மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: பழைய சோத்துக்குள் இருக்குது... ஜோரான மருந்து..!

மண்புழு மன்னாரு: பழைய சோத்துக்குள் இருக்குது... ஜோரான மருந்து..!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: பழைய சோத்துக்குள் இருக்குது... ஜோரான மருந்து..!

மாத்தி யோசி, ஓவியம்: ஹரன்

மண்புழு மன்னாரு: பழைய சோத்துக்குள் இருக்குது... ஜோரான மருந்து..!

ர்நாடக மாநிலத்தில இருக்கிற நகர்ப்புறக் கடைகள்லகூட கேழ்வரகு களிதான் பிரதானமா விற்பனையாகுது. கேழ்வரகு களிக்கு, கன்னட மொழியில ‘ராகி முக்தே’னு பேரு. பெரிய, பெரிய கார்ல போறவங்க கூட, ராகி முத்தேவை ரசிச்சு ருசிச்சு சாப்பிடற காட்சியை கர்நாடகாவுல பார்க்கலாம். பாரம்பர்ய உணவு விஷயத்துல அந்த மக்கள் தெளிவா இருக்காங்க.

ஒரு காலத்துல, தமிழ்நாடு முழுக்க நீராகாரம் இல்லாத வீடு இருக்காது. நீராகாரம் குடிச்சுட்டுதான், அன்றைய வேலையைத் தொடங்குறதே வாடிக்கையா இருந்துச்சு. ‘‘காலையில பழையதைக் குடிச்சுட்டு, பாக்குக் கிடங்குக்கு கிளம்பினேன்...’னு புதுச்சேரி மாநிலத்துல,  பிரெஞ்சு ஆட்சிக்காரங்களுக்கு மொழிபெயர்ப்பாளரா இருந்த ஆனந்த ரங்கம் பிள்ளை, தன்னோட நாட்குறிப்புல எழுதி வைச்சிருக்காரு. அந்த காலத்துல பெரிய மாளிகையும், பிரமாண்டமான கப்பலும்  சொந்தமா இவருக்கு இருந்திருக்கு.

பெரிய வசதி வாய்ப்பு இருந்தாலும், பழைய சாதமும், நீராகாரமும் சாப்பிடறதுதான் அந்த காலத்துல வழக்கமா இருந்திருக்கு.  நீராகாரம் குடிக்கிறது நின்னு போனது, டீயும், காபியும் வீட்டுக்குள்ள வந்த பின்னாடிதான். கூடவே, பாரம்பர்ய அரிசி ரகத்துல சமைச்ச சோறுதான், பழைய சோத்துக்கும் நீராகாரத்துக்கும் சரியா இருக்கும். ரசாயனத்துல ஒட்டு ரக நெல்லை விளைவிச்சா, பொழுது சாயிரத்துக்குள்ளயே, சோறு கூழாகிடும். ஆக, உணவுப் பழக்கம் மாறினதுக்கு பின்னால, பல விஷயங்கள் அடங்கியிருக்கு.

‘‘தமிழ்நாடு வெப்ப மண்டல பகுதி. பழைய சாதம் – நீராகாரம் முதல் நாள் இரவில் சமைத்த அன்னத்தில் நீருற்றி வைத்திருந்து, மறுநாள் காலை அந்த நீருடன் சேர்த்து அன்னத்தை உண்ணுவது உடல் உழைப்புக்குத் தேவையான வலிமையைக் கொடுக்கும். ஆண்மையைப் பெருக்கும். இந்த அன்னம் மிகப் புளிப்பாக இருக்கக்கூடாது. சிறிதளவே புளித்திருக்க வேண்டும். அதிகம் புளிக்காத பழையதுடன், மோர் அல்லது  தயிர் சேர்த்து, வெங்காயம், மாவடு, எலுமிச்சை ஊறுகாய் இவற்றுடன் சேர்த்து உண்ணுவது தமிழர்களின் பாரம்பர்ய வழக்கம். இதன் சுவையை மறக்க முடியாது. அதுவும் சித்திரை மாசம் அடிக்கும் கோடை வெயிலில், உடலைக் குளிர்வித்து, தெம்பு கொடுக்கும்னு’’ உணவியல் வல்லுநருங்க சொல்றாங்க.

அரிசிச் சோற்றை வடிச்சு, அதுல தண்ணி ஊத்தி வைச்சா, மறுநாள் காலையில் அது பழைய சாதம்.  சோத்தை அலுமினியம், மண், ஸ்டீல்... பாத்திரத்தில வெச்சிருந்து, ஆய்வு பண்ணியிருக்காங்க.  அப்போ, மண் பாத்திரத்துல இருந்த பழைய சோறுதான் வாசமும், தரமும் கூடுதலா இருந்திருக்கு.

பழையச் சோத்தோட  ஆயுள் 15 மணி நேரம்தான். முதல் நாள் ராத்திரி 10 மணிக்கு தண்ணி ஊத்தி வைச்சா, அதில இருந்து அதிகபட்சம் 15 மணி நேரத்துக்குள்ள சாப்பிட்டு முடிச்சிடணுமாம். இதுக்கு மேல பழையச் சோத்தை வெச்சிருந்து சாப்பிட்டா, அது அமுதமா இருக்காது. உடம்புக்கு பாதிப்பு கொடுக்கக் கூடிய விஷமா மாறிடுமாம்.

‘‘பழையச் சோற்றில் மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத வைட்டமின் பி-6, பி-12 போன்றவை வளமாக நிறைந்துள்ளது. பழையச் சோற்றில் லட்சக்கணக்கான நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் உள்ளன. இதை சாப்பிடும்போது, செரிமான மண்டலம் ஆரோக்கியமா இருக்கும்.

பழையச் சோற்றில் நோய் எதிர்ப்புக்கான காரணிகள் அதிகம் உள்ளன.  தினமும் காலையில் பழையச் சோற்றைச் சாப்பிட்டு வந்தால், முதுமைத் தோற்றம் விரைவில் ஏற்படுவதைத் தடுக்கலாம். அதாவது, நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க விரும்பினால், பழையச் சோற்றை காலை உணவாக உட்கொண்டு வாருங்கள். காலையில் பழையச் சோற்றை உட்கொண்டால், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படலாம். ரத்த அழுத்தம், அல்சர் பிரச்னைக்கு பழைய சோறுதான் அருமருந்து...’’ னு அமெரிக்க ஊட்டச் சத்து விஞ்ஞானிங்க நம்ம ஊர் பழைய சோத்தை இப்ப புகழ்ந்து தள்ளிக்கிட்டிருக்காங்க. நம்ம மக்களும் இந்த விஷயத்தை பெருமையா இப்ப பேசிக்கிட்டிருக்காங்க. ஆனா, இதைத்தான் பல நூறு வருஷத்துக்கு முன்னாடியே, நம்ம நாட்டு விஞ்ஞானிகளான சித்தர் பெருமக்கள்

‘ஆற்று நீர் வாதம் போக்கும்,
அருவி நீர் பித்தம் போக்கும்,


சோற்று நீர் இரண்டையும் போக்கும்’னு சொல்லி வெச்சிருக்காங்க. வெள்ளக்காரன் கோட்டு, சூட்டு போட்டுக்கிட்டு வந்து, சொன்னாதான் நம்ம பாரம்பர்ய உணவோட அருமை நமக்கு புரியுது.