கரையிலதான் தன்னோட ஆசிரமத்தை காந்தி தாத்தா முதல்ல உருவாக்கினார். நாட்டோட மையப் பகுதியில தங்கியிருந்தாதான், நாடு முழுக்க எளிதா சுற்றுப்பயணம் செய்ய முடியும்னு காந்தி தாத்தா திட்டம் போட்டார். அதனாலதான், வார்தா பகுதியில ரெண்டாவதா ஆசிரமம் அமைச்சு, சுதந்திரப் போராட்ட வேலைகளைச் செய்திருக்காரு.
வார்தா பகுதிக்கு வந்தவுடனே, அந்த ஊரோட வெப்ப நிலைக்கு தக்கப்படி காந்தி தாத்தா தன்னை மாத்திக்கிட்டார். காந்தியடிகள் தலையில் கதர் குல்லா வைச்சுக்கிட்டது, வார்தா வந்த பிறகுதான். வார்தாவில காங்கிரஸ்காரங்க மட்டுமில்லீங்க, டீக்கடைக்காரர் கூட காந்தி குல்லாவோடதான் இருக்காங்க. அந்த வெயில் காலத்துல வெறும் தலையில நடந்தா மயக்கம் போட்டு விழுந்துடுவோம். அதனால, பெரும்பாலும் குல்லா போட்டப்படிதான் இருந்தாங்க.
வார்தாவுல எந்த வீட்டுக்குப் போனாலும், வேக வைத்த மாங்காய், இந்துப்பு, வெல்லம், புதினா இலை போட்டு ஒரு வகையான பானம் கொடுத்தாங்க. தெருவுக்குத் தெரு, இந்த பானத்தை விற்பனையும் செய்றாங்க. இதுக்கு ‘ஆம் பன்னா’ (Aam panna) னு பேரு. ‘ஆம்’ ங்கிற இந்தி சொல்லுக்கு, மாங்காய்னு பொருள். சுவையில ஏறத்தாழ நம்மூர் பானகம் போல இருந்துச்சு. அந்த ஊர் வெயிலுக்கு, இதைக் குடிச்சாத்தான், உடம்பு தாங்குமாம். அங்க கோக்கு, பெப்ஸி... மாதிரியான பன்னாட்டு கம்பெனி பானம் குடிக்கிறதைப் பார்க்க முடியல.
வீட்டு மொட்டைமாடியில, சுண்ணாம்பு அடிச்சு வைச்சிருந்தாங்க. ‘‘வெள்ளை நிறத்தில உள்ள, சுண்ணாம்புப் பூச்சு, வெயிலை பிரதிபலிக்கிறது. இதனால், வீட்டுக்குள் வெப்பம் அதிகமாக இறங்குவதில்லை. சில வீடுகளில், மொட்டை மாடியில் பூச்செடி, காய்கறிக் கொடிகளைப் படர விட்டிருக்காங்க. மாடியில், தென்னை ஓலையைப் போட்டு மூடியிருக்காங்க. வெப்பத்தைத் தடுக்க தென்னை ஓலைதான் எளிய வழினு வெளிநாட்டுக்காரங்க சொல்லியிருக்காங்க. தமிழ்நாட்டைப் போல, தென்னை மரங்கள் இங்கு கிடையாது. இதனால், கோவாவிலிருந்து தென்னை ஓலையைக் கொண்டு வந்து, மொட்டை மாடியை மூடி வைத்திருக்கிறோம்’’ என்றார் வார்தா நண்பர்.
வெளிநாட்டுக்காரனும், வடநாட்டுக்காரனும் சொன்ன விஷயம், தமிழ்நாட்டு மண்ணுக்கு புதுசு கிடையாது. தென்னை ஓலைக்கு வெப்பத்தைத் தாங்கும் சக்தி அதிகம். அதனாலதான், ஏழை, பணக்காரங்க வித்தியாசம் இல்லாம, வசதிக்கு தக்கப்படி தென்னை ஓலையில வீடுகட்டி வாழ்ந்தாங்க. கூடவே, தங்களோட ஆடு, மாடுகளுக்கும் கூட தென்னை ஓலையிலதான் கூரைபோட்டு கொடுத்தாங்க. இன்னும் பல ஊர்கள்ல இதுதான் நடந்துக்கிட்டிருக்கு.