மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்!

மரத்தடி மாநாடு: திராட்சைக்கு  மூடாக்கு அவசியம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்!

ஓவியம்: ஹரன்

மரத்தடி மாநாடு: திராட்சைக்கு  மூடாக்கு அவசியம்!

யிர்களுக்கு மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிப்பதற்காக விசைத் தெளிப்பானைத் தயார் செய்துகொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. ஏரோட்டி, தெளிப்பானைத் தயார் செய்து, பணியாளர்களுக்குத் தெளிக்கும் முறையைச் சொல்லிவிட்டு வருவதற்கும், காய்கறி ‘கண்ணம்மா’ வருவதற்கும் சரியாக இருந்தது. மூவரும் நிழலில் அமர்ந்து கொள்ள, காய்கறி ஒரு செய்தியைச் சொல்லி, அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார்.

‘‘தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைக்குப் பக்கத்துல இருக்கிற கிராமம், மகிழங்கோட்டை. இந்த ஊர்ல நடராஜன்ங்கிறவர் தன்னோட மூணு ஏக்கர் நிலத்துல மா, பலா, வாழை, தென்னைனு சாகுபடி செய்துகிட்டு இருக்கார். மொத்தம் 250 தென்னை மரம் வெச்சிருக்கார். அதுல ஒரு தென்னை மரத்துல போன வருஷம் ஒரு கிளை கிளைச்சிருக்கு. அதுல இருந்து ரெண்டு கிளை கிளைச்சிருக்கு. அந்த ஒவ்வொரு கிளையில இருந்தும் ரெண்டு ரெண்டு கிளை முளைச்சு இப்போ ஒன்பது கிளை வந்திருக்காம். இதுல என்ன விசேஷம்னா அத்தனை கிளைகள்லயும் பாளை விட்டு காய் காய்ச்சுகிட்டு இருக்குதாம். வழக்கமா இப்படி ரெண்டு கிளை கிளைச்சு வந்தா, அதுல ஒரு கிளையிலதான் பாளை விடுமாம். அதனால, சுத்து வட்டாரத்துல இருந்து எல்லாரும் மரத்தை ஆச்சர்யமா பாக்குறாங்களாம். இந்த அதிசய தென்னை மரம் குறித்து அந்தப் பகுதி வேளாண்மை அலுவலர்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ இயங்குற வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்துக்குத் தகவல் சொல்லியிருக்காங்க. அந்த மரத்தை ஆய்வு பண்றதுக்கான ஏற்பாடுகள் நடந்துக்கிட்டிருக்கு’’ என்றார்.

‘‘அடடே... புது விஷயமால்ல இருக்கு...’’ என்ற ஏரோட்டி, அடுத்த செய்தியை ஆரம்பித்தார்.

‘‘நீலகிரி மாவட்டத்துல இருக்கிற வனப்பகுதியில யானை, சிறுத்தை, மான், காட்டு மாடு, பன்றினு ஏகப்பட்ட வன விலங்குகள் இருக்கு. கோடைக்காலம் ஆரம்பிச்சிட்டதால இந்த வனவிலங்குகள் வனத்தை ஒட்டியிருக்கிற ஊருக்குள்ள வர ஆரம்பிச்சிருச்சு. இதனால, இந்த கிராமங்கள்ல மனிதர்கள் விலங்குகளுக்கான மோதல் அதிகமாயிட்டே இருக்குதாம். ஊருக்குள்ள வர்ற யானைகள் தோட்டங்களை நாசப்படுத்திடுதாம். சிறுத்தைகள், புலிகள், ஆடு, மாடு, நாய் மாதிரியான வளர்ப்பு விலங்குகளைக் கொன்னுடுதாம். மனிதர்கள் மீதும் புலிகள் தாக்குதல் நடத்தியிருக்குதாம். மூணு வருஷத்துல நாலு பேர் புலிகள்கிட்ட மாட்டி இறந்து போயிருக்காங்க. அதே மாதிரி இதுவரை மூணு புலிகளை போலீஸ்காரங்க கொன்னுருக்காங்க. மார்ச் மாசத்துல மட்டுமே நாலு பேர் யானைகிட்ட மாட்டி இறந்திருக்காங்க. காட்டெருமைகளும் தோட்டத்துல வேலை செய்றவங்களை அடிக்கடி வந்து முட்டிடுதாம். இந்த மாதிரி விலங்குகள் ஊருக்குள்ள வர்றதுக்கு வறட்சி மட்டும் காரணமில்லையாம். வனங்களை ஆக்கிரமிக்கிறதுதான் முக்கிய காரணம்னு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்றாங்க’’ என்றார் ஏரோட்டி.

அதை ஆமோதித்த வாத்தியார், ‘‘இதே மாதிரி பிரச்னை திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், பழநி மலைப்பகுதிகள்லயும் இருக்குதாம்யா. அங்கயும் காட்டு மாடு, யானைகள் அடிக்கடி ஊருக்குள்ள வந்துடுமாம். கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகள்ல பன்றிகள் தோட்டங்களுக்குள்ள புகுந்து அதிக பாதிப்பை ஏற்படுத்துதாம். அதனால, பூலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன்கிறவர், பன்றிகளைச் சுடுறதுக்கு அனுமதி கேட்டு சென்னை உயர் நீதின்றத்துல பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்காராம். வழக்கு விசாரணையில இருக்குதாம். இந்த பிரச்னையில மத்திய, மாநில வனத்துறையினர் உடனடியா தலையிட்டு நிரந்தர தீர்வு ஏற்படுத்தணும்ங்கிறதுதான் விவசாயிகளோட கோரிக்கை’’ என்று சொன்னார்.

‘‘சுடுறதுக்கு அனுமதி கொடுப்பாங்களாய்யா... அப்படி அனுமதி கொடுத்துட்டா இதுதான் சாக்குனு காட்டுல இருக்கிற அத்தனை பன்றிகளையும் சுட்டுத் தின்னுபுட மாட்டாங்களா?’’ என்று கண்ணம்மா, கூடையிலிருந்து ஆளுக்கு ரெண்டு நுங்குகளை எடுத்துக் கொடுத்தார்.
‘‘ஒரு உயிரை அழிக்கிறதுங்கிறது பிரச்னைக்கு தீர்வு கிடையாது. அதனால உயிர்ச் சங்கிலி அறுந்து போகும். விலங்குகள் எல்லாமே ஒண்ணை ஒண்ணு சார்ந்து வாழக்கூடியவை. கோர்ட்டுல எப்படி தீர்ப்பு சொல்லப் போறாங்கனு பார்ப்போம்’’ என்ற வாத்தியார், நுங்கை சாப்பிட்டுக்கொண்டே அடுத்த செய்தியை ஆரம்பித்தார்.

மரத்தடி மாநாடு: திராட்சைக்கு  மூடாக்கு அவசியம்!

‘‘கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கிட்டத்தட்ட 12 ஆயிரம் ஏக்கர் நிலத்துல இரண்டாம் போக நெல் அறுவடை முடியுற நிலைமையில இருக்கு. அறுவடை முடிஞ்சதும், உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறுனு இந்தப்பகுதியில சாகுபடி செய்வாங்க. போன வருஷம் பிப்ரவரி மாசம் மழை கிடைச்சதால பயறு வகைகள் நல்லா விளைஞ்சது. இந்த வருஷம் கோடை மழைக்காக காத்திருக்காங்க. அதனால இன்னும் பயறு சாகுபடி ஆரம்பிக்கலை. ஆனாலும், எப்படியும் மழை கிடைச்சுடும்னு விவசாயிகள் நம்பிக்கையா இருக்கிறாங்க. ஆனா, விவசாயிகளுக்கு மானியத்துல விதை கிடைக்கிறது இப்போ பிரச்னையா இருக்குதாம். வழக்கமா, பயறு சாகுபடி விவசாயிகளுக்கு ‘பயறு கிராம திட்டம்’ மூலமா, விதைகளுக்கு 50 சதவிகித மானியம் கிடைக்கும். இப்போ, தேர்தல் விதி அமல்ல இருக்கிறதால விவசாயிகளுக்கு மானிய விதை கிடைக்கலையாம். ஆலோசனை கேட்டு வர்ற விவசாயிகளைக் கூட தேர்தல் விதியைக் காரணம் காட்டி விரட்டி அடிக்கிறாங்களாம், வேளாண்மை அலுவலர்கள். அதனால் விவசாயிகள் நொந்து போய்க் கிடக்குறாங்க’’ என்றார் வாத்தியார், தானும் போனவராக.

‘‘என்கிட்டயும் கம்பம் பகுதி பத்தின ஒரு சேதி இருக்குதுய்யா’’ என்ற ஏரோட்டி ‘‘கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்துல பன்னீர் திராட்சை சாகுபடி நடக்குது. அந்தப் பகுதிகள்ல அதிகளவு வறட்சி நிலவுறதால ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலைய தலைவர் பார்த்திபன் விவசாயிகளுக்கு சில ஆலோசனைகளைச் சொல்லியிருக்கார். ‘வெயில் அதிகமா இருக்கிறதால வெப்பநிலை அதிகரித்து காற்றோட ஈரப்பதம் குறைந்திருக்கிறதால கவாத்து செய்த திராட்சைக் கொடிகள்ல மகரந்தத்தூள் கருகிப் போயிடும். அதனால பிஞ்சுகள் உருவாகாது. உருவாகிற பிஞ்சுகளும் உதிர்ந்துடும். அதனால, கொடிகளோட தூர் பகுதிகள்ல காய்ந்த இலைதழைகளை வெச்சு மூடாக்கு போடணும். இதனால மண்ணுல இருக்கிற தண்ணீர் ஆவியாகாம இருக்கும்.
ஒரு ஏக்கர் நிலத்துக்கு மூணு நாளைக்கு ஒரு முறை 25 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சொட்டு நீர் மூலமா கட்டாயம் கொடுக்கணும். இந்த தண்ணீரை காலையிலயும் சாயங்காலமும் பிரிச்சு பாய்ச்சலாம்’னு பார்த்திபன் சொல்லியிருக்கார்’’ என்றார்.

பூச்சி விரட்டி தெளித்துக் கொண்டிருந்த பணியாளர், சத்தம் போட்டு ஏரோட்டியை அழைக்க... ஏரோட்டி எழுந்து ஓடினார். அத்தோடு, அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது.

தர வரிசையில்...

தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகம்..!

மரத்தடி மாநாடு: திராட்சைக்கு  மூடாக்கு அவசியம்!

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அங்கமான தேசிய தர வரிசை அமைப்பு, இந்தியாவில் உள்ள சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் 14-ம் இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், 36-ம் இடத்தையும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 40- வது இடத்தையும் பிடித்துள்ளன. தற்போது வெளியிடப்பட்டுள்ள நூறு கல்வி நிறுவனங்கள் அடங்கிய பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த 13 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில், கால்நடைப் பல்கலைக்கழகம் தமிழக அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர் பேசும் போது, ‘‘இந்தியாவில் உள்ள 12 கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழங்களில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் முதல் இடத்தை பெற்றுள்ளது. பல்கலைக்கழக வரலாற்றில் இது ஓர் மைல்கல்” என்றார்.